SOURCE :- INDIAN EXPRESS

தமிழகமெங்கும் தை மாதம் பிறந்த முதல் நாளில் இருந்தே தமிழர்களின் வீர விளையாட்டு ஜல்லிக்கட்டு போட்டி பெரும்பாலான இடங்களில் நடைபெறுவது வழக்கம். குறிப்பாக, உலகப் புகழ்பெற்ற மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு ஜல்லிக்கட்டுகளை அடுத்து திருச்சி பெரிய சூரியூர் ஜல்லிக்கட்டு பிரசித்தி பெற்றது. அந்த வகையில், திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே பெரிய சூரியூரில், நற்கடல்குடி கருப்பண்ணசாமி கோயிலில் ஆண்டுதோறும் மாட்டுப் பொங்கல் தினத்தன்று, பொங்கல் வைத்து ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதை அந்தக் கிராம மக்கள் பராம்பரிய வழக்கமாக வைத்துள்ளனர்.

Advertisment

அதன்படி, கோவிலில் பொங்கல் வைத்த பிறகு பிரசித்தி பெற்ற பெரிய சூரியூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை துவங்கியது. எட்டு சுற்றுகளாக நடைபெறும் இந்த ஜல்லிக்கட்டு விளையாட்டில், திருச்சி, கரூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 800 காளைகள் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 800 காளைகளை அடக்க 500 காளையர்கள் அனுமதி பெற்று களத்தில் களமிறங்கி விளையாடி வருகிறார்கள். 

காளைகளை அடக்கும் சிறந்த மாடுபிடி வீரருக்கு முதல் பரிசாக இருசக்கர வாகனம் (பைக்) ஒன்றும், இரண்டாவது பரிசாக எல்சிடி டிவியும் வழங்கப்பட உள்ளன. இதைத்தவிர, போட்டியில் பங்கேற்கும் காளைகள், காளையருக்கு எவர்சில்வர் பாத்திரங்கள், பீரோ, கட்டில், மேஜை, மிக்ஸி, கிரைண்டர் உள்ளிட்ட ஏராளமான பரிசுப் பொருட்கள் வழங்கப்பட உள்ளன.

இந்நிலையில், இந்த ஜல்லிக்கட்டுப் போட்டியில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் கொம்பன் காளை வெற்றி பெற்றது. இதையடுத்து, விஜயபாஸ்கரிடம் பள்ளிக் கல்வித்துறை அமைச்சரும், திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி பரிசு வழங்கினார். 

Advertisment

Advertisement

முன்னதாக, ஜல்லிக்கட்டு போட்டியின் போது, அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சரும், திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி இருவரும் ஒரே மேடையில் அருகருகே அமர்ந்து பரஸ்பரம் நலம் விசாரித்துக்கொண்டு ஜல்லிக்கட்டு போட்டிகளை ஆரவாரத்துடன் கண்டுகளித்தனர்.

செய்தி: க.சண்முகவடிவேல்.

SOURCE : TAMIL INDIAN EXPRESS