SOURCE :- INDIAN EXPRESS
கருத்து: தவ்லீன் சிங்.
இன்று நான் கொஞ்சம் நடுக்கத்துடன் எழுதுகிறேன். தட்டச்சு செய்யும்போது கை நடுங்குகிறது. நீங்கள் இதை நம்பத்தான் வேண்டும். இதற்குக் காரணம், காங்கிரஸ் ஆளும் குடும்பத்தைப் பின்பற்றுபவர்களின் இடைவிடாத, கொடூரமான ட்ரோலிங். காங்கிரஸ் ட்ரோல்கள் இப்போது பா.ஜ.க ட்ரோல்களைப் போலவே தீங்கிழைக்கின்றன. மேலும் அவை தனிநபரைத் தாக்கும் விதத்தில் உள்ளன.
எனவே, நான் ‘வயதானவள் ஆகவே தளர்ச்சி அடைந்து விட்டேன்’ என்பதால் நான் ஓய்வு பெறுவதற்கான நேரம் இது என்றும், காந்தி குடும்பத்தின் மீதான எனது ‘வெறுப்பு’ மட்டுமே எனது ஒரே நோக்கம் என்றும் பலர் என்னிடம் கூறியுள்ளனர். நான் வயதாகிவிட்டேன் என்பதை ஒப்புக்கொள்வதில் எனக்கு எந்த வெட்கமும் இல்லை என்பதை இங்கே தெளிவுபடுத்த விரும்புகிறேன், என் கட்டுரைகள் அச்சேறி இப்போது கிட்டத்தட்ட 40 வருடங்களாகிவிட்டதால் நான் அதை ஒப்புக் கொண்டாக வேண்டும். ஆனால் நான் தளர்ந்துவிடவில்லை, எனது அரசியல் கருத்துக்கள் ஒருபோதும் வெறுப்பின் அடிப்படையில் எழுதப் படுவதில்லை. வெறுப்பை அடிப்படையாகக் கொண்ட எந்த அரசியல் தொடர் கட்டுரைகளும் இவ்வளவு காலம் நிலைத்திருக்காது, ஆனால் அரசியல்வாதிகள் மெலிந்த தோலை உடையவர்கள் மற்றும் அவர்களை மகிழ்விப்பதற்காக அவர்களின் துதிபாடுவபர்கள் இன்னும் மெல்லிய தோலுடையவர்களாக மாறுகிறார்கள்.
எனக்கு எதிராகத் தீவிரமான கண்டனத்தைத் தூண்டியது எக்ஸ் தளத்தில் பதிவிடப்பட்ட என்னுடைய ஒரு கருத்தாகும். அதில் ராகுல் காந்தி தனது போராட்டம் இந்திய அரசுக்கு எதிரானது என்று கூறியதன் மூலம் அரசியல் முதிர்ச்சியின்மையை புதிய உச்சத்திற்கு கொண்டு சென்றதாக நான் கூறி யிருந்தேன். இந்த நாளிதழில் கடந்த வெள்ளியன்று (17.01.2024) பிரசுரிக்கப்பட்ட ஒரு சிறந்த தலையங்கம், பா.ஜ.க அரசுக்கு எதிரான தனது போராட்டத்தை இந்திய அரசோடு போராடுவதாக ராகுல் கூறுவது, இந்திய நாட்டையும் அரசாங்கத்தையும் ஒன்றிணைப்பது போலாகும் என்று கொஞ்சம் நாகரீகமாக விளக்கினர்.
அதே எக்ஸ் தள பதிவில், அரசு நிறுவனங்கள் அனைத்தையும் ஆர்.எஸ்.எஸ். கையகப்படுத்தி விட்டது என்று ராகுல் பேசியது குறித்து பா.ஜ.க எதிர்ப்பு தெரிவிக்க, அதற்கு ஜார்ஜ் சொரோஸ் தான் காரணம் என்று கூறி
ஒரு உயிர்நாடியை ராகுலுக்குக் கொடுத்திருக்கிறது என்றும் கூறினேன். என்னுடைய அறிவுரை என்னவெனில், ஜனநாயக அமைப்புகள் முற்றிலுமாக குறைந்துவிட்டன என்று திரும்பத் திரும்பக் கூறுவது இந்தியாவை அவமதிப்பதாகும் என்பதை அவருக்கு விளக்குவதற்கு ஒரு வயதில் பெரியவரை அவர் கண்டுபிடிக்க வேண்டும் என்பதே. இப்படிப்பட்ட இழிவான ஜனநாயகத்தில் அவர் ஏன் எதிர்க்கட்சித் தலைவராக இருக்க விரும்புகிறார் என்பதைப் புரிந்துகொள்வதையும் அவர் நமக்கு கடினமாக்குகிறார்.
