SOURCE :- BBC NEWS

இந்தியா - சீனா, இந்தியப் பெருங்கடல்

பட மூலாதாரம், Getty Images

இந்திய கடற்படையில், ஐஎன்எஸ் வாக்‌ஷீர் நீர்மூழ்கிக் கப்பல், ஐஎன்எஸ் சூரத் மற்றும் ஐஎன்எஸ் நீலகிரி பி17ஏ என மூன்று போர்க்கப்பல்கள் ஜனவரி 15-ஆம் தேதி அன்று ஒரே நேரத்தில் சேர்க்கப்பட்டன.

இந்தியப் பெருங்கடலில் சீனாவின் வலுவான இருப்புக்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது.

இந்தியாவின் 95 சதவீத வர்த்தகம் இந்தியப் பெருங்கடல் மார்க்கமாக நடைபெறுகிறது. இங்கு சீனக் கடற்படையினரின் இருப்பு அதிகமாக இருப்பதால் இந்தியாவுக்கு சவால்கள் ஏற்பட்டுள்ளன.

இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசும் போது, ஒரு காலத்தில் அட்லாண்டிக் பெருங்கடலுக்கு இருந்த முக்கியத்துவம் தற்போது இந்தியப் பெருங்கடல் பக்கம் திரும்புகிறது என்று கூறினார். உலக வல்லரசு நாடுகள் இடையே நிலவும் போட்டியின் மையப்பகுதியாக இந்தியப் பெருங்கடல் மாறியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

இந்திய நலன்களை கருத்தில் கொண்டு கடற்படையை வலுப்படுத்தும் பணியில் அதிக கவனம் செலுத்தப்படுகிறது என்றும் அவர் கூறினார்.

மும்பையில் உள்ள மசாகோன் கப்பல் கட்டும் துறைமுகத்தில் இந்த மூன்று போர்க் கப்பல்களையும் இந்திய பிரதமர் நரேந்திர மோதி நாட்டுக்கு அர்ப்பணித்தார். .

“பாதுகாப்பு உற்பத்தி மற்றும் கடல்சார் பாதுகாப்பில் முக்கியத் தலைமையாக உருவெடுப்பதற்கான இந்தியாவின் பார்வையை நிஜமாக்கும் வகையில் மூன்று பெரிய கடற்படை போர்க்கப்பல்கள் இயக்கப்படுகின்றன. இது மிகவும் முக்கியமான கட்டமாகும்,” என்று அவர் கூறினார்.

ஆனால், இந்தியப் பெருங்கடலில் உள்ள சீனாவின் கடற்படையின் இருப்பை சமப்படுத்துவதில் இந்தியா எந்தளவுக்கு வெற்றி அடையும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

கடல்சார் பாதுகாப்பை அதிகரிக்கும் இந்தியா

புதன்கிழமை வாக்‌ஷீர் அறிமுகம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்தியாவிடம் தற்போது உள்ள நீர்மூழ்கிக் கப்பல்களின் எண்ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ளது.

இது இந்தியப் பெருங்கடல் முதல் வங்காள விரிகுடா வரையிலான கடல் பாதுகாப்பில் இந்தியாவின் திறனை மேம்படுத்த உதவும்.

ஆனால், இந்தியாவின் முக்கியப் போட்டி நாடான சீனாவின் கடற்படை பலம் தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. இதனால் இந்தியப் பெருங்கடல் பகுதியில் நிலைமை சவாலானதாக மாறி வருகிறது என்று பாதுகாப்பு நிபுணர்கள் கூறுகின்றனர்.

பாதுகாப்புத்துறை ஆய்வாளர் ராகுல் பேடி பிபிசி ஹிந்தியிடம் பேசிய போது, “புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட கப்பல்களின் நோக்கமானது, பழைய நீர்மூழ்கிக் கப்பல்களை மாற்றுவதும், தற்போதுள்ள திறன் இடைவெளியைக் குறைப்பதும் தான்,” என்றார்.

“பிரான்சுடன் இணைந்து இந்தியா செயல்படுத்தும் பி75 ஸ்கார்பியன் நீர்மூழ்கிக் கப்பல் திட்டம் இத்துறையில் இந்தியா வளர்ந்து வருவதை சுட்டிக்காட்டுகிறது,” என்றும் பேடி தெரிவித்தார்.

