SOURCE :- BBC NEWS

போக்சோ வழக்கு, முக்கிய செய்திகள், சென்னை செய்திகள்

பட மூலாதாரம், Getty Images

எச்சரிக்கை: இந்த செய்தியில் இடம் பெற்றுள்ள தகவல்கள் உங்களுக்கு சங்கடத்தை அளிக்கக்கூடும்

2015-ஆம் ஆண்டில், 12 வயதில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமி ஒருவர், 10 ஆண்டுகள் கழித்து இளம்பெண்ணாக, நீதிமன்றத்தில் ஆஜராகி குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை பெற்றுக் கொடுத்துள்ளார்.

குடும்பத்திற்கு ஏற்பட்ட அவமானமாக கருதி, 10 ஆண்டுகள் சொந்த குடும்பத்தில் இருந்து, வெளியேற்றப்பட்ட அந்த பெண் இந்த ஆண்டு ஜனவரி மாதம், சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகி தனக்கு இழைக்கப்பட்ட அநீதி குறித்து நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நஷ்ட ஈட்டை வழங்க நீதிமன்றம் மாநில அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

பள்ளிப் படிப்பை பாதியிலேயே நிறுத்தப்பட்டு, சொந்த பெயரை மாற்றிக் கொண்டு, வெளியூரில் சென்று வேறொரு அடையாளத்தில் வாழ்ந்த அந்த சிறுமி, 10 ஆண்டுகள் கழித்து குற்றவாளிக்கு எதிராக நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்தது எப்படி?

10 ஆண்டுகளாக வழக்கு நிலுவையில் இருந்தது எப்படி? காவல்துறையினர் எவ்வாறு அந்த பெண்ணை தேடிக் கண்டுபிடித்தனர்? வழக்கில் நடந்தது என்ன?

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

2015-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமி ஒருவரின் தாயார் எம்.கே.பி.நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருக்கிறார். ஆனால் புகார் அளித்து வெறும் இரண்டே நாளில் அந்த சிறுமி, அவருடைய அம்மா மற்றும் அப்பெண்ணின் உடன் பிறந்தோர் இரண்டு பேரும் எங்கே சென்றார்கள் என்று காவல்துறையினருக்கு தெரியவில்லை.

10 ஆண்டுகள் கழித்து, இந்த ஆண்டு ஜனவரி முதல் வாரம், எம்.கே.பி. நகர் காவல்துறையினர் பாதுகாப்புடன் 22 வயது இளம்பெண்ணாக திரும்பி வந்த அந்த சிறுமி, தனக்கு இழைக்கப்பட்ட அநீதி தொடர்பான தகவலை முதன்முறையாக சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் பதிவு செய்தார்.

சென்னையில் 10 ஆண்டுகளுக்கு முன்பு, அவர் வசித்து வந்த வீட்டின் உரிமையாளரின் மருமகனால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதையும், அதனைத் தொடர்ந்து அவர் திண்டுக்கல்லுக்கு கடத்திச் செல்லப்பட்டு மீண்டும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதையும் அவர் நீதிமன்றத்தில் உறுதி செய்ததோடு, குற்றவாளியையும் அடையாளம் காட்டியுள்ளார்.

புகார் அளித்த சிறுமி காணாமல் போனது எப்படி?

வட சென்னையில் கூட்டுக்குடும்பமாக வசித்து வந்தார் அந்த சிறுமி. 7-ஆம் வகுப்பு மாணவியான அவர் தொடர்ச்சியாக பாலியல் சித்ரவதைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்.

2015-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 7-ஆம் தேதி அன்று அந்த சிறுமி வீட்டில் இருந்து காணாமல் போயுள்ளார். அவருடைய குடும்பத்தினர் அக்கம்பக்கத்தில் விசாரித்தும் அவர் கிடைக்கவில்லை என்பதால் அவரைக் காணவில்லை என்று எம்.கே.பி. காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இரண்டு நாட்கள் கழித்து வீடு திரும்பிய அந்த சிறுமி, திண்டுக்கலுக்கு அவர் கடத்திச் செல்லப்பட்டதாகவும், அங்கே அவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து அவரின் அம்மா, அதே காவல்நிலையத்தில் அவர் வீட்டு உரிமையாளரின் மருமகன் மீது புகார் அளித்துள்ளார். அவர் அளித்த புகார் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.

“ஆனால், அடுத்த இரண்டு நாட்களில் அந்த பெண், அவரின் உடன்பிறந்தோர், மற்றும் அம்மா அனைவரும் சென்னையில் இருந்து வெளியேறிவிட்டனர். காவல்துறையினர் தரப்பில் பல்வேறு கோணத்தில் விசாரணை நடத்தியும் அந்த சிறுமியும் அவரின் குடும்பத்தினரும் எங்கே சென்றனர் என்று யாருக்கும் தெரியவில்லை. ஆனால் அந்த பெண்ணின் தாயார் அளித்த புகார், போக்சோ வழக்காக பதிவு செய்யப்பட்டு சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தது,” என்று தெரிவிக்கிறார் தற்போது எம்.கே.பி.நகர் காவல் நிலையத்தில் பணியாற்றும் காவல்துறை அதிகாரி.

போக்சோ வழக்கு, முக்கிய செய்திகள், சென்னை செய்திகள்

பட மூலாதாரம், Getty Images

குடும்பத்தில் இருந்து விரட்டப்பட்ட சிறுமி

இந்த வழக்கில், ஆஜரான சிறப்பு அரசு வழக்கறிஞர் எஸ். அனிதா, இது குறித்து பேசும் போது, “இங்கு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும் பெண்கள் அவர்களின் குடும்பத்தால் கைவிடப்படும் போது என்ன ஆகும் என்பதற்கு இந்த வழக்கு ஒரு எடுத்துக்காட்டு.

கூட்டுக்குடும்பத்தில் வசித்த அந்த சிறுமிக்கு நடந்த குற்றத்தை வன்முறையாக அவரின் அப்பா காணவில்லை. மாறாக அவரின் குடும்பத்திற்கு ஏற்பட்ட களங்கமாக கருதினார். அதனால் சிறுமி, சிறுமியின் அம்மா, மற்றும் உடன் பிறந்தோர் ஆகியோரை சென்னையில் இருக்க வேண்டாம் என்று கூறி துரத்திவிட்டிருக்கிறார் அவருடைய அப்பா.

பெண்ணை சரியாக வளர்க்கவில்லை என்று கூறி தன்னுடைய மனைவியிடம் இருந்து முற்றிலுமாக பிரிந்துவிட்டார் அவர்.

குடும்ப உறவுகள் இந்த ஒரு நிகழ்வால் முறிந்து போனது. சொந்த அடையாளங்களை மறைத்துக் கொண்டு அந்த சிறுமியும், அம்மாவும், உடன் பிறந்தவர்களும் தென் தமிழகத்தில் இருக்கும் கிராமம் ஒன்றில் வசிக்க ஆரம்பித்தனர். மிகவும் வயதான சிறுமியின் பாட்டி தான், வேலைக்குச் சென்று அந்த நான்கு பேரையும் காப்பாற்றினார்.

பாதிக்கப்பட்ட சிறுமியின் பள்ளிப்படிப்பு, வறுமை காரணமாக பாதியிலேயே நிறுத்தப்பட்டது. அந்த சிறுமியின் தாயார் மனதளவில் வெகுவாக பாதிக்கப்பட்டிருந்தார்,” என்று கூறுகிறார்.

இந்த 10 ஆண்டுகளில் அந்த சிறுமியின் அப்பாவும் இறந்து போக, சென்னையில் உள்ள உறவினர்கள் யாரும் அவர்களிடம் பேசுவதில்லை என்று தெரிவிக்கிறார் எம்.கே.பி. காவல்நிலைய அதிகாரி.

போக்சோ வழக்கு, முக்கிய செய்திகள், சென்னை செய்திகள்

பட மூலாதாரம், Getty Images

காவல்துறையினர் அவரை கண்டுபிடித்தது எப்படி?

“அந்த சிறுமி காணாமல் போய்விட்டார் என்று கூறி இந்த வழக்கு முடித்து வைக்கப்படவில்லை. ஒவ்வொரு முறை இந்த வழக்கு விசாரணை வரும் போதும் எம்.கே.பி. காவல் துறையினர், அந்த சிறுமியை கண்டுபிடிக்க இயலவில்லை என்று கூறி வந்தனர். கடந்த ஆண்டு இறுதியில் நீதிமன்றம், காவல்துறை துணை ஆணையருக்கு ‘நோட்டீஸ்’ அனுப்பியது. இந்த சிறுமியை கட்டாயம் கண்டுபிடித்தே தீர வேண்டும் என்று காவல்துறைக்கு அழுத்தம் தந்தது நீதிமன்றம்,” என்கிறார் அனிதா.

“இது எங்களுக்கு சவாலானதாக இருந்தது. ஏன் என்றால், 10 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நகரத்தை விட்டு வெளியே சென்றவர்களை எப்படி தேடி கண்டுபிடிப்பது? புகார் அளிக்கும் போது இருந்த ஒரே ஒரு செல்போன் எண்ணை வைத்து, எங்கள் காவல்நிலைய காவலர் தன்னுடைய தேடுதல் பணியை துவங்கினார். மூன்று வார கடும் தேடுதல் பணிக்குப் பிறகு அந்த பெண்ணின் இருப்பிடம் கண்டுபிடிக்கப்பட்டது,” என்கிறார் எம்.கே.பி. காவல்நிலைய அதிகாரி.

“அவரை அவருடைய சிறிய வீட்டில் வைத்து பார்த்த போது, மிகவும் அச்சத்துடன் காணப்பட்டார் அந்த பெண். நீதிமன்றத்திற்கு வர மிகவும் தயக்கம் காட்டினார் அவர். அவரின் அச்சத்திற்கு காரணம் இருந்தது . ஆனால் அவருக்கான நியாயம் கிடைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன்.

இரண்டு நாட்கள் அந்த பெண்ணுக்கு நம்பிக்கையை அளித்தோம். அதன் பிறகு அவர் பாதுகாப்பாக போக்சோ நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார். பிறகு நீதிபதியிடம் நடந்த விபரங்களைத் தெரிவித்தார். குற்றவாளிக்கு எதிரான தன்னுடைய வாக்குமூலத்தை அவர் பதிவு செய்தார்,” என்று கூறுகிறார் அந்த அதிகாரி.

இரண்டு முறைக்கு விசாரணைக்காக அப்பெண் சென்னை அழைத்துவரப்பட்டார் அந்த இளம்பெண். கடந்த ஏப்ரல் 3-ஆம் தேதி அன்று, குற்றவாளிக்கு தண்டனையை உறுதி செய்ததோடு, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ. 15 லட்சம் நஷ்டஈட்டை அரசு வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்தது போக்சோ சிறப்பு நீதிமன்றம். தற்போது குற்றவாளி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

அரிதாகவே நடக்கும் நிகழ்வு

சென்னை உயர் நீதிமன்றத்தில் போக்சோ உள்ளிட்ட வழக்குகளுக்காக ஆஜராகும் வழக்கறிஞர் வி. அனுஷா இது குறித்து பேசும் போது, “போக்சோ வழக்குகளைப் பொறுத்தமட்டில் பாதிக்கப்பட்ட நபர் தான் தனக்கு என்ன நடந்தது என்பதை தெரிவிக்க வேண்டும். அவர் காணாமல் போய்விட்டார் என்று வழக்கை முடித்துவைக்காமல், அந்த பெண் திரும்பி வருவார் என்று நம்பிக்கையுடன் இருந்தது இந்த வழக்கில் தனித்துவமான ஒன்றாக இருக்கிறது,” என்று கூறினார்.

“12 வயதில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகிறார். 10 ஆண்டுகள் ஆகிவிட்டது என்பதற்காக அவர் நீதிக்காக போராட வேண்டாம் என்றில்லை. அவர் அந்த மனநிலையைப் பெறுவதற்கான கால அவகாசம் தேவைப்பட்டிருக்கலாம். அவரின் இந்த முடிவு மிகவும் வரவேற்கத்தக்கது,” என்று மேற்கோள்காட்டினார் அவர்.

“பாதிக்கப்பட்ட சிறுமிக்குத் தேவையான பாதுகாப்பை உறுதி செய்வது இந்த அரசாங்கத்தின் கடமை. ஏற்கனவே அந்த சிறுமி கடத்தப்பட்டு மீண்டும் வீடு திரும்பி வந்த நிலையில், காவல்துறையினர் அப்போதே எச்சரிக்கையுடன் செயல்பட்டிருந்தால், இந்த வழக்கில் இவ்வளவு தாமதமாக நீதி கிடைத்திருக்காது,” என்றார் அனுஷா.

மேற்கொண்டு பேசிய அவர், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு பாதுகாப்பு, மனநல ஆலோசனை, படிப்பை மீண்டும் தொடர்வதற்கான வாய்ப்புகள் ஆகியவற்றை உறுதி செய்ய தவறிவிட்டது மாநில அரசு என்றும் அவர் தெரிவித்தார்.

போக்சோ வழக்கு, முக்கிய செய்திகள், சென்னை செய்திகள்

பட மூலாதாரம், Getty Images

நம்பிக்கையுடன் இருங்கள்!

“இந்த குற்றச்சம்பவம் நடந்து 10 ஆண்டுகள் கடந்திருக்கலாம். இன்று உலகம் வெகுவாக மாறிவிட்டது. பெற்றோர்கள், இது போன்ற ஒரு சூழலில் குழந்தைக்கு உற்ற பாதுகாப்பாக இருக்க வேண்டும். அப்போது தான் அவர்கள் தங்களுக்கு நடந்த பாதிப்பில் இருந்து விரைவில் மீண்டு வர இயலும்.

பாதிக்கப்பட்ட உடனே புகார் அளிப்பது சிறந்தது. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தேவையான அனைத்து பாதுகாப்பு அம்சங்களையும் உறுதி செய்ய சட்டம் வழி வகை செய்கிறது.

வேகமாக விசாரணை நடத்தி, 60 நாட்களில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வது, பாதிப்பின் தன்மையை பொறுத்து மருத்துவ சிகிச்சை உள்ளிட்ட இதர செலவுகளுக்கு சிறுமிக்கு தேவையான நிதியை வழங்குவது, பெண் அதிகாரிகள் மற்றும் வழக்கறிஞர்கள் பெரும்பாலான வழக்குகளில் ஆஜர்படுத்துவது, மனநல ஆலோசனை வழங்குவது, பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பம் பாதுகாப்பற்ற சூழ்நிலை கொண்டிருந்தால் அவருக்கு காப்பகங்களில் இடம் அளிப்பது போன்றவற்றையும் போக்சோ சட்டம் உறுதி செய்கிறது.

எனவே பாதிக்கப்பட்ட சிறுமிகளோ, பெண்களோ அல்லது பெற்றோர்களோ தயக்கம் காட்டாமல் புகாரளிக்க முன்வர வேண்டும்,” என்றும் தெரிவிக்கிறார் எஸ்.அனிதா.

-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU