SOURCE :- BBC NEWS

K2-18b புறக்கோளில் உயிர்கள் இருக்கலாம் என்று தெரிய வந்தது எப்படி? நிக்கு மதுசூதன் பிபிசி தமிழுக்கு பேட்டி

பூமியை விட இரண்டரை மடங்கு பெரியதும், பூமியிலிருந்து 700 டிரில்லியன் மைல்கள் (சுமார் 1,127 லட்சம் கோடி கி.மீ. ) தொலைவில் அமைந்துள்ளதுமான இந்தப் புறக்கோள்தான் இன்று உலகளவில் பேசுபொருளாக இருக்கிறது. இந்தப் புறக்கோளில் உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் 99.7% இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

அதுவே, இந்தப் புறக்கோள் (சூரியக் குடும்பத்திற்கு வெளியே உள்ள கோள்) குறித்து இன்று அதிகம் பேசப்படுவதற்குக் காரணம். இந்தப் புறக்கோளில் உயிர்கள் இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருதும் அளவுக்கு அப்படி என்ன கிடைத்தது? இந்தப் புறக்கோளில் என்ன இருக்கிறது?

இதுகுறித்த ஆய்வை மேற்கொண்ட குழுவை வழிநடத்தியவரும் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் வான் இயற்பியல் மற்றும் புறக்கோள் அறிவியல் விஞ்ஞானியுமான பேராசிரியர் நிக்கு மதுசூதன், தனது கண்டுபிடிப்புகள் குறித்து பிபிசி தமிழிடம் பகிர்ந்துகொண்டார். அவரது நேர்காணல் இங்கே.

பேரண்டத்தில் உயிர்களின் இருப்பு

K2-18b புறக்கோளில் உயிர்கள் இருக்கலாம் என்று தெரிய வந்தது எப்படி? நிக்கு மதுசூதன் பிபிசி தமிழுக்கு பேட்டி

பட மூலாதாரம், Getty Images

கேள்வி: விண்வெளி அறிவியல் மீதும் குறிப்பாக பூமியைத் தாண்டி வாழும் உயிர்களுக்கான தேடல் மீதும் உங்களுக்கு எப்படி ஆர்வம் வந்தது? உங்கள் இளம் வயதில் இதன் மீது ஆர்வம் ஏற்படக் காரணமாக இருந்தது எது?

பதில்: குறிப்பாக விண்வெளி அறிவியல் என்றில்லை. ஆனால், அடிப்படை அறிவியல் மீது மிகவும் ஆர்வமாக இருந்தேன். அணு இயற்பியல், துகள் இயற்பியல் அல்லது நுண் இயற்பியல், வான் இயற்பியல் அனைத்தின் மீதும் ஆர்வம் கொண்டிருந்தேன். ஆகவே, இவற்றில் புதிய துறைகள் உருவாக வாய்ப்புள்ளவற்றை பகுப்பாய்வு செய்து கொண்டிருந்தேன்.

அப்படி தேடிக் கொண்டிருக்கும் போது, வான் இயற்பியலில் கருந்துளை பற்றிக்கூட ஆய்வு செய்துள்ளேன். உயர் ஆற்றல் வான் இயற்பியலில் ஆய்வு செய்யத் தொடங்கியிருந்தபோது புறக்கோள்கள் மீதான ஆர்வம் அதிகரித்தது. அப்படித்தான் இந்தத் துறைக்கு மாறினேன்.

கேள்வி: உங்கள் அறிவியல் ஆய்வுப் பயணத்தில், வேற்றுக்கிரகங்களில் உயிர்கள் இருக்கலாம் என்பது பற்றிய பார்வை எப்படி மாறியுள்ளது? அது உண்மையில் இருக்கலாம் என்று எப்போதுமே நம்பினீர்களா?

பதில்: தரவுகளின்படி பார்த்தால், ஆயிரக்கணக்கான புறக்கோள்கள் இருப்பது நமக்குத் தெரியும். பிற நட்சத்திரங்களைச் சுற்றியும் கோள்கள் உள்ளன. இந்த எண்ணிக்கையை வைத்துப் பார்த்தாலும், அதில் எங்காவது உயிர்கள் இருக்கலாம் என்று கணிப்பது மிக எளிது. அதற்கான ஆதாரம் நம்மிடம் இல்லை.

முப்பது ஆண்டுகளுக்கு முன்பு, சூரிய மண்டலத்திற்கு வெளியே கோள்கள் இருப்பது பற்றி நமக்குத் தெரியாது. சூரிய மண்டலம் தனித்துவமானது என்று மக்கள் கருதினர். வேறு கோள்கள் இல்லை என நினைத்தனர். ஆனால், இப்போது பெரும்பாலான நட்சத்திரங்களைச் சுற்றி கோள்கள் இருக்கலாம் என்று நமக்குத் தெரியும்.

K2-18b புறக்கோளில் உயிர்கள் இருக்கலாம் என்று தெரிய வந்தது எப்படி? நிக்கு மதுசூதன் பிபிசி தமிழுக்கு பேட்டி

பட மூலாதாரம், Getty Images

இந்த எண்ணிக்கையை வைத்தே, அதில் எங்காவது உயிர் இருக்கலாம் என யூகிக்கலாம். இன்னும் அதற்கான ஆதாரம் நம்மிடம் இல்லை. ஆனால், இந்தத் துறையில் இதுவரை நான் செய்த ஆய்வுகள், அவதானித்த தரவுகள் அந்த ஊகத்திற்கு வலு சேர்க்கின்றன.

அதுமட்டுமின்றி, நம்மிடம் அதைக் கண்டறிய உதவும் தொழில்நுட்பங்களும் இருக்கின்றன. அது மிக முக்கியமான விஷயம். ஒருவேளை பிரபஞ்சத்தில் வேறு எங்காவது உயிர்கள் இருக்கலாம். ஆனால், அதைக் கண்டறியும் தொழில்நுட்பம் இல்லையென்றால், அப்படி யூகிப்பதில் எந்த அடிப்படையும் இல்லை. அதற்கு எந்த ஆதாரமும் இருக்காது.

இப்போது கிடைத்துள்ள ஆய்வு முடிவு முக்கியமானது. இது மிகப்பெரிய தருணம். மனித வரலாற்றில் முதன்முறையாக, ஒரு குறிப்பிட்ட கோளில் உயிர் இருக்கிறதா, இல்லையா என்பதைக் கண்டறிய உதவும் திறன் நம்மிடம் இருக்கிறது. அதன் உதவியுடன் ஒரு கோளை ஆய்வு செய்து, உயிர் இருப்பதற்கான சில குறிப்புகளைக் கண்டறிந்துள்ளோம்.

இத்தகைய ஆய்வை இன்னும் அதிகமாக புறக்கோள்களில் செய்வதன் மூலம், பூமியைத் தாண்டி உயிர்கள் இருப்பதற்கான ஆதாரத்தைக் கண்டுபிடிக்கலாம். அது இரு ஆண்டுகள், பத்து ஆண்டுகள் அல்லது இருபது ஆண்டுகளில் என எதிர்காலத்தில் எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம். ஆனால், அந்தச் சூழல் நமக்கு முன்பு இருக்கவில்லை. அதை ஒரு குறிப்பிடத்தக்க மாற்றமாகவே நான் பார்க்கிறேன்.

K2-18b புறக்கோளில் உயிர்கள் வாழும் அறிகுறி தெரிந்தது எப்படி?

K2-18b புறக்கோளில் உயிர்கள் இருக்கலாம் என்று தெரிய வந்தது எப்படி? நிக்கு மதுசூதன் பிபிசி தமிழுக்கு பேட்டி

பட மூலாதாரம், NASA

கேள்வி: K2-18b புறக்கோளுக்கு வருவோம். பூமியைத் தாண்டி உயிர்கள் இருப்பதை உறுதி செய்ய இந்தக் குறிப்பிட்ட புறக்கோள் உதவும் என்பதில் எவ்வளவு நம்பிக்கையுடன் இருக்கிறீர்கள்?

பதில்: அறிவியல் கோணத்தில், கண்டிப்பாக ஆதாரங்கள் வேண்டும். ஆகவே, இப்போது அதை மிக உறுதியாகக் கூற முடியாது. இப்போதுள்ள தரவுகளும், நாங்கள் ஏற்கெனவே வெளியிட்ட கடந்த பல ஆண்டு கால ஆய்வில் கிடைத்த அனைத்து தரவுகளும், எங்களுக்கு அளிக்கும் விளக்கம், இந்தப் புறக்கோளில் உயிர்கள் இருக்கலாம் என்பதே. உயிர் வாழ ஏதுவான பெருங்கடலும், அதில் உயிர்களும் இருக்கலாம் என்பதே.