இந்திய நீர்மூழ்கிக் கப்பல்களின் திறன், நரேந்திர மோதி

பட மூலாதாரம், Getty Images

ஐஎன்எஸ் வாக்‌ஷீர், பிரான்சிடம் உரிமம் பெற்று ஸ்கார்பியன் பிரிவில் உருவாக்கப்பட்ட ஆறாவது டீசல்-எலக்ட்ரிக் நீர்மூழ்கிக் கப்பலாகும்.

அடுத்த மாதம் பாரிஸில் நடைபெறவுள்ள செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாட்டிற்காக மோதி பிரான்ஸ் செல்ல உள்ளார். அங்கே மேலும் மூன்று ஸ்கார்பியன் நீர்மூழ்கிக் கப்பல்களுக்கான ஒப்பந்தத்தில் அவர் கையெழுத்திடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியப் பெருங்கடலில் வேகமாக வளர்ந்து வரும் சீன கடற்படையின் தாக்கத்தை சமப்படுத்தும் வகையில் இந்தியா முதல்முறையாக, 2022-ஆம் ஆண்டில் உள் நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தனது முதல் விமானந்தாங்கி கப்பலை அறிமுகம் செயது.

பயன்பாட்டில் உள்ள ஐ.என்.எஸ் விக்ராந்த் இந்தியாவின் இரண்டாவது விமானந்தாங்கி போர்க்கப்பல் ஆகும். இந்தியப் பெருங்கடல் மற்றும் வங்காள விரிகுடாவின் பாதுகாப்பு தேவைக்காக 2004-ஆம் ஆண்டு ரஷ்யாவிடமிருந்து ஒரு விமானம் தாங்கிக் கப்பல் வாங்கப்பட்டது. ஐ.என்.எஸ். விக்ரமாதித்யா என்று அழைக்கப்படும் அந்த கப்பல் சோவியத் கால கப்பல் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய நீர்மூழ்கிக் கப்பல்களின் திறன், நரேந்திர மோதி

பட மூலாதாரம், Getty Images

நீர்மூழ்கிக் கப்பல்களின் திறன்

இந்தியாவிடம் மொத்தம் 16 நீர்மூழ்கிக் கப்பல்கள் உள்ளன. அவற்றில் 6 நீர்மூழ்கிக் கப்பல்கள் நவீனமானவை. மீதமுள்ள 10 நீர்மூழ்கிக் கப்பல்கள் 29 முதல் 34 ஆண்டுகள் வரை பழமையானவை. அந்த கப்பல்களில் இரண்டு அல்லது மூன்று ஓய்வுபெறும் நிலையில் உள்ளன.

கூடுதலாக 6 நீர்மூழ்கிக் கப்பல்களை கடற்படையில் சேர்ப்பது குறித்து கடந்த சில ஆண்டுகளாக ஆலோசனை நடைபெற்று வருகிறது. அடுத்த இரண்டு அல்லது மூன்று மாதங்களில் மூன்று நீர்மூழ்கிக் கப்பல்களுக்கான ஒப்பந்தம் கையெழுத்தாகலாம்.

ஆனால் இந்திய கடற்படையின் வளர்ச்சிக்கான பாதை அவ்வளவு சுலபமானது அல்ல.

ராகுல் பேடி கூறுகையில், “புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட வாக்‌ஷீர் நீர்மூழ்கிக் கப்பலில் தானாக இயங்கும் உந்துவிசை கட்டமைப்பு இல்லை என்பதால் அது கடலின் மேற்பரப்பிற்கு இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒருமுறை வர நேரிடும்,” என குறிப்பிட்டார்.

“இந்த உந்துவிசை கட்டமைப்பு இருக்கும் ஒரு நீர் மூழ்கிக் கப்பல், நீருக்கடியில் 15 முதல் 20 நாட்கள் வரை இயங்க முடியும். ஆனால் இந்தியாவின் ஆறு நீர்மூழ்கிக் கப்பல்களில் இந்த அமைப்பு இல்லை. இதன் காரணமாக அவை இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒரு முறை கடலின் மேற்பரப்பிற்கு வர வேண்டியுள்ளது,” என்று ராகுல் விளக்குகிறார்.

