SOURCE :- BBC NEWS

பட மூலாதாரம், Getty Images
17 நிமிடங்களுக்கு முன்னர்
தென் கொரிய அதிபர் யூன் சுக்-யோல் மீதான பதவி நீக்க நடவடிக்கையை அந்நாட்டு அரசியலமைப்பு நீதிமன்றம் ஒருமனதாக உறுதி செய்ததை தொடர்ந்து அவர் பதவியில் இருந்து அகற்றப்பட்டுள்ளார்.
இதன் மூலம் தென் கொரியாவில், 60 நாட்களுக்குள் மீண்டும் அதிபர் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
நீதிமன்றத் தீர்ப்பிற்குப் பிறகு யோலின் ஆதரவாளர்கள் ஏமாற்றமடைந்தாலும், எதிர்ப்பாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
நாடாளுமன்றத்தில் பதவி நீக்கம் செய்யப்பட்டு, யூன் சுக் யோல் அதிபர் பதவியை இழந்ததைத் தொடர்ந்து அது தொடர்பாக அரசியலமைப்பு நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்புக்காக நீண்ட காலமாக காத்திருந்தார்.
இந்நிலையில் தற்போது தீர்ப்பு அவருக்கு எதிராக வெளியாகியுள்ளது.
தீர்ப்பு வெளியானதற்குப் பின்னர், மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றத் தவறியதற்காக “உண்மையில் வருந்துகிறேன்” என்று தெரிவித்தார் யூன்.
‘தென் கொரியாவுக்கு சேவை செய்வது ஒரு பெரும் மரியாதை’

பட மூலாதாரம், EPA-EFE/REX/Shutterstock
அரசியலமைப்பு நீதிமன்றம் தனது தீர்ப்பை வழங்கிய பிறகு, யூனின் வழக்கறிஞர்கள் அவர் சார்பாக ஒரு அறிக்கையை வெளியிட்டனர்.
“அன்புள்ள நாட்டு மக்களே, கொரிய குடியரசிற்கு சேவை செய்வது எனக்குக் கிடைத்த மிகப்பெரிய மரியாதை. என்னிடம் பல குறைபாடுகள் இருந்தபோதிலும் என்னை நேசித்து ஆதரித்த அனைத்து மக்களுக்கும் நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.உங்கள் எதிர்பார்ப்புகளை என்னால் பூர்த்தி செய்ய முடியவில்லை என்பது எனக்கு வருத்தமாக இருக்கிறது. மன்னிக்கவும். நமது நாடு மற்றும் நமது நாட்டில் உள்ள அனைத்து மக்களின் நல்வாழ்வை நான் விரும்புகிறேன்,” என்று அந்த அறிக்கையில் யூன் தெரிவித்துள்ளார்.

பட மூலாதாரம், EPA-EFE/REX/Shutterstock
ஜூன் 3 ஆம் தேதி தேர்தல் நடக்கவுள்ளதா?
யூன் சுக்-யோலின் பதவி நீக்கத்தை அரசியலமைப்பு நீதிமன்றம் உறுதி செய்ததையடுத்து, அடுத்த அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் 60 நாட்களுக்குள் நடத்தப்பட வேண்டும்.
எனவே 60 நாள் காலகட்டத்தின் கடைசி நாளான ஜூன் 3 ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறும் என்று ஆய்வாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
சோகாங் பல்கலைக்கழகத்தின் சர்வதேச ஆய்வுத் துறையின் பேராசிரியரான ஹன்னா கிம் பிபிசியிடம் பேசியபோது, “அரசியல் கட்சிகள் தேர்தலுக்குத் தயாராக போதுமான நேரம் வேண்டும் என்று நினைக்கின்றன” என தெரிவித்தார்.
முன்னதாக, தென் கொரியாவின் முன்னாள் அதிபர் பார்க் கியூன்-ஹே மார்ச் 10, 2017 அன்று பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அவர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட பின்னர், சரியாக 60 நாட்களுக்குப் பிறகு மே 9 அன்று, மீண்டும் அதிபர் பதவிக்கான தேர்தல் நடத்தப்பட்டது.

பட மூலாதாரம், Reuters
உண்மையில் என்ன நடந்தது?
தென் கொரியாவின் அதிபர் யூன் சுக் யோல் கடந்த ஆண்டு டிசம்பர் 3 ஆம் தேதி நள்ளிரவில் வட கொரிய கம்யூனிசப் படைகளிடமிருந்து நாட்டைப் பாதுகாக்க நாட்டில் ராணுவச் சட்டத்தை (தற்காலிக ராணுவ ஆட்சி) அமல்படுத்துவதாக அறிவித்தார்.
தேச விரோத சக்திகளை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக இந்த முடிவை எடுத்ததாகவும், வேறு வழியில்லை என்றும், நாட்டு மக்களிடம் தொலைக்காட்சி வழியாக உரையாற்றியபோது அவர் கூறினார்.
இருப்பினும், சில மணி நேரங்களுக்குள், அவசரகால ராணுவச் சட்டம் நீக்கப்படுவதாக மற்றொரு அறிவிப்பை வெளியிட்டார் யூன் சுக் யோல்.
இதன் பின்னர் நாடாளுமன்றத்தால் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
கிளர்ச்சிக்கு முயற்சி செய்ததாக அவர் மீது எழுப்பப்பட்ட குற்றச்சாட்டின் பேரில் அவர் மீது விசாரணையும் தொடங்கப்பட்டது. இருப்பினும், யூன் விசாரணைக்கு ஆஜராக மறுத்ததை அடுத்து அவருக்கு கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.

பட மூலாதாரம், Getty Images
ஜனவரி 3 ஆம் தேதி அதிகாரிகள் குழு யூனை கைது செய்ய முயன்றது.
ஆனால், வழியில் இரும்பு வேலிகள் மற்றும் பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டு அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
பின்னர், ஜனவரி 15 அன்று இரவு நெருங்குவதற்கு முன்பு, விசாரணைக் குழு அவரது வீட்டிற்கு சென்றது. சில மணி நேரம் கழித்து யூன் கைது செய்யப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.
யூன் அதிபர் பதவியில் இருந்து வெளியேற்றப்பட்ட பிறகு, ஹான் டக்-சூ இடைக்கால அதிபராகப் பொறுப்பேற்றார்.
அவரும் பதவி நீக்கம் செய்யப்பட்ட பின்னர், நிதியமைச்சர் சோய் சாங்-மக் இடைக்கால அதிபராகப் பொறுப்பேற்றார்.
-இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
SOURCE : BBC