SOURCE :- BBC NEWS

சென்னை, பெண் டெலிவரி ஊழியர்கள்

பட மூலாதாரம், Getty Images

கிக் பொருளாதாரத்தின் வளர்ச்சி பெண்களுக்கான வேலை வாய்ப்புகளை அதிகரித்துள்ளது. உணவு டெலிவரி செய்வது, வீட்டுக்கே சென்று அழகுக்கலை சேவைகளை வழங்குவது, பொருட்களை வீடுகளுக்கு டெலிவரி செய்வது எனப் பல்வேறு பணிகளைப் பெண்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தப் பணிகளுக்கு குறிப்பிட்ட வேலை இடமோ, நேரமோ கிடையாது. எனவே வாய்ப்புகளுடன் சேர்ந்து, பெண்களுக்கான சவால்களும் எழுந்துள்ளன.

கணிக்க முடியாத சூழல்களில் பணி செய்யும்போது வாடிக்கையாளர்கள், வழிப்போக்கர்கள் மற்றும் சில நேரங்களில் சக ஊழியர்களிடம் இருந்துகூட துன்புறுத்தல்களை சில பெண் பணியார்கள் எதிர்கொள்ள வேண்டியுள்ளன.

சென்னையில் உணவு டெலிவரி செய்யும் 32 வயதான பெண் ஒருவருக்கு பாலியல் துன்புறுத்தல் ஏற்பட்டுள்ளது. அவர் அளித்த புகாரின் பெயரில் 28 வயதான மனுகிருஷ்ணா என்ற மென்பொறியாளரையும், 26 வயதான விஷ்ணு என்ற புகைப்படக் கலைஞரையும் காவல்துறை கைது செய்துள்ளது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

என்ன நடந்தது?

கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நான்கு மணிக்கு கொளத்தூர் பகுதியில் இருந்து பிரியாணிக்கான ஆர்டர் ஒன்று வந்தது. தனியார் செயலி மூலம் உணவு டெலிவரி செய்து வரும் இந்த பெண், அந்த ஆர்டரை வழங்குவதற்கு சென்றுள்ளார்.

டெலிவரி கொடுக்க வேண்டிய இடத்தை உறுதி செய்து கொள்வதற்காக தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது, மறுமுனையில் இருந்த இருவரும் தவறாகப் பேசியுள்ளனர்.

இதனால் தனக்குப் பிரச்னை ஏற்படலாம் என்று அஞ்சிய அந்தப் பெண், அருகில் இருந்த தனது கணவரை துணைக்கு அழைத்துச் சென்றுள்ளார். டெலிவரி செய்ய வேண்டிய வீட்டுக்கு வெளியே அவரது கணவர் காத்திருக்க அந்தப் பெண் மேலே சென்று உணவை வழங்கியுள்ளார். அப்போது அங்கிருந்த இருவரும் அவரை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியுள்ளனர்.

பின்னர், அந்தப் பெண் அளித்த புகாரின் அடிப்படையில் ராஜமங்கலம் காவல் நிலைய போலீசார் முதல்கட்ட விசாரணைக்குப் பிறகு சம்பந்தப்பட்ட இருவரையும் கைது செய்துள்ளனர். அவர்கள் ஆர்டர் செய்ய பயன்படுத்திய செல்போன் பறிமுதல் செய்யப்பட்டு, இருவரும் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

பெண் டெலிவரி ஊழியர்கள்

பட மூலாதாரம், Getty Images

பிபிசி தமிழிடம் பேசிய சென்னையில் உணவு டெலிவரி செய்யும் பெண் லதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது), பணியின்போது தனக்கும் இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்ந்திருப்பதாகக் கூறுகிறார்.

“நாம் உணவை ஓட்டலில் இருந்து எடுக்கும்போது, டெலிவரி பார்ட்னர் யார் என்ற தகவல் வாடிக்கையாளருக்குத் தெரிந்துவிடும். அப்போது பெண் ஒருவர் வருகிறார் என்பதைத் தெரிந்துகொண்டு, சிலர் வேண்டுமென்றே தொலைபேசியில் அழைத்துப் பேசுவதுண்டு.

ஒருமுறை வாடிக்கையாளர் ஒருவர் என்னை அழைத்து, நான் எங்கிருக்கிறேன், வருவதற்கு எவ்வளவு நேரம் ஆகும் என்று கேட்டதோடு, எனது உடல் தோற்றம் எப்படி இருக்கும், என்ன நிற ஆடை அணிந்துள்ளேன் என்று நான் சங்கடப்படும் வகையில் கேட்டார். நான் இணைப்பைத் துண்டித்துவிட்டு, அவரது இடத்தில் உணவை வைத்துவிட்டு வந்துவிட்டேன்” என்கிறார்.

