SOURCE :- BBC NEWS

ஜம்மு காஷ்மீர், பஹல்காம் தீவிரவாத தாக்குதல்

பட மூலாதாரம், Getty Images

23 ஏப்ரல் 2025, 06:47 GMT

புதுப்பிக்கப்பட்டது 4 நிமிடங்களுக்கு முன்னர்

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் 20க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக கூறப்பட்டாலும், குறைந்தது 28 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் சுற்றுலாப் பயணிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது பிரிவு நீக்கப்பட்ட பிறகு நடைபெற்றுள்ள மிகப்பெரிய தீவிரவாதத் தாக்குதல் இதுவாகும்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக சவுதி அரேபியாவில் இருந்த போது இந்தத் தாக்குதல் நடைபெற்றுள்ளது அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் நான்கு நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியாவில் இருக்கும் சமயத்தில் இந்தத் தாக்குதல் நடைபெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது. ஜம்மு காஷ்மீர் தீவிரவாத தாக்குதலை அடுத்து, தனது சௌதி அரேபியா பயணத்தின் நடுவில் பிரதமர் மோதி டெல்லி திரும்பிவிட்டார்.

அண்மையில், பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜெனரல் சையத் அசிம் முனீர், இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலான வேறுபாட்டை குறிப்பிட்டு, உலகின் எந்த சக்தியாலும் காஷ்மீரை பாகிஸ்தானிலிருந்து பிரிக்க முடியாது என்று கூறியிருந்ததும் இந்தத் தீவிரவாதத் தாக்குதலின் கவனம் பெறுகிறது.

பஹல்காமில் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தானில் இருந்து பல்வேறு வகையான எதிர்வினைகள் வந்து கொண்டிருக்கின்றன. இந்தியாவுக்கான பாகிஸ்தானின் முன்னாள் தூதரக அதிகாரி அப்துல் பாசித் தெரிவித்துள்ள கருத்துகளும் தற்போது முக்கியத்துவம் பெறுகின்றன.

“இந்தியாவின் எந்தவொரு சாகசத்தையும் முறியடிக்க பாகிஸ்தான் முழு அளவில் தயாராக உள்ளது என்று நான் நம்புகிறேன். இந்த முறை பாகிஸ்தானின் பதில் பொருத்தமானதாக இருக்கும் என்பதில் எனக்கு எந்தவித சந்தேகமும் இல்லை” என்று அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

தாக்குதலுக்கு பாகிஸ்தானை பொறுப்பாக்குவது சரியா?

ஜம்மு காஷ்மீர், பஹல்காம் தீவிரவாத தாக்குதல்

பட மூலாதாரம், Getty Images

பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஷெர்ரி ரெஹ்மான் தனது X வலைதள பக்கத்தில் இவ்வாறு எழுதியுள்ளார். “பஹல்காமில் நடைபெற்ற துயரமான பயங்கரவாதத் தாக்குதலை கண்டிக்கிறேன். இந்தத் தாக்குதல்களுக்கு உடனடியாக பாகிஸ்தானை நோக்கி இந்தியா விரல் நீட்டுவது ஒரு பொதுவான எதிர்வினையாகும்.”

“இந்தியா தனது தோல்விகளைத் தடுக்கத் தவறிவிட்டது. எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் மூலோபாய நிலைத்தன்மை மற்றும் பொறுப்பான ஈடுபாட்டிற்கு அழைப்பு விடுக்கும் நியாயமான கோரிக்கைகள் புறக்கணிக்கப்படுகின்றன, அவை கேலி செய்யப்படும் நிலையும் இருக்கிறது. இந்தத் தாக்குதலுக்கு எந்தவித விசாரணையும் இல்லாமல் பாகிஸ்தானை அழிக்கவேண்டும் என இந்தியாவின் வலதுசாரிகள் அழைப்பு விடுப்பார்கள்” என்று ஷெர்ரி ரெஹ்மான் தனது பதிவில் கூறியுள்ளார்.

