SOURCE :- BBC NEWS

பட மூலாதாரம், BBC Tamil
“அந்தக் கோவிலுக்குள் பல ஆண்டு காலமாக நாங்கள் யாரும் சென்றதில்லை. நீதிமன்ற உத்தரவுப்படி உள்ளே சென்றோம். அதற்கே இவ்வளவு பிரச்னைகள். அனைவரும் சமம் என நீதிமன்றம் கூறுகிறது. ஆனால், இங்கு சமம் என்பதே கிடையாது” – மிகுந்த வேதனையோடு பேசுகிறார், விழுப்புரம் மாவட்டம் மேல்பாதி கிராமத்தைச் சேர்ந்த சுகன்யா.
சுமார் 22 மாதங்களுக்குப் பிறகு நீதிமன்ற உத்தரவுப்படி மேல்பாதி திரௌபதி அம்மன் கோவில் திறக்கப்பட்டது. ஆனால், வழிபாடு நடத்தாமல் இரு பிரிவு மக்களும் புறக்கணித்துள்ளனர்.
என்ன காரணம்? மேல்பாதி கிராமத்தில் என்ன நடக்கிறது? பிபிசி தமிழ் களஆய்வில் தெரியவந்தது என்ன?

விழுப்புரம் மாவட்டம், கோலியனூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்டு மேல்பாதி ஊராட்சி அமைந்துள்ளது. சுமார் இரண்டாயிரம் பேர் வசிக்கும் இந்தக் கிராமத்தில் மூன்றில் ஒரு பகுதியினர் பட்டியல் பிரிவை சேர்ந்தவர்கள்.
மற்றவர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதியினர். ஊரின் மையப்பகுதியில் மிகப் பழைமையான ஸ்ரீதர்மராஜா திரௌபதி அம்மன் கோவில் அமைந்துள்ளது.
கடந்த 2023-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 7-ஆம் தேதி திரௌபதி அம்மன் கோவில் திருவிழாவின் போது, பட்டியல் சாதியைச் சேர்ந்த கதிரவன் உள்பட சில இளைஞர்கள் கோவிலுக்குள் சென்றதாகக் கூறி தாக்குதல் நடத்தப்பட்டது.
இதைத் தட்டிக்கேட்ட கதிரவனின் குடும்பத்தினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. சம்பவத்தைக் கண்டித்து விக்கிரவாண்டி-கும்பகோணம் சாலையில் பட்டியல் பிரிவு மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
மேலும் அவர்கள் அளித்த புகாரின் பேரில் 18 பேர் மீது எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்பட பத்து பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஆனால், யாரும் கைது செய்யப்படவில்லை.
வழிபாடு தொடர்பாக ஏற்பட்ட தகராறு என்பதால் விழுப்புரம் மாவட்ட வருவாய்த்துறை அதிகாரிகள், இரு பிரிவினர் இடையே அமைதிப் பேச்சுவார்த்தையை நடத்தினர்.
“ஆனால், இதில் சுமூக தீர்வு எட்டப்படவில்லை” என விழுப்புரம் மாவட்ட ஆட்சியராக இருந்த பழனி அறிக்கை மூலமாக கூறியிருந்தார். மேலும், ஊரில் அசாதாரண சூழல் நிலவுவதால் பொது அமைதியைப் பாதுகாக்கும் வகையில் கோவிலில் யாரும் பிரவேசிக்கக் கூடாது எனத் தீர்மானித்து கோவில் மூடி சீல் வைக்கப்படுவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இதையடுத்து, கோவிலுக்குள் இரு பிரிவினரும் வழிபாடு நடத்துவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் எனக் கோரி, பட்டியல் சாதியைச் சேர்ந்த கந்தன், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கின்போது, பொதுமக்களை அனுமதிக்காமல் ஒரு கால பூஜை மட்டும் நடத்துவதற்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்தது. அதன்படி, கடந்த 2024 மார்ச் முதல் காலையில் கோவில் திறக்கப்பட்டு ஒரு கால பூஜையை மட்டும் அறநிலையத்துறை செய்து வருகிறது.
வழக்கின் முடிவில், ‘கோவிலுக்குள் யாரும் நுழையக் கூடாது’ என்ற மாவட்ட நிர்வாகத்தின் தடை உத்தரவை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம், ‘அனைத்து சாதியினரும் கோவிலுக்குச் சென்று வழிபடலாம்’ எனக் கடந்த பிப்ரவரி மாதம் உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து, கடந்த மார்ச் 19-ஆம் தேதியன்று இரு பிரிவினரையும் அழைத்து விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
இந்த விவகாரத்தில் இரு பிரிவினரும் சமாதானமாக செல்வதாக ஒப்புக் கொண்டு கையொப்பமிட்டனர். இதனையேற்று, கடந்த ஏப்ரல் 17-ஆம் தேதியன்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோவில் திறக்கப்பட்டது.
அப்போது, பட்டியல் சாதியைச் சேர்ந்த 60 பேர் மட்டும் பூஜையில் பங்கேற்றனர். பிற சாதியினர் கோவிலுக்குள் செல்லவில்லை. வழிபாடு நடத்திவிட்டு வெளியே வந்த பட்டியல் பிரிவு மக்களை, பிற சாதியினர் அவதூறாக பேசிய காட்சிகள் ஊடகங்களில் வெளியானது.
மறுநாள் (ஏப்ரல் 18) கோவிலுக்குள் செல்லாமல் இரு பிரிவு மக்களும் புறக்கணித்துவிட்டனர். இதையடுத்து, மேல்பாதி கிராமத்தின் நிலவரத்தை அறிவதற்கு ஏப்ரல் 19-ஆம் தேதி காலை பிபிசி தமிழ் அங்கு சென்றது.

பட மூலாதாரம், Special Arrangement
மேல்பாதி கிராமத்தில் என்ன நிலவரம்?
ஊரின் நுழைவாயிலில் இருந்து கோவில் வரையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஊருக்குள் யார் சென்றாலும், பல கட்ட சோதனைகளுக்குப் பிறகே அனுமதிக்கப்பட்டனர்.
விக்கிரவாண்டி டி.எஸ்.பி நந்தகுமார் தலைமையில், கோவில் அருகே பாதுகாப்புப் பணிகளுக்காக அமர்த்தப்பட்ட காவல்துறையினர், காலை 6 மணி முதல் 7.30 மணி வரை பூஜை நடத்தப்பட உள்ளதாக தெரிவித்தனர். ஆனால், கோவிலுக்குள் ஊர் மக்கள் யாரும் செல்லவில்லை.
கோவிலைச் சுற்றிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன. பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டிருந்தது.
பிறகு கோவிலில் இருந்து 1 கி.மீ தொலைவில் அமைந்திருக்கும் பட்டியல் சாதியினர் வசிக்கும் பகுதிக்கு பிபிசி தமிழ் சென்றது. அங்கும் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அங்கு பட்டியல் பிரிவு மக்களிடம் பேசுவதற்கு காவலர்கள் துறையினர் முதலில் அனுமதி மறுத்தனர். பிறகு வளவனூர் காவல் நிலைய ஆய்வாளர் விஜயகுமாரின் அனுமதியுடன் அம்மக்களை பிபிசி தமிழ் சந்தித்துப் பேசியது.
“கோவிலில் சாமி கும்பிடச் சென்றதற்காக எங்கள் பகுதியைச் சேர்ந்த நான்கு இளைஞர்களை அடித்தனர். நாங்கள் கொடுத்த புகாரின்பேரில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது. ஆனால், நடவடிக்கை எடுக்கவில்லை,” எனக் கூறுகிறார் கந்தன்.
2023 ஆம் ஆண்டு கோவிலுக்குள் நுழைந்ததாகக் கூறி பிற சாதி மக்களால் தாக்குதலுக்கு ஆளானதாக கூறப்படும் இளைஞர்களில் இவரது மகன் கதிரவனும் அடக்கம். அதன் காரணமாக, வழிபாடு நடத்துவதற்கு அனுமதி கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

கோவிலுக்குள் செல்லாதது ஏன்?
திரௌபதி அம்மன் கோவில் திருவிழாவில், ஏழாவது உபயதாரர்களாக பட்டியல் சாதி மக்கள் உள்ளதாகக் கூறிய கந்தன், நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு இரண்டு முறை அமைதிக் கூட்டத்தை அதிகாரிகள் நடத்தியதாகக் கூறினார்.
அப்போது, ஊர்க்காரர்களிடம் பேசி முடிவெடுத்துவிட்டு வருவதாக பிற சாதி மக்கள் தரப்பில் கூறியதாகவும், தங்கள் தரப்பில் ‘ அரசு எடுக்கும் எந்த நடவடிக்கைக்கும் கட்டுப்படுவோம்’ எனக் கூறியதாகவும் கந்தன் தெரிவித்தார்.