சென்னையில் உணவு டெலிவரி செய்யும் 36 வயதான ப்ரியா (பெயர் மாற்றப்பட்டுள்ளது), அலுவலகங்களில் உணவு டெலிவரி செய்வதைவிட வீடுகளுக்குச் சென்று கொடுப்பது தனக்கு சற்று தயக்கமாகவே இருக்கும் என்கிறார்.

“பல நிறுவனங்களில், பணியாளர்கள் குறிப்பாக இளைஞர்கள் வீட்டிலிருந்து பணியாற்றுகின்றனர். மதிய உணவு ஆர்டர்கள் அவர்களிடம் இருந்து நிறைய கிடைக்கும். ஒருமுறை ஒரு வாடிக்கையாளருக்கு போன் செய்துவிட்டு, முகவரியை உறுதி செய்துகொண்டு இரண்டு நிமிடங்கள் கழித்து உள்ளே சென்றேன்.

அவர் அப்போது மேல் ஆடை இல்லாமல் வந்து கதவைத் திறந்து உணவை வாங்கிச் சென்றார். அவர் வேண்டுமென்றே செய்தாரா என்று தெரியாது. ஆனால் அவரை அப்படிப் பார்த்தது எனக்கு மிகவும் அசௌகரியமாக இருந்தது” என்று பகிர்ந்து கொண்டார்.

மேலும் பேசிய ப்ரியா, தனது இரண்டு பிள்ளைகளைப் படிக்க வைப்பதற்கு இந்த வருமானம் மிகவும் முக்கியமாக இருப்பதாகக் கூறினார்.

“வீட்டைப் பார்த்துக்கொண்டு வழக்கமான அலுவலகப் பணிகளுக்கு காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை என்னால் செல்ல முடியாது. பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு, கிடைக்கிற நேரத்தில் சில ஆர்டர்கள் டெலிவரி செய்தால், சிறிது வருமானம் கிடைக்கும். எனது கணவர் ஆட்டோ ஓட்டுகிறார். எனது வருமானம் சிறிய தொகையாக இருந்தாலும், குடும்பத் தேவைக்கு மிகவும் அவசியமாக உள்ளது” என்கிறார் ப்ரியா.

உணவு டெலிவரி பணியில் இதுபோன்ற சம்பவங்கள் பரவலாக நடப்பதாகப் புகார்கள் இல்லை. இருப்பினும், இந்தியாவில் டெலிவரி ஊழியர்களாகப் பணிபுரியும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது அவசியமாகிறது.

நிறுவனங்கள் எடுத்து வரும் நடவடிக்கைகள்

பெண் டெலிவரி ஊழியர்கள்

பட மூலாதாரம், Getty Images

ஜொமேட்டோ நிறுவனம், தனது பெண் டெலிவரி ஊழியர்களுக்கு தற்காப்புப் பயிற்சிகளைக் கட்டாயமாக்கியுள்ளதாக தனது இணைய பக்கத்தில் தெரிவித்துள்ளது.

மேலும், மாலை நேரங்களில் ஆர்டர் டெலிவரி செய்யும்போது, வாடிக்கையாளரிடம் நேரடியாக ஒப்படைக்க அவசியமில்லை, அவரது முகவரியில் வழங்கிவிட்டால் போதும் என்றும் ஜொமேட்டோ தெரிவித்துள்ளது

‘பெண் டெலிவரி ஊழியர்களுக்கு பிரத்யேக கழிவறை வசதிகளை ஏற்படுத்தித் தரும் உணவகங்களை தனியாகச் சுட்டிக் காட்டுவது, அவசரக் கால பட்டனை அழுத்தினால் பெண் ஊழியர்கள் இருக்கும் இடத்தை பற்றிய தகவலை அவசர உதவிக்குழுவுக்கு நேரலையில் பகிர்வது போன்ற நடவடிக்கைகளை’ மேற்கொண்டிருப்பதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் பெண்களை டெலிவரி ஊழியர்களாக கொண்டுள்ள ஸ்விக்கி நிறுவனம், பெண் ஊழியர்களுக்கு எதிராக நடைபெறும் பாலியல் துன்புறுத்தல்களை கையாளும் கொள்கையை 2022-ம் ஆண்டு தனது நிறுவனத்தில் அறிமுகப்படுத்தியிருந்தது.

