SOURCE :- BBC NEWS

ராஜஸ்தானுக்கு ஆட்டம் காட்டிய ஸ்டார்க் -  த்ரில் ஆட்டத்தில் சூப்பர் ஓவரில் வென்ற டெல்லி

பட மூலாதாரம், Getty Images

  • எழுதியவர், க. போத்திராஜ்
  • பதவி, பிபிசி தமிழுக்காக
  • 17 ஏப்ரல் 2025

    புதுப்பிக்கப்பட்டது ஒரு நிமிடத்துக்கு முன்னர்

டெல்லியில் நேற்று (ஏப்ரல் 16) நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 32வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சூப்பர் ஓவரில் வென்றது டெல்லி கேபிடல்ஸ் அணி.

கடந்த 4 ஐபிஎல் சீசனில் முதல் சூப்பர் ஓவர் போட்டி நேற்று நடந்தது. மிகப் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே சூப்பர் ஓவரில் டெல்லி அணி வென்றது.

முதலில் பேட் செய்த டெல்லி கேபிடல்ஸ் அணி 5 விக்கெட் இழப்புக்கு 188 ரன்கள் சேர்த்தது. 189 ரன்கள் சேர்த்தால் வெற்றி என்னும் இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 188 ரன்கள் மட்டுமே சேர்த்ததால் ஆட்டம் சூப்பர் ஓவருக்கு சென்றது.

ஐபிஎல்

பட மூலாதாரம், Getty Images

முதல் சூப்பர் ஓவர்

இந்த சீசனில் முதல் சூப்பர் ஓவரில் பேட் செய்த ராஜஸ்தான் அணியின் பேட்டர்கள் ஜெய்ஸ்வால், ரியான் பராக் ஆகியோர் ரன்அவுட் ஆகவே 2 விக்கெட் இழப்புக்கு அந்த அணி 11 ரன்கள் சேர்த்தது.

டெல்லி அணி, 12 ரன்கள் எடுத்தால் வெற்றி என்னும் இலக்குடன் களமிறங்கியது. ராஜஸ்தான் அணி சார்பாக சந்தீப் சர்மா பந்து வீசினார்.

கே.எல். ராகுல் ஒரு பவுண்டரி உள்பட 3 பந்துகளில் 7 ரன்கள் சேர்க்கவே டெல்லி அணிக்கு மீதமிருந்த 3 பந்துகளில் 5 ரன்கள் தேவைப்பட்டது.

களத்தில் இருந்த டிரிஸ்டன் ஸ்டெப்ஸ், மிட் விக்கெட்டில் சிக்ஸர் விளாசவே 4வது பந்திலேயே டெல்லி இலக்கை அடைந்து வென்றது.

டெல்லி அணி தோற்க வேண்டிய ஆட்டத்தை சூப்பர் ஓவருக்கு இழுத்துச் சென்ற மிட்செல் ஸ்டார்க் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

நான்கு ஓவர்கள் வீசிய ஸ்டார்க் 36 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.

பேட்டர்களின் மெத்தனம்

ஐபிஎல்

பட மூலாதாரம், Getty Images

ராஜஸ்தான் அணியின் பக்கம்தான் வெற்றி வாய்ப்பு இருந்தது. களத்தில் இருந்த பேட்டர்கள் பெரிய ஷாட்டுக்கு முயலவில்லை, கைவசம் 5 விக்கெட்டுகள் வரை இருக்கும் நிலையில் டெத் ஓவர்களில் நிதானமாக ஆடியது ராஜஸ்தானை தோல்விக்கு இட்டுச் சென்றது.

ஹெட்மெயர், துருவ் ஜூரெல் பேட்டிலிருந்து பெரிய ஷாட் வந்திருந்தால் சூப்பர் ஓவர் வரை போட்டி சென்றிருக்க வாய்பில்லை.

இருபதாவது ஓவரை ஸ்டார்க் வீசும்போது, ராஜஸ்தான் அணியின் வெற்றிக்கு 9 ரன்கள் தேவைப்பட்டன. கைவசம் 6 விக்கெட்டுகள் இருந்தன. ஆனால் ஸ்டார்க் துல்லியமாக 5 யார்கர்களை வீசி 8 ரன்களை மட்டுமே கொடுத்தார். கடைசிப் பந்தில் 2 ரன்கள் ஓட முயன்ற துருவ் ஜூரெல் ரன் அவுட் ஆகவே ஆட்டம் சூப்பர் ஓவருக்கு சென்றது.

டெல்லி அணியை தோல்வியிலிருந்து மீட்ட ஆபத்பாந்தவனாக ஸ்டார்க் நேற்று திகழ்ந்தார். இந்த வெற்றியால் டெல்லி கேப்டல்ஸ் அணி 6 போட்டிகளில் 5இல் வெற்றி பெற்று, 10 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது. ராஜஸ்தான் அணி 4 புள்ளிகளுடன் 8வது இடத்தில் இருக்கிறது.

ஸ்டெப்ஸ், அக்ஸர் அபாரம்

டெல்லி அணிக்கு 6வது போட்டியாக தொடக்க ஆட்டக்காரர் ப்ரேசர் மெக்ருக் சிறப்பான தொடக்கத்தை அளிக்காமல் ஏமாற்றி 9 ரன்களில் ஆர்ச்சர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். கடந்த போட்டியில் அதிரடியாக ஆடிய கருண் நாயர் இந்த முறை டக்-அவுட் ஆகி வெளியேறினார்.

ஆனால் துஷார் தேஷ்பாண்டே வீசிய 2வது ஓவரில் அபிஷேக் போரெல் 23 ரன்களை விளாசி ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு சென்றார். 34 ரன்களுக்கு டெல்லி 2 விக்கெட்டுகளை இழந்தது.

மூன்றாவது விக்கெட்டுக்கு கே.எல்.ராகுல் களமிறங்கி, அபிஷேக்குடன் சேர்ந்தார். பவர்ப்ளேவில் டெல்லி 2 விக்கெட் இழப்புக்கு 46 ரன்கள் சேர்த்தது. கே.எல்.ராகுல் நிதானமாக பேட் செய்து 17 பந்துகளில் 18 ரன்கள் என மெதுவாக ஆடினார். நீண்ட நேரம் நிலைக்காத ராகுல் 32 பந்துகளில் 38 ரன்கள் சேர்த்து ஆர்ச்சர் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். 3வது விக்கெட்டுக்கு இருவரும் 63 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.

விக்கெட்டுகள் சரிந்த போதிலும் அரைசதம் நோக்கி நகர்ந்த அபிஷேக் போரெல் 49 ரன்களில் ஹசரங்கா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 5வது விக்கெட்டுக்கு கேப்டன் அக்ஸர் படேல், டிரிஸ்டன் ஸ்டெப்ஸ் கூட்டணிதான் ஆட்டத்தின் போக்கை மாற்றியது.

அருமையான கேமியோ ஆடிய அக்ஸர் படேல் 14 பந்துகளில் 2 சிக்ஸர், 4 பவுண்டரிகள் என 34 ரன்கள் சேர்த்து தீக்சனா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 14 ஓவர்களில் 105 ரன்களுக்கு 4 விக்கெட்டுகள் என இருந்த டெல்லி அணி, அக்ஸரின் அதிரடியாக அடுத்த 2 ஓவர்களில் 146 ரன்களை எட்டியது, அக்ஸரும் 34 ரன்களில் வெளியேறினார்.

அஷுதோஷ் சர்மா, ஸ்டெப்ஸ் கூட்டணி கடைசி நேரத்தில் அதிரடியாக ஆடினர். ஆர்ச்சர் வீசிய 19வது ஓவரில் ஸ்டெப்ஸ் 3 பவுண்டரிகள் உள்பட 16 ரன்கள் சேர்த்தார். 20வது ஓவரை வீசிய சந்தீப் சர்மா 4 வைடுகள், ஒரு நோ பால் என 11 பந்துகளை வீசி பவுண்டரி, சிக்ஸர் என 19 ரன்களை வாரி வழங்கினார்.

ஐபிஎல் வரலாற்றிலேயே ஒரு ஓவரில் அதிகமான பந்துகளை வீசிய பெருமையை சந்தீப் பெற்றார். 19 பந்துகளில் இருவரும் சேர்ந்து 42 ரன்கள் சேர்த்தனர். ஸ்டெப்ஸ் 14 பந்துகளில் 34 ரன்களுடனும், அஷுதோஷ் சர்மா 15 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

கடைசி ஓவரில் சொதப்பிய சந்தீப் சர்மா

ஐபிஎல்

பட மூலாதாரம், Getty Images

ராஜஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் சந்தீப் சர்மா கடைசி ஓவரை வீசுவதற்கு முன்பு வரை 3 ஓவர்களை வீசி 14 ரன்கள் மட்டுமே வழங்கி கட்டுக்கோப்பாகப் பந்துவீசியிருந்தார்.

ஆனால் 20வது ஓவரில் 4 வைடுகள், ஒரு நோபால் ஒரு சிக்ஸர், பவுண்டரி எனத் தேவையின்றி 11 பந்துகளை வீசி 19 ரன்களை வாரி வழங்கினார். இந்த ஓவரை சந்தீப் சர்மா வழக்கம்போல் வீசியிருந்தாலே ஸ்கோரை கட்டுப்படுத்தியிருக்கலாம். ராஜஸ்தான் அணி வென்றிருக்கும்.

அப்படியில்லாமல் அவர் 19 ரன்களை சந்தீப் வழங்கியது ஆட்டத்தை டெல்லி பக்கம் திருப்பிவிட்டது.

சாம்ஸன் ரிட்டயர் ஹர்ட்

ராஜஸ்தான் அணியும் 189 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் அதிரடியாகத் தொடங்கியது. சாம்ஸன், ஜெய்ஸ்வால் டெல்லி பந்துவீச்சை வெளுத்து வாங்கினர்.

முகேஷ், மோகித் சர்மா, விப்ராஜ் ஓவரில் பவுண்டரி, சிக்ஸர் என சாம்ஸன் வெளுத்தார். இதனால் பவர்ப்ளே ஓவர் முடிவில் ராஜஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி 63 ரன்கள் சேர்த்து வலுவாக இருந்தது.

ஆனால், சிறப்பாக பேட் செய்து வந்த சாம்ஸனுக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டு அவரால் தொடர்ந்து விளையாட முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் 19 பந்துகளில் 31 ரன்கள் சேர்த்த நிலையில் சாம்ஸன் ரிட்டயர் ஹர்ட் முறையில் வெளியேறினார்.

அடுத்து களமிறங்கிய ரியான் பராக் 8 ரன்னில் அக்ஸர் பந்துவீச்சில் போல்டானார். 3வது விக்கெட்டுக்கு வந்த ராணா, ஜெய்ஸ்வாலுடன் சேர்ந்தார். இருவரும் ஸ்கோரை உயர்த்தி மெல்ல அணியை வெற்றிக்கு நகர்த்தினர்.

ஜெய்ஸ்வால் 34 பந்துகளில் அரைசதம் அடித்தார். குல்தீப் பந்துவீச்சில் இறங்கி ஷாட் அடிக்க முற்பட்ட ஜெய்ஸ்வால் 51 ரன்னில் ஸ்டார்க்கிடம் கேட்ச் கொடுத்தார்.

ராணா அதிரடி பேட்டிங்

ஐபிஎல்

பட மூலாதாரம், Getty Images

அடுத்த சிறிது நேரத்தில், ராணாவும் ஆட்டமிழக்க வேண்டியது. ஆனால், ராணா தப்பிவிட்டார். அவர் 20 ரன்கள் சேர்த்திருந்தபோது, அக்ஸர் பந்துவீச்சில் லாங் ஆன் திசையில் கிடைத்த கேட்சை ஸ்டெப்ஸ் தவறவிட்டார்.

இந்த வாய்ப்பைப் பயன்படுத்திய ராணா அடுத்த 12 பந்துகளில் 31 ரன்களை சேர்த்து, 26 பந்துகளில் அரைசதம் அடித்தார். ராணா களத்தில் இருந்த வரை ராஜஸ்தான் அணி வென்றுவிடும் என்று கருதப்பட்டது. ஆனால், மிட்செல் ஸ்டார்க் பந்துவீச்சில் ராணா 51 ரன்னில் கால்காப்பில் வாங்கி ஆட்டமிழந்தார்.

வாய்பைத் தவறவிட்ட ஹெட்மெயர், ஜூரெல்

கடைசி 2 ஓவர்களில் ராஜஸ்தான் வெற்றிக்கு 23 ரன்கள்தான் தேவைப்பட்டன. ஹெட்மெயர், துருவ் ஜூரெல் களத்தில் இருந்தனர். மோகித் சர்மா வீசிய 19வது ஓவரில் ஜூரெல் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க 14 ரன்கள் சேர்த்தனர். ஹெட்மெயர் பெரிய ஷாட்களை அடிக்கும் திறமை கொண்டவர். ஆனால், நேற்று அவரது பேட்டில் எதிர்பார்த்த ஷாட் சிக்கவில்லை.

கடைசி ஓவரில் ராஜஸ்தான் வெற்றிக்கு 9 ரன்கள் தேவைப்பட்டன. கடைசி ஓவரை ஸ்டார்க் வீசினார். முதல் பந்தை சந்தித்த ஹெட்மெயர் ஒரு ரன் எடுத்து ஸ்ட்ரைக்கை ஜூரெலிடம் கொடுத்தார். அதன் பிறகு ஸ்டார்க் 5 பந்துகளையும் யார்க்கர்களாகவும், அவுட்சைட் யார்க்கர்களாகவும் வீசவே ஒரு ரன், 2 ரன்கள் என சேர்க்க முடிந்தது.

கடைசி பந்தில் ராஜஸ்தான் வெற்றிக்கு 2 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ஜூரெல் மிட்விக்கெட்டில் தட்டிவிட்டு ஒரு ரன் ஓடி, 2வது ரன்னுக்கு முயலும்போது ரன்அவுட் ஆகவே ஆட்டம் டிராவில் முடிந்து சூப்பர் ஓவருக்கு சென்றது.

சூப்பர் ஓவர்

ஐபிஎல்

பட மூலாதாரம், Getty Images

சூப்பர் ஓவரில் ஹெட்மெயர், ரியான் பராக் களமிறங்கினர். ஸ்டார்க் வீசிய ஓவரில் முதல் பந்தில் ரன் சேர்க்காத ஹெட்மெயர் 2வது பந்தில் பவுண்டரியும், அடுத்து ஒரு ரன்னும் எடுத்தார்.

நான்காவது பந்தை சந்தித்த ரியான் பராக் பவுண்டரி விளாசவே அந்த பந்து நோ பாலாக மாறியது. 4வது பந்தில் ரியான் பராக் ரன்அவுட் ஆனார். 5வது பந்தில் ஹெட்மெயர் ரன் அவுட் ஆகவே 2 விக்கெட்டுகளை இழந்து 12 ரன்களை ராஜஸ்தான் சேர்த்தது.

சூப்பர் ஓவரில் டெல்லி அணிக்கு 12 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஸ்டெப்ஸ், ராகுல் களமிறங்கினர். சந்தீப் சர்மா வீசிய ஓவரில் முதல் பந்தில் ராகுல் 2 ரன்களை எடுத்தார். அடுத்த பந்தில் ராகுல் பவுண்டரி விளாசி, 3வது பந்தில் ஒரு ரன் எடுத்தார். 3 பந்துகளில் 6 ரன்கள் கிடைத்தன. 4வது பந்தை எதிர்கொண்ட ஸ்டெப்ஸ் மிட்விக்கெட்டில் சிக்ஸர் விளாசி வெற்றியைத் தேடித் தந்தார்.

