SOURCE :- BBC NEWS

பட மூலாதாரம், Getty Images
ஹைதராபாத்தில் நேற்று (ஏப்ரல் 23) நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 41வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி தோற்கடித்தது.
முதலில் பேட் செய்த சன்ரைசர்ஸ் அணி, 8 விக்கெட் இழப்புக்கு 143 ரன்கள் சேர்த்தது. 144 ரன்கள் சேர்த்தால் வெற்றி என்னும் இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி 15.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
இந்த ஆட்டம் ஒரு தரப்பாக அமைந்தது. வலுவான பேட்டிங் வரிசையை வைத்துள்ள மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இந்த ஸ்கோரை அடைவது மிகவும் எளிமையாக இருந்தது.
பந்துவீச்சில் நெருக்கடி கொடுத்து ஒரு கட்டத்தில் 5 விக்கெட் இழப்புக்கு 35 ரன்கள் என சன்ரைசர்ஸ் தடுமாறியபோதே வெற்றி மும்பை இந்தியன்ஸ் பக்கம் வந்துவிட்டது.
அதன் பிறகு கிளாசன், அபினவ் மனோகர் ஆட்டத்தால் கௌரமான ஸ்கோரை பெற்றாலும் அது ஹைதராபாத் ஆடுகளத்தில் சேஸிங் செய்யக் கடினமானதாக இருக்கவில்லை. இதனால் பெரிதாக எதிர்பார்க்கப்பட்ட ஆட்டம் ஒருதரப்பாக அமைந்தது.
சன்ரைசர்ஸ் அணி வெளியேறுகிறதா?

பட மூலாதாரம், Getty Images
இந்த வெற்றியின் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 9 போட்டிகளில் 5 வெற்றிகள், 4 தோல்விகள் என 10 புள்ளிகளுடன் 3வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. நிகர ரன்ரேட்டை 0.673 என வலுவாக வைத்திருப்பதால், 3வது இடத்தில் இருந்த ஆர்சிபி, பஞ்சாப் கிங்ஸ் உள்ளிட்ட அணிகளை பின்னுக்குத் தள்ளி 3வது இடத்துக்கு நகர்ந்துள்ளது.
சன்ரைசர்ஸ் அணி 8 போட்டிகளில் 2 வெற்றி, 6 தோல்விகளுடன் 9வது இடத்தில் இருக்கிறது. சன்ரைசர்ஸ் அணி அடுத்து வரும் 6 போட்டிகளிலும் வென்றாலும் ப்ளே ஆஃப் செல்லுமா என்பது சந்தேகம்தான்.
கணித அடிப்படையில் வேண்டுமானால் ப்ளே ஆஃப் வாய்ப்பு இருக்கிறது என்று கூறலாம். ஆனால், நிதிர்சனத்தில் சன்ரைசர்ஸ் அணிக்கான ப்ளே ஆஃப் வாய்ப்புக் கதவுகள் ஏறக்குறைய அடைக்கப்பட்டுவிட்டன.
மெதுவான ஆடுகளம் கொண்ட வான்ஹடேவில் கடந்த வாரம் நடந்த ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் அணியை 2 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணி வென்றது. இந்த முறை பேட்டிங்கிற்கு சொர்க்கபுரியான ஹைதராபாத் ஆடுகளத்தில் சன்ரைசர்ஸ் அணியை 143 ரன்களில் சுருட்டி, மும்பை அணி வென்றுள்ளது.
ரோஹித் சர்மா மிரட்டல் ஃபார்ம்