இதன்படி, நிறுவனத்தில் உள்ள ஊழியரால் பாலியல் துன்புறுத்தல் ஏற்பட்டால், உட்புகார் குழுவில் புகார் அளிக்கலாம். பணியிடங்களில் பாலியல் துன்புறுத்தல்களை தடுக்கும் சட்டத்தின் கீழ் அந்த புகார் கையாளப்படும் என்று ஸ்விக்கி தனது இணைய பக்கத்தில் தெரிவித்துள்ளது.

பெண் ஊழியருக்கு உணவகங்களில் இருந்தோ, வாடிக்கையாளரிடமிருந்தோ, அல்லது டெலிவரி செய்யும் வழியிலோ ஏதேனும் துன்புறுத்தல் ஏற்பட்டால், அதை கையாள்வது குறித்த சட்ட வழிகாட்டுதல்கள் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கிறது.

மேலும், புகார் எழுப்பப்பட்ட வாடிக்கையாளரின் செல்போன் எண்ணை குறித்து வைத்து, அவருக்கு உணவு டெலிவரி செய்ய எந்த பெண் ஊழியரையும் எதிர்காலத்தில் அனுப்ப மாட்டோம் என்றும் தெரிவிக்கிறது.

பெண் டெலிவரி ஊழியர்கள்

பட மூலாதாரம், Getty Images

பணியிடத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் தடுப்பு சட்டம்- டெலிவரி பெண்களுக்கும் பொருந்துமா?

உணவு டெலிவரி மட்டுமல்லாமல், பொருட்களை டெலிவரி செய்யும் பணியிலும், வீடுகளுக்கு சென்று அழகுகலை கலைஞராகவும் பெண்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

பெண்களின் பணியிடம் என்ற வரையறை, நான்கு சுவர்கள் கொண்ட ஒரு அலுவலகம் என்றில்லாமல் விரிவடைந்து வருகிறது.

கிக் ஊழியர்களின் வேலை தன்மையையும் கருத்தில் எடுத்து கொள்ளும் முழுமையான சட்டங்கள் தேவை என்கின்றனர் நிபுணர்கள்.

“பணியிடங்களில் பாலியல் துன்புறுத்தல்களை தடுக்கும் சட்டம் 2013-ன் கீழ், அலுவலகம் அல்லாமல், அலுவல் ரீதியாக செல்லும் இடங்களில் நடைபெறும் பாலியல் துன்புறத்துல்களையும் கையாள முடியும். உதாரணமாக ஒரு பத்திரிகையாளர் நேர்காணல் எடுக்க செல்லும் இடத்தில் ஏதேனும் துன்புறுத்தல் ஏற்பட்டால், அது குறித்து தனது அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள உட்புகார் குழுவில் புகார் அளிக்க முடியும். சம்பந்தப்பட்ட நபரை அழைத்து விசாரிக்க அதிகாரம் உண்டு. ஆனால் நடைமுறையில் பெரும்பாலான நேரங்களில் அது சாத்தியமாகாது. அந்த நபர் வேறு அலுவலகத்தில் பணிபுரிந்தால், அந்த நிறுவனத்தின் உட்புகார் குழுவை தொடர்பு கொண்டு இணைந்து விசாரணை நடத்தலாம்.” என்கிறார் வழக்கறிஞர் ஜெயந்தி.

ஆனால் டெலிவரி ஊழியர்கள் உள்ளிட்ட கிக் பணியாளர்கள், ‘பணியமர்த்துபவர்-பணியாளர்’ என்ற உறவை கொண்டவர்களாக சட்டத்தின் முன் கருதப்படாததால், அவர்களுக்கான சட்டப் பாதுகாப்பை உறுதி செய்வது சவாலானதே என்கிறார் அவர்.

“பணியாளர் என்ற சட்ட அங்கீகாரம் இல்லாததால், பெண் ஊழியர்களின் பாதுகாப்புக்கு நிறுவனங்கள் எவ்வளவு பொறுப்பு எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது தெளிவாக இல்லை. பணியிடங்களில் பாலியல் துன்புறுத்தல்களை தடுக்கும் சட்டத்தின் கீழ் அனைத்து நிறுவனங்களும் தங்களுக்கான உட்புகார் குழுக்களை அமைத்திருக்க வேண்டும். அந்த குழுக்கள், பெண் ஊழியர்களுக்கு வழிகாட்டலாம்” என்கிறார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : BBC