SOURCE :- BBC NEWS

பட மூலாதாரம், Getty Images
“அவர் தனது சிலுவையைச் சுமந்து கொண்டு ஸ்கல் (Skull) என்கிற இடத்திற்குப் புறப்பட்டுச் சென்றார். ஆனால் இந்த இடம் ஹீப்ரூ மொழியில் கொல்கொதா என்று அழைக்கப்படுகிறது. அங்கே அவரை சிலுவையில் அறைந்தார்கள், அவருடன் சேர்த்து வேறு இருவரையும்கூட, இயேசுவை நடுவிலும் அவர்களை இரண்டு பக்கங்களிலும் வைத்து சிலுவையில் அறைந்தார்கள்.”
ஜானின் உபதேசத்தில் வரும் இந்தப் பத்திதான் மீண்டும் ஒரு முறை உலகம் முழுவதும் உள்ள தேவாலயங்களில், லட்சக்கணக்கான நம்பிக்கையுள்ள மக்கள் சிலுவையை வழிபடும் இந்தப் புனித வெள்ளியன்று (18/4) நடக்கும் மத சேவைகளில் அடிப்படை அம்சமாக இருக்கும்.
சிலுவையில் அறையப்பட்ட இயேசுவின் புகைப்படத்தை தேவாலய மேடையில் வைத்து நம்பிக்கை உள்ளவர்கள் வழிபடும் அல்லது முத்தமிடும் இந்தச் சடங்கின் மூலம் ரோமப் பேரரசின் கைகளில் நிகழ்ந்த இயேசுவின் இறப்பு நினைவுகூரப்படுகிறது. இது 1,500 ஆண்டுகளுக்கும் மேலாக கத்தோலிக்க வழிபாட்டு முறையின் ஓர் அங்கமாக உள்ளது.
தொடக்கத்தில் இந்தச் சாதனம் அவரைப் பின்பற்றுபவர்களுக்கு வழிபடக் கூடிய ஒரு பொருளாக இருந்ததும் இல்லை, கிறிஸ்தவ சின்னமாகப் பயன்படுத்தப்பட்டதும் இல்லை.
தீய, வலி நிறைந்த நினைவு

பட மூலாதாரம், Getty Images
இயேசுவின் மரணத்தைத் தொடர்ந்து வந்த முதல் நூற்றாண்டுகளில், அவரைப் பின்பற்றியவர்கள் தங்களைச் சிலுவையுடன் அடையாளப்படுத்திக் கொள்ளவில்லை.
மத ரீதியான துன்புறுத்தலில் இருந்து தற்காத்துக் கொண்டு மதச் சடங்குகள் செய்யப்பட்ட மறைவிடங்ககளிலும், சிலுவையின் புகைப்படங்கள் இடம்பெறவில்லை. மீட்பரின் (மெஸ்ஸையா) சித்தரிப்புகளும் அவரை உயிருடனே காட்டுகின்றன. இறுதி போஜனத்தில் (லாஸ்ட் சப்பர்) ரொட்டியைப் பகிர்ந்து கொண்டு இருப்பதாகவும் அல்லது ஏற்கெனவே உயிர்த்து எழுந்ததாகவுமே காட்டப்படுகிறது. ஆனால் வேதனையில் உள்ளதாகவோ, சிலுவையில் இறந்து கிடப்பதாகவோ காட்டப்படவில்லை.
ஸ்பெயினில் உள்ள சான் டமசோ எக்லசியாஸ்டிகல் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த அகழாய்வாளர் கேயிடனா ஜான்சனின் கருத்துப்படி, ஆதி கிறிஸ்தவர்கள் ஒரு விதமான அச்சம் மற்றும் அவமானத்தின் காரணமாக சிலுவையைப் புனித சின்னமாகப் பயன்படுத்தவில்லை.
“இயேசுவை முதலில் பின்பற்றத் தொடங்கிய யூதர்களுக்கு, சிலுவையில் அறைவது இகழ்ச்சியான ஒன்றாக இருந்தது,” என்று அவர் பிபிசியிடம் தெரிவித்தார்.
