SOURCE :- BBC NEWS

- எழுதியவர், பிரபுராவ் ஆனந்தன்
- பதவி, பிபிசி தமிழுக்காக
-
18 ஏப்ரல் 2025
புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
ராமநாதபுரம் அருகே குயவன்குடி சுப்பையா முருகன் கோவிலில் தீமிதி திருவிழாவின்போது தீ மிதிச் சடங்கில் பங்கேற்ற நபர் ஒருவர், தீக்குழியில் தவறி விழுந்தார். அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
அரசு விதிமுறைகளைப் பின்பற்றி தீ மிதித் திருவிழா நடத்தப்பட வேண்டும் என்று தீயணைப்புத்துறை அறிவுறுத்தும் அதே வேளையில் தீக்குழியில் இறங்குபவர்கள் உணர்ச்சி வசப்படாமல் இருந்தால் இதுபோன்ற விபத்துகளைத் தடுக்க முடியும் என மனநல மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
தீக்குழியில் விழுந்து உயிரிழப்பு
ராமநாதபுரம் அருகே குயவன்குடி சுப்பையா முருகன் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவையொட்டி ஏப்ரல் 10ஆம் தேதியன்று தீ மிதித் திருவிழா நடைபெற்றது.
இதில் வாலாந்தரவை கிராமத்தைச் சேர்ந்த 56 வயதான கேசவன், தீ மிதித்தபோது, அந்தத் தீயில் தவறி விழுந்தார். அங்கிருந்து மீட்கப்பட்ட அவர், உடலில் தீக்காயங்கள் ஏற்பட்ட நிலையில் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
ஆனால், ஏப்ரல் 14ஆம் தேதி இரவு சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்தார். இது குறித்து கேசவனின் மனைவி விக்னேஷ்வரி கொடுத்த புகாரின் பேரில் ராமநாதபுரம் கேணிக்கரை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அன்றிரவு என்ன நடந்தது?

குயவன்குடி சுப்பையா முருகன் கோவிலில் நடைபெற்ற தீமிதி திருவிழாவில் கேசவன், யார் தடுத்தும் நிற்காமல் அவசர அவசரமாக தீக்குழியில் இறங்கியபோது தீயில் விழுந்து காயம் ஏற்பட்டு உயிரிழந்ததாகக் கூறுகிறார் அந்தக் கோவிலின் அறங்காவலர்களில் ஒருவரும், சம்பவத்தை நேரில் பார்த்தவருமான கோபி.
இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய அவர், “ஆண்டுக்கு ஒரு முறை குயவன்குடி சுப்பையா முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா விமர்சையாகக் கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு பங்குனி உத்திரத் திருவிழா கடந்த ஏப்ரல் 1ஆம் தேதியன்று காப்பு கட்டுதலுடன் துவங்கியது.
கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி பங்குனி உத்திர திருவிழாவை ஒட்டி இரவு 7 மணியிலிருந்து தீ வளர்க்கத் தொடங்கி, சுமார் 60க்கும் மேற்பட்ட பக்தர்கள் இரவு 11 மணி அளவில் தீக்குழியில் இறங்கி தங்கள் நேர்த்திக் கடனைச் செலுத்தினர். கடந்த மூன்று ஆண்டுகளாக, கேசவன் தீ மிதித் திருவிழாவில் கலந்துகொண்டு வருகிறார். ஆனால் அவர் தீக்குழியில் நடந்து செல்லாமல் தீ பரப்பி வைக்கப்பட்டுள்ள இடத்திற்கு அருகே ஈர மணலில் ஓடுவதை வழக்கமாகக் கொண்டிருப்பார்,” என்று தெரிவித்தார்.
