SOURCE :- BBC NEWS

பட மூலாதாரம், Getty Images
புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
போப் பிரான்சிஸ் திங்கள் கிழமை வாடிகனில் உள்ள இல்லத்தில் உயிரிழந்தார். அவருக்கு வயது 88.
அவர் காலமானதை வாடிகன் உறுதிப்படுத்தியுள்ளது. ஆயிரக்கணக்கான மக்களுக்கு ஈஸ்டர் வாழ்த்து தெரிவிக்க செயிண்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் தோன்றிய ஒரு நாளுக்குப் பிறகு அவரது மரணம் நிகழ்ந்துள்ளது.
“அன்பான சகோதர சகோதரிகளே, நமது புனித தந்தை பிரான்சிஸின் மரணத்தை ஆழ்ந்த துக்கத்துடன் அறிவிக்கிறேன்” என கார்டினல் ஃபாரெல் தெரிவித்தார்.
”இன்று காலை 7:35 மணிக்கு (உள்ளூர் நேரம்), ரோமின் பிஷப் பிரான்சிஸ் தந்தையிடம் திரும்பினார். அவரது முழு வாழ்க்கையும் கர்த்தருக்கும் அவருடைய திருச்சபைக்கும் சேவை செய்வதற்காக அர்ப்பணிக்கப்பட்டது”
”நற்செய்தியின் விழுமியங்களை விசுவாசத்துடனும், தைரியத்துடனும், உலகளாவிய அன்புடனும் நமக்குக் கற்றுக் கொடுத்தார். குறிப்பாக ஏழைகளுக்கு மிகவும் ஆதரவாக வாழ அவர் நமக்கு கற்பித்தார்” எனவும் அவர் கூறியுள்ளார்.
போப் பிரான்சிஸ் கடந்த பிப்ரவரி மாதத்தில் பைலேட்டரல் நிமோனியாவால் பாதிக்கப்பட்டிருந்த அவர், ரோம் நகரில் உள்ள ஜெமெலி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
பைலேட்டரல் நிமோனியா என்பது என்ன? அது யாருக்கெல்லாம் வரும்? அதன் அறிகுறிகள், சிகிச்சைகள் என்ன? என்பது குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
நிமோனியா என்றால் என்ன?
நிமோனியா என்பது நுரையீரல்களின் காற்றுப்பைகளில் அழற்சி ஏற்படுத்தும் ஒரு தொற்று. இந்த பைகளில் திரவம் நிரம்பி, சளியுடன் இருமல், காய்ச்சல், நடுக்கம், உடல் வலி, குழப்பம், மூச்சு விடுவதில் சிரமம் போன்ற அறிகுறிகள் தோன்றலாம்.
பாக்டீரியா, வைரஸ் மற்றும் பூஞ்சை போன்ற நுண்ணுயிர்கள் நிமோனியாவை உண்டாக்கலாம்.
நிமோனியாவை ஏற்படுத்தும் நுண்ணுயிர்கள், இருமல், தும்மலில் வெளியேறும் நீர்த்துளிகள் மூலமோ, கிருமிகளால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தொட்டுவிட்டு வாய், மூக்கு அல்லது கண்களை தொடும் போதும் பரவக்கூடும்.
பைலேட்டரல் எனும் சொல், இரண்டு நுரையீரல்களிலும் தொற்று இருப்பதை குறிக்கிறது. இரு நுரையீரல்களிலும் இருக்கிறது என்பதற்காக அதன் தீவிரம் அதிகமாகி விடுவதில்லை என சிட்னி தொழில்நுட்ப பல்கலைக்கழக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குளோபல் பர்டன் ஆஃப் டிசீஸஸ் ஆய்வின் தரவுகளின்படி 2021-ஆம் ஆண்டில் உலக அளவில் 34.4 கோடி பேருக்கு நிமோனியா பாதிப்பு ஏற்பட்டதுடன், ஐந்து வயதுக்குட்பட குழந்தைகள் மத்தியில் 502,000 உயிரிழப்பு உட்பட 21 லட்சம் மரணங்கள் ஏற்பட்டன.

பட மூலாதாரம், Getty Images
நிமோனியா எப்படி கண்டறியப்படுகிறது, யாருக்கு வருவதற்கு அதிக வாய்ப்பு?
பரிசோதனைக்குப் பிறகு நிமோனியா இருப்பதாக ஒரு மருத்துவர் சந்தேகித்தால், தொற்றை உறுதி செய்வதற்கும் அதை ஏற்படுத்தும் உயிரியை அடையாளம் காண்பதற்கு இரத்தப் பரிசோதனை மேற்கொள்ள பரிந்துரைக்கலாம். இருப்பினும் இது எப்போதும் சாத்தியமானதல்ல என அமெரிக்காவின் முன்னணி சுகாதார அமைப்பான மேயோ கிளினிக் விளக்குகிறது.
தொற்றின் இடத்தை அறிய எக்ஸ்ரேவும், தொற்றின் மூலத்தை அறிய சளி சோதனை அல்லது நுரையீரலில் ஒற்றியெடுத்த பஞ்சை பரிசோதிப்பதும் பரிந்துரைக்கப்படுகிறது.
நுரையீரல்கள் ரத்தத்திற்கு போதிய ஆக்ஸிஜன் வழங்குவதை நிமோனியா தடுக்கக் கூடும் என்பதால் ஆக்ஸிமீட்டரை பயன்படுத்தி ரத்தத்தில் ஆக்சிஜன் அளவும் அவ்வப்போது கணக்கிடப்படுகிறது.
நிமோனியா யாருக்கு வேண்டுமானாலும் தீவிர பாதிப்பை ஏற்படுத்தலாம் என்றாலும் போப் போன்ற வயதானவர்களுக்கு அபாயம் அதிகம்.