“இந்த வகையான பலியிடுதல் அருவருப்பானது மற்றும் வெட்கக்கேடானது. ஏனென்றால் இதில் கைதிகளின் உடல்கள் முழுவதுமாக நிர்வாணப்படுத்தப்பட வேண்டும். இறந்த பிறகு அவர்கள் ஒரு பெரிய புதைகுழியில் எறியப்படுவார்கள். ஆனால் அதனால் மட்டுமல்ல, இதைச் செய்கிற நபரும் ஒரு வெளிநாட்டு அரசர் என்பதாலும் அப்படிக் கருதினார்கள்,” என்கிறார்.

பட மூலாதாரம், Getty Images
“சிலுவை பெரும் மரணத்திற்கு ஒப்பானதாக இருந்தது,” என்று குறிப்பிடுகிறார் ஜான்சன். இந்த நடைமுறை, ஒரு நபரை மரக்கட்டையில் அறைந்து ரத்தம் சிந்த மணிக்கணக்கில், நாட்கணக்கில் இறக்க விடுவதை மட்டும் உள்ளடக்கவில்லை. அதற்கு முன்பாக அந்தக் கைதி சிலுவையை பலியிடப்படும் இடத்திற்குக் கட்டாயப்படுத்தி எடுத்துச் செல்ல வைக்கப்படும் செயலையும் சேர்த்தே குறிக்கிறது.
கைதிகள் தப்பிக்காமல் இருக்க அவர்கள் மரக்கட்டையில் சங்கிலியால் கட்டப்படுவார்கள்.
“அதன் கொடூரத்தன்மை காரணமாக இந்த நடைமுறை நாட்டின் எதிரிகளுக்கும் ஆபத்தான குற்றவாளிகளுக்கும் மட்டுமே வழங்கப்பட்டது. இது தண்டனையாகவும் எச்சரிக்கையாகவும் பயன்படுத்தப்பட்டது” என்று குறிப்பிடுகிறார் அவர்.
“ரோமர்களுக்கு, சிலுவையில் அறையப்பட்டவர்களைக் காட்சிப்படுத்துவது என்பது அவர்கள் வென்ற தேசத்தின் மக்களிடம் ‘கிளர்ச்சி செய்யவோ, கலகம் செய்யவோ அல்லது பேரரசை எதிர்க்கவோ வேண்டாம் என்பதைத் தெரிவிக்கும் வழியாக இருந்தது,” என்றும் ஜான்சன் விவரிக்கிறார்.
வரலாற்றாசிரியர் ப்ளுடார்ச், கிறிஸ்து பிறப்பதற்கு முந்தைய முதலாம் நூற்றாண்டில் ஸ்பார்ட்டகஸ் தலைமையிலான அடிமைகளின் கிளர்ச்சியை ஒடுக்கிய பிறகு ரோமப் படைகள், ரோம் நோக்கிச் செல்லும் அப்பியன் பாதையில் சுமார் 6,000 கைதிகளை சிலுவையில் அறைந்தார்கள் என்கிறார் ப்ளூ டார்ச்.
ஆனால் இத்தகைய கொடூரமான பலியிடுதல் முறை ரோமர்களின் கண்டுபிடிப்பு கிடையாது. அசீரியா மற்றும் பெர்ஷிய கலாசாரங்களில் இருந்து பெறப்பட்டு மேம்படுத்தப்பட்டது.
கிறிஸ்தவத்தின் முதல் சின்னம்

பட மூலாதாரம், Getty Images
கிறிஸ்தவத்தின் முதல் சின்னம் என்பது ஒரு மீனின் நிழற்படம்தான். அதிலும் குறிப்பாக இரு குறுக்கு வில் கொண்டவைதான். கத்தோலிக்க தேவாலயத்தின் இரு பாதிரியார்களான புனித அகஸ்டினின் ஹிப்போ மற்றும் டெர்டுல்லியானின் எழுத்துகளில் இது பிரதிபலிக்கிறது.
ஏன் இந்த உயிரினம்?
