SOURCE :- BBC NEWS

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், சிராஜ்
- பதவி, பிபிசி தமிழ்
-
18 ஏப்ரல் 2025, 04:23 GMT
புதுப்பிக்கப்பட்டது 8 மணி நேரங்களுக்கு முன்னர்
தமிழ்நாட்டின் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில், மாற்றுத் திறனாளிகளை நேரடியாக தேர்தலில் போட்டியிடாமல் நியமன உறுப்பினர்களாக நியமிப்பதற்கான சட்டத்திருத்த மசோதாக்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஏப்ரல் 16ஆம் தேதி சட்டப் பேரவையில் தாக்கல் செய்திருந்தார்.
இதன் மூலம் 13,988 மாற்றுத்திறனாளிகள் நியமனம் செய்யப்படுவார்கள் என்றும், மாற்றுத்திறனாளிகளின் குரல், உள்ளாட்சி அமைப்புகளில் ஒலிக்க இது உதவும் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
‘தமிழ்நாட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் உதவித்தொகையை உயர்த்த வேண்டும், 100 நாள் வேலைத் திட்டத்தில் 4 மணிநேரம் பணி என்ற பழைய நடைமுறையைக் கொண்டு வர வேண்டும்’ என்பன போன்ற பல கோரிக்கைகளை வலியுறுத்தி, சமீப காலமாக மாற்றுத்திறனாளி சங்கங்கள் சார்பாகப் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்த நிலையில், தமிழக அரசின் இந்த அறிவிப்பு அவர்களுக்கு எந்தளவுக்குப் பயனுள்ளதாக இருக்கும்?
உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத் திறனாளி பிரதிநிதித்துவம்

பட மூலாதாரம், TNDIPR
நகர்ப்புறம் மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம் வழங்க வகை செய்யும் சட்ட மசோதாக்களை, தமிழக சட்டப்பேரவையில் (ஏப்ரல் 16) அறிமுகம் செய்த முதலமைச்சர் ஸ்டாலின், “நாங்கள் ஆட்சிப் பொறுப்புக்கு வருவதற்கு முன்பு, இந்தத் துறைக்கான நிதி ஒதுக்கீடு 667 கோடி ரூபாயாக இருந்தது. ஆனால், இப்போது, இந்த நிதியாண்டில் 1,432 கோடியாக, அதாவது இரண்டு மடங்கு உயர்த்தியுள்ளோம். இந்தியாவிலேயே, அதிக எண்ணிக்கையில் மாற்றுத் திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித் தொகை வழங்கும் மாநிலம் தமிழ்நாடுதான்” என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், “தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும், அதாவது, கிராம ஊராட்சி, ஊராட்சி ஒன்றியங்கள், பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் மாற்றுத் திறனாளிகள் நேரடியாக தேர்தலில் போட்டியிடாமல் நியமன முறையில் உறுப்பினர் ஆக்கப்படுகிறார்கள்” என்று தெரிவித்தார்.
இதன் மூலமாக உள்ளாட்சி அமைப்புகளில், மாற்றுத் திறனாளிகளுடைய பிரதிநிதித்துவம் உறுதி செய்யப்பட்டு, அவர்கள் தங்களுக்கான வாய்ப்புகளையும், சிறப்பு உரிமைகளையும் சமமாகப் பெறுவதற்கு இந்தச் சட்ட முன்வடிவுகள் வழிவகுக்கும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் குறிப்பிட்டார்.
“இதை நடைமுறைப்படுத்த, தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994, தமிழ்நாடு நகர்ப்புற ஊராட்சிகள் சட்டம் 1998 ஆகியவற்றில் திருத்தங்களை முன்மொழிகிறேன். இந்த மசோதாக்கள் மூலம், மாற்றுத் திறனாளிகளின் குரல், உள்ளாட்சி அமைப்புகளில் ஒலிப்பது மட்டுமின்றி, அவர்கள் உள்ளாட்சி நிர்வாகத்தை வழிநடத்தும் வல்லமை பெற்றவர்களாகத் திகழ்வார்கள்” என்று கூறினார்.
தற்போது நகர்ப்புற உள்ளாட்சிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களில் 35 பேர் மட்டுமே மாற்றுத்திறனாளிகள் என்றும், இந்த சட்டத் திருத்தத்தின் மூலம் சுமார் 650 மாற்றுத் திறனாளிகள் நகர்ப்புற உள்ளாட்சிகளிலும், 12,913 மாற்றுத் திறனாளிகள் கிராமப் பஞ்சாயத்துகளிலும், 388 மாற்றுத் திறனாளிகள் ஊராட்சி ஒன்றியங்களிலும், மாவட்ட ஊராட்சிகளில் 37 மாற்றுத்திறனாளிகளும் நியமனம் செய்யப்படுவார்கள் என்றும் சட்டப்பேரவையில் அவர் தெரிவித்தார்.
இந்தியாவில் மாற்றுத்திறனாளிகளின் நிலை

பட மூலாதாரம், Getty Images
இந்த சட்ட மசோதாக்கள் குறித்துப் பேசிய, மாற்றுத்திறனாளிகளுக்கான டிசம்பர் 3 இயக்கத்தின் தலைவர் தீபக் நாதன், “நமது நாட்டில் பெரும்பாலான இடங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்ற வசதிகள் இல்லை. ஒரு மாற்றுத்திறனாளி தனக்கு அரசின் சக்கர நாற்காலி வேண்டுமெனில், மாவட்டத்தின் தலைமை மருத்துவமனைக்குச் சென்று சான்றிதழ் பெற்று, மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து மனு அளிக்க வேண்டும். ஏதோவொரு குக்கிராமத்தில் வாழும் ஓர் ஏழை மாற்றுத் திறனாளிக்கு இது அவ்வளவு எளிதல்ல,” என்று தெரிவித்தார்.
அரசியல் தலைவர்களோ அல்லது அதிகாரத்தில் இருப்பவர்களோ தங்கள் வலியைப் புரிந்துகொள்ள வேண்டும் என எதிர்பார்ப்பதைவிட, தாங்களே அதிகாரத்திற்குச் சென்றால்தான் இத்தகைய கடினமான நடைமுறைகளில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்று தீபக் நாதன் கருதுகிறார். ஆனால், “தேர்தல் அரசியலில் பங்கெடுக்கும் அளவுக்கு இங்கு மாற்றுத்திறனாளிகளுக்கு வாய்ப்புகள் அல்லது வசதிகள் அமைவதில்லை. அப்படியிருக்க இந்தச் சட்டத்திருத்தம் மிகவும் பயனுள்ள ஒன்று” என்கிறார் தீபக் நாதன்.
மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் மற்றும் கண்ணியத்தைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டு, 2006ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை ஓர் ஒப்பந்தத்தை வெளியிட்டது. இந்தியா உள்படப் பல நாடுகள் இதில் கையெழுத்திட்டன. மாற்றுத்திறன் கொண்டவர்களுக்கு, அனைத்து விதமான மனித உரிமைகளும் அடிப்படை சுதந்திரங்களும் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பதே இந்த ஒப்பந்தத்தின் முக்கிய அம்சம்.
அதில் ஆர்டிகிள் 29, மாற்றுத்திறனாளிகளின் அரசியல் உரிமைகள் பற்றித் தெளிவாக விளக்குகிறது. ஒரு நாட்டில் நடக்கும் தேர்தலில் வாக்களிப்பது மட்டுமின்றி அதில் போட்டியிடுவதற்கும் சமமான வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டுமெனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
“ஆனால், இந்தியாவில் நடக்கும் தேர்தல்களில் மாற்றுத்திறனாளிகள் போட்டியிடுவதற்கான சரிசமமான சூழல் உள்ளதா எனக் கேட்டால் சந்தேகமே. ஏனென்றால் இங்கு பலரும் வாழ்வாதாரத்திற்கே சிரமப்படுகிறார்கள் எனும்போது, பணம் செலவழித்து தேர்தலில் நிற்பதைக் கற்பனைகூடச் செய்ய முடியாது. அதனால்தான் தேர்தல் அரசியலில் மாற்றுத்திறனாளிகளின் பிரதிநித்துவம் குறைவாக உள்ளது,” என்றார் தீபக் நாதன்.
மேற்கொண்டு பேசியவர், “சமூகத்தில் எங்களுக்குக் கிடைக்கும் மரியாதை குறித்துச் சொல்லவே தேவையில்லை. இதையெல்லாம் கருத்தில் கொண்டு முதலமைச்சரிடம் கடந்த பிப்ரவரி மாதம் எங்கள் இயக்கத்தின் சார்பாகக் கோரிக்கை வைத்தோம். அது இவ்வளவு சீக்கிரம் நிறைவேற்றப்படும் என்று நினைக்கவில்லை” என்றும் குறிப்பிட்டார்.
‘அடையாள அரசியல்’

பட மூலாதாரம், @Deepak_TMN
ஆனால், ‘மாற்றுத்திறனாளிகள் உரிமைகளுக்கான தேசிய மேடை’ எனும் அமைப்பின் செயல் தலைவர் நம்புராஜன், தமிழக அரசின் இந்த மசோதாக்கள் ‘வெறும் அடையாள அரசியல்’ என்று விமர்சிக்கிறார்.
“இங்கு பல மாற்றுத்திறனாளிகள் வேலையின்றி, வாழ்வாதாரத்திற்கு மிகவும் சிரமப்படுகிறார்கள். இந்தியாவிலேயே, அதிக எண்ணிக்கையில் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்குகிறோம் என முதலமைச்சர் கூறுகிறார். அந்த மாதாந்திர உதவித்தொகை 1500 ரூபாய் மட்டுமே.
அதை உயர்த்திக் கொடுங்கள் என மாற்றுத்திறனாளிகள் நடத்தும் போராட்டங்கள் அவர்களுக்குத் தெரியவில்லை. நூறு நாள் வேலைத் திட்டத்தில் முன்பு 50 சதவிகித பணி, 4 மணிநேரம் வேலை என்று இருந்த நடைமுறையை மாற்றிவிட்டு, 8 மணிநேரப் பணி, நாள் முழுவதும் பணித்தளத்தில் இருக்க வேண்டும் என்ற 2024ஆம் ஆண்டு தமிழக ஊரக வளர்ச்சித் துறையின் உத்தரவை அமல்படுத்தினார்கள். அதை ரத்து செய்யக் கோரிக்கை வைத்தோம். அதையும் கண்டுகொள்ளவில்லை,” என்று குற்றம் சாட்டுகிறார் நம்புராஜன்.
கடந்த ஜனவரி மாதம் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் மாற்றுத் திறனாளிகள் சங்கத்தின் சார்பில் உதவித்தொகையை அண்டை மாநிலங்களில் வழங்குவது போல் அதிகபட்சமாக உயர்த்தி வழங்கிட வேண்டும், 100 நாள் வேலைத் திட்டத்தில் 4 மணிநேரம் பணி என்ற பழைய நடைமுறையைக் கொண்டு வரவேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்திய 200க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கைது செய்யப்பட்டனர்.
“எங்களது போராட்டங்களை நீர்த்துப் போகச் செய்வதற்கான ஓர் உத்தியாகவே இதைப் பார்க்கிறேன். எங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஏப்ரல் 22ஆம் தேதி, சென்னையில் முற்றுகைப் போராட்டம் நடத்தவுள்ளோம். உள்ளாட்சிகளில் நியமன உறுப்பினர் என்பது உரிமை அடிப்படையில் வழங்கப்பட்ட ஒன்றாகத் தெரியவில்லை, பச்சாதாப அடிப்படையில் வழங்கப்பட்ட ஒன்றாகவே உள்ளது” என்று கூறுகிறார் நம்புராஜன்.
ஆனால், நம்புராஜனின் கருத்தை மறுக்கும் டிசம்பர் 3 இயக்கத்தின் தலைவர் தீபக் நாதன், “இதுவொரு தொடக்கம்தான். நான் முன்பே கூறியது போல, நாங்கள் அதிகாரத்திற்குச் சென்றால்தானே, எங்களுக்கான அரசியலைப் பேச முடியும். அதற்கான ஒரு வழியாகத்தான் இதைப் பார்க்கிறேன். மாற்றுத்திறனாளிகளுக்கான அரசியல் பிரதிநிதித்துவம் குறித்த விவகாரத்தில், மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக தமிழகம் இந்த மசோதாக்களைக் கொண்டு வந்துள்ளது.
இது நிச்சயம் அடையாள அரசியலாக இருக்காது. அதை உறுதி செய்யும் விதமாக தமிழ்நாடு முழுவதும் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு அரசியல் விழிப்புணர்வு ஏற்படுத்துவதே எங்கள் அடுத்த கட்ட பணி. உதவித்தொகையை உயர்த்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை முதலமைச்சரிடம் வலியுறுத்தினேன். அவர் விரைவில் நடவடிக்கை எடுப்பதாகக் கூறியுள்ளார். எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது,” என்கிறார்.
இந்தியாவில் முதல் முறையா?

உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான பிரதிநிதித்துவம் தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் கொண்டு வரப்பட்டிருக்கும் இந்த மசோதா, இந்தியாவுக்கு புதிதல்ல.
கடந்த 2019ஆம் ஆண்டு, சத்தீஸ்கர் மாநிலத்தின் அப்போதைய அமைச்சரவை, ‘1993ஆம் ஆண்டு மாநில பஞ்சாயத்து ராஜ் சட்டத்தில்’ ஒரு திருத்தத்தைக் கொண்டு வந்தது.
அதன் மூலம் ஒவ்வொரு பஞ்சாயத்திலும் மாற்றுத்திறனாளி ஒருவர் உறுப்பினராக இருப்பது கட்டாயமாக்கப்பட்டது. தேர்தல் செயல்முறை மூலம் எந்த மாற்றுத்திறனாளியும் தேர்ந்தெடுக்கப்படாவிட்டால், அரசாங்கம் ஒருவரைப் பரிந்துரைக்க வேண்டும். உள்ளூர் நிர்வாக அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளின் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வதே இந்த முயற்சியின் நோக்கம் என சத்தீஸ்கர் அரசு கூறியது.
இந்த நடைமுறை இப்போதும் முழுமையாகச் செயல்பாட்டில் உள்ளதா என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை.
“இவ்வாறு நியமன உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்படும் மாற்றுத் திறனாளிகளுக்கு எத்தகைய அதிகாரங்கள் வழங்கப்படும், இதனால் மாற்றுத் திறனாளிகளின் வாழ்வில் என்ன மாற்றம் வரும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்” என்கிறார் மாற்றுத் திறனாளிகள் உரிமைகளுக்கான தேசிய மேடையின் செயல் தலைவர் நம்புராஜன்.
“எங்களுக்கு அரசியல் பிரதிநித்துவம் வேண்டும்தான். ஆனால், முதலில் வாழ்வாதாரம் குறித்த சிக்கல்களைப் பார்க்க வேண்டும் அல்லவா? வெறும் வயிற்றில் அரசியல் செய்ய முடியாதே” என்கிறார் அவர்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
SOURCE : BBC