SOURCE :- BBC NEWS

பட மூலாதாரம், Getty Images
‘அரசு வேலை’ என்ற வார்த்தை 90களில் பிரபலமானதற்கு மிக முக்கியமான காரணங்களில் ஒன்று, பணி ஓய்வு பெற்ற பிறகு ஓய்வூதியம் கிடைக்கும் என்ற அம்சம். அவ்வாறு பணி ஓய்வு பெற்று மாதாமாதம் ஓய்வூதியம் பெற்றாலும் கூட, ‘வீட்டில் சும்மா இருக்கமுடியவில்லை, ஓடி ஓடி வேலை செய்துவிட்டு ஓய்வு எடுக்கவே பிடிக்கவில்லை’ என சில பெரியவர்கள் பேசக் கேட்டிருப்போம்.
ஆனால், இதற்கு நேர்மாறாக 40 வயதிற்குள் குறிப்பிட்ட அளவிலான பணத்தை சம்பாதித்துவிட்டு, பிறகு அதை புத்திசாலித்தனமாக முதலீடு செய்து, ஓய்வு பெறுவது அல்லது பொருளாதார சுதந்திரத்தை எட்டுவது என்ற வாழ்க்கை முறை தான் ‘ஃபயர்’.
அதாவது முதலீடுகளில் இருந்து வரும் வருமானம் மூலம் நீங்கள் மீதமுள்ள வாழ்நாளைக் கழிக்கலாம்.
‘உங்கள் நண்பர்கள் அனைவரும் ‘9-5 அலுவலகப் பணி’ என்ற சுழற்சியில் பயணித்துக் கொண்டிருக்க, நீங்களோ 40 வயதில் ஓய்வு பெற்று, மகிழ்ச்சியாக வாழ்க்கையைக் கழிக்கலாம்’- இப்படி கேட்பதற்கு ஒரு கவர்ச்சிகரமானதாகத் தோன்றினாலும், இதில் சிக்கல்களும் உள்ளன என பொருளாதார நிபுணர்கள் கூறுகிறார்கள்.
ஃபயர் என்பது முன்கூட்டியே ஓய்வு பெறுவது மட்டும்தானா?

பட மூலாதாரம், Getty Images
1992இல் விக்கி ராபின் மற்றும் ஜோ டாமிங்குவஸ் எழுதிய ‘யுவர் மணி ஆர் யுவர் லைஃப்’ (Your Money Or Your Life) என்கிற புத்தகம் தான் இந்த ‘ஃபயர்’ வாழ்க்கையின் அடிப்படை.
அதாவது 90களில், இந்தியாவில், எப்படியாவது அரசு வேலையில் சேர்ந்து 60 வயது வரை உழைத்தால், பிறகு கிடைக்கும் ஓய்வூதியத்தில் நிம்மதியாக வாழலாம் என்ற எண்ணம் பிரபலமாகிக் கொண்டிருந்த போது, அமெரிக்காவில் 35 முதல் 45 வயதிற்குள் ஓய்வு பெறுவது என்ற ‘ஃபயர்’ பிரபலமடையத் தொடங்கியது.
“பணம் என்பதை வெறும் நாணயமாக பார்க்காமல், அதற்காக நீங்கள் தியாகம் செய்யும் நேரம் மற்றும் ஆற்றலையும் கணக்கில் கொள்ள வேண்டும்” என இந்த புத்தகம் கூறுகிறது. அளவுக்கு அதிகமாக பணம் சேர்ப்பது என்பதை விட போதுமான அளவு பணம் சேர்ப்பதையே இலக்காக கொள்ள வேண்டும் என இந்த புத்தகம் வலியுறுத்துகிறது.
இன்று இந்த ‘ஃபயர்’ என்ற வாழ்க்கை முறை தொடர்பாக பல புத்தகங்கள், வலைத்தளங்கள், வலைப்பதிவுகள் வந்துவிட்டன. பல இணைய பிரபலங்கள், பொருளாதார நிபுணர்கள் இதுகுறித்து பேசுகிறார்கள்.
முன்கூட்டியே ஓய்வு பெறும் போது நீங்கள் ஒரு மாதத்திற்கு எவ்வளவு செலவிட விரும்புகிறீர்கள் என்பதைப் பொறுத்து ‘ஃபயர்’ வகைகள் மாறுபடும்.

