SOURCE :- BBC NEWS

லிபியா, மும்மர் கடாஃபி

பட மூலாதாரம், Getty Images

  • எழுதியவர், வலீத் பத்ரன்
  • பதவி, பிபிசி அரபு
  • 19 ஜனவரி 2025, 04:02 GMT

    புதுப்பிக்கப்பட்டது 21 நிமிடங்களுக்கு முன்னர்

ஜனவரி 16-ஆம் தேதி, 1970-ஆம் ஆண்டில் லிபியாவின் அதிபராகப் பதவியேற்ற மும்மர் கடாஃபி தனது ஆட்சி 42 ஆண்டுகள் நீடிக்கும் என்றும் அதன் விளைவுகள் என்னவாக இருக்கப் போகின்றன என்பது குறித்தும் கற்பனை செய்திருக்க மாட்டார்.

கடாஃபி ஆட்சியில் இருந்த காலத்தில், தனக்கு எதிரான எல்லா வகையான எதிர்ப்புகளையும் கொடூரமான முறைகளில் தகர்த்தெறிந்தார்.

லிபியாவில் வேறு எந்த தலைமையும் உருவாக முடியாமல் போனதற்கு அவரது இந்த அணுகுமுறையே காரணமாக இருந்திருக்கலாம்.

ஆனால் 2011 ஆம் ஆண்டு, துனிசியாவில் இருந்து தொடங்கிய ‘அரபு எழுச்சி இயக்கம்’ கர்னல் மும்மர் கடாஃபியை ஆட்சியில் இருந்து அகற்றவும் வழிவகுத்தது.

2011-ஆம் ஆண்டு, அக்டோபர் 20-ஆம் தேதி கிளர்ச்சியாளர்களால் கொல்லப்பட்ட மும்மர் கடாஃபி, பெடோயின் பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒரு விவசாயியின் மகன்.

கிராம பின்புலத்தில் இருந்து வந்த கடாஃபி, அரபு உலகின் திறமையான தலைவராக எப்படி மாறினார்? லிபியாவை 42 ஆண்டுகள் ஆட்சி புரிந்த கடாஃபி வீழ்ந்தது எப்படி? என்பதை விளக்குகிறது இக்கட்டுரை.

லிபியா, மும்மர் கடாஃபி

ராணுவப் பயிற்சி மற்றும் பதவி உயர்வு

லிபியா, மும்மர் கடாஃபி

பட மூலாதாரம், Getty Images

என்சைக்ளோபீடியா பிரிட்டானிகாவின் படி, மும்மர் கடாஃபி 1942 இல் பிறந்தார் மற்றும் அவரது தந்தை ஒரு பெடோயின் விவசாயி என அறியப்படுகின்றது.

பள்ளிக் கல்வியை முடித்த மும்மர் கடாஃபி பல்கலைக்கழகக் கல்வியைத் தொடர பெங்காஸி நகருக்கு சென்றார்.

1961 ஆம் ஆண்டில், அவரது அரசியல் நாட்டம் மற்றும் அவரது சித்தாந்தம் காரணமாக அவர் பல்கலைக் கழகத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்.

இந்தக் காலகட்டத்தில் கடாஃபி, லிபியா பல்கலைக்கழகத்தில் சட்டப் பட்டம் பெற்றார். இங்கு அவருக்கு லிபிய நாட்டு ராணுவத்தில் சேர வாய்ப்பு கிடைத்தது.

ராணுவத்தில் வேலை செய்வதன் மூலம் ஒருவர் லிபியாவில் சிறந்த கல்வியைப் பெற முடியும். ராணுவத்தில் இணைவது ஒரு நல்ல பொருளாதாரத் தேர்வாகவும் பார்க்கப்பட்டது.

அதனால் தான், மும்மர் கடாஃபி தனது உயர்கல்வியை முடிப்பதற்கு முன்பே ராணுவத்தில் சேர்ந்தார். இந்த முடிவு அவரை ஒரு அதிகார நிலைக்கு இட்டுச் சென்றது. தனது இளமை பருவத்தில், ​​எகிப்தின் ஜமால் அப்துல் நாசரையும் அவருடைய கொள்கைகளையும் கடாஃபி ரசித்தார்.