“இது தவிர, ஐஎன்எஸ் வாக்‌ஷீரில் டார்பிடோ (torpedoes) போன்ற ஆயுதங்கள் இன்னும் நிறுவப்படவில்லை. டார்பிடோவுக்கான ஒப்பந்தம் 2017-18 காலகட்டத்தில் ரத்து செய்யப்பட்டது. விஐபி ஹெலிகாப்டர்களை தயாரிக்கும் வெஸ்ட்லேண்ட் நிறுவனம் டார்பிடோக்களை உற்பத்தி செய்கிறது,” என்று அவர் மேற்கோள்காட்டுகிறார்.

“நீர்மூழ்கி கப்பல் டார்பிடோக்களை பொருத்தும் வகையில் தான் வடிவமைக்கப்பட்டது. ஆனால் வெஸ்ட்லேண்ட் ஊழலுக்குப் பிறகு ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதால், இதுவும் இழுபறியானது. இப்போது நீர்மூழ்கிக் கப்பல் அறிமுகம் செய்யப்பட்டுவிட்டது. ஆனால் அதில் டார்பிடோக்கள் இல்லை,” என்றார் அவர்.

“பாதுகாப்புத் துறை தொடர்பான முடிவுகளில் ஏற்படும் தாமதம் இந்திய கடற்படையின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய தடையாக உள்ளது,” என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்திய நீர்மூழ்கிக் கப்பல்களின் திறன், நரேந்திர மோதி

பட மூலாதாரம், Getty Images

இந்திய கடற்படையில் உள்ள தடைகள்

பொதுவாக, இந்தியா தனது நீண்ட நில எல்லையில் அதிக கவனம் செலுத்துகிறது. ஏன் என்றால், அது பாகிஸ்தான் மற்றும் சீனா போன்ற நாடுகளுடன் எல்லையை பகிர்ந்து கொள்கிறது.

இது தொடர்பாக மேலும் விவரித்த ராகுல், “லடாக் அல்லது பாகிஸ்தானுடனான உண்மையான கட்டுப்பாட்டு எல்லை என்று அழைக்கப்படும் எல்.ஓ.சி.யில் தான் அதிக கவனம் செலுத்தப்படுகிறது. ஆனால் கடல் எல்லைப்பகுதிகளில் அத்தகைய கவனம் செலுத்தப்படவில்லை. கொள்கையை உருவாக்கும் நபர்களின் கவனம் குறைவாகவே இருந்தது, போதுமான நிதியும் இல்லை” என்றார்.

இது மட்டுமின்றி, பாதுகாப்பு தளவாட உற்பத்தியில் சீனாவை விட இந்தியா பல மடங்கு பின் தங்கியுள்ளது.

மேற்கொண்டு பேசிய ராகுல், “தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள மூன்று கப்பல்களையும் தயாரிக்க மூன்று முதல் நான்கு ஆண்டுகள் ஆனது. ஆனால் சீனாவில் உற்பத்தி மிகவும் வேகமாக நடைபெறுகிறது. வெறும் 10 முதல் 12 மாதங்களில் இத்தகைய போர்க்கப்பல்களை சீனாவால் உருவாக்க இயலும். ஒரே வருடத்தில் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலைக் கூட உருவாக்கும் திறன் அவர்களிடம் உள்ளது,” என குறிப்பிட்டார்.

அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் உற்பத்தியில் ஏற்படும் தாமதம் குறித்து சுட்டிக்காட்டிய அவர், , “இந்திய கடற்படை, இரண்டு அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை இயக்குகிறது. நம்முடைய அணுசக்தி திட்டம் 1974-இல் தொடங்கப்பட்டது. முதல் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் 2016-இல் கடற்படையில் சேர்க்கப்பட்டது,” என்று அவர் தெரிவித்தார்.

இரண்டாவது அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலான ஐ.என்.எஸ் அரிகாட் ஆகஸ்ட் 2024-இல் அறிமுகம் செய்யப்பட்டது.

இந்திய நீர்மூழ்கிக் கப்பல்களின் திறன், நரேந்திர மோதி

பட மூலாதாரம், Getty Images

சீனாவின் கடற்படை எவ்வளவு சக்தி வாய்ந்தது?