இப்போதைக்கு அதுதான் சரியான விளக்கமாக உள்ளது. ஆனால், நாம் திறந்த மனதுடன் இருக்க வேண்டும். இது உறுதியல்ல, ஆரம்பக்கட்ட ஆய்வுகள்தான். மேலதிக ஆய்வுகள் உண்மை அப்படியல்ல எனவும் கூறலாம். ஆனால், சாத்தியக்கூறுகள் அதிகம் இருப்பதாகவே நான் நினைக்கிறேன். அது உண்மையா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

கேள்வி: K2-18b புறக்கோளில் உயிர்கள் இருப்பதை உறுதிப்படுத்துவதற்குத் தேவையான (99.99994%) ஆதாரங்களை திரட்ட என்ன திட்டம் வைத்துள்ளீர்கள்? பூமியைத் தாண்டி உயிர்கள் உள்ளனவா என்பதைக் கண்டுபிடிக்கும் பயணத்தில் நாம் இன்னும் எவ்வளவு தொலைவில் இருக்கிறோம்?

பதில்: நமக்கு இப்போது கிடைத்துள்ள தரவுகளே இதுவரை கிடைக்காத ஒன்றுதான். துகள் இயற்பியலில் ஹிக்ஸ் போசானை இதற்கு உதாரணமாகக் கூறலாம். பெரிய பெரிய கண்டுபிடிப்புகள், மிகவும் நுண்ணிய அளவில் கண்டறியப்படுவதன் ஊடாகவே தொடங்குகின்றன. இயற்பியலின் பல பிரிவுகளிலும் இதே கதைதான். இங்கு அப்படித்தான் நடக்கிறது.

இப்போதுள்ள தொழில்நுட்பங்களின் வாயிலாக சிறு ஆதாரம் கிடைத்துள்ளது. அது மேலும் அதிகமாக ஆய்வு செய்யத் தூண்டுகிறது. ஆகவே கூடுதலாக கவனம் செலுத்துகிறோம். இப்படியாக முழு திறனையும் பயன்படுத்தும்போது, காலப்போக்கில் சிக்மா ஃபைவ் (99.99994%) அளவுக்கான ஆதாரம் கிடைக்கும்.

ஆரம்பத்தில் நாங்கள் டைமெதைல் சல்ஃபைடு இருக்கும் என எதிர்பார்க்கவில்லை. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு கேட்டிருந்தால், இன்னும் கூடுதல் நேரம் வேண்டுமென்று சொல்லியிருப்போம். ஆனால், 2023இல் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியில் இந்தப் புறக்கோளை 1-5 மைக்ரான் என்ற அளவில் கண்காணித்த சிறிது நேரத்திலேயே, முதல் முறையாக கரிம மூலக்கூறுகள் அடங்கிய வேதிமங்களைப் பார்த்தோம். இது ஆச்சர்யமாக இருந்தது.

ஆனால், அந்தக் கோளின் வளிமண்டலத்தில் அவை அதிகமாக இருப்பதுவே அவற்றை எளிதாக நாங்கள் கண்டறியக் காரணம். அதோடு, மிகவும் சிறிய அளவில் டைமெதைல் சல்ஃபைட் இருப்பதற்கான தரவுகள் கிடைத்தன. அது மிகச் சிறிய சிக்னலாக இருந்தது. அது குறிப்பிடத்தக்க கண்டுபிடிப்பு இல்லையென்றாலும், எங்களை மேற்கொண்டு ஆய்வு செய்யத் தூண்டுவதற்கு போதுமானதாக இருந்தது.

பிறகு நாங்கள் மீண்டும் ஆய்வு செய்தோம். இந்த முறை 5-10 மைக்ரான் என்ற அளவில் வைத்து புறக்கோளை அவதானித்தோம். அதன் மூலம் சிக்மா த்ரீ(Sigma Three) அளவுக்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. ஒரு கோளை தொலைநோக்கியில் ஆராயும்போது, அதில் உயிர் இருப்பதற்கான அடையாளம் தென்படுமென்று நான் கனவில்கூட நினைத்துப் பார்த்தது இல்லை.

ஆகவே, நாம் ஏற்கெனவே கணிசமான ஆதாரங்களைப் பார்க்கிறோம் என்பதால் இதுவே முக்கியமான முன்னேற்றம்தான். இதோடு, இனி வரும் நாட்களில் இந்தத் தரவுகளை மேலும் வலுவாக உறுதி செய்ய முடிகிறதா என்பதைத் தெரிந்துகொள்ள இரண்டு அல்லது மூன்று அவதானிப்புகளை மேற்கொள்வோம். அதற்கு வெகு காலம் எடுக்காது, ஒரு சில ஆண்டுகளில் தெரிந்துவிடும்.

மீத்தேன் வாயுவுக்கும் உயிர் இருப்புக்குமான தொடர்பு

K2-18b புறக்கோளில் உயிர்கள் இருக்கலாம் என்று தெரிய வந்தது எப்படி? நிக்கு மதுசூதன் பிபிசி தமிழுக்கு பேட்டி

பட மூலாதாரம், Cambridge University

கேள்வி: K2-18b கோளில் டைமெதைல் சல்ஃபைட், டைமெதைல் டைசல்ஃபைட் அபரிமிதமாகக் காணப்படுகிறது. நீங்களும் உங்கள் ஆய்வுக் கட்டுரையில், வருங்காலத்தில் இதை மீத்தேன் அதிகமுள்ள வளிமண்டல மாதிரிகளின் மூலம் பரிசோதனைகளைச் செய்து பார்க்கவுள்ளதாகக் கூறியுள்ளீர்கள். உயிர்கள் இல்லையென்றால் மீத்தேன் உற்பத்தி தொடர்ச்சியாக இருக்க வாய்ப்பில்லை என்பது நமக்குத் தெரியும். இதன் அடிப்படையில் பார்க்கும்போது, 99.99994% நிச்சயமாக உயிர்கள் இருக்க வாய்ப்புள்ளது என்ற யூகத்திற்கு வர முடியுமா?

பதில்: இதுவொரு சுவாரஸ்யமான கருத்து. நிச்சயமாக மீத்தேன் உற்பத்தி உயிர்களின் இருப்புடன் பூமியில் தொடர்புபடுத்தப்படுகிறது. இந்தக் கோளிலும்கூட அங்கு வாழக்கூடிய உயிர்கள் மீத்தேன் உற்பத்திக்குக் காரணமாக இருக்கலாம். மீத்தேன் இருப்பு என்பது நிச்சயமாக சிக்மா 5 அளவுகோலை எட்டுவதற்கான ஆதாரம்தான். அதில் சந்தேகமே கிடையாது. இருந்தாலும், நாங்கள் அதை இன்னும் வலுவாக உறுதி செய்துகொள்ள முயல்கிறோம்.

நாம் எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும். ஏனெனில், இந்தப் புறக்கோளுடைய வளிமண்டலத்தின் பெரும்பகுதி, பூமியில் இருப்பதைப் போன்ற நைட்ரஜன் மிகுதியுடைய ஒன்றல்ல. மாறாக, அது ஹைட்ரஜன் மிகுதியாகக் கொண்ட வளிமண்டலம். அவ்வளவு ஹைட்ரஜன் இருக்கும்போது, உயிர்களே இல்லாமல் வேறு காரணிகளின் மூலமாகவும் கூட மீத்தேன் உற்பத்தி செய்யப்பட வாய்ப்பு இருக்கலாம்.

ஆகவே, அத்தகைய உயிர்களற்ற காரணியால் உற்பத்தியான மீத்தேனை, உயிர்கள் இருப்பதற்கான சான்றாகக் கருதிவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறோம். இதன் காரணமாகவே, உயிர்கள் இருந்தால் நிச்சயமாக மீத்தேன் உற்பத்தி இருக்கும் என்றாலும், மீத்தேன் இருப்பதாலேயே இந்தக் குறிப்பிட்ட புறக்கோளில் உயிர்கள் இருக்கலாம் என்று சொல்லிவிட முடியாது.

ஆனால், இந்தக் கோளில் கண்டறியப்பட்ட டி.எம்.எஸ்-இன் (டைமெதைல் சல்ஃபைட்) இருப்பு அதிலிருந்து வேறுபட்டது. அதிக அளவில் வளிமண்டலத்தில் அது காணப்படுவது, உயிர்கள் இல்லாமல் சாத்தியமில்லை. இருந்தாலும், திறந்த மனதுடன் வேறு காரணங்களும் இருக்கக்கூடுமா என்பதை ஆய்வு செய்து வருகிறோம்.

K2-18b புறக்கோளில் உயிர்கள் இருக்கலாம் என்று தெரிய வந்தது எப்படி? நிக்கு மதுசூதன் பிபிசி தமிழுக்கு பேட்டி

பட மூலாதாரம், NASA

கேள்வி: டைமெதைல் சல்ஃபைடோ அல்லது டைமெதைல் டைசல்ஃபைடோ நேரடி மீத்தேன் அல்ல. மாறுபட்ட வடிவத்தில் நடக்கக்கூடிய மீத்தேன் உற்பத்திதானே! அதோடு, ஹைட்ரஜன் மிகுதியாகக் கொண்ட வளிமண்டலம் என்பதால், உயிர்களற்ற வேறு காரணங்களால்கூட இந்த வேதிமங்கள் உற்பத்தி ஆகியிருக்கலாம் அல்லவா?

பதில்: ஆம். இந்த வேதிமங்களை உயிர்களற்ற சூழலில் குறைந்த அளவில் உற்பத்தி செய்ய முடியும் என்பதை ஆய்வுகள் நிரூபித்துள்ளன. ஆனால், இந்தப் புறக்கோளில் இவற்றின் அளவு அதீதமாக உள்ளது. அங்கு இந்த வேதிமங்கள் பூமியில் இருப்பதைவிட ஆயிரம் மடங்கு அதிகமாக உள்ளது. இவ்வளவு பெரிய உற்பத்தி உயிர்கள் இல்லாமல் நடக்க வாய்ப்பில்லை என்பதுதான் விஷயம். கோட்பாட்டு ஆய்வுகள், இந்த அளவுக்கு இவை இருக்க வேண்டுமெனில், அதற்கு குறைந்தபட்சம் 20% உற்பத்தியேனும் உயிர்களிடம் இருந்து வர வேண்டும் எனக் கூறுகின்றன.

அதனால்தான், இதைச் சரியான பாதையாகக் கருதுகிறோம். இருந்தாலும், நமக்குத் தெரியாத விஷயங்களும் இருக்கின்றன. எனவே வேறு புதிய சாத்தியங்களும் இருக்கலாம் என்ற கோணத்திலும் இதை ஆராய வேண்டியுள்ளது.

கேள்வி: நீங்கள் வேறு ஏதேனும் புறக்கோள்களை ஆராய்ந்து கொண்டிருக்கிறீர்களா? இதேபோன்ற பிற ஹைஷன் கோள்களின் வளிமண்டலங்களுடன் இதன் தரவுகளை ஒப்பிடுவது இந்த வாயுக்களின் உயிரியல் மற்றும் உயிரியல் அல்லாத உற்பத்திக் காரணிகளை வேறுபடுத்திப் பார்க்க உதவுமா?

பதில்: நிச்சயமாக உதவும். வேறு சில கோள்களிலும் அத்தகைய ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறோம். அதில் சிலவற்றின் தரவுகள் கைவசம் உள்ளன. அவற்றையும் ஆராய்ந்து கொண்டிருக்கிறோம். ஆனால், இன்னும் வெளியிடப்படவில்லை என்பதால் அவை குறித்து விரிவாகப் பேச இயலாது.

கேள்வி: ஒருவேளை, K2-18b புறக்கோளில் உயிர்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டால், அந்த உயிர்கள் பூமியில் உள்ள உயிர்களை ஒத்த அடிப்படையைக் கொண்டிருக்க வாய்ப்புள்ளதா அல்லது முற்றிலும் மாறுபட்ட ஒன்றாக இருக்குமா?

பதில்: அங்கு என்ன மாதிரியான உயிர்கள் இருக்கலாம் என்பது குறித்து நம்மால் உறுதியாகச் சொல்ல முடியாது. ஆனால், பூமியில் வாழக்கூடிய எளிய, நுண்ணிய உயிர்கள் இந்த வேதிமங்களை உற்பத்தி செய்வதால், அதேபோன்ற நுண்ணுயிர்களே இந்தப் பெருங்கடல்சூழ் புறக்கோளிலும் இருக்கக்கூடும் என்று நாம் யூகிக்கலாம்.

ஆனால், அதைத் தாண்டி எப்படியான உயிர்கள் இருக்கலாம் என்பதைக் கணிப்பது சாத்தியமில்லாதது. இப்போதைக்கு அதில் எந்தக் கருத்தையும் நம்மால் கூற முடியாது.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

SOURCE : THE HINDU