SOURCE :- BBC NEWS

தரை வரி கட்டுவதற்கு என்னிடம் பணம் இல்லை என்கிறார் செல்வராணி.

“மசூதிக்கு சொந்தமான வக்ஃப் வாரிய இடத்தில் அத்துமீறி ஆக்கிரமிப்பு செய்து குடியிருந்து வருகிறீர்கள். இது சட்டத்துக்கு எதிரான செயல். இனி தரைவரி செலுத்தாவிட்டால் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்”.

வேலூர், அணைக்கட்டு தாலுகாவில் உள்ள காட்டுக்கொல்லை கிராம மக்களுக்கு கடந்த பிப்ரவரி 14 -ஆம் தேதி அன்று இப்படியொரு நோட்டீஸ் வந்துள்ளது.

அதே பகுதியில் உள்ள ஹசரத் சையத் அலி சுல்தான் ஷா தர்காவின் முத்தவல்லி சையது சதாம் என்பவர்தான் இந்த நோட்டீஸை அனுப்பியுள்ளார்.

ஆனால், ‘நான்கைந்து தலைமுறைகளாக வசிக்கும் தங்களுக்கே நிலத்தை ஒதுக்க வேண்டும்’ எனக் கூறி மாவட்ட ஆட்சியரிடம் அந்த கிராம மக்கள் மனு அளித்துள்ளனர்.

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுகாவில் இறைவன் காடு ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியில் காட்டுக்கொல்லை என்ற கிராமம் அமைந்துள்ளது. இக்கிராமத்தின் பிரதான தொழிலாக விவசாயமும் அது சார்ந்த பணிகளும் உள்ளன.

காட்டுக்கொல்லை கிராமத்தில் இருந்து சுமார் 3 கி.மீ தொலைவில் உள்ள விரிஞ்சிபுரம் பகுதியில் கீழாண்டை நவாப் மசூதி மற்றும் ஹசரத் சையத் அலி சுல்தான் ஷா தர்கா அமைந்துள்ளது.


காட்டுக்கொல்லை கிராமத்தில் உள்ள வீடுகள்

நோட்டீஸ் அனுப்பிய மசூதி நிர்வாகம்

இதன் பரம்பரை முத்தவல்லி சையது சதாம் என்பவர், கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதியன்று காட்டுக்கொல்லை மக்களுக்கு நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அந்த நோட்டீஸில், ”மசூதி மற்றும் தர்காவின் வக்ஃப் வாரிய இடத்தில் ஆக்கிரமிப்பில் குடியிருப்பவர்களுக்கு மசூதி நிர்வாகத்தின் மூலம் புதிய ஒப்பந்தம் செய்து கொள்வதற்கான கடிதம்” என அதில் குறிப்பிட்டுள்ளார்.

“தாங்கள் வசித்து வரும் இடமானது அரசு சர்வே எண் 362, மசூதிக்கு பாத்தியப்பட்டது. இந்த இடத்தில் வசிப்பதற்கு வக்ஃப் வாரிய விதிமுறைகள் உள்ளன. அதைப் பின்பற்றியே வீடு கட்டி வசிக்க முடியும்” என அவர் கூறியுள்ளார்.

“தொடர்ந்து குடியிருப்பதற்கு மசூதி நிர்வாகத்திடம் ஒப்பந்த ஆவணம் பெற்று தரை வாடகையை செலுத்தி வர வேண்டும். தவறும்பட்சத்தில் ஆக்கிரமிப்பு என்ற பெயரில் வக்ஃப் வாரிய சட்டத்தின்படி நடவடிக்கை எடுத்து அப்புறப்படுத்தப்படும்” என நோட்டீஸில் கூறியுள்ளார்.

இந்த இடத்தின் மீது பதிவு செய்யப்பட்ட முறையற்ற பதிவுகள் அனைத்தும் மத்திய பதிவுச் சட்டம் 1908 பிரிவு 22(ஏ) மற்றும் 1995 பிரிவு 104 (ஏ) படி ரத்து செய்யப்பட்டுள்ளது எனவும் இது தொடர்பாக வக்ஃப் வாரியத்தின் மூலம் பத்திர பதிவுத்துறை மற்றும் பள்ளிகொண்டா சார்ப்பதிவாளர் அலுவலகத்துக்கு உத்தரவு அளிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 வக்ஃப், வேலூர்

மாவட்ட ஆட்சியரிடம் புகார்

இந்த நோட்டீஸ், காட்டுக்கொல்லை கிராம மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமியை நேரில் சந்தித்து கிராம மக்கள் புகார் மனு அளித்துள்ளனர்.

நான்கைந்து தலைமுறைகளாக வசித்து வரும் தங்களை அப்புறப்படுத்தும் நோக்கில் மசூதி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக அப்போது தெரிவித்துள்ளனர்.

மேலும், அரசுக்கு செலுத்தி வரும் வீட்டு வரி, குடிநீர் வரி ஆகிய ரசீதுகளையும் அவர்கள் சமர்ப்பித்துள்ளனர்.

இது தொடர்பாக, மாவட்ட வருவாய் அலுவலரின் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக மாவட்ட ஆட்சித் தலைவர் சுப்புலட்சுமி, செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

பாஜக எதிர்ப்பு

அதேநேரம், இந்த விவகாரத்தை பா.ஜ.க-வும் இந்து முன்னணி அமைப்பும் கையில் எடுத்தன.

தமிழக பா.ஜ.க மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் பக்கத்தில், “காட்டுக்கொல்லை கிராமத்தின் விவசாய நிலங்கள் வக்ஃப்க்கு சொந்தமானது எனவும் இடத்தை காலி செய்யாவிட்டால் வரி கட்ட வேண்டும் எனவும் சுமார் 150 இந்துக் குடும்பங்களுக்கு தர்கா நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியது கண்டனத்துக்கு உரியது”, எனக் கூறியுள்ளார்.

“பல தலைமுறைகளாக அந்தக் கிராமத்தில் வசித்து வரும் நூற்றுக்கணக்கான குடும்பங்களை சட்டவிரோதமாக துரத்தும் நோக்கில் செயல்படுவோர் மீது முதலமைச்சர் ஸ்டாலின் தகுந்த நடவடிக்கையை எடுக்க வேண்டும்”, என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

காட்டுக்கொல்லையில் என்ன நடக்கிறது? மக்கள் வெளியேற வற்புறுத்தப்படுகிறார்களா? என்பதை அறிவதற்கு பிபிசி தமிழ் களத்துக்கு சென்றது.

 வக்ஃப், வேலூர்

பிபிசி தமிழின் ஆய்வில் தெரிய வந்தது என்ன?

புதன்கிழமை (ஏப்ரல் 16) காலையில் இறைவன்காடு ஊராட்சியில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்துக்கு பிபிசி தமிழ் சென்றது.

அப்போது காட்டுக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்த சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட குடும்பங்கள், தங்களிடம் இருக்கும் நில ஆவணங்கள் மற்றும் அரசுக்கு செலுத்திய வரி தொடர்பான ரசீதுகளுடன் அங்கு குவிந்திருந்தனர்.

இதுகுறித்து விசாரித்தபோது, மாவட்ட ஆட்சித் தலைவர் சுப்புலட்சுமியின் உத்தரவின்பேரில் வேலூர் வருவாய் கோட்டாட்சியர் செந்தில்குமார், ஆவணங்களை சரிபார்க்கும் பணியில் ஈடுபட்டிருப்பதாக அங்கிருந்த அதிகாரி ஒருவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

வருவாய் கோட்டாட்சியரிடம் மனு கொடுத்த பிறகு பிபிசி தமிழிடம் பேசிய விவசாயி விநாயகமூர்த்தி, “நான்கு தலைமுறைகளுக்கும் மேல் வசித்து வருகிறோம். தர்காவின் நிர்வாகியாக இருந்த பைரோஸ் என்பவர், நாங்கள் வீடு கட்டும்போதும் மின் இணைப்பு பெறும்போதும் அனுமதிக் கடிதம் கொடுத்துவிட்டு பணம் பெற்றுக் கொள்வார்” எனக் கூறினார்.

வக்ஃப் நிலம் என்பதால் மின் இணைப்பு பெறுவதற்கு தர்கா நிர்வாகத்திடம் இருந்து தடையில்லா சான்று (NOC) பெறுவது கட்டாயமாக இருந்ததை இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

“கடந்த 2011 ஆம் ஆண்டு கடன் வாங்கி வீடு கட்டினேன். பைரோஸ் இருக்கும் வரை இப்படியெல்லாம் தரை வரி கேட்டதில்லை. அவர் இறந்த நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டது. தற்போது திடீரென தரைவரி கட்டுமாறு அவர் மகன் கூறுகிறார்” என அவர் தெரிவித்தார்.

 வக்ஃப், வேலூர்

‘பலரிடம் இருந்து கைமாறிய நிலங்கள்’

இதே பகுதியில் வசிக்கும் விவசாயி பிச்சாண்டியின் கதை வேறாக உள்ளது.

கடந்த 2022-ஆம் ஆண்டு 920 சதுர அடி நிலத்தை சண்முக சுந்தரம் என்பவரிடம் இருந்து வாங்கியதாக அவர் பிபிசி தமிழிடம் குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசுகையில், “எனக்கு முன்பாக நான்கு பேரின் பெயர்களில் இந்த நிலம் இருந்துள்ளது. மலர்க்கொடி, அன்பு, சிவசண்முகம், சண்முகசுந்தரம் ஆகியோரைத் தொடர்ந்து நான் வாங்கினேன். என் பெயரில் சிட்டா உள்ளது. ஆனால், இந்தப் பிரச்னைக்குப் பிறகு சிட்டாவை ரத்து செய்துவிட்டனர்” எனக் கூறினார்.

“தற்போது வில்லங்க சான்று போட்டுப் பார்த்தால் வக்ஃப் நிலம் எனக் காட்டுகிறது. தர்கா நிர்வாகத்தில் இருந்து தரை வரி கேட்பதால் ஆட்சியரிடம் மனு கொடுத்தேன்” எனவும் அவர் தெரிவித்தார்.

இப்பகுதியில் வசிக்கும் கொத்தனாரான வேலு என்பவரும், எட்டுக்கும் மேற்பட்ட நபர்களிடம் இருந்து சுமார் 800 சதுர அடி நிலத்தை வாங்கியதாக தெரிவித்தார்.

“கிடைக்கும் வேலைகளைச் செய்து பிழைத்து வருகிறோம். அந்த வீடுதான் எங்களுக்கான ஒரே ஆதாரமாக உள்ளது” எனக் கூறுகிறார், இப்பகுதியைச் சேர்ந்த உமா மகேஸ்வரி.

“80 வருடங்களாக இங்கு வசித்து வருகிறோம். நிலத்துக்கான பத்திரம் இல்லை. ஆனால், அனைத்து வரிகளையும் செலுத்தி வருகிறோம்” எனவும் அவர் குறிப்பிட்டார்.

“காலியாக இருந்த இடத்தில் காலம்காலமாக வசித்து வருகிறோம். இப்போது காலி செய்யுமாறு கூறினால் எங்கே போவது?” எனக் கேள்வி எழுப்புகிறார் காட்டுக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்த தமிழ்ச்செல்வி.

தர்கா நிர்வாகத்தின் அறிவிப்பால், கடந்த நான்கைந்து நாட்களாக காட்டுக்கொல்லை கிராம மக்கள் மிகுந்த துன்பத்தில் இருப்பதாகக் கூறுகிறார், இப்பகுதியைச் சேர்ந்த மகேந்திரன். இவர் அணைக்கட்டு ஒன்றிய இந்து முன்னணி அமைப்பின் செயலாளராக இருக்கிறார்.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், “இங்குள்ள சுமார் ஆறு ஏக்கர் நிலத்தை வக்ஃப் இடம் எனக் கூறுகின்றனர். ஊராட்சிக்கு அனைத்து வரிகளையும் செலுத்தி வருகிறோம். சிலர் பத்திரப் பதிவும் செய்துள்ளனர்” எனக் கூறினார்.

“1950 ஆம் ஆண்டில் இருந்து வக்ஃப் நிலமாக இருந்துள்ளதாகக் கூறுகின்றனர். அதற்கு முன்பு யாரிடம் இருந்தது என்பதற்கான எந்த ஆதாரங்களும் இல்லை. இதே முகவரியில் தான் குடும்ப அட்டை, ஆதார் அட்டை என அனைத்தும் உள்ளது. இடத்தைக் காலி செய்ய சொன்னால் எங்கே செல்வது?” என அவர் கேள்வி எழுப்பினார்.

மேலும், வக்ஃப் சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் கொண்டு வந்த பிறகே தர்கா நிர்வாகம் இந்த விவகாரத்தில் தீவிரம் காட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதையடுத்து, காட்டுக்கொல்லை கிராமத்தில் உள்ள வக்ஃப் வாரியத்துக்குச் சொந்தமான இடங்களுக்கு பிபிசி தமிழ் சென்றது. குடிசை வீடுகளும் அடுக்குமாடி வீடுகளும் அங்கு பெருகியிருந்தன.

 வக்ஃப், வேலூர்

“வரி கட்டுவதற்குப் பணம் இல்லை”

அங்குள்ள மக்களில் பலரும் கவலையுடன் இருப்பதைப் பார்க்க முடிந்தது.

“40 வருடங்களாக இங்கு வசிக்கிறேன். இடம் தர்காவுக்கு சொந்தம் எனக் கூறுகின்றனர். கூலி வேலை செய்தால்தான் நான் உணவு உண்ண முடியும். தரை வரி கட்டுவதற்கு என்னிடம் பணம் இல்லை” என்கிறார் செல்வராணி.

இறைவன்காடு ஊராட்சிக்கு நடுவில் பிரதான சாலை ஒன்று செல்கிறது. அதன் இருபக்கமும் கீழாண்டை நவாப் மசூதி மற்றும் ஹசரத் சையத் அலி சுல்தான் ஷா தர்காவுக்கு சொந்தமான நிலங்கள் உள்ளன.

இங்கு விவசாயம் சார்ந்த கூலி வேலைகளுக்குச் சென்று வந்த மக்களில் சிலர், காலப்போக்கில் தாங்கள் வசிப்பதற்கு அங்கேயே நிலங்களை தேர்வு செய்து தங்கிவிட்டனர் என இப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

ஆனால், நிலங்களுக்கு உரிமை கொண்டாடுவதற்கு பட்டா, சிட்டா போன்ற எந்த ஆவணங்களும் அவர்களிடம் இல்லை என்பதை அறிய முடிந்தது.

ஒரு சிலரிடம் உள்ள நில ஆவணங்களில் நவாப் அலிகான் என்பவரிடம் இருந்து நிலத்தை வாங்கியதாக கூறப்பட்டுள்ளது.

மசூதி நிர்வாகியின் விளக்கம் என்ன?

“அந்த நபர் போலியானவர். பத்திரப்பதிவு அலுவலகத்தில் முறைகேடாக நிலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவற்றை ரத்து செய்யுமாறு வக்ஃப் வாரியத்தில் இருந்து பள்ளிகொண்டா சார்ப்பதிவாளர் அலுவலகத்துக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது” எனக் கூறுகிறார், தர்காவின் முத்தவல்லி சையத் சதாம்.

இந்த விவகாரம் தொடர்பாக, விரிஞ்சிபுரத்தில் உள்ள மசூதியில் சையத் சதாமை பிபிசி தமிழ் நேரில் சந்தித்துப் பேசியது.

“காட்டுக்கொல்லை கிராமத்தில் உள்ள சர்வே எண்களில் 362, 323/1, 333/1 ஆகியவற்றில் 6.50 ஏக்கர் நிலங்கள் மசூதிக்கு சொந்தமான வக்ஃப் நிலங்கள். இதில், ஐந்து ஏக்கரில் ஆக்ரமிப்பு உள்ளது. இவற்றில் ஒரு சர்வே எண்ணில் நவாப் அலிகான் என்பவரை உரிமையாளராகக் காட்டி போலி பத்திரப் பதிவு நடந்துள்ளது” எனக் கூறினார்.

1955-ஆம் ஆண்டில் இருந்து இந்த நிலம் வக்ஃப் வாரியத்துக்கு சொந்தமாக உள்ளதாகக் கூறும் சையத் சதாம், “அரசு கெஜட்டிலும் 1959 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பதிவாகியுள்ளது. 1990 ஆம் ஆண்டு வரை காலியான நிலமாக இருந்துள்ளது. அதன்பிறகு ஆக்கிரமிப்பு தொடங்கிவிட்டது” என்றார்.

“உங்கள் தந்தையே பத்திரப் பதிவு செய்து கொடுத்துள்ளதாக அப்பகுதியைச் சேர்ந்த சிலர் ஆவணங்களைக் காட்டுகிறார்களே?” எனக் கேட்டோம்.

” என் தந்தையை மிரட்டிப் பணிய வைப்பதற்கு உள்ளூர் பிரமுகர்கள் முயற்சி செய்தனர். இதன் காரணமாக சிலருக்கு எழுதிக் கொடுத்துள்ளார். ஆனால், சட்டப்படி வக்ஃப் நிலத்தை யாருக்கும் விற்க முடியாது” எனக் கூறினார்.

“அதேநேரம், வக்ஃப் நிலத்தை பத்திரப்பதிவு செய்யக் கூடாது எனக் கூறி 2018-ஆம் ஆண்டு பள்ளிகொண்டா சார்பதிவாளர் அலுவலகத்துக்கு எனது தந்தை கடிதமும் அனுப்பியுள்ளார். சிலர் மோசடியாக நிலங்களை வாங்கியுள்ளனர்” எனவும் அவர் குறிப்பிட்டார்.

 வக்ஃப், வேலூர்

‘புரிந்து கொள்ள தயாராக இல்லை’

வக்ஃப் நிலம் எனத் தெரிந்தும் சிலர் ஒரு சதுர அடியை சுமார் மூன்றாயிரம் ரூபாய்க்கு மேல் விற்றுள்ளதாக கூறும் சையது சதாம், “இதற்காக பட்டாவை மாற்றுவதற்கு சிலர் தடையில்லா சான்று கேட்டனர். அதன் தொடர்ச்சியாகவே நோட்டீஸ் அனுப்பினேன்” எனக் கூறுகிறார்.

தமிழ்நாடு வக்ஃப் வாரியத்தின் முதன்மை செயல் அலுவலர் தாரேஸ் அகமதுவுக்கு இதுதொடர்பாக கடிதம் எழுதியதாகக் கூறும் சையது சதாம், “வக்ஃப் வாரியத்தில் இருந்து சார் பதிவாளர் அலுவலகத்துக்குக் கடிதம் மூலம் தெரியப்படுத்தியுள்ளனர்” என்றார்.

“தற்போது வசித்துவரும் யாரையும் காலி செய்யுமாறு தான் கூறவில்லை” எனக் குறிப்பிட்ட சையது சதாம், “சுமார் 60 பேருக்கு மட்டுமே நோட்டீஸ் கொடுத்தோம். அவர்களில் சிலர் கூட்டுக் குடும்பங்களாக வசிக்கின்றனர். அதை வைத்து 150 பேருக்கு நோட்டீஸ் அனுப்பியதாக தகவல் பரப்புகின்றனர்” என்றார்.

“வக்ஃப் நிலம் என்பதால் வாடகைதாரராக வாருங்கள் எனக் கூறினால், எதற்காக வரி செலுத்த வேண்டும் எனக் கேட்கின்றனர். அவர்கள் புரிந்து கொள்ளத் தயாராக இல்லை” எனவும் அவர் குறிப்பிட்டார்.

“நாங்கள் தூண்டவில்லை” – இந்து முன்னணி

இதன்பின்னணியில், இந்து முன்னணி அமைப்பு மக்களை தூண்டிவிடுவதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் அதனை மறுக்கிறார், இந்து முன்னணி அமைப்பின் மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் மகேஷ்.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், “சில நிலங்களை சையது சலாமின் தந்தையே விற்றுள்ளார். அவரே மக்களிடம் சென்று, என்னுடைய இடம் எனக் கூறி அவ்வப்போது பணம் வசூலித்து வந்தார். மக்களுக்கு நோட்டீஸ் கொடுத்தது சையது சதாம்தான். நாங்கள் பதற்றத்தை ஏற்படுத்தவில்லை” எனக் கூறினார்.

 வக்ஃப், வேலூர்

வக்ஃப் வாரிய தலைவர் கூறியது என்ன?

வக்ஃப் நிலங்களில் பத்திரப் பதிவுகள் நடைபெற்றுள்ளது குறித்து, தமிழ்நாடு வக்ஃப் வாரிய தலைவர் நவாஸ்கனியிடம் பிபிசி தமிழ் பேசியது.

“வக்ஃப் நிலங்களில் சட்டவிரோத பத்திரப் பதிவுகள் நடப்பதை அறிந்து மூல ஆவணத்தில் உள்ள சொத்துகளைப் பதிவு செய்வதற்குத் தடை விதிக்குமாறு 2022 ஆம் ஆண்டு பதிவுத்துறை தலைவருக்குக் கடிதம் அனுப்பினோம். அதன்பிறகு எந்தப் பத்திரப் பதிவும் நடக்கவில்லை” எனக் கூறினார்.