இந்தக் கேள்விக்கான பதிலை ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழக புனித கிராஸ் கல்லூரியின் தேவாலய வரலாற்றுக்கான கௌரவப் பேராசிரியர் டியார்மெய்ட் மேக்கொல்லோச் விளக்கினார். “பண்டைய கிரேக்கத்தில் ‘மீன்’ என்பது இச்திஸ் (ichthys) என்று எழுதப்பட்டுள்ளது. இது இயேசு கிறிஸ்து, கடவுளின் பிள்ளை, மீட்பர் என்பதற்குச் சுருக்கப் பெயராகவும் இருந்துள்ளது,” என்று அவர் பிபிசியிடம் தெரிவித்தார்.
லண்டன் கிங்ஸ் கல்லூரியில் கிறிஸ்தவத்தின் தோற்றம் குறித்த கௌரவப் பேராசிரியர் ஜோன் டெய்லர், இந்தச் சின்னம், இயேசுவின் போதனைகளுடன் அதற்குள்ள தொடர்புக்காகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளது என்கிறார்.
“மீன் என்பது மீனவர்கள் மீதான அவருடைய விருப்பத்தைக் காட்டுகிறது (அவரின் பெரும்பாலான சீடர்கள் மீனவர்களாக இருந்தனர்). அதோடு கலிலீயில் நடந்த ஊழியத்தில் அவர் மீனை வைத்துச் செய்து காட்டிய அற்புதங்களையும் குறிக்கிறது,” என்று தெரிவித்தார்.

பட மூலாதாரம், Getty Images
மார்க் மற்றும் மேத்யூவின் உபதேசங்கள்படி, “என்னைத் தொடர்ந்து வாருங்கள், நான் உங்களை மனிதர்களின் போதகர்களாக ஆக்குவேன்,” என்று இயேசு தனது சீடர்களிடம் கூறியுள்ளார்.
அதே போல், “இறுதி போஜனம் பற்றிய தொடக்க கால மேற்கத்திய படைப்புகளில் எல்லாம், தற்போது உள்ளது போல மேஜையில் ஆட்டுக்குட்டி இல்லாமல் பொதுவாக இரண்டு மீன்களே இருந்தன,” என்பதையும் நினைவுகூர்கிறார் ஜான்சன்.
எனினும் சான் டமசோ எக்லசியாஸ்டிகல் பல்கலைக்கழக பேராசிரியர் கிறிஸ்தவர்களின் முடிவை விளக்கும் பிற கூறுகளை வழங்கியுள்ளார்.
“மீன் என்பது கடலுடன் தொடர்புடைய, குறிப்பாக மத்திய தரைக் கடலுடன் தொடர்புடைய மக்களுக்கு மிகவும் பழமையான சின்னம். அது வாழ்க்கையின் சுழற்சிகள் மற்றும் செழுமையைக் குறிக்கும் சின்னமாக இருந்துள்ளது,” என்று குறிப்பிடுகிறார்.
புனித அகஸ்டினின் ஹிப்போ தனது எழுத்துகளில் ஏன் முதல் கிறிஸ்தவர்களால் இந்த உயிரினம் தேர்வு செய்யப்பட்டது என்பதைச் சிறப்பாக விளக்கியுள்ளார். இயேசுவை பின்பற்றுபவர்கள் தண்ணீரில் இருக்கும் மீன்களைப் போல வெட்ட வெளிச்சத்தில் மறைந்திருக்கும் உண்மையைத் தேடுபவர்கள் என்று குறிப்பிடுகிறார்.
“நம் இயேசு கிறிஸ்துவை போலவே, நாமும் தண்ணீரில் (ஞானஸ்தானத்தைக் குறிப்பிடுகிறது) பிறந்த சிறு மீன்கள்,” என்று எழுதியுள்ளார் டெர்டுல்லியான்.
சிலுவை மீதான பார்வையில் நிகழ்ந்த மாற்றம்

பட மூலாதாரம், Getty Images
நான்காம் நூற்றாண்டில் கான்ஸ்டன்டைன் பேரரசர் (280-337) கிறித்தவர்கள் மீதான துன்புறுத்தல்களை முடிவுக்குக் கொண்டு வந்து அவர்களின் நம்பிக்கையைச் சட்டப்பூர்வமாக ஆக்கியதற்கு மட்டும் பொறுப்பானவர் அல்ல, சிலுவையை இந்த மதத்தின் சின்னமாக ஆக்கியதற்கும் அவரே பொறுப்பு.
“கான்ஸ்டன்டைன் அவருடைய எதிரியான மேக்சன்தியஸுடன் சண்டையித்ட தயாரான போது ரோமுக்கு வெளியே மில்வியன் பாலத்தில், அவர் வானத்தில் ஒரு சிலுவையைப் பார்த்தார். அதோடு ‘இந்தச் சின்னத்துடன் நீ வெல்வாய்,” என்கிற குரலையும் அவர் கேட்டதாகச் சொல்லப்படுகிறது” என்கிறார் டெய்லர்.
மேலும் அவர், “அதன் பின்னர் பேரரசர் அவருடைய படை வீரர்களின் கேடயங்களில் சிலுவையை வரைய உத்தரவிட்டு யுத்தத்தையும் வென்றார். அப்போதிருந்து அவர் அதை ராணுவ ரீதியாகவும், அவருடைய நாணயங்களில் தனிப்பட்ட சின்னமாகவும் பயன்படுத்தினார். அதோடு அனைத்து தேவாலயங்களின் உச்சியிலும் அதை நிறுவ உத்தரவிட்டார்,” என்று குறிப்பிடுகிறார்.
எனினும் அந்தச் சின்னம் என்பது இன்று நாம் பார்க்கும் சிலுவை இல்லை. ஜி (Ji – எக்ஸ்(X) எனக் குறிப்பிடப்பட்டுள்ளது) மற்றும் ர்ரோ (Rro – பி(P) எனக் குறிப்பிடப்பட்டுள்ளது) என்கிற இரண்டு ரோம எழுத்துகளின் கலவையாக இருந்துள்ளது. கிறிஸ்டோஸ் என்கிற கிரேக்க வார்த்தையின் முதல் எழுத்துகளும் இவைதான்.
பேரரசின் தலையீட்டிற்கு முன்பே கிறிஸ்தவர்களால் ஏற்கெனவே சிலுவை அவர்களுடைய சின்னங்களின் ஓர் அங்கமாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தது என்று மேக்கொல்லோச் மற்றும் ஜான்சன் கூறுகின்றனர்.

பட மூலாதாரம், Getty Images
“இரண்டாம் நூற்றாண்டில் புனித ஜஸ்டின் மார்டிர் போன்ற தேவாலய பாதிரியார்கள் சிலுவையை மறுவிளக்கம் செய்யத் தொடங்கினர். ஆதியாகமத்தின்படி (Book of genesis) இதில் உள்ள நான்கு திசைகள், முக்கியமான புள்ளிகளையும் ஏதெனில் இருந்து பாயும் நான்கு நதிகளையும் குறிப்பிடுவதால் இது கடவுள் பிரபஞ்சத்தைப் படைத்ததைக் குறிப்பிடுவதாக வாதிடுன்றனர்” என்கிறார் ஜான்சன்.
“மூன்றாம் நூற்றாண்டில் கிறிஸ்தவத்திற்கு மாறிய ரோமானியரான மினுசியஸ் ஃபெலிக்ஸ், தங்களால் விசாரிக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட ஒருவரை வழிபடுவதற்காக கிறிஸ்தவர்களை பித்துப் பிடித்தவர்கள் என ரோமானியர்கள் எண்ணியதாகப் பதிவு செய்கிறார்.”
இந்தக் கருத்தை அமெரிக்காவில் உள்ள ஹோலி கிராஸ் கல்லூரியின் மத விவகாரங்களுக்கான பேராசிரியர் ஜோஅன் பியர்ஸ் உறுதிப்படுத்துகிறார். இதற்குச் சான்றாக ரோமில் உள்ள பலட்டின் மலையில் உள்ள ஒரு சுவற்றில் காணப்படும் அலெக்சாமெனோஸ் என்கிற சுவரோவியத்தைக் காட்டுகிறார். அதில் கழுதைத் தலை கொண்ட சிலுவையில் அறையப்பட்ட உருவம் ஒன்றைக் காண முடியும்.
