SOURCE :- BBC NEWS

பட மூலாதாரம், அன்னா ஷ்ரால்
மது அருந்தும் ஆண் பழ ஈக்கள், பெண் ஈக்களுக்கு மிகவும் கவர்ச்சிகரமானதாக மாறுகின்றன என்று ஒரு புதிய ஆய்வு தெரிவிக்கிறது.
ஆண் ஈக்களின் உணவில் மது சேர்ப்பது பெண்களை ஈர்க்கும் ரசாயனங்களின் வெளியீட்டை அதிகரிக்கிறது. அதிக வெற்றிகரமான இனச்சேர்க்கைக்கு இது வழிவகுக்கிறது.
பழ ஈக்கள், அல்லது ட்ரோசோஃபிலா மெலனோகாஸ்டர், பெரும்பாலும் உணவு கழிவுகள் கொண்ட நமது குப்பைத் தொட்டிகளைச் சுற்றி காணப்படுகின்றன. படிப்படியாக மது உற்பத்தியாகும் அழுகிய பழங்களை அவை உண்கின்றன.
விஞ்ஞானிகள் அவை ஏன் மதுவினால் ஈர்க்கப்படுகின்றன, அது அவற்றை எவ்வாறு பாதிக்கிறது என்பதை ஆய்வு செய்து வருகின்றனர்.

பட மூலாதாரம், Getty Images
முந்தைய ஆராய்ச்சி இந்த ஈர்ப்பைப் பற்றிய பல்வேறு கோட்பாடுகளை ஆய்வு செய்துள்ளது. அதாவது ஈக்கள் ஒரு பரவச நிலையை நாடுகின்றன அல்லது பெண்களால் நிராகரிக்கப்பட்ட ஆண் ஈக்கள் இனச்சேர்க்கையின் குதூகலத்துக்கு மாற்றாக இதை உணர்கின்றன போன்ற கோட்பாடுகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
ஜெர்மனியை தலைமையிடமாகக் கொண்ட மேக்ஸ் பிளாங்க் இன்ஸ்டிடியூட்டின் பரிணாம நரம்பியல் துறையின் தலைவரான ஆய்வு ஆசிரியர் பில் ஹான்சன், இதுபோன்ற ஆராய்ச்சி ஈக்களின் நடத்தை குறித்த மானுடவியல் பார்வையை மாற்றியுள்ளது. இந்த சமீபத்திய ஆய்வு மது குடிப்பது ஈக்களுக்கு இனப்பெருக்க நன்மையை அளிப்பதை கூறுகிறது என விளக்குகிறார்.
“ஈக்கள் மனச் சோர்வுடன் இருப்பதால் மது அருந்துகின்றன என்று நாங்கள் நினைக்கவில்லை,” என்று அவர் கூறினார்.

பட மூலாதாரம், Getty Images
இந்த ஈக்களுக்கு மதுவின் மீது ஈர்ப்பு உண்டு. அதே நேரம் அழுகிய பழத்தில் உள்ள மாவுச்சத்துகள், ஈஸ்ட்( நுரைமம்) ஆகியவற்றின் மீது ஈர்ப்பு உண்டு. இந்த இரண்டையும் பிரித்து பார்க்க முடியாது என்று அவர் கூறினார்.
இந்த ஆய்வில், மது அதிலும் குறிப்பாக மெத்தனால், ஆண் ஈக்களில் ஃபெரோமோன்கள் எனப்படும் ரசாயன பாலியல் சமிக்ஞைகளின் வெளியீட்டை அதிகரித்தது. இதனால் அவை பெண் ஈக்களுக்கு மிகவும் கவர்ச்சிகரமாக மாறின.
ஃபெர்மோன்கள் ஒரு நபரிடமிருந்து காற்றில் வெளியிடப்படுகின்றன, அவை அதே இனத்தைச் சேர்ந்த மற்றொரு உயிரினத்தை நடத்தையை பாதிக்கக் கூடும்.
எனவே தான் ஆண் ஈக்கள், குறிப்பாக ஒருபோதும் இனச்சேர்க்கை செய்யாத ஆண் ஈக்கள் மதுவுக்கு மிகவும் ஈர்க்கப்படுகின்றன.
மதுவின் வாசனைக்கு ஈக்களின் எதிர்வினை , அதன் மூளையில் உள்ள மூன்று வெவ்வேறு நரம்பியல் வலயங்களால் (neural circuits) கட்டுப்படுத்தப்படுகின்றன என்பதையும் புதிய ஆய்வு காட்டுகிறது.
ஆண் ஈக்களை சிறிய அளவிலான மதுவிடம் ஈர்ப்பதற்கு இரண்டு வலயங்கள் பொறுப்பாகின்றன. மூன்றாவது அதிக அளவிலான ஒரு தடுப்பு விளைவைக் கொண்டிருப்பதை உறுதி செய்கிறது.
மது நச்சுத்தன்மையுடையது என்பதால், ஈயின் மூளை அதைக் குடிப்பதால் ஏற்படும் அபாயங்களையும் நன்மைகளையும் கவனமாக எடை போட வேண்டும். ஈர்ப்பின் சமிக்ஞைகளையும் அபாயத்தை குறிக்கும் வெறுப்புடன் சமநிலைப்படுத்துவதன் மூலம் இதைச் செய்கிறது.

பட மூலாதாரம், Getty Images
“இதன் பொருள் ஈக்கள் ஒரு கட்டுப்பாட்டு பொறிமுறையைக் கொண்டுள்ளன. இது போதை ஏற்படாமல் மது உட்கொள்வதன் அனைத்து நன்மைகளையும் பெற அனுமதிக்கிறது” என்று நெப்ராஸ்கா பல்கலைக்கழகத்தின் முன்னணி எழுத்தாளர் இயன் கீசி கூறினார்.
ஈக்களின் மூளை செயல்பாடுகளை காட்சிப்படுத்தும் இமேஜிங் நுட்பங்கள், சுற்றத்தில் உள்ள வாசனைகளின் வேதியியல் பகுப்பாய்வு மற்றும் நடத்தை ஆய்வுகள் ஆகியவற்றை ஒன்றிணைத்து ஆராய்ச்சிகள் ஆராய்ந்து பார்த்தனர்.
– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
SOURCE : BBC