SOURCE :- BBC NEWS

பட மூலாதாரம், Getty Images
உங்கள் மூளையின் ஆரோக்கியம் முதல் அகால மரணம் வரை, உங்கள் உடலுக்குள் என்ன நடக்கிறது என்பது பற்றிய தகவல்களை நீங்கள் ஒவ்வொரு செயலுக்கும் எதிர்வினையாற்ற எடுத்துக் கொள்ளும் நேரமே வெளிப்படுத்தக் கூடும்.
நமது வாழ்நாளில், வயது ஏறஏற, எதிர்வினையாற்றும் வேகமும் படிப்படியாகக் குறையும். 30 வயதுக்கு மேல் தடகள செயல்திறன் குறைவதற்கு இதுவும் ஒரு காரணம்.
நமது வாழ்நாளின் கடைசி காலகட்டத்தில் கூட சராசரி எதிர்வினையாற்றும் வேகத்தைப் பராமரிக்க முடிவது, நமது மூளை இன்னும் நல்ல நிலையில் உள்ளது என்பதற்கான முக்கிய குறியீடாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். ஆனால் அவை வெளிப்படுத்துவது இதை மட்டுமல்ல. உங்கள் இதயத்தின் ஆரோக்கியம் முதல் அகால மரணம் ஏற்படும் அபாயம் வரை, உங்களின் எதிர்வினையாற்றும் நேரம் உங்கள் உடல் உள்ளுறுப்புகளின் செயல்பாடுகளை அறிவதற்கான வாய்ப்பைத் தரும்.
“வயதாவதன் உண்மையான விளைவுகள் தொடங்குவதற்கு முன்பு கூட சிலர் மற்றவர்களை விட இந்த விஷயத்தில் வேகமாக இருக்கிறார்கள்,” என்று ஸ்காட்லாந்தில் உள்ள எடின்பர்க் பல்கலைக்கழகத்தின் மூளை மற்றும் அறிவாற்றல் தொடர்பான பேராசிரியர் சைமன் காக்ஸ் கூறுகிறார்.
“ஆனால் எதிர்வினையாற்றும் நேரம் குறைவது, வயது தொடர்பான உடலின் மாற்றங்களைக் குறிக்கிறது. இது பல உயிரியல் அமைப்புகளின் ஒருங்கிணைந்த செயல்பாட்டைப் பற்றி நமக்கு நிறைய சொல்லும் ஒரு குறிப்பு ஆகும்.”
ஆனால் உங்கள் வீட்டில் இருந்து கொண்டே உங்கள் எதிர்வினையாற்றும் நேரத்தை எவ்வாறு மதிப்பிடுவது?
ரூலர் டிராப் டெஸ்ட்
ஒரு எளிதான மதிப்பீடு “ரூலர் டிராப் டெஸ்ட்” என்று அழைக்கப்படும் நன்கு அறியப்பட்ட பரிசோதனையாகும். இதற்கு உங்களுக்கு ஒரு குடும்ப உறுப்பினர் அல்லது நண்பரின் உதவியும், 30 செமீ அளவுகோல் ஒன்றின் உதவியும் தேவைப்படும்:
• ஒரு மேஜைக்கு அருகே பக்கவாட்டில் நாற்காலியைப் போட்டு அமர்ந்து கொள்ளுங்கள். அடுத்து ஒரு கையை மட்டும் மேசையில் வைக்க வேண்டும். விரல்களில் இருந்து மணிக்கட்டு வரை மட்டும் மேஜையைத் தாண்டி வெளியே இருக்கும்படி பார்த்துக் கொள்ளவும். உங்கள் கட்டை விரல் மற்றும் ஆள்காட்டி விரல்களைத் திருப்பி ஏதாவது ஒரு பொருளைப் பிடிக்க வசதியாக இருப்பது போல திருப்பி வைத்துக் கொள்ளவும்.
• உங்கள் உடனிருக்கும் நண்பரிடம் ஒரு அளவுகோலை செங்குத்தாக, உங்கள் கைக்கு மேலே, எண்கள் தொடங்கும் இடத்தில், அதாவது ‘0’ ஆரம்பிக்கும் இடம் உங்கள் கட்டை விரலுக்கு நேராக இருக்க வேண்டும்.
• உங்களுக்கு எச்சரிக்கை அளிக்காமல், உங்கள் நண்பர் அந்த அளவுகோலைக் கீழே விட வேண்டும். அதை முடிந்தவரை விரைவாகப் பிடிக்க நீங்கள் முயற்சிக்க வேண்டும்.