1956 இல், பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் இஸ்ரேலின் எகிப்து ஆக்கிரமிப்பிற்கு எதிரான போராட்டங்களில் மும்மர் கடாஃபி இணைந்தார். பிரிட்டன் மற்றும் பிரான்சின் கட்டுப்பாட்டில் இருந்த சூயஸ் கால்வாயை எகிப்து கைப்பற்றிய பின்னர் இந்த படையெடுப்பு நடந்தது.

அதன் பிறகு, லிபியாவில் ராணுவப் பயிற்சியை முடித்த கடாஃபி 1965-ஆம் ஆண்டு, பயிற்சிக்காக பிரிட்டனுக்கு அனுப்பப்பட்டார்.

விதிவிலக்காக மும்மர் கடாஃபி லிபிய ராணுவத்தில் வேகமாக உயர் நிலைகளை அடைந்தார். அதே நேரத்தில் அரச குடும்பத்திற்கு எதிராக கிளர்ச்சியைத் திட்டமிடத் தொடங்கினார்.

ராணுவப் பயிற்சி நாட்களில் இருந்தே, லிபியாவில் மன்னராட்சிக்கு எதிரான கிளர்ச்சித் திட்டத்தை கடாஃபி தொடங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இறுதியாக, 1969 ஆம் ஆண்டில், பிரிட்டனில் பயிற்சி பெற்ற பிறகு, பெங்காஸி நகரத்தை மையமாகக் கொண்டு ராணுவக் கிளர்ச்சியைத் தொடங்கினார் கடாஃபி.

இந்தக் கிளர்ச்சியின் முடிவில் அவர் லிபியாவின் ஆட்சியாளராக உருவெடுத்தார்.

கிளர்ச்சி மற்றும் எண்ணெய் வளங்கள்

லிபியா, மும்மர் கடாஃபி

பட மூலாதாரம், Getty Images

செப்டம்பர் 1, 1969 இல், கர்னல் மும்மர் கடாஃபியின் தலைமையிலான ராணுவம் லிபிய மன்னரை வீழ்த்தியது.

புரட்சிக் கவுன்சிலின் புதிய தலைவராக பதவியேற்ற போதே, ராணுவத்தின் தலைமைத் தளபதியாகவும், ஆட்சித்தலைவராகவும் கடாஃபி பதவி வகித்தார்.

ஆனாலும் தனது கர்னல் பதவியையும் தக்க வைத்துக் கொண்டார் கடாஃபி.

கடாஃபி ஆட்சிக்கு வந்தவுடன், அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் ராணுவத் தளங்களை அழித்தார். 1970 இல் இத்தாலிய மற்றும் யூத குடியிருப்பாளர்களையும் நாட்டிலிருந்து வெளியேற்றினார்.

1973-ஆம் ஆண்டில், நாட்டின் அனைத்து எண்ணெய் வள மையங்களையும் தேசிய அளவில் கையகப்படுத்தினார். அது மட்டுமின்றி, நாட்டில் மதுபானம் மற்றும் சூதாட்டத்தை தடை செய்தார் கடாஃபி.

அந்தச் சூழலில், சர்வதேச எண்ணெய் நிறுவனங்களின் அதிகாரிகளுக்கு சவால் விடும் வகையில் , “5 ஆயிரம் வருடங்கள் எண்ணெய் இல்லாமல் உயிர் வாழ்ந்தவர்கள், இன்னும் சில வருடங்கள் உரிமைகளுக்காக போராடலாம்” என எச்சரித்தார்.

அவரது இந்த சவாலுக்கு பலன் கிடைத்தது.

வளரும் நாடுகளில் எண்ணெய் உற்பத்தியில் தனது பெரும் பங்கைப் பெற்ற முதல் நாடாக லிபியா உருவானது.

இந்த உதாரணத்திலிருந்து, விரைவில் மற்ற அரபு நாடுகள் பாடம் கற்றுக்கொண்டன.

அரபு பெட்ரோலின் ஏறுமுகம் அதிலிருந்து தொடங்கியது. அதாவது 1970 களில் அரபு நாடுகளில் எண்ணெய் புரட்சிக்கு அடித்தளம் அமைக்கப்பட்டது.

இந்த வழியைப் பின்பற்றி, ‘கருப்பு தங்கம்’ என்று அழைக்கப்படும் எண்ணெய் வளங்களில் இருந்து பயனடையத் தொடங்கியது லிபியா.

ஏனெனில் லிபியாவின் எண்ணெய் உற்பத்தி, வளைகுடா நாடுகளைப் போலவே இருந்தது.

பரந்த எண்ணெய் உற்பத்தி இருந்த போதிலும், ஒப்பீட்டளவில், 3 மில்லியன் எனும் அளவிலான சிறிய மக்கள் தொகையே லிபியாவில் இருந்தது. ஆனால் பரப்பு அடிப்படையில் ஆப்பிரிக்காவில் லிபியா பெரிய நாடுகளில் ஒன்று என்பதும் குறிப்பிடத்தக்கது.

அந்த அடிப்படையில் மிக விரைவாக லிபியா பணக்கார நாடாக மாறியது.

கர்னல் கடாஃபி இஸ்ரேலுடனான பேச்சுவார்த்தைகளை கடுமையாக எதிர்த்தவர், அதனால்தான் அவர் அரபு உலகில் ஒரு குறிப்பிடத்தக்கத் தலைவராக உருவெடுத்தார். எகிப்துக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான சமாதான ஒப்பந்தத்தையும் அவர் நிராகரித்தார்.

கடாஃபியின் பார்வை

லிபியா, மும்மர் கடாஃபி

பட மூலாதாரம், Getty Images

1970 களின் முற்பகுதியில், கடாஃபி தனது அரசியல் கருத்துகளை ‘கிரீன் புக்’ என்ற புத்தகத்தின் மூலம் முன்வைத்தார். இதன் கீழ் இஸ்லாமிய சோசலிசத்திற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு பொருளாதார நிறுவனங்களை தேசம் கையகப்படுத்துவதாக அறிவிக்கப்பட்டது.

இந்த புத்தகத்தின்படி, சமூகப் பிரச்னைகளுக்கான தீர்வு ஜனநாயகத்திலோ அல்லது வேறு எந்த அமைப்பிலோ இல்லை. மிகப்பெரிய கட்சியின் சர்வாதிகாரம் தான் ஜனநாயகம் என்று கடாஃபி குறிப்பிட்டார். கடாஃபியின் கூற்றுப்படி, அனைத்துக்கும் பொறுப்பான குழுக்களால் தான் அரசாங்கம் நடத்தப்பட வேண்டும்.

1979 இல், லிபியாவின் முறையான தலைமைப் பதவியை கடாஃபி துறந்தார்.

அதன் பிறகு, தன்னை ஒரு புரட்சித் தலைவர் என்று கூறினார். ஆனால் அதிகாரமும் உரிமைகளும் அவரிடமே இருந்தன.

அதனால் கர்னல் கடாஃபியும் அவரது அரசும் எதிர்பாராத முடிவுகளால் சர்வதேச அளவில் பிரபலமடைந்தனர்.

பல அமைப்புகளுக்கு நிதி வழங்கத் தொடங்கினார் கடாஃபி.

இதில் அமெரிக்க பிளாக் பாந்தர்ஸ் மற்றும் நேஷன் ஆஃப் இஸ்லாம் ஆகியவை அடங்கும். வடக்கு அயர்லாந்தில் உள்ள ஐரிஷ் குடியரசு ராணுவத்தையும் (IRA) கடாஃபி ஆதரித்தார்.

லிபிய உளவுத்துறை அதிகாரிகள் வெளிநாடுகளில் உள்ள விமர்சகர்களை தொடர்ந்து குறிவைத்தனர். அந்த காலகட்டத்தில், கடாஃபி அரசும் பல கொடிய சம்பவங்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. அதன் பின்னர் 1986 இல், நடந்த ஒரு சம்பவம், மிகவும் முக்கியமானது.

ஜெர்மனியின் தலைநகரான பெர்லினில் அமெரிக்க வீரர்கள் செல்லும் கிளப்பில் நடந்த குண்டுவெடிப்பு தொடர்பானது இந்த வழக்கு.

இச்சம்பவத்துக்கு லிபியா மீது குற்றம் சாட்டப்பட்டது.

அதில் இரண்டு வீரர்கள் இறந்த பிறகு, திரிபோலி மற்றும் பெங்காஸி ஆகிய நகரங்கள் மீது விமானத் தாக்குதல்கள் நடத்த அப்போதைய அமெரிக்க அதிபர் ரொனால்ட் ரீகன் உத்தரவிட்டார். இந்த தாக்குதல்களில் லிபியா பெரும் இழப்புகளை சந்தித்தது. ஏராளமான பொதுமக்கள் இறந்தனர்.

கர்னல் கடாஃபியின் வளர்ப்பு மகளும் இறந்ததாகக் கூறப்படுகிறது, ஆனால் கடாஃபி தப்பிவிட்டார்.

இதற்குப் பிறகு, 1988 இல், ஸ்காட்லாந்தின் லாக்கர்பி நகரில் பான் அமெரிக்கன் எனும் பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானதில், 270 பேர் உயிரிழந்தனர்.

இந்த விபத்திற்கும் லிபியா மீது குற்றம் சாட்டப்பட்டது.

லாக்கர்பி ஒப்பந்தம்

லிபியா, மும்மர் கடாஃபி

பட மூலாதாரம், Getty Images

லாக்கர்பி குண்டுவெடிப்புச் சம்பவத்தில் சந்தேகிக்கப்படும் நபர்களை ஸ்காட்லாந்து அரசிடம் ஒப்படைக்க கடாஃபி தொடக்கத்தில் மறுத்துவிட்டார்.

இதற்குப் பிறகு, தொடர்ச்சியான பேச்சுவார்த்தை முயற்சிகள் 1999 இல் முடிவடைந்தது. இறுதியாகக் குற்றவாளிகளை ஸ்காட்லாந்திடம் ஒப்படைத்தார் கடாஃபி.

அவர்களில் ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது, மற்றவர் நிரபராதி என்று விடுவிக்கப்பட்டார்.

அதன் பிறகு, ஆகஸ்ட் 2003-ஆம் ஆண்டு, ஐக்கிய நாடுகள் சபைக்கு எழுதிய கடிதத்தில் குண்டுவெடிப்புக்கான பொறுப்பை லிபியா ஏற்றுக்கொண்டது மற்றும் சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடாக சுமார் 2.7 பில்லியன் டாலர் வழங்கியது.

இதன் விளைவாக, செப்டம்பர் 2003 இல், ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் லிபியா மீது விதிக்கப்பட்ட தடைகளை முடிவுக்கு கொண்டு வந்தது.

1989-ஆம் ஆண்டில் அழிக்கப்பட்ட பிரெஞ்சு பயணிகள் கப்பலில் பாதிக்கப்பட்டவர்களுக்கும், பெர்லின் கிளப்பிற்கும் லிபியா இழப்பீடு வழங்கியது.

லாக்கர்பி உடன்படிக்கை மற்றும் கர்னல் கடாஃபியின் ரகசிய அணுசக்தி மற்றும் ரசாயன திட்டங்களை ஒப்புக்கொள்வது மற்றும் அவற்றைக் கைவிட்டது போன்ற முடிவுகள், லிபியாவிற்கும் மேற்கத்திய சக்திகளுக்கும் இடையே சிறந்த உறவுகள் ஏற்பட வழிவகுத்தன.

சர்வதேசத் தடைகள் முடிவுக்கு வந்த பிறகு, லிபியா சர்வதேச அரசியலுக்கு திரும்பியது.

இதற்குப் பிறகு, பிரிட்டன் அதிபர் டோனி பிளேயர் உட்பட பல முக்கியத் தலைவர்கள் கடாஃபியின் பெடோயின் கூடாரத்தில் உள்ள அற்புதமான அரண்மனையில் ஒன்று கூடியதை காணமுடிந்தது.

கர்னல் கடாஃபி ஐரோப்பாவிற்கும் அமெரிக்காவிற்கும் செல்லும் போது கூடாரங்களை எடுத்துச் செல்வது வழக்கம். அந்தப் பயணங்களின் போது, ஐரோப்பிய ஆயுதங்கள் மற்றும் எண்ணெய் நிறுவனங்களுடன் பல வணிக ஒப்பந்தங்களைச் செய்தது ​​லிபியா.

தனித்துவமான முறைகளைக் கடைபிடிப்பதில் புகழ் பெற்ற கர்னல் கடாஃபி, ஒரு கூடாரத்தில் வாழும் காட்சிகளை அடிக்கடி தொலைக்காட்சியில் பார்க்க முடிந்தது.

அவரது தனிப்பட்ட பாதுகாப்புப் பணியாளர்கள் பெரும்பாலும் பெண்கள் என்றும் கூறப்பட்டது.

அரபு உலகில் ஏற்பட்ட மாற்றம்

லிபியா, மும்மர் கடாஃபி

பட மூலாதாரம், Getty Images

பிப்ரவரி 2011 இல், துனிசியா மற்றும் எகிப்தில் பொது மக்களின் ஆர்ப்பாட்டங்கள் ஜைனுல் அபேடின் மற்றும் ஹோஸ்னி முபாரக்கின் நீண்ட கால ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்தன.

அதேநேரத்தில் மும்மர் கடாஃபிக்கு எதிரான போராட்டங்கள் லிபியாவிலும் தொடங்கின.

நாடு முழுவதும் நடந்த ஆர்ப்பாட்டங்களைச் சமாளிக்க, கடாஃபியின் அரசாங்கம் வலுக்கட்டாயமாக அவற்றைத் தடுக்க முயன்றது.

போராட்டக்காரர்கள் மீது காவல்துறையும் பாதுகாப்புப் படையினரும் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

போராட்டக்காரர்களுக்கு எதிராக போர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களும் பயன்படுத்தப்பட்டன.

சர்வதேச சமூகம் மற்றும் மனித உரிமை அமைப்புகள் லிபியாவின் இந்த நடவடிக்கைகளுக்கு கண்டனம் தெரிவித்துள்ளன.

மறுபுறம், கர்னல் கடாஃபியின் அரசாங்கத்தின் மூத்த அதிகாரிகளும் கோபமடையத் தொடங்கினர். சட்ட அமைச்சர் ராஜினாமா செய்தார் பல தூதர்கள் அரசாங்கத்திற்கு கண்டனம் தெரிவித்தனர்.

அந்த ஆண்டு பிப்ரவரி 22-ஆம் தேதி அன்று, கர்னல் கடாஃபி அரசு தொலைக்காட்சியில் ஒரு உரையில் ராஜினாமா செய்ய மறுத்தார். அது மட்டுமின்றி, எதிர்ப்பாளர்களை ‘துரோகிகள்’ என்று அழைத்தார் கடாஃபி.

எதிர்க்கட்சிகள் அல்-கொய்தாவின் பாதுகாப்பில் இருப்பதாகவும், எதிர்ப்பாளர்கள் போதைப்பொருளைப் பயன்படுத்துவதாகவும் அவர் கூறினார்.

போராட்டக்காரர்களிடம் இருந்து தம்மை பாதுகாக்குமாறு அவர் தனது ஆதரவாளர்களை கேட்டுக் கொண்டார்.

ஆனால் படிப்படியாகக் அதிகாரத்தின் மீதான கடாஃபியின் பிடி வலுவிழந்தது. பிப்ரவரி இறுதிக்குள் லிபியாவின் பெரும் பகுதிகளை அவரது எதிரிகள் கைப்பற்றினர்.

இதற்குப் பிறகு, கடாஃபி வசித்த திரிபோலி பகுதியும் சுற்றி வளைக்கப்பட்டது. அவர் ராஜினாமா செய்யுமாறு அழுத்தம் அதிகரித்தது.

மறுபுறம் பிப்ரவரி 28 அன்று, ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில் கடாஃபியின் அரசாங்கத்தின் மீது புதிய தடைகளை விதித்தது மற்றும் அவரது குடும்பத்தின் சொத்துகளையும் முடக்கியது.

கடாஃபிக்கு சொந்தமான 30 பில்லியன் டாலர் மதிப்புள்ள சொத்துகள் முடக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்தது.

அதே நாளில் மேற்கத்திய ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், மக்கள் இன்னும் தன்னை நேசிப்பதாக, கர்னல் கடாஃபி கூறினார்.

போராட்டக்காரர்களுக்கு எதிராக தனது அரசின் படைகளை பயன்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டை அவர் மறுத்தார்.

தனது எதிரிகள் அல்கொய்தாவின் பாதுகாப்பில் செயல்படுகிறார்கள் என்று அவர் மீண்டும் வலியுறுத்தினார்.

மறுபுறம், கர்னல் கடாஃபியின் ராணுவமும் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருந்து பல பகுதிகளை மீண்டும் கைப்பற்றியது.

அத்தகைய சூழலில், லிபிய இராணுவம் பெங்காஸியை நோக்கி நகர்ந்த போது, ​​​​ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில் மார்ச் 17 அன்று ராணுவத் தலையீட்டிற்கு வாக்களித்தது. இதையடுத்து ‘நேட்டோ’ நடத்திய விமான தாக்குதல் கர்னல் கடாஃபியின் இராணுவத்திற்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியது.

மார்ச் மாத இறுதியில், இரண்டு மூத்த அதிகாரிகள், கடாஃபி மீதிருந்த தங்களது விசுவாசத்தை மாற்றிக்கொண்டதால் கடாஃபியின் அரசாங்கம் பெரும் பின்னடைவை சந்தித்தது.

ஆனால் கடாஃபி திரிபோலியின் கட்டுப்பாட்டை கையில் வைத்திருந்ததோடு, தன்னால் முடிந்த எல்லா வகையிலும் போராட்டக்காரர்களை எதிர்ப்பதாக அறிவித்தார்.

ஏப்ரல் 30-ஆம் தேதி அன்று, நேட்டோ விமானப்படைகள் திரிபோலியில் கடாஃபியின் இளைய மகன் சைஃப் அல்-அரப் மற்றும் மூன்று பேரன்களைக் கொன்றன. இந்த தாக்குதலில் கடாஃபி இலக்கு வைக்கப்பட்டார். ஆனால் அவர் உயிர் தப்பிவிட்டார்.

கடாஃபியின் தலைமையகத்தை கைப்பற்றிய கிளர்ச்சியாளர்கள்

லிபியா, மும்மர் கடாஃபி

பட மூலாதாரம், Getty Images

ஜூன் 27 அன்று, கடாஃபி, அவரது மகன் மற்றும் உளவுத்துறைத் தலைவர் ஆகியோரைக் கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதற்குப் பிறகு, ஆகஸ்ட் மாதம், லிபிய தலைநகர் திரிபோலிக்குள் நுழைந்து ஆகஸ்ட் 23 அன்று கடாஃபியின் தலைமையகமான பாப் அல்-அஜிசியா வளாகத்தை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றினர்.

ஆனால் கடாஃபி குறித்த தகவல்கள் எதையும் அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.

பல ஆடியோ செய்திகளில், கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக லிபிய மக்கள் ஒன்றிணைந்து நிற்குமாறு கடாஃபி வேண்டுகோள் விடுத்தார்.