பட மூலாதாரம், Getty Images
மும்பை அணியின் நம்பிக்கை நாயகனாகத் திகழும் ரோஹித் சர்மா ஃபார்முக்கு திரும்பி, தொடர்ந்து 2வது அரைசதம் அடித்திருப்பது மிகப்பெரிய பலம். தொடக்கத்தில் சில போட்டிகளில் ரோஹித் சர்மா சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தது கவலையை அளித்திருந்தாலும், கடந்த சில போட்டிகளாக ரோஹித் சர்மா ஆங்கர் ரோல் எடுத்து அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்வது அந்த அணிக்குப் புதிய உத்வேகத்தை அளித்துள்ளது.
ரெக்கில்டன் விக்கெட்டை விரைவாக இழந்தபோதிலும், வில் ஜேக்ஸுடன் இணைந்து ரோஹித் சர்மா பவர்ப்ளேவில் ஸ்கோரை 56 ரன்களுக்கு உயர்த்தினார். முதல் 7 போட்டிகளில் 0, 8, 13, 17, 18, 26, 76* ரன்கள் சேர்த்திருந்த ரோஹித் சர்மா கடந்த இரு போட்டிகளிலும் சிறப்பாக ஆடி வருகிறார். ஒவ்வொரு போட்டியிலும் அவரது ரன்கள் படிப்படியாக அதிகரித்து வருவது மும்பை அணிக்குப் பெரிய பலம்.
இந்த ஆட்டத்திலும் உனத்கட், ஈஷன் மலிங்கா ஓவரில் 3 பெரிய சிக்ஸர்களை விளாசி, 35 பந்துகளில் அரைசதத்தை ரோஹித் சர்மா நிறைவு செய்தார். 2வது விக்கெட்டுக்கு வில் ஜேக்ஸுடன் சேர்ந்து 64 ரன்களும், ஹர்திக் பாண்டியவுடன் சேர்ந்து 53 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் சேர்த்து ரோஹித் சர்மா ஆட்டமிழந்தார். கடந்த போட்டியில் 76 ரன்கள் சேர்த்த ரோஹித் சர்மா, இந்த ஆட்டத்தில் 46 பந்துகளில் 70 ரன்கள் சேர்த்து மலிங்கா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
அதன்பின் சூர்யகுமார், திலக் வர்மா ஜோடி சேர்ந்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். சூர்யகுமார் 19 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகள் என 40 ரன்களிலும், திலக் 2 ரன்களிலும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
சன்ரைசர்ஸை திணறடித்த போல்ட், சஹர்