ராஜஸ்தானின் வெற்றியைப் பறித்த ஸ்டார்க்

வெற்றி வாய்ப்பை நழுவவிட்டது குறித்து ராஜஸ்தான் கேப்டன் சாம்ஸன் கூறுகையில், “நான் பேட் செய்யும் சூழலில் இல்லை, அதனால்தான் மீண்டும் வரவில்லை. என் உடல்நிலை குறித்து நாளை தெரியும். நாங்கள் சிறப்பாகப் பந்துவீசினோம். எங்களின் பந்துவீச்சாளர்களும், பீல்டர்களும் நன்றாகச் செயல்பட்டதால்தான் குறைந்த ரன்களில் சுருட்ட முடிந்தது.

டெல்லிஅணியின் ஸ்கோர் இந்த மைதானத்தில் சேஸ் செய்யக் கூடியதுதான். ஸ்டார்க் வீசிய கடைசி ஓவர் ஆட்டத்தைத் திருப்பியது. 20வது ஓவரில்தான் டெல்லி அணிக்கு ஸ்டார்க் வெற்றியைத் தேடிக் கொடுத்துள்ளார். எங்களின் வெற்றியை ஸ்டார்க் எடுத்துச் சென்றார்,” என்று தெரிவித்தார்.

மேலும், “கடந்த சில சீசன்களாகவே சிறப்பாகப் பந்துவீசுகிறார் என்பதால் சந்தீப் சர்மாவை சூப்பர் ஓவரில் பயன்படுத்தினோம். நான் களத்தில் இல்லாதது துரதிர்ஷ்டம். ஜோப்ரா ஆர்ச்சர் இழந்த ஃபார்மை மீட்டது அற்புதம்,” என்றும் குறிப்பிட்டார்.

அடுத்த முக்கிய ஆட்டங்கள்

ஐபிஎல்

பட மூலாதாரம், Getty Images

இன்றைய ஆட்டம்

மும்பை இந்தியன்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

இடம்: மும்பை

நேரம்: இரவு 7.30

சிஎஸ்கேவின் அடுத்த ஆட்டம்

சென்னை சூப்பர் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ்

நாள் – ஏப்ரல் 20

இடம் – மும்பை

நேரம்- இரவு 7.30

மும்பையின் அடுத்த ஆட்டம்

மும்பை இந்தியன்ஸ் vs சிஎஸ்கே

நாள் – ஏப்ரல் 20

இடம் – மும்பை

நேரம்- இரவு 7.30 மணி

ஆர்சிபியின் அடுத்த ஆட்டம்

ஆர்சிபி vs பஞ்சாப் கிங்ஸ்

நாள் – ஏப்ரல் 18

இடம் – பெங்களூரு

நேரம்- மாலை 7.30 மணி

ஆரஞ்சு தொப்பி யாருக்கு?

நிகோலஸ் பூரன்(லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ்)-357 ரன்கள்(7 போட்டிகள்)

சாய் சுதர்சன்(குஜராத் டைட்டன்ஸ்)-329 ரன்கள்(6 போட்டிகள்)

மிட்செல் மார்ஷ்(லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ்) 295 ரன்கள்(6 போட்டிகள்)

பர்ப்பிள் தொப்பி யாருக்கு?

நூர் அகமது(சிஎஸ்கே) – 12 விக்கெட்டுகள் (6 போட்டிகள்)

குல்தீப் யாதவ்(டெல்லி) – 11 விக்கெட்டுகள்(6 போட்டிகள்)

கலீல் அகமது(சிஎஸ்கே) – 11 விக்கெட்டுகள்(7 போட்டிகள்)

– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : BBC