SOURCE :- BBC NEWS

பட மூலாதாரம், Getty Images
32 நிமிடங்களுக்கு முன்னர்
ஐ.பி.எல். தொடரின் 53வது போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. இதில் பிளே ஆஃப்க்கு முன்னேறும் வாய்ப்பை ஏற்கெனவே இழந்த ராஜஸ்தான் அணியும், ஒரு போட்டியில் தோற்றாலும் பிளே ஆஃப் வாய்ப்பு பறிபோகும் நிலையில் இருக்கும் கொல்கத்தா அணியும் மோதின.
கடைசி பந்து வரை பரபரப்பாக சென்ற இந்த போட்டியில் கொல்கத்தா அணி போராடி, ஒரு ரன் வித்தியாசத்தில் வென்றது. இதனால் பிளே ஆஃப்க்கு முன்னேறும் வாய்ப்பை கொல்கத்தா அணி தக்க வைத்துள்ளது என்ற போதிலும், அந்த அணி இன்னும் எஞ்சியுள்ள போட்டிகளிலும் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

பட மூலாதாரம், Getty Images
டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் அஜிங்க்யா ரஹானே பேட்டிங்கை தேர்வு செய்தார்.
பவர்பிளேயில் கொல்கத்தா அணி 1 விக்கெட் இழப்புக்கு 56 ரன்களை எடுத்தது. அபாயகரமான பேட்டரான சுனில் நரேனை இந்த போட்டியில் ராஜஸ்தான் 11 ரன்களுக்குள் கட்டுப்படுத்தியது. எனினும் ரஹ்மானுல்லா மற்றும் அஜிங்க்யா ரஹானே சிறப்பான தொடக்கத்தை அளித்தனர். மற்ற பேட்டர்கள் யாருமே ஏமாற்றாமல் தங்கள் பங்களிப்பை வழங்கினர்.
குறிப்பாக ஆண்ட்ரூ ரஸ்ஸல் 25 பந்துகளில் 57 ரன்களை விளாசினார். ரிங்குசிங் கடைசி கட்டத்தில் அதிரடி காட்டி 6 பந்துகளில் 19 ரன்களை எடுத்தார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் கொல்கத்தா அணி 4 விக்கெட் இழப்புக்கு 206 ரன்களை எடுத்தது.
ராஜஸ்தான் தரப்பில் 4 ஓவர்கள் வீசிய ஜோஃப்ரா ஆர்ச்சர் 30 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 1 விக்கெட்டை வீழ்த்தினார். இதே போன்று வனிந்து ஹசரங்காவும் 4 ஓவர்களில் 35 ரன்களை கொடுத்திருந்தார்.

பட மூலாதாரம், Getty Images
207 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி களமிறங்கியது. அதிரடி சதத்தால் எதிர்பார்ப்புக்கு ஆளாகியிருந்த 14 வயது வைபவ் சூர்யவன்ஷி 4 ரன்களில் ஆட்டமிழந்தார். எனினும் இதன் பின்னர் இரண்டாவது விக்கெட்டுக்கு களமிறங்கிய ரியான் பராக் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
29 பந்துகளில் அரை சதத்தைக் கடந்த ரியான் பராக், மொயின் அலி வீசிய 13வது ஓவரில் ருத்ர தாண்டவம் ஆடினார். இந்த ஓவரில் ஒரு வைடு பந்து தவிர்த்து வீசப்பட்ட 5 பந்துகளில் தொடர்ச்சியாக 5 சிக்சர்களை ரியான் பராக் பறக்கவிட்டார். அடுத்ததாக வருண் சக்ரவர்த்தி வீசிய 14வது ஓவரின் முதல் பந்தை சிம்ரன் ஹெட்மயர் எதிர்கொண்டு ஒரு ரன் எடுத்தார்.

பட மூலாதாரம், Getty Images
மீண்டும் ஸ்டிரைக்கர் எண்டுக்கு வந்த ரியான் பராக் அந்த ஓவரின் 2 வது பந்தில் சிக்சரை விளாசினார். இதன் மூலம் தொடர்ச்சியாக தான் எதிர்கொண்ட 6 பந்துகளில் 6 சிக்சர்களை விளாசி புதிய சாதனை படைத்தார். 45 பந்துகளை எதிர் கொண்ட இவர் 95 ரன்கள் குவித்து ஹர்ஷித் ராணா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

கடைசி ஓவரில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற 22 ரன்கள் தேவைப்பட்டது. இந்த ஓவரின் 3வது பந்தில் ஷுபம் துபே சிக்சர் அடிக்கவே ஆட்டத்தில் அனல்பறந்தது. அடுத்த இரண்டு பந்துகளிலும், பவுண்டரி மற்றும் சிக்சர்களை விளாசினார்.
கடைசி பந்தில் வெற்றிக்கு 3 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் துபே அடித்த பந்தில் 2 வது ரன்னுக்கு முயற்சிக்கும் போது, அற்புதமாக ஃபீல்டிங் செய்த ரிங்கு சிங் ஜோஃப்ரா ஆர்ச்சரை ரன் அவுட் செய்தார். இதனால் கொல்கத்தா அணி 1 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. கொல்கத்தா அணியின் ஆண்ட்ரூ ரஸ்ஸல் ஆட்டநாயகன் விருது பெற்றார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
SOURCE : THE HINDU