SOURCE :- BBC NEWS

புவி வெப்பமயமாதல், காலநிலை மாற்றம், முக்கிய செய்திகள்

பட மூலாதாரம், Getty Images

பிரிட்டனின் தெற்கு எல்லையில் உள்ள கடற்கரையில் கடலில் இருந்து கார்பனை உறிஞ்சும் திட்டம் ஒன்று செயல்படத் தொடங்கியுள்ளது.

சீக்யூர் (SeaCURE) என்று அறியப்படும் இந்தத் திட்டம் பிரிட்டிஷ் அரசு நிதி மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் தொழில்நுட்பங்களின் ஒரு பகுதியாக இது உள்ளது.

புவி வெப்பமடைதலுக்கு முக்கிய காரணியான பசுமை இல்ல வாயுக்களின் உமிழ்வைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பது முக்கியத்துவம் வாய்ந்தது என காலநிலை விஞ்ஞானிகள் மத்தியில் ஒருமித்த கருத்து உள்ளது.

ஆனால் ஏற்கனவே வெளியேறிய வாயுக்களை உறிஞ்ச வேண்டும் என்பது இந்த பிரச்னைக்கான தீர்வின் ஒரு அங்கமாக இருக்க வேண்டும் எனப் பல விஞ்ஞானிகளும் நம்புகின்றனர்.

‘கார்பன் பிடித்தல்’ என அறியப்படும் இந்தத் திட்டம், உமிழ்வுகள் ஏற்படும் இடத்திலேயே பிடிக்கப்பட வேண்டும் அல்லது காற்றிலிருந்து எடுக்கப்பட வேண்டும் என்பதில் தான் வழக்கமாக கவனம் செலுத்துகின்றன.

கடலில் இருந்து புவியை வெப்பமடையச் செய்யும் கார்பனை எடுக்க முடியுமா என்பதைப் பரிசோதிப்பது தான் சீக்யூர் திட்டத்தை சுவாரஸ்யமாக்குகிறது. ஏனென்றால் காற்றை விடவும் தண்ணீரில் தான் கார்பன் அதிக அடர்த்தியில் இருக்கும்.

புவி வெப்பமயமாதல், காலநிலை மாற்றம், முக்கிய செய்திகள்

இத்திட்டம் எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது?

இந்தத் திட்டம் செயல்படும் இடத்தின் நுழைவு வாயிலை அடைய நீங்கள் வெய்மௌத் கடலுயிர் மையத்தின் பின் செல்ல வேண்டும். அந்த வழியில் “கவனம்: மோரே மீன்கள் உங்களைக் கடிக்கலாம்” என்கிற அறிவிப்பை கடந்து செல்ல வேண்டும்.

இந்த மகத்தான திட்டத்தை இங்கு வைத்ததற்கு ஒரு காரணம் உள்ளது.

பாறைகள் நிறைந்த கடலுக்கு அடியே சென்று, இங்கிலீஷ் கால்வாய் வழியே கடல் நீரை உறிஞ்சி கரைக்குக் கொண்டு வரும் குழாய் இது.

தண்ணீரிலிருந்து கார்பனை நீக்குவதன் மூலம் வளிமண்டலத்தில் உள்ள கார்பன் டை ஆக்ஸைடை குறைப்பது செலவு குறைந்த வழியாக இருக்குமா என்பதைக் கண்டுபிடிக்க இந்தத் திட்டம் முயற்சி செய்கிறது.

சீக்யூர் திட்டத்தில் கடல்நீர் மீண்டும் கடலுக்கு அனுப்பபடுவதற்கு முன்பாக கார்பனை நீக்குவதற்கான செயல்பாடுகள் நடைபெறுகிறது. அதன் பின்னர் கடலுக்குச் செல்லும் நீர் மீண்டும் அதிக கார்பன் டை ஆக்ஸைடை உறிஞ்சுகிறது.

புவி வெப்பமயமாதல், காலநிலை மாற்றம், முக்கிய செய்திகள்

கடல் நீரின் அமிலத்தன்மையை அதிகரிப்பதன் மூலம் இது சாத்தியமாவது எப்படி?

இங்கு வரும் முதல் காட்சி ஊடக செய்தியாளர்கள் பிபிசி செய்தியாளர்கள் தான். ப்ளைமௌத் கடல் ஆய்வகத்தின் பேராசிரியர் டாம் பெல் நமக்கு இந்த இடத்தைச் சுற்றிக் காட்ட வந்துள்ளார்.

கடல்நீரை மிகவும் அமிலத்தன்மை கொண்டதாக மாற்றுவதற்கு சுத்திகரிப்பு செய்வதன் மூலம் இந்த செயல்முறை தொடங்குகிறது. இதன் மூலம் கடல்நீரில் கரைந்திருக்கும் கார்பன் மீண்டும் வாயு ஆகி கார்பன் டை ஆக்ஸைடாக வளிமண்டலத்தில் வெளியிடப்படுகிறது.

“இது கடல்நீர் ஸ்ட்ரிப்பர்” எனச் சிரிப்புடன் சொல்கிறார் பேராசிரியர் பெல்.

இந்த ‘ஸ்ட்ரிப்பர்’ அமிலத்தன்மை கொண்ட கடல் நீர் மற்றும் காற்றுடனான தொடர்பை அதிகப்படுத்தும் பெரிய துருப்பிடிக்காத ஸ்டீல் தொட்டி ஆகும்.

“பாட்டிலில் அடைக்கப்பட்ட பானத்தை நீங்கள் திறக்கும்போது நுரை வரும். அது தான் கார்பன் டை ஆக்சைட்.” என்கிறார் பெல். “நாங்கள் கடல் நீரை ஒரு பெரிய பரப்பளவில் சேகரிக்கிறோம். இது தரையில் பானத்தை ஊற்றுவது போன்றது தான். கடல் நீரிலிருந்து கார்பன் டை ஆக்சைடு விரைவாக வெளியேற உதவும்.” என்றார்

காற்றிலிருந்து வெளியேறும் கார்பன் டை ஆக்சைடு உறிஞ்சப்பட்டு கருகிய தேங்காய் நார்கள் மூலம் செறிவூட்டப்பட்டு சேமித்து வைக்கப்படுகிறது.

கடல் நீரில் இருக்கும் அமிலத்தன்மையை மட்டுப்படுத்த ரசாயனம் சேர்க்கப்பட்டு மீண்டும் கடலுக்கு செல்லும் ஓடையில் தண்ணீர் விடப்படுகிறது.

இந்த நீர் கடலுக்குச் சென்ற பிறகு மீண்டும் வளிமண்டலத்தில் உள்ள கார்பன் டை ஆக்சைடை உறிஞ்சி பசுமை இல்ல வாயுக்களைக் குறைக்க மிகச் சிறிய அளவில் பங்காற்றுகிறது.

புவி வெப்பமயமாதல், காலநிலை மாற்றம், முக்கிய செய்திகள்

நீரை பயன்படுத்துவதால் உள்ள நன்மைகள் என்ன?

ஏற்கனவே காற்றிலிருந்து நேரடியாக கார்பனை உறிஞ்சும் நிறைய வளர்ந்த ‘கார்பன் பிடித்தல்’ தொழிநுட்பங்கள் உள்ளன. ஆனால் தண்ணீரைப் பயன்படுத்துவதற்கு அதற்கே உரிய நன்மைகள் உள்ளதாகக் கூறுகிறார் சீக்யூர் திட்டத்தை வழிநடத்தும் முனைவர் பால் ஹலோரன்.

“கடல் நீரில் காற்றில் இருப்பதை விட 150 மடங்கு அதிக அளவிலான கார்பன் உள்ளது,” என்கிறார் ஹலோரன்.

“ஆனால் இதில் வேறு விதமான சவால்கள் உள்ளன. கடல் நீரில் உள்ள கார்பனைக் குறைக்க நாம் செயல்படுத்தும் திட்டத்திற்கு தேவையான பொருட்களை உற்பத்தி செய்ய அதிக ஆற்றல் தேவைப்படுகிறது.”

தற்சமயத்தில் இந்தத் திட்டம் ஒவ்வொரு ஆண்டும் 100 மெட்ரிக் டன் கார்பன் அளவு கார்பனைக் குறைக்கிறது. ஆனால் இது மிகவும் குறைவு. அட்லாண்டிக் பெருங்கடலை கடந்து வரும் ஒரு வணிக விமானம் வெளியிடுகிற கார்பன் அளவு கூட இதை விட அதிகம். ஆனால் உலகப் பெருங்கடல்களின் அளவை வைத்துப் பார்க்கையில் இதில் திறன் உள்ளது சீக்யூர் திட்டத்தினர் நம்புகின்றனர்.

உலகத்தில் உள்ள கடல்நீரில் 1% சுத்திகரிப்பு செய்யப்பட்டால் ஒவ்வொரு ஆண்டும் 14 பில்லியன் டன் கார்பன் டை ஆக்சைட் நீக்கப்படுவதற்கான திறன் உள்ளது என பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு சமர்ப்பித்துள்ள அறிக்கையில் சீக்யூர் தெரிவித்துள்ளது.

இந்தத் திட்டம் செயல்பாட்டுக்கு வர வேண்டுமென்றால், கார்பனை நீக்கும் இந்த ஒட்டுமொத்த செயல்முறையும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலம் மட்டுமே செயல்படுத்தப்பட வேண்டும். கடலில் மிதக்கும் சோலார் பேனல்களை அமைப்பதன் மூலம் இது சாத்தியப்படலாம்.

“ஜீரோ கார்பன் உமிழ்வை அடைய கார்பன் நீக்கம் என்பது அவசியமானது. மேற்கொண்டு வெப்பமடைவதைத் தடுக்க ஜீரோ உமிழ்வு என்பது தேவைப்படுகிறது.” என்கிறார் கார்பன் பிடிப்பு தொழில்நுட்ப வல்லுனரும் காலநிலை மாற்றத்திற்கான அரசுகளுக்கு இடையேயான குழுவின் உறுப்பினருமான முனைவர் ஒலிவர் ஜெடேன்.

“கடல் நீரிலிருந்து நேரடியாக உறிஞ்சுவது ஒரு வழி. காற்றிலிருந்து நேரடியாக உறிஞ்சுவது ஒரு வழி. அடிப்படையில் 15 முதல் 20 வாய்ப்புகள் வரை உள்ளன. இறுதியில் எதைப் பயன்படுத்த வேண்டும் என்கிற கேள்வி நிச்சயமாக அதன் செலவைப் பொறுத்து தான் இருக்கும்,” என்றார் அவர்.

சீக்யூர் திட்டம் அரசிடமிருந்து 3 மில்லியன் யூரோ நிதியுதவி பெற்றுள்ளது. இது பசுமை இல்ல வாயுக்களை சேகரித்து, சேமித்து வைக்கும் தொழில்நுட்பங்களை வளர்க்கும் முயற்சியில் பிரிட்டிஷ் நிதியுதவி வழங்கும் 15 திட்டங்களில் ஒன்று ஆகும்.

“ஜீரோ உமிழ்வை அடைவதற்கு வளிமண்டலத்தில் பசுமை இல்ல வாயுக்களை நீக்குவது அவசியமாகிறது,” என்கிறார் ஆற்றல் துறை அமைச்சர் கெர்ரி மெக்காரத்தி. “எக்ஸ்டர் பல்கலைக்கழகத்தில் உள்ள சீக்யூர் போன்ற புதுமையான திட்டங்கள் இதைச் செயல்படுத்த தேவையான பசுமை தொழில்நுட்பங்களை உருவாக்கி, திறன் சார்ந்து வேலைகளை ஆதரிப்பது மற்றும் வளர்ச்சியை ஊக்குவிப்பதில் முக்கியப் பங்காற்றுகிறது.” என்றார்.

புவி வெப்பமயமாதல், காலநிலை மாற்றம், முக்கிய செய்திகள்

சுற்றுச்சூழல் மீதுள்ள சில தாக்கம்

கார்பன் குறைந்த நீர் கடலில் அதிக அளவு இருக்கும் போது, அதில் வாழ்கிற உயிரினங்களின் நிலை என்னவாகும் என்கிற கேள்வியும் உள்ளது. வெய்மௌத்தில் இத்திட்டம் செயல்படுத்தப்படும் இடத்திலிருந்து கடல் நீர் ஒரு குழாய் மூலம் மிகச் சிறிய அளவிலே வெளியேறுவதால் எந்த பாதிப்பும் இருக்க சாத்தியமில்லை.

எக்ஸ்டர் பல்கலைக்கழக முனைவர் பட்ட மாணவர் கய் ஹுப்பர் இந்தத் திட்டத்தின் சாத்தியமான தாக்கங்களை ஆய்வு செய்து வருகிறார். அவர் ஆய்வக சூழலில் குறைந்த கார்பன் நீரில் கடல் உயிரினங்களை வைத்து பரிசோதித்து வருகிறார்.

“கடல் உயிரினங்கள் சில காரியங்களைச் செய்ய கார்பனைச் சார்ந்திருக்கின்றன,” என்கிறார். “ஃபைட்டோபிளாங்க்டன் ஒளிச்சேர்க்கை செய்ய கார்பனைப் பயன்படுத்துகிறது. கடற்சிப்பி போன்ற உயிரினங்கள் தனது ஓடுகளை உருவாக்க கார்பனைப் பயன்படுத்துகின்றன. கார்பன் குறைந்த நீரின் அளவை அதிகரிப்பதால் சுற்றுச்சூழலில் சில தாக்கங்கள் இருக்கும்” என ஆரம்பக்கட்ட முடிவுகள் சொல்வதாக ஹுப்பர் தெரிவிக்கிறார்.

“இதனால் பாதிப்புகள் இருக்கும் என்றாலும் கார்பன் குறைந்த நீரை நீர்த்துப் போகச் செய்வது போல அதை தவிர்ப்பதற்கான வழிகளும் இருக்கலாம். இவை தொடக்கத்திலே விவாதத்தில் சேர்க்கப்பட வேண்டும் என்பது முக்கியமாகிறது.”

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

SOURCE : THE HINDU