இந்த வருடம் அவரை யாரும் கட்டாயப்படுத்தவோ, வற்புறுத்தவோ இல்லை எனவும் அவரே தனது சொந்த விருப்பத்தில் தீக்குழியில் இறங்கி ஓடியதாகவும் குறிப்பிட்ட கோபி, “அப்போது நிலை தடுமாறி திடீரென தீயில் விழுந்ததில் அவருக்குக் காயம் ஏற்பட்டது. அவருடன் குடும்பத்தினர் யாரும் வராத காரணத்தால் விழாக் குழுவைச் சேர்ந்தவர்கள், தீயணைப்புத் துறையினருடன் சேர்த்து அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தோம்,” என்று நடந்ததை விவரித்தார்.
இந்த கோவிலில் இதுவரை இதே போல் இரண்டு மூன்று விபத்துகள் நடந்துள்ளதாகவும், ஆனால் உயிரிழப்பு ஏற்பட்டது இதுவே முதல் முறை என்றும் கோபி கூறினார். மேலும், கேசவன் அவசரப்பட்டு தீக்குழியில் இறங்கியதால்தான் விபத்து ஏற்பட்டதாகவும் தெரிவித்தார்.
“இந்தத் தீ மிதித் திருவிழாவை காவல்துறை, தேசிய நெடுஞ்சாலைத் துறை, வட்டாட்சியர், தீயணைப்புத் துறை என அனைத்து அலுவலர்களிடம் முறையாக அனுமதி பெற்றே நடத்தி வருகிறோம். எனவே கேசவன் தீயில் விழுந்து உயிரிழந்தமைக்கு கோவில் நிர்வாகம் அல்லது நிர்வாகிகள் என யாரும் பொறுப்பேற்க முடியாது” என்கிறார் கோவில் அறங்காவலர் குழுவைச் சேர்ந்த கோபி.
அருப்புக்கோட்டை சம்பவம்

இதே போல அருப்புக்கோட்டையில் நேற்று (ஏப்ரல் 17) தீ மீதிச் சடங்கில் பங்கேற்ற ஒருவர், தீக்குழியில் தவறி விழுந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
அருப்புக்கோட்டையில் ஆயிரங்கண் மாரியம்மன் கோவில் திருவிழாவை ஒட்டி அக்னி சட்டி எடுத்தல், அலகு குத்துதல் போன்ற சடங்குகள் செய்து பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனைச் செலுத்தினர்.
அந்தத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தீ மிதிச் சடங்கில் 20க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற நிலையில், ஒரு பக்தர் தீக்குழியில் இறங்கி நடந்தபோது திடீரென தடுமாறி விழுந்தார்.
உடனடியாக, அவரை அங்கிருந்த தீயணைப்புத் துறையினர் காப்பாற்றி ஆம்புலன்ஸில் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளார்.
தீ மிதித்தல் என்றால் என்ன ?
தீ மிதித்தல் என்பது இந்து மதத்தின் நேர்த்திக்கடன்களில் ஒன்று. இது அக்னி குண்டம் இறங்குதல், பூ மிதித்தல், பூக்குழி இறங்குதல் என்ற பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. இவ்வாறு தீ மிதிப்பவர்கள் ‘மருளாளிகள்’ என்று அழைக்கப்படுகிறார்கள்.
மருட்சி உடையவர்கள் மருளாளிகள். இவர்களுக்கு தீயும், பூவும் ஒன்றாகத் தெரியும். இதனால்தான் தீ மிதித்தலை, பூ மிதித்தல் என்று கூறுகிறார்கள்.
“தீ மிதித்தலுக்காக காப்பு கட்டி பக்தர்கள் விரதம் இருப்பார்கள். கோவில்களின் முன்பு தீ மிதித்தலுக்காக அக்னி குண்டம் தயார் செய்யப்படுகிறது. சாமி ஆடிக்கொண்டு நீர் நிலைகளில் இருந்து நீராடி மாலை அணிந்து பூக்குழிக்கு வருகிறார்கள். பக்தியின் பரவசத்தில் இருந்து கொண்டு வரிசையாக பூ குழிக்குள் இறங்குகிறார்கள்.