பட மூலாதாரம், PENGUIN USA
லீன் ஃபயர் (Lean FIRE)
இது மிகக் குறைந்த பட்ஜெட்டில் வாழக் கூடியவர்களுக்கு, அதாவது மாதம் 20,000– 40,000 ரூபாய் என்ற அளவில் (இன்றைய பொருளாதார நிலைக்கு ஏற்ப). இந்த வகை ஃபயர் வாழ்க்கை முறையில், சம்பாதிக்கும் போது மிகுந்த சிக்கனத்தை கடைபிடிக்க வேண்டும், அதிகளவு சேமிக்க வேண்டும்.
அதேபோல ஓய்வுக்குப் பின், எளிமையான, மினிமலிஸ்டிக் வாழ்க்கை முறையைக் கடைபிடிக்க வேண்டியிருக்கும் என்றாலும், ‘9-5’ வேலை சுழற்சியை விட்டு சீக்கிரமாக வெளியேற வேண்டுமென நினைப்பவர்களால் இது விரும்பப்படுகிறது.
ஃபேட் ஃபயர் (Fat FIRE)

பட மூலாதாரம், Getty Images
மாதச் சம்பளத்தில் என்ன வாழ்க்கைத் தரத்தை கடைப்பிடிக்கிறோமோ, அதே தரத்தில் ஓய்வு பெற்ற பிறகும் வாழ்வதை இலக்காக கொண்டு பணத்தைச் சேர்ப்பது தான் ‘ஃபாட் ஃபயர்’ முறை. உதாரணத்திற்கு, மாதத்திற்கு 75,000 முதல் 2 லட்சம் என்ற அளவில்.
அத்தகைய அளவிலான பணம் மாதாமாதம் வருமாறு முதலீடுகள் செய்யவேண்டுமென்றால், அதற்கு ஓய்வு பெறும்போது பல கோடிகள் தேவைப்படும்.
இதை இலக்காக கொள்பவர்களுக்கு அதிக வருமானமும், அதிக சேமிப்பு பழக்கமும் இருக்க வேண்டும். அவர்கள் சம்பாதிக்கும் காலத்திலேயே தொடர்ந்து முதலீடும் செய்ய வேண்டும்.
பெங்களூரைச் சேர்ந்த தர்மசிவா முத்துராமன், 13 வருடங்களாக தகவல் தொழில்நுட்பத்துறையில் பணிபுரியும் ஒரு ‘டெக்கி’. இன்னும் 10 வருடங்களில் ‘ஃபேட் ஃபயர்’ முறையில் ஓய்வு பெறுவதற்கான முனைப்பில் உள்ளார்.
“எனக்கு இப்போது 35 வயதாகிறது. நானும் என் மனைவியும் எங்கள் ஊதியத்தில் 50 சதவீதத்தை சேமித்து வருகிறோம். எங்களுடைய இலக்கு என்பது 9 கோடி ரூபாய், அதை அடைந்துவிட்டால் நாங்கள் எங்கள் வேலைகளை விட்டுவிடுவோம்.” என்கிறார்.
தனது தற்போதைய வாழ்க்கைமுறைக்கான செலவு, அதிகரித்து வரும் பணவீக்கம், தனது மகளின் எதிர்கால படிப்பிற்கான செலவு, மருத்துவக் காப்பீடுகளுக்கு தேவையான பணம் என அனைத்தையும் கணக்கில் கொண்டு தான் 9 கோடி ரூபாய் என இலக்கு நிர்ணயித்துள்ளதாக அவர் கூறுகிறார்.
“இப்போதே எங்களது சேமிப்பை, பல்வேறு விதமாக முதலீடு செய்துள்ளேன். மியூச்சுவல் ஃபண்ட்கள், தங்கம் மற்றும் நிலத்தில் முதலீடு செய்துள்ளேன். அவசர கால நிதி, குறுகிய கால நிதி, நீண்ட கால நிதி என மூன்று வகையாக பிரித்து சேமிக்கிறேன். ” என்கிறார்.
“எனது இலக்கு, வெறும் ஓய்வு எடுப்பது அல்லது வேலை செய்யாமல் இருப்பதல்ல, பொருளாதாரச் சுதந்திரம் தான்.” என்கிறார் தர்மசிவா.
‘பரிஸ்டா ஃபயர்’ (Barista FIRE)
மற்றொரு வகை உண்டு, அது ‘பரிஸ்டா ஃபயர்’ (Barista FIRE). உங்களது பெரும்பாலான வாழ்க்கைச் செலவுகளை ஈடுகட்ட போதுமான அளவு பணத்தைச் சேமித்துவிட்டு, முழு நேர வேலையில் இருந்து ஓய்வு பெற்று, பிறகு பகுதிநேர வேலை அல்லது பிடித்த வேலையைச் செய்வது. இது லீன் ஃபயர் மற்றும் ஃபாட் ஃபயர் முறைகளுக்கு இடையிலான நிதி இடைவெளியை நிரப்புவதற்கான ஒரு முறை.

பட மூலாதாரம், Getty Images
அமெரிக்காவில், பணம் மற்றும் செல்வம் குறித்து 21 முதல் 75 வயதிலான அமெரிக்கர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை அறிந்துகொள்ள, 2023இல் தேசிய அளவிலான ஒரு கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது (Charles Schwab’s Modern Wealth Survey).
அதில் 40 சதவீதம் பேர், செல்வம் என்பதன் அர்த்தம் நல்ல உளவியல் நலமும் உடல்நலமும் தான் என்று கூறினர். அந்தக் கருத்துக்கணிப்பில் பங்கெடுத்த பலரும் அதிகளவு பணம் சம்பாதிப்பதில் கவனம் செலுத்துவதை விட,
- நிறைவான தனிப்பட்ட வாழ்க்கையைக் கொண்டிருத்தல்,
- ஆரோக்கியமான வேலை – தனிப்பட்ட வாழ்க்கை சமநிலையைக் கொண்டிருப்பது,
- அன்புக்குரியவர்களுடன், குடும்பத்தினருடன் நேரத்தைச் செலவிடுதல்
- நல்ல அனுபவங்களுக்கு பணம் செலவழிப்பது
- நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பது
- எங்கிருந்து வேண்டுமானாலும் வேலை செய்யும் வசதியைக் கொண்டிருத்தல் (ரிமோட் அல்லது ஹைபிரிட்)
போன்ற விஷயங்களுக்கு முன்னுரிமை அளிக்கிறோம் என குறிப்பிட்டார்கள். 15 சதவீதம் பேர், பொருளாதாரச் சுதந்திரமே உண்மையான செல்வம் எனக் குறிப்பிட்டார்கள்.
‘குறுகிய காலத்தில் அதிக வருமானம்’