மறுபுறம், கடாஃபி பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு 1.17 மில்லியன் டாலர் பரிசுத்தொகையை கிளர்ச்சியாளர்கள் அறிவித்தனர்.

அதே சூழ்நிலையில், சிர்டே என்ற கடலோர நகரம் முற்றுகை இடப்பட்டது. சில ஆதாரங்களின்படி, கர்னல் கடாஃபி தனது ஆதரவாளர்கள் சிலருடன் முற்றுகையை உடைத்து தப்பிக்க முயன்றார்.

கர்னல் கடாஃபி மற்றும் அவரது நண்பர்கள் வாகனங்களில் சவாரி செய்து, தங்களுக்கு எதிராகவுள்ள போராளிகளிடமிருந்து தப்பிக்க முயன்றனர்.

அதில், கர்னல் கடாஃபியின் ராணுவத் தளபதி அபுபக்கர் யூனுஸ் மற்றும் கடாஃபியின் மகன் மோட்டாசிம் ஆகியோரும் இருந்தனர். அந்த வாகனங்களின் மீது நேட்டோ போர் விமானங்கள் தாக்குதல் நடத்தின.

அந்த தாக்குதலில் 15 வாகனங்கள் அழிக்கப்பட்டன. ஆனால் கர்னல் கடாஃபி மற்றும் அவரது சில நண்பர்கள் இந்த தாக்குதலில் இருந்து தப்பினர்.

கடாஃபி இரண்டு பெரிய வடிகால் குழாய்களில் ஒளிந்து கொண்டார். சிறிது நேரம் கழித்து, கடாஃபி எதிர்ப்புப் போராளிகளும் அங்கு வந்தனர்.

கர்னல் கடாஃபியின் கடைசி நிமிடங்கள்

“முதலில் நாங்கள் கர்னல் கடாஃபி மற்றும் அவரது ஆட்களை துப்பாக்கிகளால் சுட்டோம், ஆனால் அதனால் எந்த பயனும் இல்லை” என்று சலீம் பேக்கர் என்ற போராளி ராய்ட்டர்ஸிடம் தெரிவித்தார்.

“பின்னர் நாங்கள் நடந்தே அவர்களை நோக்கிச் சென்றோம். கர்னல் கடாஃபி மற்றும் அவரது நண்பர்கள் பதுங்கியிருந்த இடத்திற்கு அருகே சென்ற போது, ​​​​திடீரென்று கடாஃபியின் போராளிகளில் ஒருவர் துப்பாக்கியை காற்றில் அசைத்தபடி வெளியே வந்தார். அவர் என்னைக் கண்டவுடன் என்னை நோக்கி சுட்டார்” என்று விவரிக்கின்றார்.

“எனது தலைவர் இங்கே இருக்கிறார், என் எஜமானர் இங்கே இருக்கிறார், அவர் காயமடைந்துள்ளார்” என்று கடாஃபியின் நண்பர் கத்தியதாக சலீம் பேக்கர் கூறினார்.

அதைத் தொடர்ந்து, “கர்னல் கடாஃபியை வெளியே வருமாறு வற்புறுத்தினோம். அப்போது அவர் என்ன நடக்கிறது என்று கேட்டார்” என்கிறார் சலீம் பேக்கர்.

கடாஃபியை பார்த்தவுடன் 9 மில்லிமீட்டர் துப்பாக்கியால் சுட்டதாக நேரில் பார்த்த மற்றொருவர் கூறினார். இதன் பின்னர் பலத்த காயமடைந்த நிலையில் கர்னல் கடாஃபி கைது செய்யப்பட்டார்.

அல்-ஜசீரா தொலைக்காட்சி நிறுவனத்தால் வெளியிடப்பட்ட காட்சிகளில், கடாஃபி பலத்த காயமடைந்தார் மற்றும் எதிர்ப்பாளர்களால் அவர் அதே நிலையில் தாக்கப்பட்டதாக அறியப்படுகின்றது.

அதைத் தொடர்ந்து நடந்த நிகழ்வுகள் குறித்த தகவல்கள் தெளிவாக இல்லை.

ஆனால் லிபியாவின் தற்காலிக தேசிய கவுன்சிலின் பிரதமர் மஹ்மூத் ஜிப்ரில் பத்திரிகையாளர்களிடம் கூறுகையில், கர்னல் கடாஃபியின் பிரேத பரிசோதனை அறிக்கையின்படி அவர் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களால் இறந்தார் எனக் குறிப்பிட்டார்.

அதனை விளக்கிய மஹ்மூத் ஜிப்ரில், “கர்னல் கடாஃபி உயிருடன் பிடிபட்டார். அவர் எந்த எதிர்ப்பையும் காட்டவில்லை. ஒரு காரில் கொண்டு செல்லப்பட்ட போது, ​​வாகனம் இரு தரப்பிலிருந்தும் போராளிகளுக்கு இடையேயான துப்பாக்கிச் சூட்டில் சிக்கியது. ஒரு தோட்டா கடாஃபியின் தலையில் தாக்கியது. இதன் விளைவாக அவர் இறந்தார்” என்று விளக்கினார்.

லிபியா, மும்மர் கடாஃபி

பட மூலாதாரம், Getty Images

கர்னல் கடாஃபி நாற்பது ஆண்டுகள் சர்வாதிகார முறையில் லிபியாவை ஆட்சி செய்தார். அவரது குடும்பம் நாட்டின் எண்ணெய் மற்றும் பல்வேறு தொழில்களில் இருந்து செல்வத்தை குவித்தது. மக்களின் விசுவாசத்தைப் பெறுவதற்காக செல்வத்தைப் பகிர்ந்தளிப்பதன் மூலம் கடாஃபி தனது அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொண்டார் என்று நம்பப்படுகிறது.

மறுபுறம், கடாஃபி பல திட்டங்களைத் தொடங்கினார். அதில் ஒன்று நாட்டின் வடக்குப் பகுதிகளுக்குத் தண்ணீர் வழங்குவதாகும்.

அவர் தனது உடையில் மட்டுமல்ல, அவரது அறிக்கைகள் மூலமாகவும் பிரபலமானார்.

அப்படியான ஒரு அறிக்கையில், பாலத்தீனர்களும் இஸ்ரேலியர்களும் ஒரே நாட்டில் ஒன்றிணைய வேண்டும், ஏனெனில் இரண்டு தனி நாடுகளை உருவாக்க போதுமான நிலம் இல்லை என்று கூறியிருந்தார்.

அரபு லீக் கூட்டங்களில் சுருட்டு புகைத்து, தன்னை ஆப்பிரிக்காவின் ‘ராஜாக்களின் ராஜா’ என்று அழைத்துக் கொண்டார்.

காலப்போக்கில் கடாஃபியின் சித்தாந்தமும் மாறிக்கொண்டே இருந்தது. ஆரம்பத்தில் அரபு தேசத்தை ஒன்றிணைக்கும் முழக்கத்தை முன்னெடுத்து ஜமால் அப்துல் நாசரைப் போல அரபு தேசியவாதத் தலைவராக தன்னைக் காட்டிக் கொண்டார்.

ஆனால் இந்தக் கனவு நிஜத்தில் சாத்தியப்படுவது கடினம் என்பதை உணர்ந்த அவர், ஆப்பிரிக்காவை நோக்கிப் பார்க்கத் தொடங்கி, தன்னை ஆப்பிரிக்காவின் தலைவனாகக் காட்டத் தொடங்கினார்.

பின்னர் அவர் இஸ்லாமிய உலகில் கவனம் செலுத்தத் தொடங்கிய ஒரு காலம் வந்தது. மேலும் சன்னி மற்றும் ஷியா இஸ்லாமியர்களுக்கு இடையேயான வேறுபாடுகளை முடிவுக்குக் கொண்டுவர வட ஆப்பிரிக்காவில் இரண்டாவது புனித தலத்தை (ஃபாத்திமிட் கலிபாவை) நிறுவ வேண்டும் என்றும் கூறினார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

SOURCE : THE HINDU