தீக்குழி 10 அடி முதல் 12 அடி நீளம் இருக்கும். ஆனால் 20 அடிக்கு மேல் இருக்காது. கட்டைகளைப் போட்டு எரிய விட்டு அது எரிந்தவுடன் தணலால் ஆன கரியாக இக்குழி இருக்கும்,” என்று பல ஆண்டுகளாக இந்த முருகன் கோவிலில் தீ மீதித்தல் சடங்கை நடத்தி வரும் காளி என்பவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
“பொதுவாக இந்த நிகழ்ச்சி இரவில் மட்டுமே நடத்தப்படுகிறது. பூக்குழி இறங்கி முடித்த பிறகு கல் உப்பைப் பூக்குழியின் மீது கொட்டுவார்கள். இது காற்றில் உள்ள ஈரத்தை இழுத்துக் கொள்ளும்” என்றும் அவர் விளக்கினார்.
தீயணைப்புத் துறையின் அறிவுரைகள்

தீ மிதித் திருவிழாவில் கலந்து கொள்ளும் பக்தர்கள் அரசு விதிமுறைகளைப் பின்பற்றி ஒருவர் பின் ஒருவராக இடைவெளி விட்டு தீக்குழியில் இறங்கினால் விபத்துகள் ஏற்படாது என்கிறார் திருச்சி மாவட்ட தீயணைப்புத் துறை அதிகாரி வினோத்.
தீ மிதித்தல் சடங்கு நடத்தப்படுவதற்கு முன்பு செய்ய வேண்டிய செயல்முறைகளை அவர் பிபிசி தமிழிடம் விளக்கினார். அவர் கூறியதாவது:
- கோவிலில் தீ மிதித் திருவிழா நடத்துவதற்கு மாவட்ட நிர்வாகம் அல்லது மாவட்ட காவல் துறையால் அனுமதி வழங்கப்பட வேண்டும்.
- தீ மிதித் திருவிழாவின்போது, எந்தவொரு விபத்தும் ஏற்படாமல் இருக்கவும், பாதுகாப்பு வசதிகள் செய்து தருமாறும் மாவட்ட தீயணைப்பு அலுவலகத்திற்கு விழாக் குழு சார்பில் மனு அளிப்பதுடன், அரசு விதிமுறைக்கு உட்பட்ட கட்டணத் தொகை செலுத்தப்படும்.
- அந்த மனுவின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட தீயணைப்பு நிலையத்தைச் சேர்ந்த அதிகாரி தீ மிதித் திருவிழா நடைபெறும் இடத்திற்குச் சென்று செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்வார்.
- குறிப்பாக தீமிதி திருவிழா நடைபெறும் இடத்தை சுற்றி (அதாவது தீக்குழி ஏற்படுத்தப்படும் இடம்) கம்புகளால் தடுப்பு வேலிகள் அமைத்திருக்க வேண்டும்.
- எளிதில் தீ பற்றக்கூடிய தொழிற்சாலைகள், நிறுவனங்கள், எரிபொருள் நிரப்பும் இடம், சமையல் எரிவாயு குடோன் உள்ளிட்டவை இருக்கக்கூடாது.
- குடியிறுப்புகளுக்கு அருகே தீ மிதித் திருவிழா நடத்துவதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும்
- தீ மிதிக்கும் இடம் அருகே பட்டாசுகள் வெடிக்க கூடாது
- தீ மிதித் திருவிழாவின்போது தடுமாறி தீயில் விழுந்து காயம் ஏற்படுபவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்க மருத்துவக் குழு அங்கு இருக்க வேண்டும்.
- காயமடைந்தவர்களை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ் தயார் நிலையில் இருக்க வேண்டும்.
பாதுகாப்பு ஏற்பாடுகள் எப்படி இருக்க வேண்டும்?
- தீ மிதித் திருவிழா நடைபெறும் இடத்தில் அமைக்கப்படும் அக்னி குண்டத்தின் நீளம் மற்றும் அகலத்தை கொண்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடும் தீயணைப்பு வீரர்களின் எண்ணிக்கை அமையும்.