சீனா மற்றும் இந்தியாவின் கடற்படைக்கு இடையே பெரிய வித்தியாசம் உள்ளது என்று ராகுல் கூறுகிறார்.

“சீனாவின் கடற்படையில் 600 போர்க்கப்பல்கள் நீருக்கு மேலும் மற்றும் அடியிலும் உள்ளன. அதில் மூன்று கப்பல்கள் விமானந்தாங்கி போர்க்கப்பல்கள், 50 நீர்மூழ்கிக் கப்பல்கள் உள்ளன. அவற்றில் 15 நீர்மூழ்கிக் கப்பல்கள் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்கள். ஆனால் இந்தியாவிடம் 145 போர்க்கப்பல்கள் மட்டுமே உள்ளன”

“கடந்த ஐந்து ஆண்டுகளில், சீன தன்னுடைய கடற்படையின் வலிமையை கணிசமாக அதிகரித்துள்ளது. சீன கடற்படை பாகிஸ்தானில் உள்ள குவாடர் (Gwadar) துறைமுகத்திலிருந்தும், இந்தியப் பெருங்கடலில் இலங்கையின் ஹம்பந்தோட்டா துறைமுகத்திலிருந்தும் இயங்குகிறது. மியான்மரிலும் சீன கடற்படை குறிப்பிடத்தக்க இருப்பைக் கொண்டுள்ளது. இது தவிர மாலத்தீவு மற்றும் வங்கதேசத்திலும் சீனா செல்வாக்கு செலுத்துகிறது. ஒரு வகையில் இந்திய கடற்படை சீன கடற்படையால் அனைத்து பக்கங்களிலும் சூழப்பட்டுள்ளது,” என்று ராகுல் குறிப்பிடுகிறார்.

இத்தகைய சூழ்நிலையில், அதனுடன் போட்டியிடுவது கடினம். சீனாவின் இருப்பு மற்றும் அதனால் ஏற்படும் அச்சுறுத்தல் அதிகரித்து வருவதாக இந்திய கடற்படையும் நம்புகிறது.

“சீனாவின் பாதுகாப்புப் படைகளில் கடற்படை மிகவும் பழமையான சேவை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அதன் முக்கியத்துவம் மற்ற இரண்டு ராணுவப் படைகளைக் காட்டிலும் அதிகமாக உள்ளது. சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட்டில் மற்ற இரண்டு ராணுவப் பிரிவுகளைக் காட்டிலும் கடற்படைக்கு அதிக நிதி ஒதுக்கப்படுகிறது. ஆனால் இந்தியாவைப் பொருத்தமட்டில், கடற்படைக்கு வழங்கப்படும் நிதியானது மற்ற இரண்டு ராணுவப் பிரிவுக்கு வழங்கப்படும் நிதியைக் காட்டிலும் குறைவானது,” என்றார் ராகுல்.

இந்திய நீர்மூழ்கிக் கப்பல்களின் திறன், நரேந்திர மோதி

பட மூலாதாரம், Getty Images

இந்தியப் பெருங்கடலில் சீனாவின் வியூகம்

இந்தியப் பெருங்கடலில் சீனா உருவாக்கி வரும் உத்திக்கு முத்து மாலை (String of Pearls) என்று பெயர்.

இந்தியப் பெருங்கடலைச் சுற்றியுள்ள நாடுகளில் தேவைப்படும் போது இராணுவ தேவைகளுக்காக பயன்படுத்தும் வகையில், உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குதல் மற்றும் பாதுகாப்பு அம்சங்களை துறைமுகங்களுக்கு வழங்குவது போன்ற பணிகளில் சீனா ஈடுபட்டு வருகிறது.

இந்த “முத்துகள்” (Pearls) சீனா தனது ஆற்றல் மற்றும் ராணுவ நலனை பாதுகாக்க, மத்திய கிழக்கிலிருந்து தென் சீனக் கடல் வரையிலான கடல் மார்க்கங்களில், பல நாடுகளுடன் மூலோபாய உறவுகளை உருவாக்க கொண்டுவரப்பட்டதாக நம்பப்படுகிறது.