பட மூலாதாரம், Getty Images
“பலரும் ‘ஃபயர்’ வாழ்க்கை முறை குறித்து பேசுகிறார்கள். அதற்கு காரணம், அடுத்து என்ன தேடல் இப்போது அதிகமாக இருக்கிறது. ஒரே வேலையை பார்த்து, ஓய்வு பெற வேண்டும் என்ற வழக்கம் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து வருகிறது. ” என்கிறார் பொருளாதார ஆலோசகர் சோம. வள்ளியப்பன்.
நிறுவனங்களும் இளம் தலைமுறையினருக்கு தான் முன்னுரிமை கொடுக்கிறார்கள் எனக் குறிப்பிடும் சோம.வள்ளியப்பன், “குறுகிய காலத்தில் அதிக வருமானம் என்பதையே பலரும் எதிர்பார்க்கிறார்கள். குறிப்பாக 40 வயதுக்கு மேல் உள்ள நபர்களை வேலைக்கு எடுப்பது என்பது மிகவும் அரிதாக உள்ளது. எனவே தான் அதற்குள்ளாக எவ்வளவு மனஅழுத்தம் நிறைந்த, கடின வேலையாக இருந்தாலும் பார்த்துவிட வேண்டும் என்ற எண்ணம் எழுகிறது. ஆனால், உண்மை என்னவென்றால் 40 வயதிலும் இங்கு பலருக்கு ஓய்வு பெறுவதற்கான பணம் கையில் இருப்பதில்லை” என்கிறார்.
தொடர்ந்து பேசிய அவர், “உதாரணத்திற்கு, இப்போது 40 வயது நபர் ஒருவர் 2-3 கோடி ரூபாய் பணத்துடன் ஓய்வு பெறுகிறார் என்றால், அவருக்கு முதலீடுகள் மூலம், வரிகள் போக மாதம் ஒன்றரை லட்சம் ரூபாய் கிடைக்கும். அவருக்கு சொந்த வீடு, கார் மற்றும் மருத்துவக் காப்பீடு இருக்க வேண்டும். கடன் இருக்கக்கூடாது.
இருப்பினும், அவருக்கு 60 வயதாகும் போது, பணவீக்கம் காரணமாக அந்த ஒன்றரை லட்சம் என்பதன் மதிப்பு இன்றைய 50,000 ரூபாய்க்கும் கீழே குறைந்துவிடும்.” என்கிறார்.
ஃபயர் வாழ்க்கை முறை சாத்தியமா?

பட மூலாதாரம், Soma Valliappan/FB
ஃபயர் வாழ்க்கை முறை என்பதை அப்படியே பின்பற்றுவதை விட, 40 வயது வரை ஒரு கடினமான வேலை, நாற்பதிற்கு பிறகு, மனஅழுத்தம் இல்லாத, ஒரு எளிய வேலையைச் செய்யலாம் என பரிந்துரைக்கிறார் சோம. வள்ளியப்பன்.
“இங்கு பெரும்பாலான மக்களுக்கு 40 வயதிற்கு பிறகு முற்றிலுமாக ஓய்வு பெறுவதோ, வேலையே செய்யாமல் இருப்பது என்பதோ நடைமுறையில் சாத்தியமில்லை. இசையமைப்பாளர் இளையராஜா கூட இப்போதும் உழைக்கிறார்.
எனவே நாற்பதிற்கு பிறகு மனஅழுத்தம் இல்லாத வேலையைச் செய்து, குறைவான பணம் ஊதியமாக கிடைத்தாலும், மகிழ்ச்சியாக வாழ, எவ்வளவு சேமிப்பு தேவையோ அதற்கு முயற்சி செய்யலாம். அதுவும் அவசர காலச் செலவுகள் என வரும்போது அந்த சேமிப்பு கரையவும் வாய்ப்புள்ளது என்பதை மறுக்க முடியாது.” என்கிறார்.

சேமித்த பணத்தை முதலீடு செய்ய, நிச்சயமாக ஒரு முதலீட்டு ஆலோசகரின் அறிவுரையைப் பெற வேண்டுமென வலியுறுத்தும் சோம.வள்ளியப்பன், “பணம் என்பது வெறும் காகிதம் தான். எதில் முதலீடு செய்கிறோம் என்பதைப் பொறுத்தே எல்லாம். முதலீடுகளில் இருக்கும் அபாயங்களையும் புறக்கணிக்க முடியாது.”
“சீக்கிரமாக ஓய்வு பெறுவது என்பது வாழ்க்கைத் தரத்தை மாற்றிக்கொள்வது தான். அல்லது 10, 20 கோடி என மிகப்பெரிய அளவிலான பணம் இருந்தால் மட்டுமே நடைமுறையில் ‘ஃபயர்’ சாத்தியம்” என்கிறார் அவர்.
– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
SOURCE : THE HINDU