எக்ஸ் வலைதள பயனரும் பாகிஸ்தானியருமான உமர் அசார், ஜெனரல் முனீர் பகிர்ந்த ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளார். அதில், பாகிஸ்தான் தனது காஷ்மீர் சகோதரர்களை தனித்து விட்டுவிட முடியாது என்று ஜெனரல் முனீர் தெரிவித்துள்ளார். “ஐந்து நாட்களுக்கு முன்பு, ஜெனரல் முனீர் வெறித்தனமான உரை ஒன்றை நிகழ்த்தினார். இந்திய ஆக்கிரமிப்பிற்கு எதிரான போராட்டத்தில் பாகிஸ்தான் தனது காஷ்மீர் சகோதரர்களை தனியாக விட்டுவிட முடியாது என்று அவர் அறிவித்திருந்தார். ஆரம்பத்தில் தோன்றியதைவிட, தற்போது இந்தக் கருத்து மிகவும் தவறானதாகத் தெரிகிறது. ஜெனரல் இதுபோன்ற கருத்தை வெளியிடக்கூடாது”.

உமர் அசாரின் இந்தப் பதிவை மறுபதிவு செய்த பாகிஸ்தான் பாதுகாப்பு ஆய்வாளர் ஆயிஷா சித்திக், “இந்தியாவின் காஷ்மீரில் நடந்த தாக்குதலுக்குப் பிறகு இதுபோன்ற கருத்துகள் எந்த திசையில் செல்கிறது என்பதைப் பார்க்க வேண்டும்” என்று எழுதியுள்ளார்.

ஜெனரல் முனீரின் பதிவைப் பற்றி கருத்து தெரிவித்துள்ள தி இந்து ஆங்கில செய்தித்தாளின் இராஜதந்திர விவகார ஆசிரியர் சுஹாசினி ஹைதர், “கடந்த வாரம் பாகிஸ்தான் இராணுவத் தளபதியின் உரை இப்போது அதிமுக்கியத்துவம் பெற்று தலைப்புச் செய்திகளில் இடம் பெற்றுள்ளது. இந்தக் கருத்து, காஷ்மீரில் வன்முறையைத் தூண்டும் விதமாகவும், வகுப்புவாதம் மற்றும் பிரிவினைவாதத்தை தூண்டுவதாகவும் உள்ளது. இந்த பயங்கரவாத தாக்குதலுக்கும் பாகிஸ்தான் இராணுவத் தளபதியின் உரைக்கும் தொடர்பு இருக்கலாம் எனத் தெரிகிறது” என்று தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவிற்கான முன்னாள் பாகிஸ்தான் தூதர் ஹுசைன் ஹக்கானி தனது X பக்கத்தில், “2023 அக்டோபர் 7-ஆம் தேதி இஸ்ரேல் மீதான ஹமாஸின் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு காசா சோகத்தில் மூழ்கியுள்ளது. சாத்தியமான விளைவுகளின் அடிப்படையில் பார்க்கும்போது, 2025 ஏப்ரல் 22-ஆம் தேதி ஜம்மு காஷ்மீரில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலும் ஹமாஸ் தாக்குதலுக்கு இணையானது. இந்த பயங்கரவாதத் தாக்குதலை நாகரிகமுள்ள அனைத்து நாடுகளும், மக்களும் தெளிவாக கண்டிக்க வேண்டும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

பாகிஸ்தான் சர்வதேச விவகார ஆய்வாளர் கமர் சீமா, பஹல்காமில் நடந்த தாக்குதல் குறித்து, அமெரிக்க முஸ்லிம் அமைப்பின் நிறுவனர் சஜித் தராரிடம் பேசியுள்ளார். இந்த பயங்கரவாத தாக்குதல் நடைபெற்ற காலநேரம், பல செய்திகளை உள்ளடக்கியுள்ளதாக சஜித் தரார் கூறியுள்ளார்.

இந்தத் தாக்குதலால் “பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவுகள் மேலும் மோசமடையும்” என்று கூறும் சஜித் தரார், “சர்வதேச அளவில் இந்தியா ஒரு அடையாளத்தைப் பெற்றுள்ளது. காஷ்மீரில் நிலைமை மேம்பட்டு வந்தது, சுற்றுலாப் பயணிகள் அதிக எண்ணிக்கையில் வருகை தந்தனர். ஆனால் மேம்பட்டு வந்த நிலைமையை சீர்குலைக்க மீண்டும் ஒருமுறை முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது” என்று கூறுகிறார்.

“இந்தியாவில் பயங்கரவாத தாக்குதல் நடக்கும் போதெல்லாம், விரல் நேரடியாக பாகிஸ்தானை நோக்கி நீட்டப்படுகிறது” என்று காஷ்மீர் பயங்கரவாதத் தாக்குதல் குறித்து பாகிஸ்தான் செய்தி சேனல் சாமா டிவியின் தொகுப்பாளர் தெரிவித்துள்ளார்

இந்தியா ராணுவ நடவடிக்கை எடுக்குமா?