வக்ஃப் சொத்து எனத் தெரிந்தும் சிலர் தெரியாமலும் நிலங்களை வாங்கியுள்ளதாகக் கூறும் நவாஸ் கனி, “ஒருமுறை வக்ஃப் சொத்தாக ஒப்படைத்துவிட்டால் அது எப்போதும் வக்ஃப் சொத்து தான். யாராவது வீடு கட்டியிருந்தால் அவர்களை வெளியேற்றாமல் வாடகைதாரராக மாற்றலாம். அதைத் தான் வேலூர் தர்காவின் முத்தவல்லி செய்துள்ளார்” என்கிறார்.

அதேநேரம், 2013 ஆம் ஆண்டுக்கு முன்பு வரை வக்ஃப் சொத்துக்கு நீதிமன்றத்தின் அனுமதி அல்லது வாரியத்தின் அனுமதி பெற்று விற்கக் கூடிய நிலை இருந்ததாக நவாஸ்கனி குறிப்பிட்டார்.

“அவ்வாறு விற்கப்பட்ட நிலங்களுக்கு நாங்கள் உரிமை கோரவில்லை. 2013 ஆம் ஆண்டு வக்ஃப் சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் கொண்டு வந்தது. அதன்படி வக்ஃப் சொத்துகளை யாரும் வாங்கவோ விற்கவோ முடியாது என்ற நிலை ஏற்பட்டது. அவற்றை விற்பதற்கு வாரியத்துக்கும் அதிகாரம் இல்லை” என அவர் தெரிவித்தார்.

வருவாய் கோட்டாட்சியர் கூறுவது என்ன?

இதுதொடர்பாக, மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமியை சந்திப்பதற்கு பிபிசி தமிழ் சென்றது. அவரை சந்திக்க முடியாததால், வேலூர் வருவாய் கோட்டாட்சியர் செந்தில்குமாரிடம் பிபிசி தமிழ் பேசியது.

“மாவட்ட ஆட்சித் தலைவரிடம் காட்டுக்கொல்லை கிராம மக்கள் மனு கொடுத்துள்ளனர். எத்தனை பேருக்கு பிரச்னை உள்ளது என்பதைக் கணக்கெடுக்குமாறு ஆட்சித் தலைவர் கூறியுள்ளார். இதைப் பற்றி ஆய்வு நடத்தி ஆட்சியருக்கு அறிக்கை சமர்ப்பிப்போம்” எனக் கூறினார்.

பணம் வாங்கிக் கொண்டு நிலத்தைப் பத்திரப் பதிவு செய்துள்ளதாக கூறப்படுவது குறித்துக் கேட்டபோது, “அதைப் பற்றி தெரியவில்லை. நிலம் தொடர்பான ஆவணங்களை சரிபார்த்த பிறகே தெரியும். புகார் மனுவில் உண்மை உள்ளதா என்பதை ஆய்வு செய்து வருகிறோம்” என்று மட்டும் பதில் அளித்தார்.

நீதிமன்றத்தில் விசாரணை

வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக தொடரப்பட்ட மனுக்கள் மீது உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

அப்போது, அடுத்த விசாரணை நடைபெறும் வரை அதிகாரப்பூர்வ பதிவு ஆவணங்கள் இல்லாமல் நீண்ட காலமாக பயன்படுத்தப்பட்டு வரும் வக்ஃப் சொத்துக்கள் முதல் ஏற்கெனவே பதிவு செய்யப்பட்ட, அறிவிக்கப்பட்ட சொத்துக்கள் வரை அனைத்து வக்ஃப் சொத்துக்களும் ரத்து செய்யப்படவோ அல்லது மாவட்ட ஆட்சியரால் மாற்றப்படவோ மாட்டாது என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்தது.

மேலும், இந்த வழக்கு விசாரணை நடைபெறும் காலக்கட்டத்தில் மத்திய வக்ஃப் கவுன்சில் மற்றும் மாநில வக்ஃப் வாரியங்கள் ஆகியவற்றில் முஸ்லிம் அல்லாதோர் நியமிக்கப்பட மாட்டார்கள் என மத்திய அரசு கூறியதை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : BBC