கடந்த ஏப்ரல் 17-ஆம் தேதி கோவில் திறக்கப்பட்ட பிறகு நடந்த சம்பவத்தை விவரித்த கந்தன், “போலீஸ் பாதுகாப்புடன் உள்ளே சென்றோம். அதுவரை எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால் வெளியில் வரும்போது, கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தி இதர சாதியினர் எங்களை அவதூறு செய்தனர்,” எனக் கூறுகிறார்.
தொடர்ந்து பேசிய அவர், “ஒருநாள் பூஜைக்கு சென்றதற்கே இவ்வளவு பிரச்னையை சந்திக்க நேர்ந்ததால், மேலும் பிரச்னை தேவையில்லை எனக் கருதி தற்காலிகமாக நாங்கள் செல்லவில்லை” என்கிறார்.
ஏப்ரல் 17-ஆம் தேதியன்று நடந்த சம்பவம் இப்பகுதியில் உள்ள பெண்கள் மத்தியில் மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

பட மூலாதாரம், BBC Tamil
“இங்கு யாரும் சமம் இல்லை”
“காலம் காலமாக இங்கே நடக்கும் திருவிழாவின் போது கோவிலுக்குள் சென்று நாங்கள் வழிபாடு நடத்தியதில்லை. ஏழாவது நாள் மட்டுமே நாங்கள் அங்கே செல்வோம். அப்போதும் வெளியே நின்று கற்பூரமேற்றி வழிபாடு நடத்திவிட்டு திரும்பிவிடுவோம் என்று கூறுகிறார் பட்டியல் சாதியைச் சேர்ந்த சுகன்யா.
“நீதிமன்றம் அனைவரும் சமம் என்று கூறுகிறது. ஆனால் எங்கள் ஊரில் அனைவரும் சமம் இல்லை. எங்கள் குழந்தைகள் பள்ளி செல்வது துவங்கி அனைத்திலும் சாதியப் பிரச்னைகள் நிலவுகின்றன,” என்று மேற்கோள்காட்டுகிறார் அவர்.
“நீதிமன்ற உத்தரவுப்படியே கோவிலுக்குச் சென்றோம். வெளியில் வந்தபோது அவதூறான பேச்சுகளை எதிர்கொண்டோம். மறுநாளும் வழிபாடு நடத்த வருமாறு காவல்துறை அழைத்தது. நாங்கள் செல்லவில்லை. இந்த சம்பவத்துக்குப் பிறகு எங்கு சென்றாலும் அச்சத்துடன்செல்ல வேண்டிய நிலை உள்ளது. கோவிலுக்குள் போனதற்காக எங்களை அங்குள்ள பெண்கள் தான் மோசமாக பேசினார்கள்,” என்கிறார் சுகன்யா.
சுகன்யாவின் முன்னோர்கள் அவர்களிடம் வேலையாட்களாக இருந்ததை முன்வைத்து அவதூறாக பேசியதாகக் கூறும் சுகன்யா, “இப்போது அவர்களை நம்பி யாரும் இல்லை. நாங்கள் உழைத்து சாப்பிடுகிறோம். கோவிலுக்குள் சென்றதற்காக இத்தகைய பேச்சுகளை எதிர்கொள்ள வேண்டுமா?” எனக் கேள்வி எழுப்பினார்.
தனியாக ரேசன் கடை தந்தது போன்று தங்களின் பிள்ளைகளுக்கு தனியாக பள்ளி அமைத்துக் கொடுத்தால் போதும் என்று கூறிய அவர், நீதிமன்றத்தையும் அரசாங்கத்தையும் மட்டுமே நம்பியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பட மூலாதாரம், BBC Tamil
“சாதி பேர் சொல்லி திட்டுகிறார்கள்”
2023-ஆம் ஆண்டு நடந்த தாக்குதல் சம்பவத்துக்குப் பிறகு சாதிரீதியாக பல்வேறு துன்பங்களை எதிர்கொண்டு வருவதாகக் கூறுகிறார், இப்பகுதியில் வசிக்கும் நிவேதா.
பிபிசி தமிழிடம் பேசிய அவர், “அந்த தெரு வழியாக போகும்போது திட்டுவார்கள். அங்கன்வாடியில் மகன் படிப்பதால் கண்டுகொள்ளாமல் இருந்தேன். 2 வாரங்களுக்கு முன்பு பள்ளிக்குப் போகும்போது அவர்கள் வீட்டு படிக்கட்டின் முன்பு நின்றதற்காக என் மகனை சாதி பேர் சொல்லி திட்டி, முறத்தால் அடிக்க வந்தனர்,” எனக் கூறி கண்கலங்கினார்.
