SOURCE :- BBC NEWS

சீமான், நாம் தமிழர், 2026 தேர்தல், கூட்டணி

பட மூலாதாரம், NTK

19 ஏப்ரல் 2025, 03:27 GMT

புதுப்பிக்கப்பட்டது 26 நிமிடங்களுக்கு முன்னர்

இன்றைய (17/04/2025) நாளிதழ்கள் மற்றும் இணையதளங்களில் வெளிவந்துள்ள முக்கியச் செய்திகள் சில இங்கே தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.

2026 சட்டமன்றத் தேர்தலில் தனித்து தான் போட்டி என நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளதாக தி இந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அந்த செய்தியில்,” நாம் தமிழர் கட்சி சார்பில் தமிழினப் பேரெழுச்சிப் பொதுக்கூட்டம் கோவை மாவட்டத்தில் மே.18-ம் தேதி நடைபெறுகிறது. இது தொடர்பாக சென்னையில் ஆலோசனை நடத்திய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சீமான்,”ஒரு கட்சியை தங்களது கூட்டணிக்கு வரவேண்டும் என்று எதிர்பார்த்து அழைப்பது இயல்புதான். ஆனால் எங்களது நிலைப்பாடு ஒன்றுதான். தேர்தல் அரசியல், கட்சி அரசியல் செய்பவர்கள்தான் கட்சிகளைத் தேடி, கட்சி தலைமையை, தலைமை அலுவலகங்களை தேடிச் செல்வார்கள். நாங்கள் மக்கள் அரசியல் செய்பவர்கள்.

அந்தவகையில் ஏற்கெனவே தொடர்ச்சியாக 2 சட்டப்பேரவை, 2 நாடாளுமன்றத் தேர்தல்களைச் சந்தித்து இருக்கிறோம். வெற்றி, தோல்விகளைத் தாண்டி 5-வது முறையும் ஒரு கட்சி தனித்து போட்டியிடுகிறது என்றால் அது நாம் தமிழர் கட்சிதான்.

2026 தேர்தலில் 234 தொகுதிகளில் 117 பெண்கள், 117 ஆண்களுக்கு வாய்ப்பளிக்கப்படும். 134 தொகுதிகளில் இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும். அரசியல் வரலாற்றில் நிராகரிக்கப்பட்ட தமிழ் சமூகங்கள் இருக்கின்றன. அவர்களுக்கும் வாய்ப்பு கொடுக்கப்படும். அதேபோல் பல பொதுத் தொகுதிகளில் ஆதி குடிகளுக்கும் வாய்ப்பு அளிக்கப்படும்.

கூட்டணிக்கு எல்லாரும்தான் அழைக்கின்றனர். அதற்கு நன்றி. ஆனால் எங்களுடைய பயணம் எங்களது கால்களை நம்பிதான் இருக்கும். பிறர் தோள் மீது ஏறி நின்று நான் உயரமானவன் என்று காட்டுவதைவிட, தனித்து நின்று உண்மையான உயரத்தை காட்டுவதே மேலானது.

கூட்டணி வைத்து 10 சீட்டுகள் வென்று, சட்டப்பேரவைக்கு சென்று பேசினாலும், அவைக்குறிப்பில் இருந்து நீக்கிவிடுவார்கள். அதற்கு வெளியில் இருந்தே பேசிவிடலாம். எங்களுக்கென்று ஒரு கனவு இருக்கிறது. அதை நிறைவேற்ற வேண்டும். அதனால் தனித்துதான் போட்டியிடுவோம்.” என்று சீமான் பேசியதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

லாரியில் சிக்கி 15 கி.மீ இழுத்துச் செல்லப்பட்டு இளைஞர் மரணம்

மதுரை, விபத்து, லாரி, மரணம்

பட மூலாதாரம், Daily Thanthi

லாரியில் சிக்கி 15 கி.மீ. இழுத்து சென்றதில் உடல் சிதைந்து இளைஞர் உயிரிழந்ததாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பான செய்தியில்,” மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள வடுகபட்டியை சேர்ந்தவர் சூரிய பிரகாஷ் (வயது 30). இவருக்கு முத்துபேச்சி (25) என்ற மனைவியும், சோயாஸ்ரீ(3), ரியாஸ்ரீ (9 மாத குழந்தை) என்ற 2 குழந்தைகளும் உள்ளனர். சூரிய பிரகாஷ், லாரி செட்டில் வேலை செய்து வந்தார்

இந்த நிலையில் நேற்று அதிகாலை மோட்டார் சைக்கிளில் வாடிப்பட்டியில் இருந்து வடுகபட்டிக்கு சென்று கொண்டிருந்தார். ஆண்டிபட்டி பங்களா பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே சென்றபோது அரியானா மாநிலத்தில் இருந்து மதுரை நோக்கி வந்த லாரி எதிர்பாராதவிதமாக அவருடைய மோட்டார்சைக்கிள் மீது மோதியது.

இதில் லாரியின் அடிப்பகுதியில் மோட்டார்சைக்கிள் சிக்கிக்கொண்டது. மோட்டார்சைக்கிளுடன் சூரியபிரகாசும் லாரியின் அடியில் சிக்கினார். ஆனால் லாரி டிரைவர் இதனை கவனிக்காமல் தொடர்ந்து லாரியை இயக்கினார். மோட்டார்சைக்கிள் சாலையில் உரசியபடி சென்றதால் தீப்பொறி பறந்தது.

உடல் சிதைந்து பலி

மேலும் லாரியின் அடிப்பகுதியில் சிக்கிய சூரிய பிரகாசின் வலது கால் சாலையில் உரசியபடி வந்ததால் சிதைந்தது. மேலும் அவரது முகம், தலை உள்பட உடலின் பல்வேறு பாகங்கள் சிதைந்தன. அந்த லாரி சுமார் 15 கிலோமீட்டர் தூரம் வரை சென்றது. சமயநல்லூர் அருகே வந்தபோது அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்து உடனடியாக லாரியை வழிமறித்து நிறுத்தினர்.பின்னர் லாரியின் அடியில் மோட்டார் சைக்கிளுடன் சிக்கிய சூரியபிரகாசை மீட்டனர். ஆனால் அவர் உடல் சிதைந்து பரிதாபமாக இறந்தது தெரியவந்தது.

இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.” என அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நியோமேக்ஸ் ரூ.600 கோடி சொத்துகள் முடக்கம்

நியோமேக்ஸ் , அமலாக்கத்துறை

பட மூலாதாரம், The Hindu

நியோமேக்ஸ் நிறுவனத்தின் ரூ.600 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது. அந்த செய்தியில்,” அதிக வட்டி தருவதாக கூறி ஆயிரத்துக்கும் மேற்பட்டோரிடம் பணம் பெற்று, அதை பல்வேறு நிறுவனங்களில் முதலீடு செய்து மோசடியில் ஈடுபட்ட நியோமேக்ஸ் நிறுவனத்தின் ரூ.600 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.

மதுரையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்ட நியோமேக்ஸ் நிதி நிறுவனம் ரூ.100 கோடிக்கு மேல் மோசடியில் ஈடுபட்டதாக மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், நியோமேக்ஸ் மற்றும் அதன் குழும நிறுவனங்கள் 12 முதல் 30 சதவீதம் வரை அதிக வட்டி தருவதாக கூறி முதலீட்டாளர்களிடம் பணம் பெற்று, அந்த பணத்தை திருப்பி கொடுக்காமல் மோசடி செய்திருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, இந்த விவகாரத்தில் அமலாக்கத் துறை விசாரணை நடத்தியது. நியோமேக்ஸ் நிறுவனம் ஆயிரக்கணக்கான முதலீட்டாளர்களிடம் பணத்தை பெற்று பினாமி நிறுவனங்கள் மூலம் சட்டவிரோத பண பரிவர்த்தனையில் ஈடுபட்டது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. குறிப்பாக, நிலங்கள் வாங்குவதற்காக கணிசமான நிதியை வேறு நிறுவனங்களுக்கு மாற்றியிருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, நியோமேக்ஸ் நிறுவனத்தின் ரூ.207 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத் துறை கடந்த 2023-ம் ஆண்டு முடக்கியது.

இதன் தொடர்ச்சியாக, நியோமேக்ஸ் நிறுவனத்தின் ரூ.600 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத் துறை தற்போது முடக்கியுள்ளது. இதுகுறித்து அமலாக்கத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

நியோமேக்ஸ் மற்றும் அதன் குழும நிறுவனங்கள் ஆயிரக்கணக்கான முதலீட்டாளர்களிடம் இருந்து பெருமளவு பணத்தை பெற்று, அந்த பணத்தை பினாமி நிறுவனங்கள் மூலம் பல்வேறு நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளது. அந்த வகையில், நியோமேக்ஸ் நிறுவனம், முதலீட்டாளர்களுக்கு வாக்குறுதி அளித்த தொகை உட்பட சுமார் ரூ.8,000 கோடி வரை கடன்பட்டுள்ளது.