“இதை யார் செய்தார்கள் என்பதை இந்தியா தீர்மானித்த பிறகு, பதிலடி நடவடிக்கை எடுத்தால், யாராவது அதைத் தடுக்க முடியுமா?” என்று பாகிஸ்தான் பத்திரிகையாளர் சிரில் அல்மெய்டா தனது எக்ஸ் பக்கத்தில் எழுதியுள்ளார்.

பிரிட்டிஷ் பத்திரிகையான தி எகனாமிஸ்ட்டின் பாதுகாப்பு ஆசிரியர் ஷஷாங்க் ஜோஷி, “எதிர்வரும் வாரங்களில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா இராணுவ நடவடிக்கை எடுக்கக் கூடும் என்று நம்புகிறேன்” என்று எழுதியுள்ளார்.

இந்தியா இராணுவ நடவடிக்கை எடுத்தால், அது எப்போது நடைபெறும் என்று ஒருவர் ஷஷாங்க் ஜோஷியின் எக்ஸ் பக்கத்தில் கேள்வி எழுப்ப, இதற்கு பதிலளித்த ஜோஷி, “மே மாதத்தின் கடைசி வாரத்தில் இந்தியா இராணுவ நடவடிக்கை எடுக்க 60 சதவீத வாய்ப்பு உள்ளது, நான் இதை விளையாட்டுக்குச் சொல்லவில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.

பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜெனரல் முனிரின் உரை குறித்து சஷாங்க் ஜோஷி “எங்கள் நிலைப்பாடு மிகவும் தெளிவாக உள்ளது, காஷ்மீர் எங்கள் கழுத்து நரம்பு, அதை நாங்கள் மறக்க முடியாது. காஷ்மீர் சகோதரர்களின் போராட்டத்தை மறக்க முடியாது என ஒரு வாரத்திற்கு முன்பு பாகிஸ்தான் ராணுவத் தலைவர் ஜெனரல் முனீர் தெரிவித்த கருத்து வெளியான நேரம் சரியானதில்லை…” என்று கூறியுள்ளார்.

பாகிஸ்தான் இராணுவ தளபதி என்ன சொன்னார்?

ஜம்மு காஷ்மீர், பஹல்காம் தீவிரவாத தாக்குதல்

பட மூலாதாரம், Getty Images

வெளிநாடுவாழ் பாகிஸ்தானியர்கள் மாநாடு ஏப்ரல் 13 முதல் 16 வரை இஸ்லாமாபாத்தில் நடைபெற்றது. இதுபோன்ற மாநாடு முதன்முறையாக பாகிஸ்தானில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

மாநாட்டில் உரையாற்றிய ​​ஜெனரல் முனீர், ‘இரு தேசக் கோட்பாடு’ பற்றிப் பேசினார், காஷ்மீர் பாகிஸ்தானின் கழுத்து நரம்பு என்று அழைத்த அவர், இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலான வேறுபாட்டை அடிக்கோடிட்டுக் காட்டியிருந்தார். உலகில் எந்த சக்தியாலும் காஷ்மீரை பாகிஸ்தானிடமிருந்து பிரிக்க முடியாது என்றும் தெரிவித்திருந்தார்.

“நாம் ஒன்றல்ல, இரண்டு நாடுகள். நாம் இந்துக்களிடமிருந்து அனைத்து அம்சங்களிலும் வேறுபட்டவர்கள் என்று நமது முன்னோர்கள் நம்பினார்கள். நமது மதம், பழக்கவழக்கங்கள், மரபுகள், எண்ணங்கள் மற்றும் குறிக்கோள்கள் அனைத்தும் அவர்களிடமிருந்து வேறுபட்டவை” என்று ஜெனரல் முனீர் கூறினார்.

ஜெனரல் முனீரின் இந்த கருத்துகள், இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலான வேறுபாடு குறித்த விவாதங்களை அதிகமாக்கியது.

பாகிஸ்தானில் இந்துக்கள் மிகப்பெரிய சிறுபான்மை சமூகமாக உள்ளனர். ஜெனரல் முனீரின் அண்மைக் கருத்து, பாகிஸ்தானியர்களிடையே இந்துக்கள் மீதான வெறுப்பை அதிகரிக்கும் என பாகிஸ்தானில் பலர் கூறி வருகின்றனர்..

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : BBC