ஆப்பிரிக்காவில் ஜிபூட்டியிலும் (Djibouti), பாகிஸ்தானில் குவாடாரிலும் துறைமுகங்களை கட்டி வருகிறது சீனா. இலங்கையில் உள்ள ஹம்பந்தோட்டையை 99 வருட குத்தகைக்கு எடுத்துள்ளது அந்த நாடு.

மியான்மரில் உள்ள கோகோ தீவில் சீன கடற்படை செயல்பட்டு வருகிறது. இந்தியப் பெருங்கடல் பகுதியில் சீனாவின் கடற்படை செல்வாக்கை அதிகரிக்க இந்தத் துறைமுகங்கள் உதவியாக உள்ளன.

இந்திய நீர்மூழ்கிக் கப்பல்களின் திறன், நரேந்திர மோதி

பட மூலாதாரம், Getty Images

இந்தியப் பெருங்கடல் முக்கியமானதாக கருதப்பட காரணம் என்ன?

ஏ.பி. செய்தி முகமையின் படி, இந்தியாவின் 95 சதவீத கடல் வர்த்தகம் இந்தியப் பெருங்கடல் வழியாகவே நடைபெறுகிறது. அதேசமயம் உலகின் 70 சதவீத கடல் வர்த்தகம் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கியும் மேற்கிலிருந்து கிழக்கிற்கும் இந்தியப் பெருங்கடல் வழியே நிகழ்கிறது.

அத்தகைய சூழ்நிலையில் இந்த பகுதியில் தானாகவே போட்டி கடுமையாகியுள்ளது.

ராகுல்,”அதனால்தான் இந்தியப் பெருங்கடல் பகுதிக்கு அதிக முக்கியத்துவம் உள்ளது. அதன் முக்கியத்துவம் வரும் காலங்களில் அதிகரிக்கும்,” என்றும் குறிப்பிடுகிறார்.

இந்தப் பிராந்தியத்தில் அமெரிக்கா ஆதிக்கம் செலுத்துவதை சீனா விரும்பவில்லை. தற்போது அமெரிக்க கடற்படையிடம் 12 விமானம் தாங்கி கப்பல்கள் உள்ளன.

ராகுல் பேடி கூறும் போது, ​​’சீனா இதனை எதிர்க்கும் வகையில் ஏவுகணை அமைப்பை உருவாக்கியுள்ளது. இது ஏ.டி. ஏவுகணை (Air Denial Missile) தொழில்நுட்பம் என்று அழைக்கப்படுகிறது,” என்று கூறுகிறார்.

“இது தரையில் நிறுவப்பட்டுள்ளது. இது 300 முதல் 500 கி.மீ தொலைவில் தாக்குதலை நடத்தும். இது அமெரிக்காவின் விமானம் தாங்கி கப்பல்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் அக்கப்பல்கள் தாக்கப்பட்டால், அவை முற்றிலும் பயனற்றதாகிவிடும். சீனா இந்த அமைப்பை பாகிஸ்தானுக்கு வழங்குகிறது என்பதால் இந்தியாவும் சிரமங்களை சந்திக்கும்,” என்கிறார் அவர்.

இது தவிர, சீனா பாகிஸ்தானுக்கு நீர்மூழ்கிக் கப்பலை வழங்க உள்ளது. இதன் காரணமாக பாகிஸ்தான் கடற்படையின் திறன் அதிகரிக்கும்.

ராகுல், “ஏர் இன்டிபென்டன்ட் ப்ராபல்ஷன் அமைப்பின் காரணமாக, இந்திய கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பல்களுடன் ஒப்பிடுகையில், பாகிஸ்தான் கடற்படையின் திறன் சற்று அதிகரிக்கும். கடந்த 18 ஆண்டுகளாக, இந்திய கடற்படை இந்த அமைப்பை நிறுவுவது குறித்து பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. ஆனால் இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை,” என்று தெரிவித்தார்.

“இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தில் கொள்முதல் தொடர்பான முடிவுகளை எடுக்க நீண்ட செயல்முறை உள்ளது, இது கடற்படையின் வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இந்தியா, இந்த முடிவெடுக்கும் செயல்முறையை விரைவுபடுத்த வேண்டும்,” என ராகுல் தெரிவித்தார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU