SOURCE :- BBC NEWS

பட மூலாதாரம், Muthukrishnan
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காசம்பட்டி வீரகோவில் வனப்பகுதியை பல்லுயிர் பாரம்பரிய தலமாக (Biodiversity heritage site) தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
அரிட்டாபட்டியை தொடர்ந்து தமிழ்நாட்டின் இரண்டாவது பல்லுயிர் பாரம்பரிய தலமாக காசம்பட்டி பார்க்கப்படுகிறது. முன்னதாக, அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து காசம்பட்டி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
பல்லுயிர் பாரம்பரிய தலமாக அறிவிக்கும் அளவுக்கு காசம்பட்டியில் என்ன உள்ளது? அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தது ஏன்?
காசம்பட்டி – ஓர் அறிமுகம்
திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து சுமார் 45 கி.மீ தொலைவில் நத்தம் தாலுகாவில் ரெட்டியபட்டி ஊராட்சி அமைந்துள்ளது. இந்த ஊராட்சிக்கு உட்பட்டு காசம்பட்டி (வீரகோவில்) கிராமம் உள்ளது.
திண்டுக்கல் மாவட்ட எல்லையில் அழகர் மலை வனச்சரக காப்புக் காடுகளுக்கு (Reserve forest) அருகில் இப்பகுதி உள்ளது. சுமார் 2 ஆயிரம் பேர் வசிக்கும் இக்கிராமத்தில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது.
மாம்பழ விளைச்சலுக்குப் பெயர் சொல்லும் இடமாக காசம்பட்டி உள்ளது. இதுதவிர, சிறு தானியங்கள், தக்காளி, கரும்பு, கத்தரி ஆகியவற்றை மக்கள் பயிரிட்டு வாழ்ந்து வருகின்றனர்.
காசம்பட்டி கிராம மக்கள், தங்களின் முக்கிய தெய்வமாக வீரணனை வழிபடுகின்றனர். அதனால் இப்பகுதி வீர கோவில் என அழைக்கப்படுகிறது.

பட மூலாதாரம், supriyasahuias/X
பல்லுயிர் பாரம்பரிய தலமாக அறிவித்த அரசு
கடந்த மார்ச் 27-ஆம் ஆண்டு காசம்பட்டி, வீரகோவில் வனப்பகுதியை பல்லுயிர் பாரம்பரிய தலமாக தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை அறிவித்தது.
2022 ஆம் ஆண்டு பல்லுயிர் பாரம்பரிய தலமாக மதுரை மாவட்டத்தில் உள்ள அரிட்டாபட்டி அறிவிக்கப்பட்டது. இரண்டாவது பல்லுயிர் பாரம்பரிய தலமாக காசம்பட்டியை அறிவிக்கப்பட்டிருப்பதாக தமிழ்நாடு அரசின் வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை செயலர் சுப்ரியா சாஹு தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
‘உயிரியல் பன்முகத்தன்மை சட்டம் 2002’-ன்படி (Biological Diversity Act) வீரகோவில் வனப்பகுதியை பல்லுயிர் பாரம்பரிய தலமாக அறிவிப்பதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் அனுமதி அளித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இது தொடர்பான அறிவிப்பு அரசிதழில் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
காசம்பட்டியின் சிறப்பு என்ன?
இப்பகுதியின் சிறப்புகளை தனது எக்ஸ் பக்கத்தில் பட்டியலிட்டுள்ள சுப்ரியா சாஹு, ‘4.97 ஹெக்டேர் பரப்பளவில் உள்ள வனப்பகுதி, வீரணனை கடவுளாக வழிபடும் மக்களால் பாதுகாக்கப்படுகிறது. மத ரீதியான முக்கியத்துவத்துக்கு அப்பால் சுற்றுச்சூழல் சமநிலையை பராமரிக்கும் சுற்றுச்சூழல் பாலமாக இந்த வனப்பகுதி உள்ளது’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
பல்லுயிர் பாரம்பரிய பன்முகத் தன்மையின் முக்கிய இடமாக இது உள்ளதாகக் கூறியுள்ள சுப்ரியா சாஹு, 48 தாவர இனங்கள், 22 புதர்கள், 21 கொடிகள் மற்றும் 29 மூலிகைகள், 12க்கும் மேற்பட்ட பறவை இனங்கள், பாலூட்டி இனங்கள், ஊர்வன என எண்ணற்ற பூச்சி இனங்கள் உள்ளன” எனத் தெரிவித்துள்ளார்.
வனப்பகுதியின் மரபணு பன்முகத்தன்மை, சுற்றுச்சூழல் முக்கியத்துவம், எதிர்கால தலைமுறையினருக்கான கலாசார பாதுகாப்பு ஆகியவற்றை அரசின் அறிவிப்பு உறுதி செய்வதாகவும் சுப்ரியா சாஹு கூறியுள்ளார்.

பட மூலாதாரம், supriyasahuias/x
சூழல் ஆர்வலர்கள் சொல்வது என்ன?
“இதன் மூலம் காசம்பட்டி கிராமத்தின் பாதுகாப்பு அதிகரிக்கும். சுற்றுச்சூழலை பாதிக்கும் எந்தவிதமான திட்டங்களையும் அங்கே கொண்டு வர முடியாது” எனக் கூறுகிறார் ‘பூவுலகின் நண்பர்கள்’ அமைப்பைச் சேர்ந்த பொறியாளர் கோ சுந்தர்ராஜன்.
“வரும் காலங்களில் காசம்பட்டி வீரகோவில் பகுதிக்கென தனிப் பாதுகாப்பும் நிதி உதவியும் கிடைக்கும்” எனவும் பிபிசி தமிழிடம் அவர் குறிப்பிட்டார்.
அரிட்டாபட்டியும் காசம்பட்டியும் ஒவ்வொரு விதத்தில் தனித்தன்மை வாய்ந்ததாக உள்ளது. அரிட்டாபட்டியில் தொன்மம் நிறைந்துள்ளது, காசம்பட்டியில் பல்லுயிர்ப் பெருக்கம் அதிகமாக உள்ளது என கூறுகிறார் சுந்தர்ராஜன்.
திண்டுக்கல் சிறுமலை முதல் அழகர் மலை வரை உள்ள காடுகளைப் பாதுகாத்து அரசு ஆவணப்படுத்த வேண்டும் என வலியுறுத்துகிறார், எழுத்தாளரும் ‘பசுமை நடை’ அமைப்பைச் சேர்ந்தவருமான அ.முத்துகிருஷ்ணன். இந்தப் பகுதியில் அரிதான பல உயிரினங்கள் காணப்படுகின்றன என அவர் கூறுகிறார் .
பிபிசி தமிழிடம் பேசிய அவர், “பல்லுயிர் பாரம்பரிய தலமாக அறிவிக்கப்பட்டுவிட்டதால், வீரகோவிலைச் சுற்றியுள்ள கிராம மக்களின் வழிபாட்டு உரிமைகளில் பாதிப்பு ஏற்பட்டுவிடக் கூடாது” எனவும் அவர் குறிப்பிட்டார்.

பட மூலாதாரம், supriyasahuias/x
கிராம மக்களின் அச்சம்
இதையே வலியுறுத்தி, ‘காசம்பட்டியை பல்லுயிர் பாரம்பரிய தலமாக அறிவிக்கக் கூடாது’ என்ற கோரிக்கையுடன் கடந்த மார்ச் 11 ஆம் தேதி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் சரவணனிடம் காசம்பட்டி கிராம மக்கள் மனு அளித்தனர்.
வீரகோவில் வனப்பகுதியில் உள்ள வீரணன் என்ற கிராமக் கடவுளை இப்பகுதி மக்கள் நீண்டகாலமாக வழிபட்டு வருகின்றனர். ‘பாரம்பரிய பல்லுயிர் தலமாக அறிவிக்கப்பட்டுவிட்டால் தங்களின் வழிபாட்டுக்கு இடையூறு ஏற்படும்’ என மனுவில் கூறியிருந்தனர்.

பட மூலாதாரம், https://dindigul.nic.in/
“ஆண்களுக்கு மட்டுமே அனுமதி”
இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய ஆட்சியர் சுரேந்திரன், “அரிட்டாபட்டியில் சமணர் படுக்கைகள், தமிழ் பிராமி கல்வெட்டுகள் உள்பட தொன்மம் நிறைந்துள்ளதால் அனைத்துத் தரப்பினரும் சென்று வருகின்றனர். ஆனால், காசம்பட்டியில் இக்கிராம மக்கள் மட்டுமே வீரணனைக் கும்பிடுகின்றனர்” எனக் கூறுகிறார்.
”ஆண்கள் மட்டுமே இக்கோவிலில் வழிபாடு நடத்த முடியும்” எனக் கூறும் சுரேந்திரன், பெண்கள் இந்த கோவிலுக்குச் சென்று வழிபடுவது மரபல்ல என்றார்.
மக்களின் வழிபாட்டுக்குத் தடை வராது என்று அவர்களிடம் உறுதிப்படுத்தியுள்ளோம் என்றார் அவர்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
SOURCE : THE HINDU