“அந்தக் காலக்கட்டத்தில் ரோமப் பேரரசில் கிறிஸ்தவ மதம் தடை செய்யப்பட்டு இருந்தது. சிலர் அதை முட்டாள்களின் மதம் என விமர்சித்து சிறுமைப்படுத்த முயன்றனர்,” என்று 2020ஆம் ஆண்டு தி கான்வர்சேஷன் இதழில் வெளியான கட்டுரையில் எழுதியுள்ளார்.
“ஆனால் கிறிஸ்தவர்களுக்கு சிலுவை ஆழ்ந்த அர்த்தம் கொண்டிருந்தது. சிலுவையில் அவரது மரணத்துடன் கிறிஸ்து தன்னுடைய இலக்கை முடித்துவிட்டார். மூன்று நாட்கள் கழித்து அவருடைய உயிர்த்தெழுதல் என்பது பாவம் மற்றும் இறப்பின் மீதான அவருடைய வெற்றியைக் குறிக்கிறது,” என்கிறார்.
ஜெருசலேமில் இயேசு இறந்த சிலுவையைக் கண்டுபிடிக்கும் பணியை கான்ஸ்டன்டைன் பேரரசர், தனது தாய் ஹெலினாவிடம் வழங்கினார். அது தற்போது ஹோலி செபூல்ச்சர் (Holy Sepulchre) தேவாலயம் இருக்கின்ற இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்படும் செய்தியும் இந்தச் சின்னம் மீண்டும் மதிப்பு பெறுவதில் பங்களித்துள்ளது.
பாதிரியார் அல்லது மன்னர் தோற்றத்தில் இயேசு

பட மூலாதாரம், Getty Images
கடந்த 337ஆம் ஆண்டில் சிலுவையில் அறைவது ஒரு விதமான மரண தண்டனை வடிவமாக இருப்பதை பேரரசர் தடை செய்தது, மதத் தலைவர்கள் இந்தப் பழைய பலியிடும் ஆயுதத்தை மறுவிளக்கம் செய்ய உதவியது.
எனினும், இந்தச் சின்னத்தை ஏற்றுக் கொள்வதற்குக் காலம் பிடித்தது என்கிறார் ஸ்பானிய அகழ்வாராய்ச்சியாளரான கேயிடனா ஜான்சன். முதல் சிலுவைகள் “மென்மையாகவும், பொக்கிஷமான கற்களால் அலங்கரிக்கப்பட்டும் எந்த விதமான ரத்தக் கூறுகளும் இல்லாமல் இருந்தன.”
மேலும் அவர், “ஆறாம் நூற்றாண்டில் இருந்துதான், சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவின் புகைப்படங்கள் வரத் தொடங்கின. ஆனால் அவை அமைதியாகவும், காயங்கள் மற்றும் ரத்தம் இல்லாமலும் இருந்தன. மேலும் அவர் ஒரு பாதிரியார் போலவோ அல்லது ஒரு மன்னர் போலவோ உடையணிந்திருந்தார்” என்கிறார்.
“போர்கள், கொள்ளை நோய்கள் மற்றும் மதப் பிரச்னைகள் நிறைந்திருந்த இடைக்காலத்தில் ப்ரொடஸ்டண்ட் சீர்திருத்தம் மற்றும் எதிர் சீர்திருத்தத்தால்தான் கிறிஸ்துவின் புகைப்படம் ஸ்பானிய ஊர்வலங்களில் காணப்படுவதைப் போலக் கடுமையாகவும் குரூரமாகவும் மாறியுள்ளது.”
ஜெருசலேமில் நடந்த நிகழ்வுகளுக்குப் பிறகு இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்டுகள் கழித்து, சிலுவை என்பது நாசரேத்தை சேர்ந்த தச்சரை சிலுவையில் அறைந்ததன் மூலம் உருவான மதத்தின் மறுக்க முடியாத அடையாளமாக மாறியது.
– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
SOURCE : THE HINDU