• பிடிபடுவதற்கு முன் அளவுகோல் விழுந்திருக்கும் தூரம் உங்கள் எதிர்வினையாற்றும் நேரத்தின் மதிப்பீடாகும்.

பட மூலாதாரம், Getty Images
சிறந்த செயல்திறன்
ஒரு சிறந்த செயல்திறன் என்பது அளவுகோலை 7.5 செ.மீ க்கும் முன்னதாக பிடிக்க வேண்டும், சராசரியை விட அதிக செயல் திறன் என்பது 7.5-15.9 செ.மீ, சராசரி செயல் திறன் 15.9-20.4 செ.மீ ஆகம். அதுவே, 20.4 செ.மீ க்கும் அதிகமாக இருந்தால் நீங்கள் சராசரியை விடவும் குறைவான செயல்திறன் கொண்டவர். 28 செ.மீ யையும் தாண்டிப் பிடித்தால் உங்கள் செயல்திறன் மோசமாக இருக்கிறது என்று பொருள்.

பட மூலாதாரம், Getty Images
இருப்பினும், காக்ஸின் கூற்றுப்படி, ஒரே ஒரு எதிர்வினையாற்றும் நேர அளவீடு மட்டுமே அதிக தகவல்களை வெளிப்படுத்தி விடாது. ஏனெனில் எதிர்வினையாற்றும் வேகம் என்பது, பாலினம் முதல் மரபியல், உடல் தகுதி, வாழ்க்கை முறை பழக்கவழக்கங்கள் மற்றும் ஆளுமை வகை வரையிலான பல்வேறு காரணிகளால் ஒருவருக்கு ஒருவர் கணிசமாக மாறுபடும். காலப்போக்கில் ஒரே சோதனையில் உங்கள் செயல்திறனை ஒப்பிட்டுப் பார்த்தால் உங்கள் எதிர்வினையாற்றும் வேகம் எவ்வாறு மாறுபட்டுள்ளது என்பதும், அது குறிப்பிடத்தக்க அளவில் குறையத் தொடங்குகிறதா என்பதும் மட்டுமே மிக முக்கியமானதாக இருக்கும் என்று காக்ஸ் குறிப்பிடுகிறார்.
காக்ஸ் சுட்டிக்காட்டியுள்ளபடி, எதிர்வினையாற்றும் திறன் என்பது, ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட புலன் அமைப்புகளின் வலையமைப்பைச் சார்ந்துள்ளது: ஒரு விஷயத்தை நாம் எவ்வளவு நன்றாகப் பார்க்கிறோம், கேட்கிறோம் அல்லது முகர்ந்து பார்க்கிறோம், நமது கண்கள் அல்லது காதுகளில் இருந்து பெறும் தகவலை மூளை எவ்வளவு விரைவாகப் புரிந்து கொள்கிறது மற்றும் பதிலுக்கு ஒரு சமிக்ஞையை வெளியிடுகிறது, அடுத்தபடியாக நமது நரம்பு இழைகள், தசைகள் மற்றும் தசைநாண்கள் மூளை என்ன செய்யச் சொல்கிறதோ, அதை எவ்வளவு விரைவாகச் செயல்படுத்த முடியும் என்ற எல்லா விஷயங்களையும் பொறுத்து அமைந்துள்ளது.
“ஒருவருக்கு வயதானால் இந்த அனைத்துப் பகுதிகளும் பாதிக்கப்படலாம். அதேநேரம் இது எல்லா மக்களிடமும் ஒரே அளவில் இருக்க வேண்டிய அவசியமில்லை” என்று காக்ஸ் கூறுகிறார்.

பட மூலாதாரம், Getty Images
ஆய்வாளர்களின் பரிந்துரை
ரூலர் டிராப் சோதனைக்கான எதிர்வினைக்கு இரண்டு கூறுகள் உள்ளன – அளவுகோல் கீழே விடப்பட்டதா என்பதை விரைவாக மதிப்பிடும் திறன் மற்றும் அதைப் பிடிக்க மூளையின் அறிவுறுத்தல்களின்படி உடல் செயல்படும் வேகம்.
இந்த வலையமைப்பின் முதல் கூறாக உடைவது, மத்திம வயதுக்கு மேல் நம் மூளையின் சமிக்ஞைகளில் செயல்படும் நமது உடல் திறன் குறையத் தொடங்குவதுதான் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். எனவே, அளவுகோல் விடுவிக்கப்பட்டிருப்பதை நமது மூளை மில்லி விநாடிகளுக்குள் கவனிக்கக்கூடும் – ஆனால் உடலுக்கு அதைப் பிடிக்க இன்னும் சற்று நேரம் கூடுதலாக எடுக்கும்.