எதிர்கட்சித் தலைவர் தனது வார்த்தைகளை உலகுக்குக் கட்டவிழ்த்து விடுவதற்கு முன் ஒரு கணம் சிந்தித்துப் பார்த்தாரேயானால், நமது ஜனநாயக அமைப்புகளை இழிவுபடுத்துவதில் தனது சொந்த குடும்பத்தை விட வேறு யாரும் இல்லை என்பதை அவர் கவனித்திருப்பார். அவரது தாயார் தனக்கு விருப்பமான ஆட்களை தனிப்பட்ட முறையில் நியமித்து பிரதமர் பதவியை பலவீனப்படுத்தியது, அவருக்கு நினைவிருக்கிறதா? டாக்டர் மன்மோகன் சிங்கின் அமைச்சரவையை விட மம்மியின் தேசிய ஆலோசனைக் குழு மிகவும் சக்திவாய்ந்ததாக இருந்தது. அவருக்கு நினைவிருக்கிறதா? அல்லது அவரே, அரசாங்கத்தால் இயற்றப்பட்ட அரசாணையை பகிரங்கமாக கிழித்து, அது முட்டாள்தனம் என்று அறிவித்தது ஞாபகம் இருக்கிறதா? இப்படி இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்.
ராகுலின் பாட்டி எமர்ஜென்சியை அறிவிப்பதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு இந்திய செய்தித்தாள் ஒன்றில் தனது முதல் வேலையைப் பெற்ற ஒருவர் என்ற முறையில், பத்திரிகை தணிக்கை எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. இந்த நாளிதழைப் போலவே, அந்த நேரத்தில் நான் பணிபுரிந்த பத்திரிகையும் இந்திரா காந்தியின் விதிகளை மீறுவதில் உறுதியாக இருந்ததால், அரசியலற்ற கதைகளுக்குக் கூட அனுமதி பெற பத்திரிகை தகவல் பணியகத்திற்கு முடிவில்லாத பயணங்கள் மேற்க வேண்டியிருந்தன. அவரது இளைய மகன் அவரது அமைச்சர்கள் எவரையும் விட சக்திவாய்ந்தவர் என்பது மிக விரைவிலேயே தெளிவாகத் தெரிந்ததால், ஊடகங்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த அரசாங்கமுமே தரம் குறைந்து காணப்பட்டன. இன்னும் பின்னோக்கிச் சென்றால், ஜவஹர்லால் நேரு ஒரு மரம், அந்த நிழலில் எதுவும் வளரமுடியாது என்று சொல்லப்படுவதை எதிர்க் கட்சித் தலைவருக்கு யாராவது நினைவுபடுத்த வேண்டும்.