பட மூலாதாரம், Getty Images
65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், 2 வயதுக்குட்பட்டவர்களுக்கும் அபாயம் அதிகம் என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள்.
முந்தைய தொற்றுகளில் இருந்து நுரையீரல் பாதிப்பு, எம்பிஸிமா, நெடுங்கால சுவாச அடைப்பு நோய் போன்ற நுரையீரல் நோய்கள், புகைப்பிடித்தல், மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவு ஆகியவை வயதைத் தவிர பிற அபாய காரணிகளாகும்.
போப் பிரான்சிஸை பொருத்தவரை, அவருடைய வயதைத் தவிர பிற அபாய காரணிகளும் உள்ளன. அவருக்கு நீண்ட காலமாகவே சுவாசக் கோளாறுகள் உண்டு. இளம் வயதில் நுரையீரலில் ஏற்படும் ப்ளூரிசி எனும் அழற்சியால் அவர் பாதிக்கப்பட்டிருந்தார்.
அதன் விளைவாக அவரது ஒரு நுரையீரலின் ஒரு பகுதி நீக்கப்பட்டதால் அவருக்கு தொற்றால் பாதிப்புகள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.
முதலில், பிப்ரவரி14ஆம் தேதி பிரான்கைடிஸ் எனப்படும் மூச்சுக்குழாய் அழற்சிக்கான பரிசோதனைக்கும் சிகிச்சைக்காகவும் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு பல நாட்களாக அறிகுறிகள் இருந்ததுடன், சமீபத்திய நிகழ்வுகளில் அவரது உரைகளை வாசிக்க வேறு அதிகாரிகளை நியமித்திருந்தார்.
பிரான்கைட்டிஸ் என்பது நுரையீரல் முழுவதும் காற்றை கொண்டு செல்லும் மூச்சு குழாயில் ஏற்படும் அழற்சி அல்லது வீக்கமாகும்.

பட மூலாதாரம், Getty Images
நிமோனியாவுக்கு எப்படி சிகிச்சை அளிக்கப்படுகிறது?
பாக்டீரியா தொற்றுகளை போக்க ஆன்டிபயாடிக்கையும், வைரஸ் தொற்றுகளை போக்க ஆண்டி வைரல்களையும் பயன்படுத்தி நிமோனியாவுக்கு சிகிச்சை அளிக்கலாம்.
தொற்று பல பாக்டீரியாக்களால் ஏற்பட்டால் நோயாளிக்கு பிராட் ஸ்பெக்ட்ரம் ஆன்டிபயாடிக் கொடுக்கலாம்.
ஆனால் வைரஸால் ஏற்படும் நிமோனியாவுக்கு சிகிச்சையளிப்பது கூடுதல் சவாலானது. காரணாம் வைரஸிற்கு எதிரான மருந்துகள் அதிக பலனளிப்பதில்லை என்பதுடன் குறிப்பிட்ட வைரஸை எதிர்கொள்பவையாகவும் இல்லை.
மருத்துவமனைகளில் நிமோனியாவுடன் சேர்க்கப்படும் நோயாளிகளுக்கு பெரும்பாலும் ஆக்சிஜனும், நீர்மங்களும் அளிக்கப்படுகின்றன.
நுரையீரல்களில் சேரும் நீர்மங்களை அகற்ற, குறிப்பாக அதிகம் நகர முடியாத நோயாளிகளுக்கு பிசியோதெரபி எனப்படும் உடலியக்க மருத்துவமும் உதவக்கூடும்.
போப்பின் முதல் கட்ட மூச்சுத் தொற்று ‘பாலிமைக்ரோபியல்’, அதாவது பல நோய்க்கிருமிகள் ஒன்றாக சேர்ந்து உருவான தொற்று என வாடிகன் முன்பு குறிப்பிட்டிருந்தது.
அதன் விளைவாக அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை மேலும் சிக்கலானதாகவும் இருக்கிறது. அவருக்கு நுண்ணுயிரெதிர்ப்பிகளும், அழற்சியை குறைக்கும் கார்டிகோஸ்டீராய்டு மருந்துகளும் அளிக்கப்படுகின்றன.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
SOURCE : THE HINDU