தலையை இட வலமாக திருப்பிக் கொண்டே நடப்பது அல்லது ஒரு காலை ஊன்றி சமநிலைப்படுத்திக் கொள்ள முயற்சிக்கும் போதே எழுத்துகளை உச்சரிப்பது போன்ற ஒரே நேரத்தில் இரண்டு வேலைகள் செய்வதை பெயின் பரிந்துரைக்கிறார்.
கொலராடோ போல்டர் பல்கலைக் கழகத்தில், உயிரி மருத்துவப் பேராசிரியர் அலா அகமது, நமக்கு வயதாகும் போது, நமது எதிர்வினையாற்றும் நேரம் நமது மூளையை விட நமது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தைப் பெரிதும் சார்ந்திருக்கலாம் என்று கண்டறிந்துள்ளார். நமது உடல் திறனை விரைவாகச் செயல்படுத்துவதற்குத் தேவையான, வேகமாக இழுக்கும் தசை நார்கள் போன்ற விஷயங்கள் குறைந்துவிட்டதாலோ அல்லது ஆற்றலை உருவாக்கும் நமது செல்களுக்குள் உள்ள கூறுகளான மைட்டோகாண்ட்ரியா – குறைவாக வேலை செய்வதாலோ, நாம் விரைவாக நகர்வதில் குறைவான செயல்திறன் கொண்டவர்களாக இருப்பதாலோ இருக்கலாம் என்று அவர் கூறுகிறார்.

பட மூலாதாரம், Getty Images
“வேகமாக நகர்வது வயதானவர்களுக்கு மிகவும் கடினமானது என்பதால் அவர்கள் வேகமாக எதிர்வினையாற்றுவதை அதிகம் நம்பியிருக்கிறார்கள்” என்று அகமது கூறுகிறார்.
அதே நேரத்தில், நாம் ஒப்பீட்டளவில் நன்றாக இருந்தால், நமது மூளை மற்றும் மைய நரம்பு மண்டலம் நமது கடைசி ஆண்டுகளில் இன்னும் வலுவாக செயல்பட முடியும். இங்கிலாந்தில் உள்ள லாபரோ பல்கலைக் கழகத்தின் உயிரியக்கவியல் பேராசிரியரான மேத்யூ பெயினின் கூற்றுப்படி, உரத்த ஒலிக்கு எதிர்வினையாக ஆரோக்கியமான வயதான பெரியவர்களின் கணுக்காலில் உள்ள “திடுக்கிடும் அனிச்சையை” அளவிடுவதன் மூலம் விஞ்ஞானிகள் இதை மதிப்பிட்டுள்ளனர். அவர்களின் மூளை, ஒலிக்கு பதிலளிக்கும் விதமாக, கணுக்காலுக்கு “நகர்வு” சமிக்ஞையை அனுப்பும் திறனை ஒப்பீட்டளவில் அப்படியே வைத்திருக்கிறது என்பதை முடிவுகள் காட்டுகின்றன.
“வயதான [மக்களில்] ஆரோக்கிய நபர்களுக்கு, மூல நரம்பு மண்டல வன்பொருள் அவ்வளவு மோசமாக இல்லை,” என்று பெயின் கூறுகிறார். “ஒலிம்பிக் ஓட்டப் போட்டிகளில் சத்தம் கொடுத்தவுடன் மிக வேகமாக நகர்ந்தால் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள். அப்படி தகுதி நீக்கம் செய்யப்படும் அளவுக்கு, திடுக்கிடும் அனிச்சையை அடிப்படையாகக் கொண்டு, அவர்கள் விரைவாக செயல்பட முடியும். இருப்பினும், அவர்களால் மிக விரைவாக இடையூறுகளில் இருந்து வெளியேற முடியாது.”

பட மூலாதாரம், Getty Images
ரூலர் சோதனை தவிர, எதிர்வினையாற்றும் நேரத்தை எளிய கணினி விளையாட்டுகள் மூலமும் மதிப்பிடலாம். எடுத்துக்காட்டாக, சிவப்புப் பெட்டி பச்சை நிறமாக மாறுவதற்காகக் காத்திருந்து, பின்னர் அதை விரைவாகக் கிளிக் செய்வதை உள்ளடக்கிய மனித பெஞ்ச்மார்க் ரியாக்ஷன் டைம் டெஸ்ட். காலப்போக்கில் செயல்திறனில் ஏற்படும் கூர்மையான சரிவுகள், உணர்வு அமைப்புகள் செயலிழந்து போவதையும், மூளையின் முடிவெடுப்பதில் ஏற்படும் மந்தநிலையையும் பிரதிபலிக்கும்.
கடந்த ஆண்டு நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், வடிவங்களைப் பார்ப்பதிலும் அவற்றுக்கு பதிலளிப்பதிலும் பார்வை உணர்திறன் இழப்பு டிமென்ஷியாவின் ஆரம்ப அறிகுறிகளில் ஒன்றாக இருக்கலாம் என்றும், இது டிமென்ஷியா அறிகுறிகள் தொடங்குவதற்கு பத்தாண்டுகள் முன்பே தொடங்கிவிடுகிறது என்றும் கண்டறியப்பட்டது.
“வயதாகும் போது, மூளையின் வெள்ளைப் பொருளில் உள்ள நரம்பு இழைகள், சமிக்ஞைகளை குறைவான திறனுடன் தொடர்பு கொள்ளத் தொடங்கலாம், இதன் விளைவாக தகவல் செயலாக்கம் பெறுவது தாமதமாகிறது,” என்கிறார் காக்ஸ்.
“வினைபுரிய முடிவு எடுக்கப்பட்டவுடன், உங்கள் மூளையை உங்கள் தசைகளுடன் இணைக்கும் நரம்புகளும் அந்தச் செய்தியை விரைவாக அனுப்ப நல்ல நிலையில் இருக்க வேண்டும், அவற்றுக்கும் வயதாகின்றன.” என்று அவர் கூறுகிறார்.
உங்கள் எதிர்வினையாற்றும் திறனை மேம்படுத்துதல்
ஆனால் இந்த சரிவு ஏற்படுவதை தாமதப்படுத்த அல்லது தடுக்க நாம் அனைவரும் செய்யக்கூடிய விஷயங்கள் உள்ளன. பெயின் இரட்டைப் பணி பயிற்சி என்று அழைக்கப்படுவதை பரிந்துரைக்கிறார். இது மூளை மற்றும் உடல் இரண்டையும் சரிசெய்ய ஒரே நேரத்தில் இயக்கம் மற்றும் அறிவாற்றல் பயிற்சி நடவடிக்கைகளை உள்ளடக்கியது.
உதாரணத்துக்கு தலையை இடவலமாகத் திருப்பிக் கொண்டு நடப்பது, ஒரு காலில் சமநிலைப்படுத்தி நிற்க முயற்சிக்கும் போதே எழுத்துக்களை வாசிப்பது, அல்லது தொடர்புடைய வார்த்தைகளை வாய்மொழியாக இணைத்துப் பார்க்கும் போது பந்தை வீசுவது ஆகியவை அடங்கும்.
டி.வி. திரை அல்லது டேப்லெட் வழியாக உடற்பயிற்சி வகுப்புகளில் பங்கேற்பது கூட உங்கள் எதிர்வினை நேரங்களுக்கு உதவும். “இது [ஒரு தூண்டுதலை] உணர்ந்து அர்த்தமுள்ள ஒருங்கிணைந்த இயக்கங்களுடன் பதிலளிக்கும் திறனை மேம்படுத்துகிறது,” என்று பெயின் கூறுகிறார்.
வயதாவதுடன் தொடர்புடைய பல செயல்பாடுகள், அதாவது வாழ்க்கையின் பிற்காலத்திலும் ஒரு விளையாட்டைத் தொடர்ந்து விளையாடுவது, ஓய்வு காலத்தில் ஒரு இசைக்கருவியைக் கற்றுக்கொள்வது அல்லது பலகை விளையாட்டுகள் போன்ற அறிவுசார் செயல்பாடுகளில் ஈடுபடுவது போன்றவை நமது எதிர்வினையாற்றும் திறனை மேம்படுத்துவதில் சிறந்த பலன்களைத் தரும் என்று காக்ஸ் கூறுகிறார்.
“பொதுவாக சமூக-அறிவுசார் செயல்களில் அதிகமாக ஈடுபடுவது, சிக்கலான சிந்தனைகள் தொடர்பான அம்சங்கள் அறிவாற்றல் குறையாமல் வயதாவதோடு தொடர்புடையது என்பதற்கு சில சான்றுகள் உள்ளன.” என்கிறார் அவர்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
SOURCE : BBC