SOURCE :- BBC NEWS
காஸாவில் போர் நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகளை விடுவிப்பதற்கான ஒப்பந்தத்தை இறுதி செய்ய மத்தியஸ்தம் செய்பவர்கள் கத்தாரில் மீண்டும் கூடியுள்ளனர். இஸ்ரேலும் ஹமாஸும் இது குறித்த ஒரு ஒப்பந்தத்தின் இறுதிக்கட்ட பேச்சுவார்த்தையில் இருப்பதற்கான அறிகுறிகள் உள்ளன.
இந்த பேச்சுவார்த்தைகளைப் பற்றி நன்கு அறிந்த பாலத்தீன அதிகாரி ஒருவர், இஸ்ரேல் – பாலத்தீன போரில் முதல் முறையாக, இஸ்ரேல் மற்றும் ஹமாஸின் பிரதிநிதிகள் ஒரே கட்டடத்தில் மூன்றாம் தரப்பு மத்தியஸ்தர்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாக பிபிசியிடம் கூறினார்.
இஸ்ரேல் படைகள் அந்த பகுதியை விட்டு வெளியேற வேண்டும் என்ற நிபந்தனையை ஹமாஸ் கைவிட்டதாகவும் கூறப்படுகிறது.
தோஹாவில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய கத்தார் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மஜீத் அல்-அன்சாரி, பேச்சுவார்த்தைகள் “இறுதி கட்டத்தில்” இருக்கிறது என்றும், ஒப்பந்தம் ஏற்படுவதைத் தடுத்த முக்கிய பிரச்சினைகள் “தீர்க்கப்பட்டுள்ளன” என்றும் கூறினார்.
ஒரு ஒப்பந்தம் எட்டப்படும் “விளிம்பில்” இருப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார். “சில மணிநேரத்திலோ, நாட்களிலோ அல்லது அதற்கும் மேற்பட்ட காலத்திலோ” ஒரு ஒப்பந்தம் கையெழுத்தாக சாத்தியம் இருக்கிறது என்று இஸ்ரேல் அதிகாரி ஒருவர் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் கூறினார்.
ஜனவரி 20-ஆம் தேதி தான் பதவியேற்பதற்குள் எந்த ஒப்பந்தமும் எட்டப்படாவிட்டால் “மோசமான சூழ்நிலை ஏற்படும்” என்று அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்ததை தொடர்ந்து இந்த புதிய முயற்சி நடைபெற்றுள்ளது.
பேச்சுவார்த்தைக்கு மத்தியஸ்தம் செய்யும் கத்தார் ஆட்சியாளர் ஷேக் தமீம் பின் ஹமத் அல்-தானியுடன் திங்கட்கிழமையன்றும், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடன் ஞாயிற்றுக்கிழமையன்றும் பைடன் பேசினார்.
திங்கள்கிழமை அன்று, ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் அதிகாரிகள் ஒரே கட்டடத்தில் ஆறு மணி நேரமாக மூன்றாம் தரப்பு மத்தியஸ்தர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக பாலத்தீன அதிகாரி ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார்.
“இந்த ஒப்பந்தம் பற்றி விரிவான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதால் இவ்வளவு நேரம் எடுத்தது”, என்று ஒப்பந்தத்தின் சில சாத்தியமான விவரங்களை பற்றி அந்த அதிகாரி கூறினார்.
நிபந்தனைகள் என்ன?
ஒப்பந்தத்தின் முதல் நாளில் ஹமாஸ் மூன்று பணயக்கைதிகளை விடுவிக்கும் என்றும், அதன் பிறகு மக்கள் வசிக்கும் பகுதிகளிலிருந்து இஸ்ரேல் அதன் படைகளை திரும்பப் பெறத் தொடங்கும் என்றும் இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர்.
ஏழு நாட்களுக்குப் பிறகு, ஹமாஸ் கூடுதலாக நான்கு பணயக்கைதிகளை விடுவிக்கும், மேலும் தெற்கு காஸாவுக்கு இடம்பெயர்ந்த மக்களை மீண்டும் வடக்கு பகுதிக்கு திரும்ப இஸ்ரேல் அனுமதிக்கும். ஆனால் கடற்கரை சாலை வழியாக மக்கள் நடந்தே செல்ல வேண்டும்
காஸாவில் உள்ள சலா அல்-தின் சாலையை ஒட்டியுள்ள ஒரு பாதை வழியாக கார்கள், விலங்குகளால் இழுக்கப்படும் வண்டிகள் மற்றும் ட்ரக்குகள் செல்ல அனுமதிக்கப்படும். இந்த பாதை கத்தார்- எகிப்து நாடுகளின் ஒரு தொழில்நுட்ப பாதுகாப்பு குழுவால் இயக்கப்படும் எக்ஸ்-ரே இயந்திரம் கொண்டு கண்காணிக்கப்படும்.
ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்ட முதல் 42 நாட்களுக்கு இஸ்ரேல் படைகள் பிலடெல்பி பாதையில் தொடர்ந்து இருப்பதற்கும், கிழக்கு மற்றும் வடக்கு எல்லைகளில் 800 மீட்டர் தூரத்தை ராணுவ நடவடிக்கையற்ற பகுதியாக வைத்திருப்பதற்கும் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.
1,000 பாலஸ்தீன கைதிகளை விடுவிக்கவும் இஸ்ரேல் ஒப்புக்கொண்டுள்ளது. இவர்களுள் 15 ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட காலமாக சிறை தண்டனை அனுபவித்து வரும் சுமார் 190 நபர்கள் அடங்குவர். இதற்கு ஈடாக ஹமாஸ் 34 பணயக்கைதிகளை விடுவிக்கும்.
ஒப்பந்தத்தின் இரண்டாவது மற்றும் மூன்றாவது கட்டங்களுக்கான பேச்சுவார்த்தைகள் போர் நிறுத்தத்தின் 16வது நாளில் தொடங்கும்.
டிரம்பால் நியமிக்கப்பட்ட மத்திய கிழக்குத் தூதர் ஸ்டீவ் விட்கோஃப் என்பவரும் கத்தாரில் நடந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டார்.
இஸ்ரேலின் வெளியுறவுத்துறை அமைச்சர் கிடியன், இந்த ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், “முன்பை விட இம்முறை மிகவும் சிறப்பாக இருந்தது” என்றும் தெரிவித்தார்.
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தனது ஆளும் கூட்டணிக்குள் இருந்து ஒப்பந்தத்திற்கு கடுமையான எதிர்ப்பை எதிர்கொண்ட நிலையில் சமீபத்திய முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
நெதன்யாகுவின் லிகுட் கட்சியைச் சேர்ந்த சிலர் உட்பட பத்து வலதுசாரி உறுப்பினர்கள் போர் நிறுத்தத்தை எதிர்த்து அவருக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.
இஸ்ரேல் – பாலத்தீன போர்
2023-ஆம் ஆண்டு, அக்டோபர் 7-ஆம் தேதி அன்று தெற்கு இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலில் சுமார் 1,200 பேர் கொல்லப்பட்டனர். 251 பேர் பணயக்கைதிகளாக காஸாவுக்கு கொண்டு செல்லப்பட்டதால் போர் வெடித்தது
இதற்கு பதிலடியாக ஹமாஸை அழிக்க இஸ்ரேல் காஸா மீது ராணுவ தாக்குதலை நடத்தியது.
இந்த போரின் போது 46,500 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டதாக காஸாவின் ஹமாஸ் நடத்தும் சுகாதார அமைச்சகம், கூறுகிறது.
94 பணயக்கைதிகள் இன்னும் காஸாவில் இருப்பதாகவும், 34 பேர் இறந்திருக்கலாம் என்றும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
கூடுதலாக, நான்கு இஸ்ரேலியர்கள் போருக்கு முன்னர் கடத்தப்பட்டனர், அவர்களில் இருவர் இறந்துவிட்டதாக உறுதிப்படுத்தப்பட்டது
காஸாவில் இன்னும் மோசமான சூழல் நீடிக்கிறது.
போர்நிறுத்தப் பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருந்த போதிலும், தெற்கில் ரஃபா, கான் யூனிஸ் மற்றும் வடக்கில் காஸா நகரம் போன்ற பகுதிகள் உட்பட காஸாவில் தொடர் குண்டுவெடிப்புச் சம்பவங்கள் நடந்ததாக, மெடிசின்ஸ் சைன்ஸ் பிரான்டியர்ஸ் எனும் அமைப்பை சேர்ந்த சேர்ந்த அமண்டே பசரோல் பிபிசி டுடே நிகழ்ச்சியில் தெரிவித்தார்.
போர்நிறுத்தம் ஏற்படுத்தப்பட்டாலும், உடனடியாக முன்னேற்றம் ஏற்படும் என்று தான் எதிர்பார்க்கவில்லை என்று பசரோல் தெரிவித்தார்.
மேலும் “நீங்கள் எதிர்பார்க்கும் அன்றாட வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகள் இங்கே இல்லை,” என்றும் அவர் குறிப்பிட்டார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
SOURCE : BBC