நரேந்திர மோடியின் கீழ் இந்தியா திடீரென்று தாராளவாத சிந்தனைகள் மற்றும் வலுவான அமைப்புகளின் இடமாக மாறிவிட்டது என்று நான் இங்கு கூறவில்லை, ஜனநாயகத்தை குறைக்க அவர் பயன்படுத்திய வார்ப்பு நீண்ட காலத்திற்கு முன்பே காங்கிரசால் உருவாக்கப்பட்ட ஒன்றாகும். இன்று நமது பல்கலைக் கழகங்களிலும், நீதிமன்றங்களிலும், அதிகாரவர்க்கத்திலும் ஆர்.எஸ்.எஸ்.காரர்களும், இந்துத்துவா அமைப்பினரும் தான் காணப்படுகின்றனர் என்றால், இது வெகு காலத்திற்கு முன்பே காங்கிரசால் உருவாக்கப்பட்டதே இதற்குக் காரணமாக இருக்கலாம். இரண்டிற்கும் சித்தாந்தம் மட்டுமே வேறு. எனவே, இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்கள் இங்கு வந்து பிரமாண்டமான கோவில்களையும், புராதனப் பல்கலைக் கழகங்களையும் அழித்ததை பள்ளிப் பாடப்புத்தகங்களில் எழுதத் தயங்காத வரலாற்றாசிரியர்கள் இப்போது நம்மிடம் உள்ளனர். மதச்சார்பற்ற காலத்தின் வரலாற்றாசிரியர்கள் மதச்சார்பின்மை காரணங்களுக்காக இந்த நிகழ்வுகளை மறைக்க முடிவெடுத்தனர். அப்போது இப்படிச் செய்வது முட்டாள்தனம் என்றால், இப்போது இந்துத்துவா வரலாற்றாசிரியர்கள் வேறு உச்சகட்டத்திற்குச் செல்வதும் முட்டாள்தனமே.
அவர்கள் ஏன் இதைச் செய்ய வேண்டும் என்பதைப் புரிந்துகொள்வது கடினம். இந்தியாவில் இஸ்லாத்தை பரப்ப முயன்றவர்கள் ஓரளவே வெற்றி பெற்றனர் என்பதற்கு இந்த நாட்களில் லட்சக்கணக்கான இந்துக்கள் மகா கும்பம் செல்வது சான்றாகும். ஓ, நான் திசை மாறுகிறேன், அது கூடாது. இந்த வாரம் நான் குறிப்பிட விரும்பும் ஒரே ஒரு விஷயம் என்னவென்றால், ஜனநாயகம் மற்றும் அதன் அமைப்புகளைப் போன்ற முக்கியமான விஷயங்களைப் பற்றி ராகுல் காந்தி மிகவும் முதிர்ச்சியுடன் பேச வேண்டும். எல்லாப் பக்கங்களிலும் உள்ள நாடுகள் ராணுவச் சட்டத்துக்கும் சர்வாதிகாரக் கொடுங்கோலர்களுக்கும் அடிபணிந்து கிடக்கும் வேளையில் இந்தியா மட்டும் ஜனநாயக நாடாக இருப்பது அதிசயம் என்று நம்புபவர்களும் இங்கு உண்டு. தனிப்பட்ட முறையில், நம் நாடு ஒரு நவீன, சுதந்திர தேசமாகவும் நமது பயணத்தின் ஒவ்வொரு ஆண்டும் ஜனநாயகத்தின் வேர்கள் வலுப்பெற்று வருகின்றது என்றே நான் நினைக்கிறேன்.
இந்திய வாக்காளர்கள் தங்கள் வாக்குகளின் வலிமையை முழுமையாகப் புரிந்துகொண்டுள்ளனர். மேலும் ஒரு அரசியல் தலைவர் தற்குறியின் அறிகுறிகளைக் காட்டினால் அவர்கள் தங்கள் வாக்குகளைப் பயன்படுத்தி உண்மையான முதலாளி யார் என்பதை அவருக்கு நினைவூட்டுகிறார்கள். எனவே, எதிர்க்கட்சித் தலைவர் போன்ற முக்கியமான ஒருவர், தங்கள் நாட்டில் ஜனநாயகத்தை நிலைநிறுத்தும் அமைப்புகள் அழிக்கப்பட்டுவிட்டன என்று கூறும்போது, அவர் அவர்களின் அறிவு மற்றும் நம்பிக்கையை அவமதிக்கிறார். காங்கிரஸின் தற்போதைய அரசியல் வியூகம் வேலைக்காகவில்லை என்பதற்கு காங்கிரஸ் கட்சி தொடர்ந்து தேர்தல்களில் தோல்வியைத் தழுவும் விதமே அதற்கு சான்றாகும். எனவே, காங்கிரஸ் ஒரு புதிய, நம்பிக்கையூட்டும் திட்டத்தை கொண்டு வருவதற்கான தருணம் இது.
மொழிபெயர்ப்பு: எம். கோபால்.
SOURCE : TAMIL INDIAN EXPRESS