- தீ மிதித் திருவிழா நடைபெறும் தினத்தன்று தீயணைப்பு வாகனம், தீயணைக்கும் கருவிகள், தீ பரவலைக் கட்டுப்படுத்தும் உபகரணங்கள், ஆகியவற்றுடன் ஹெல்மெட், தீயணைப்பு உடை அணிந்த 6 முதல் 8 தீயணைப்புத் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.
- தீ மிதி நிகழ்வு நடைபெறும் இடத்தில் இருபுறமும் நின்றவாறு வீரர்கள் பக்தர்களுக்குப் பாதுகாப்பு அளிப்பார்கள். விபத்து ஏற்பட்டால் உடனடியாக தீக்குழிக்குள் இறங்கி பக்தர்களை மீட்டு அழைத்து வருவதற்கு அவர்கள் தயார் நிலையில் இருப்பார்கள்.
- உடல் ஆரோக்கியம்,மன உறுதி உள்ளவர்கள் அரசு விதிமுறைகளைப் பின்பற்றி ஒருவர் பின் ஒருவர் இடைவெளி விட்டு தீக்குழியில் இறங்க வேண்டும், முதியவர்கள் தீயில் இறங்குவதைத் தவிர்த்து கொண்டால் தீ மதித் திருவிழாவின்போது தீ விபத்துகள் நடப்பதைத் தவிர்கலாம்.
நிதானம் முக்கியம்

தீ மிதிப்பது போன்ற அபாயகரமான சடங்குகளைச் செய்யும்போது உணர்ச்சிவசப்படாமல் இருந்தால் விபத்துகளைத் தடுக்கலாம் என்கிறார் மனநல மருத்துவர் சிவபாலன்.
இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய அவர், “ராமநாதபுரம் அருகே கோவிலில் நடைபெற்ற தீ மிதித் திருவிழாவில் தீயில் இறங்கிய அவர் தடுமாறி உயிரிழந்த நிகழ்வு என்பது ஒரு விபத்து. தீ மிதித் திருவிழா என்பது அதிக தீ விபத்து ஏற்படக்கூடிய சடங்குகளில் ஒன்று என்பதால் இந்தச் சடங்கைச் செய்யும்போது உணர்ச்சிவசப்படாமல் நிதானமாக இருக்க வேண்டும். பெரும்பாலும் உணர்ச்சிவசப்படுவதால் விபத்துகள் ஏற்படுகின்றன.
தீ மிதிக்கச் செல்லும் நபர்கள் எந்த அளவு நிதானமாக இருக்கிறார்கள் என்பதை உறுதி செய்ய வேண்டும். தீக்குழியில் இறங்குபவர்கள் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும், மருத்துவ ரீதியாகவும் தகுதி பெற்றவர்களா என்பதைச் சோதனை செய்து அதன் அடிப்படையில் ஒவ்வொருவராக அனுமதித்தால் நிச்சயம் இவ்வாறான விபத்துகள் நடப்பதைத் தடுக்க முடியும்” என்று அவர் குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய மனநல மருத்துவர் சிவபாலன், “தீ மிதித் திருவிழா நடைபெறுவதற்கு முன்பாக தீக்குழியில் இறங்குபவர்கள் விவரங்களைச் சேகரித்து அதை முறையாகப் பதிந்து அதன் அடிப்படையில் தீக்குழியில் இறங்குவதற்கான வாய்ப்பு அளிக்க வேண்டும்.
தீ மிதிப்பது போன்ற ஆபத்தான சடங்குகளை மக்கள் செய்யும்போது அரசு மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். இந்தச் சடங்கின்போது தீயில் விழுந்தால் அவர்களைப் பாதுகாக்கவும், விபத்து தீவிரமாகாமல் இருக்க தடுப்பு அம்சங்களில் அதிக கவனம் செலுத்தி அதை முறைப்படுத்தி பின்பற்றினால் இவ்வாறான விபத்துகள் நடக்காது” என்றும் அவர் குறிப்பிட்டார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
SOURCE : THE HINDU