இந்த நிலையில், தொடர் விசாரணையின் அடிப்படையில், நியோமேக்ஸ் நிறுவனம் மற்றும் அதன் குழும நிறுவனங்களான கார்லண்டோ ப்ராப்பர்ட்டீஸ், ட்ரான்ஸ்கோ ப்ராப்பர்ட்டீஸ், ட்ரைடாஸ் ப்ராப்பர்ட்டீஸ், குளோமேக்ஸ் ப்ராப்பர்ட்டீஸ் மற்றும் அதன் இயக்குநர்கள், பங்குதாரர்களான கமலக்கண்ணன், பாலசுப்பிரமணியன், வீரசக்தி, சார்லஸ் மற்றும் தொடர்புடையவர்களின் ரூ.121.80 கோடி மதிப்புள்ள அசையும், அசையா சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன. இதன் தற்போதைய சந்தை மதிப்பு ரூ.600 கோடி ஆகும். இதுதொடர்பாக மேலும் விசாரணை நடந்து வருகிறது.” என அமலாக்கத்துறை அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

ரூ.2,000க்கு கூடுதலான யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு ஜிஎஸ்டி?

யுபிஐ, ஜிஎஸ்டி, வரம்பு , வரிவிதிப்பு

பட மூலாதாரம், Getty Images

ரூ.2,000க்கு மேலான யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு ஜிஎஸ்டி விதிக்கப்படுமா என்பது குறித்து மத்திய நிதியமைச்சகம் விளக்கம் அளித்துள்ளதாக தினமணி செய்தி வெளியிட்டுள்ளது. அந்த செய்தியில்,” ரூ.2000க்கு அதிகமான யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு ஜிஎஸ்டி விதிக்க மத்திய அரசு பரிசீலித்து வருவதாக வெளியான தகவல்கள் முற்றிலும் ஆதாரமற்றது எனவும், அது போன்ற திட்டமேதும் இல்லை என மத்திய நிதியமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது. கடந்த 2020 ஜனவரி முதல் யுபிஐ பரிவர்த்தனைகளில் வியாபாரிகளுக்கான தள்ளுபடி விலை(எம்டிஆர்) கட்டணம் வசூலிக்க மத்திய நேரடி வரிகள் வாரியம் விலக்கு அளித்துள்ளது. எனவே இந்த யுபிஐ பரிவர்த்தனைகள் மீது ஜிஎஸ்டி விதிக்கப்படவில்லை.

2019-20ம் நிதியாண்டில் ரூ.21.3 லட்சம் கோடியாக இருந்த யுபிஐ பரிவர்த்தனை, 2025 மார்ச் மாதத்தில் இது ரூ.260.65 கோடியாக உயர்ந்துள்ளது . யுபிஐ பரிவர்த்தனை சேவைகளை மேம்படுத்த மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது.

2021-22ம் நிதியாண்டிலிருந்து யுபிஐ ஊக்கத்தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டம் சிறிய வணிகர்களால் மேற்கொள்ளப்படும் குறைந்த மதிப்பிலான பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கிறது. என நிதியமைச்சகத்தின் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாகவும் அந்த செய்தி குறிப்பிடுகிறது.

பிள்ளையான் ஓட்டுநர் கைது

பிள்ளையான், ஸ்ரீலங்கா

இலங்கை முன்னாள் ராஜாங்க அமைச்சரான சிவனேசன் சந்திரகாந்தனின் கார் ஓட்டுநர் கைது செய்யப்பட்டதாக வீரகேசரி செய்தி வெளியிட்டுள்ளது. சமீபத்தில் பிள்ளையான் என்று அழைக்கப்படும் சிவனேசன் சந்திரகாந்தன் கைதான நிலையில் தற்போது அவரது ஓட்டுநரும் கைதாகியுள்ளார். அந்த செய்தியில்,” மட்டக்களப்பு வாழைச்சேனையில் வைத்து தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான பிள்ளையான் என அழைக்கப்படும் சி.சந்திரகாந்தனின் சாரதியான ஜெயந்தன் என்பரை வெள்ளிக்கிழமை (18) காலையில் சி.ஐ.டி.யினர் கைது செய்துள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடந்த 2006 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 15 ஆம் திகதி கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கடந்த 8 ஆம் திகதி பிள்ளையான் அவரது காரியாலயத்தில் வைத்து சி.ஐ.டி. யினர் கைது செய்து அவரை பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த விசாரணையையடுத்து கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் கடத்தலுடன் தொடர்புபட்ட பிள்ளையானின் சாரதியான ஜெயந்தனை கொழும்பில் இருந்து சென்ற சி.ஐ.டி.யினர் அவரை அவரது வாழைச்சேனை வீட்டில் வைத்து கைது செய்து கொழும்புக்கு கொண்டு சென்றுள்ளதாக பொலிஸ் அதிகாரி மேலும் தெரிவித்தார்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU