SOURCE :- BBC NEWS
அழிவின் விளிம்பில் இருந்த மிகவும் சிறிய வகை நத்தைகள், உயிரியல் பூங்காவில் வைத்து வளர்க்கப்பட்டதை அடுத்து, 1300க்கும் மேற்பட்ட நத்தைகள் தொலைதூரத்தில் உள்ள அட்லாண்டிக் தீவுகளில் விடப்பட்டுள்ளன.
இந்த வகை நத்தைகள் கடந்த நூற்றாண்டில் பார்க்கப்படாததால் இது அழிந்து போனதாக கருதப்பட்டது. ஆனால் இந்த செயல்பாட்டின் மூலம் டெசர்டாஸ் தீவுகளில் இருந்த நிலத்தில் வாழும் இரண்டு வகையான நத்தைகளை மீண்டும் அதன் வாழ்விடத்திற்கே கொண்டுவர முடிந்துள்ளது.
மடியராவுக்கு அருகில் உள்ள டெசர்டாஸ் தீவுகளில், சிறிய அளவிலான இந்த நத்தைகளை பார்த்த வன பாதுகாப்பாளர்கள் இவைகளை பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
கொண்டுவரப்பட்ட நத்தைகள் பிரிட்டனின் செஸ்டர் உயிரியல் பூங்கா மற்றும் பிரான்சில் உள்ள உயிரியல் பூங்காக்களில், பாதுகாப்பாக வைக்கப்பட்டன.
மிகச் சிறிய அளவில் இருக்கும் இந்த நத்தைகள், மடியராவுக்கு தென் கிழக்கே அதிகமாகக் காற்று வீசும் டெசர்டாஸ் தீவுகளைப் பூர்வீகமாக கொண்டுள்ளன. பிறகு மனிதர்களால் அங்கு கொண்டு வரப்பட்ட எலிகள் மற்றும் ஆடுகளால் இவை அழிக்கப்பட்டுள்ளன.
மேல் கூறிய விலங்குகளால் இந்த சிறிய ரக நத்தைகள் முழுமையாக அழிக்கப்பட்டதாக கருதப்பட்டது. ஆனால் 2012 முதல் 2017 வரை நடத்தப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளின் போது மாறுபட்ட கருத்து பதிவாகியுள்ளது.
வன பாதுகாப்பாளர்கள், 200 நத்தைகள் இந்த தீவில் உள்ளதாகக் கண்டறிந்தனர். பிறகு இந்த நத்தைகள் பாதுகாப்பாகக் கொண்டுவரப்பட்டுள்ளன.
செஸ்டர் உயிரியல் பூங்காவில், வன பாதுகாப்பு குழுவினர் அறுபது நத்தைகளுக்கான புதிய வீடு ஒன்றினை உருவாக்கியுள்ளனர்.
நத்தைகளுக்கான சரியான உணவு மற்றும் சாதகமான சூழலைச் சிறிய அளவிலான தொட்டிகளில் அமைத்து அவை வளர்க்கப்பட்டன.
இந்த உயிரியல் பூங்காக்களில் இனப்பெருக்கம் மூலம் பிறந்த 1,329 நத்தை குஞ்சுகளின் உடலின் மேற்பகுதியில் குறியீட்டுப் புள்ளிகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த குறியீடுகள் நச்சுத்தன்மையற்ற பேனாக்கள் மற்றும் நகத்தில் பயன்படுத்தப்படும் வார்னிஷ் மூலம் வைக்கப்பட்டுள்ளது.
இதற்குப் பின்னர் அந்த நத்தைகள் மீண்டும் அவற்றின் வாழ்விடத்திற்கே கொண்டு சென்று விடப்பட்டன.
” இது ஒரு வண்ணக் குறியீடு,” என்று கூறுகிறார் இயற்கை பாதுகாப்பு மற்றும் காடுகளுக்கான மடியரா நிறுவனத்தின் பாதுகாப்பு உயிரியலாளரான டினார்டே டெக்சீரா
“இதன் மூலமாக அவை எங்கு செல்கின்றன, எந்த அளவிற்கு வளர்கின்றன, அதில் எத்தனை உயிர்பிழைக்கின்றன மற்றும் எந்த அளவிற்கு புது சூழலை ஏற்றுக்கொண்டு வாழ்கின்ற தன்மையை கொண்டுள்ளன என்பதைக் கண்காணிக்க முடியும்.”
பல தீவுகளின் தொகுப்பான டெசர்டாஸ் தீவுகளுக்கு அருகில் உள்ள புஜியோ தீவில் மீட்டெடுக்கப்பட்ட இந்த சிறிய வகை நத்தைகளுக்கென பாதுகாப்பு மையம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
புஜியோ ஒரு பாதுகாக்கப்பட்ட இயற்கை பகுதியாகும். இந்த நத்தைகளுக்கு ஆபத்தை விளைவிக்கும் எந்தவொரு உயிரினமும் அங்கு இல்லை.
செஸ்டர் உயிரியல் பூங்காவைச் சேர்ந்த ஜெரார்டோ கார்சியா, இந்த நத்தைகளை மீண்டும் வெளிவிட்டது குறித்துப் பேசுகையில், “பல உயிரினங்களை மீட்டெடுக்கும் முயற்சியில் இது மிகப்பெரிய முன்னெடுப்பு,” என்று கூறினார்.
“நாம் நினைத்தது போல எல்லாம் நடந்தால் அடுத்த வசந்த காலத்தில் நிறைய நத்தைகள் உருவாகியிருக்கும். இது ஒரு கூட்டு முயற்சி. இதன் மூலமாக அழிவின் விளிம்பிலிருந்த உயிரினத்தை மீண்டும் நல்ல எண்ணிக்கையில் கொண்டுவர முடியும்.”
“இயற்கை சூழலில் அதாவது அதன் பூர்வீகமான தீவுகளில் இந்த நத்தைகளின் பங்கு மிக முக்கியமானது,”என்று கூறுகிறார் செஸ்டர் பூங்காவின் ஹீதர் பிரின்ஸ்.
அங்கே உள்ள மற்ற உயிரினங்களுக்கு உணவாக இது இருப்பதோடு மண்ணிற்கு வளமும் சேர்க்கின்றது.
“செடிகள் வளர இது உதவுகிறது. இது எல்லாமே இந்த சிறிய நத்தைகள் மற்றும் பூச்சிகளால்தான் சாத்தியமாகிறது. ஆனால் பெரும்பாலும் இவர்களை நாம் மறந்துவிடுகிறோம்.”
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
SOURCE : THE HINDU