“மூன்று வயது குழந்தைக்கு என்ன தெரியும்? அன்று முதல் அங்கன்வாடிக்கு என் மகனை அனுப்புவதில்லை. வீட்டிலேயே தான் இருக்கிறான்,” எனக் கூறும் நிவேதா, “எங்களைத் திட்டுகிறார்கள். ஆனால் குழந்தைகளுக்கு சாதியைப் பற்றி என்ன தெரியும்?” எனக்கேட்டார்.
“கோவிலுக்குள் போனதற்காக எங்களை அடித்தார்கள். அந்தக் கோவிலுக்குள் நாங்கள் நிச்சயமாக செல்வோம். இதற்கு முற்றுப்புள்ளி வைக்காவிட்டால் அடுத்த தலைமுறைக்கும் இதே பாதிப்பு ஏற்படும்” எனவும் அவர் குறிப்பிட்டார்.
இதையடுத்து, பிற சாதி மக்கள் வசிக்கும் பகுதிக்கு பிபிசி தமிழ் சென்றது. அங்கு குழுமியிருந்த ஊர் மக்களில் சிலர், பெயர் அடையாளம் தவிர்த்துவிட்டுப் பேசினர்.
“இந்தக் கோவிலை கஷ்டப்பட்டு கட்டினோம். அதற்கு சொந்தம் கொண்டாடுகின்றனர். அவர்கள் ஊரில் மாரியம்மன் கோவில் உள்ளது. அதற்கு நாங்கள் உரிமை கொண்டாடினால் ஏற்பார்களா?” எனக் கேட்டனர்.

பட மூலாதாரம், BBC Tamil
“அதிகாரிகள் ஏற்கவில்லை” – மேல்பாதி ஊராட்சித் தலைவர்
கோவிலுக்கு வந்த பட்டியல் சாதி மக்களை அவதூறாக பேசியது குறித்து மேல்பாதி திமுக ஊராட்சிமன்றத் தலைவர் மணிவேலிடம் கேள்வி எழுப்பினோம். ” இப்பகுதி பெண்கள் ஏதோ அறியாமையில் பேசிவிட்டனர். தங்களின் வருத்தங்களை தெரிவிக்கவே அவ்வாறு பேசினர்” எனக் கூறினார்.
தொடக்கத்தில் இந்த விவகாரம் குறித்து பேச மறுத்தவர், பிறகு ஊர் மக்களின் நிலைப்பாடு குறித்து சில தகவல்களை தெரிவித்தார்.
“ஊரில் உள்ள அனைத்து மக்களுக்கும் இந்தக் கோவில் சொந்தமானது அல்ல” எனக் கூறிய அவர், “பழைய வழக்கப்படியே அனைத்தும் இருக்க வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர். அதை அவர்கள் (பட்டியல் பிரிவு) ஏற்கவில்லை. அரசாங்கமும் ஏற்கவில்லை” எனக் கூறினார்.
கோவிலுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு குறித்துப் பேசிய மணிவேல், “பட்டியல் சாதியினர் முதலில் வழக்கு பதிவு செய்தனர். அதனை எதிர்த்து மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களும் வழக்கு பதிவு செய்தனர். ஆனால் தீர்ப்பு பட்டியல் சாதியினருக்கு சாதகமாக அமைந்தது,” எனக் கூறினார்.
“கோவில் திறக்கப்பட்ட பிறகு வழிபாடு நடத்தச் செல்லாதது ஏன்?” என அவரிடம் கேட்டோம்.
“ஏப்ரல் 17 கோவிலை திறப்பதாக அதிகாரிகள் கூறினார். வெள்ளிக்கிழமை உகந்த நாள் என்பதால் அன்று திறக்கும்படி கூறினோம். ஆனால் காவல்துறையினர் மறுத்துவிட்டனர். எனவே நாங்கள் செல்லவில்லை,” என்று அவர் கூறினார்.
மேலும் 2 ஆண்டுகளாக கோவில் பூட்டியே கிடந்தது. சாமிக்கு சக்தி அதிகம் என மக்கள் நம்புகின்றனர். அதனால் ஊர் மக்கள் எல்லாம் திரண்டு பரிகார பூஜை ஒன்றை செய்ய விரும்புகின்றனர் என்றும் அவர் கூறினார்.
“பரிகார பூஜை செய்ய விரும்புவதற்கான வேறொரு காரணத்தையும் மணிவேல் குறிப்பிட்டார். ” கோவில் பூட்டப்பட்ட பிறகு ஊருக்குள் நிறைய பேர் இறந்துவிட்டனர். அதனால் மக்கள் பயப்படுகின்றனர். சிறப்பு பூஜை செய்த பிறகே உள்ளே செல்ல வேண்டும் என முடிவெடுத்துள்ளனர்” என்கிறார்.
“இதுவரை பட்டியல் சாதி மக்கள் யாரும் கோவிலுக்குள் வந்ததில்லை” எனக் கூறும் மணிவேல், “இப்போது அவர்கள் உள்ளே வந்துவிட்டனர். ஊரில் எந்த அசம்பாவிதமும் நடக்கவில்லை. ஊடகங்களும் அரசு அதிகாரிகளும் தான் தூண்டிவிடுகின்றனர்,” என்ற குற்றச்சாட்டையும் அவர் முன்வைத்தார்.

பட மூலாதாரம், BBC Tamil
அறநிலையத்துறை சொல்வது என்ன?
‘கோவிலில் பரிகார பூஜை நடத்தப்பட வேண்டும்’ என மணிவேல் கூறுவது குறித்து விழுப்புரம் மாவட்ட அறநிலையத்துறை அதிகாரிகளிடம் பிபிசி தமிழ் பேசியது.
பெயர் குறிப்பிடாமல் பேசிய அதிகாரி ஒருவர், ” 2 வருட காலம் கோவில் மூடப்படவில்லை. தினமும் காலை கோவிலில் ஒருகால பூஜை நடத்தப்பட்டு வருகிறது. எனவே, பரிகாரத்துக்கு அவசியம் இல்லை” என்று மட்டும் பதில் அளித்தார்.
இது குறித்து விக்கிரவாண்டி டி.எஸ்.பி நந்தகுமாரிடம் பிபிசி தமிழ் பேசியது.
“உயர் நீதிமன்ற உத்தரவுப்படி கோவிலை திறந்து வைத்துள்ளோம். ஊருக்குள் இயல்பான சூழல் நிலவுகிறது. போதிய போலீஸ் பாதுகாப்பை வழங்கியுள்ளோம். இதற்கு மேல் இந்த விவகாரம் குறித்துப் பேசுவதற்கு விரும்பவில்லை” என்று மட்டும் பதில் அளித்தார்.

பட மூலாதாரம், BBC Tamil
மாவட்ட ஆட்சியர் சொல்வது என்ன?
இந்த விவகாரம் குறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமான் பிபிசி தமிழிடம் பேசிய போது, “கோவிலுக்குள் செல்வதில் இடையூறுகள் இருந்தால் அதை மாவட்ட நிர்வாகத்தால் சரிசெய்து கொடுக்க முடியும். இரண்டு தரப்பும் வழிபாடு நடத்த வேண்டும் எனக் கூறுவதற்கு வாய்ப்பில்லை. அது அவரவர் விருப்பம். சாதிரீதியாக தடுத்தால் உரிமையை மீட்டுக் கொடுப்பது மட்டுமே அரசின் பணி,” எனக் கூறினார்.
அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் கோவில் உள்ளதாகக் கூறிய மாவட்ட ஆட்சியர், “சாதிரீதியில் பரிகார பூஜை செய்வதற்கு அனுமதி அளிக்க வாய்ப்பில்லை. அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிராக யாராவது நடந்தால் அதைக் களைவதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும்” எனக் கூறுகிறார்.
தொடர்ந்து பேசிய அவர், “மாற்றங்கள் எப்போதும் மெதுவாகவே நடக்கும். சிலரின் அழுத்தங்களால் வழிபாடு நடத்துவதற்கு சிலர் செல்லாமல் இருக்கலாம். கோவிலை திறந்து 2 நாள்கள் ஆகின்றன. நாட்கள் செல்ல செல்ல அவர்களும் புரிந்து கொள்வார்கள். கால அவகாசம் கொடுத்தால் போதும்” எனக் கூறினார்.
சாதிரீதியாக மக்கள் பிளவுபட்டுவிடக் கூடாது என்பதில் மாவட்ட நிர்வாகம் உறுதியாக உள்ளது என்றார் அவர்.
‘கோவிலுக்குள் இரு தரப்பும் சுமூகமாக வழிபாடு நடத்தப்படுவதை மாவட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும்’ என பட்டியல் சாதி மக்கள் கூறுகின்றனர். ‘பழைய வழக்கப்படியே அனைத்தும் தொடர வேண்டும்’ என்பது பிற சாதி மக்களின் நோக்கமாக உள்ளது. ‘விரைவில் சுமூகமான சூழல்கள் உருவாக வேண்டும்’ என்பதே மாவட்ட நிர்வாகத்தின் எதிர்பார்ப்பாக உள்ளது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
SOURCE : THE HINDU