பட மூலாதாரம், Getty Images
சன்ரைசர்ஸ் அணியின் பேட்டிங் வரிசையை மும்பையின் டிரென்ட் போல்ட், தீபக் சஹர் இருவரும் சேர்ந்து உருக்குலைத்தனர். புதிய பந்தில் இருவரின் ஸ்விங் பந்துவீச்சையும் சமாளிக்க முடியாமல் சன்ரைசர்ஸின் பேட்டர்கள் மளமளவென விக்கெட்டுகளை இழந்தனர்.
போல்ட் 4 ஓவர்கள் வீசி 26 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளையும், தீபக் சஹர் 4 ஓவர்கள் வீசி 12 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி பவர்ப்ளே ஓவருக்குள் ஆட்டத்தைக் கைப்பற்றினர். 4 விக்கெட்டுகளை வீழ்த்திய டிரென்ட் போல்ட் ஆட்டநாயகன் விருது வென்றார்.
பும்ரா 4 ஓவர்களில் 39 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டையும், சான்ட்னர் 4 ஓவர்கள் வீசி 19 ரன்களும் கொடுத்து சிக்கனமாகப் பந்துவீசினர்.
பவர்ப்ளே ஓவரில் 5 ஓவரில் 13 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளையும், 35 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளையும் இழந்து சன்ரைசர்ஸ் அணி தடுமாறியது. பவர்ப்ளேவில் சன்ரைசர்ஸ் அணி 4 விக்கெட் இழப்புக்கு 24 ரன்கள் மட்டுமே சேர்த்தது.
சன்ரைசர்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா இருவருமே பெரிய ஷாட்களுக்குத்தான் முக்கியத்துவம் அளித்தார்களே தவிர பந்து ஸ்விங் ஆகி வருகிறதா, நிதானமாக பேட் செய்யலாமா என்று சிந்தித்ததாகத் தெரியவில்லை. ஆடுகளத்தில் இருந்த லேசான ஈரப்பதத்தால் பந்து சற்று நின்று, நன்றாக ஸ்விங் ஆனது. இதைக் கவனிக்காமல் பெரிய ஷாட்களுக்கு முயன்று டிராவிஸ் ஹெட்(0), அபிஷேக்(8) மிகச் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
தீபக் சஹர் புதிய பந்தில் நன்றாக ஸ்விங் செய்து, இஷான் கிஷன்(1), நிதிஷ் ரெட்டி(2) இருவர் விக்கெட்டையும் வீழ்த்தினார். இதில் இஷான் கிஷன் ஆட்டமிழந்ததுதான் வேடிக்கையாக இருந்தது. தீபக் சஹர் வீசிய பந்து லேசாக ஸ்விங் ஆகி இஷன் கிஷனுக்கு லெக் சைடில் சென்றது. அந்தப் பந்தை விக்கெட் கீப்பர் ரெக்கில்டன் கேட்ச் பிடித்தார்.
ஆனால், ஆட்டமிழந்து விட்டதாக நினைத்து இஷான் கிஷன் பெவிலியனுக்கு செல்லத் தொடங்கினார், மும்பை அணியில் எந்த பேட்டரும் நடுவரிடம் அவுட் கேட்கவில்லை. பந்துவீச்சாளர் தீபக் சஹர்கூட நடுவரிடம் அவுட் கேட்கவில்லை, நடுவரும் முதலில் வைட் பந்துக்காக கையைத் தூக்கி, இஷான் கிஷன் சென்றதைப் பார்த்து அவுட் வழங்க கையை மேலே தூக்கினார்.
ஆனால், அதன்பின் டிவி ரீப்ளேவில் பார்த்தபோது, அல்ட்ரா எட்ஜில் இஷான் கிஷன் பேட்டில் பந்துபடாமல் விக்கெட் கீப்பரிடம் சென்றது தெரிய வந்தது.
ஹர்திக் பாண்டியா பந்துவீச்சில் அனிகேத் வர்மா 12 ரன்களில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுக்கவே, 5 விக்கெட் இழப்புக்கு 35 ரன்களுடன் சன்ரைசர்ஸ் அணி திணறியது.
காப்பாற்றிய கிளாசன்

பட மூலாதாரம், Getty Images
சன்ரைசர்ஸ் அணி 35 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து மோசமான நிலையில் இருந்ததால் விரைவாகவே இம்பாக்ட் ப்ளேயராக அபினவ் மனோகர் களமிறங்கினார். கிளாசனுக்கு நன்கு ஒத்துழைப்பு கொடுத்து ஆடிய மனோகர், மெதுவாக ரன்களை சேர்த்தார்.
கிளாசன் அவ்வப்போது கிடைக்கின்ற வாய்ப்பில் பவுண்டரி. சிக்ஸர்களை விளாசினார். விக்னேஷ் புத்தூர் ஓவரில் சிக்ஸர், 2 பவுண்டரி என கிளாசன் அடித்தார். பொறுமையாகவும், பொறுப்பாகவும் ஆடிய கிளாசன் 34 பந்துகளில் அரைசதம் அடித்தார். இது இந்த சீசனில் கிளாசன் அடிக்கும் முதல் அரைசதம். 17 முதல் 19வது ஓவர் வரை கிளாசன், மனோகர் வேகமாக விளாசி 35 ரன்களை சேர்த்தார்.
ஆனால், 19வது மற்றும் 20வது ஓவர்களில் சன்ரைசர்ஸ் ஆட்டம் அடங்கியது. பும்ரா வீசிய 19வது ஓவரில் ரிவர்ஸ் ஸ்கூப்பில் சிக்ஸர் அடித்த கிளாசன், அதே ஓவரில் திலக் வர்மாவிடம் கேட்ச் கொடுத்து 71 ரன்னில் ஆட்டமிழந்தார்.
அரிதான ஹிட்விக்கெட்
போல்ட் வீசிய கடைசி ஓவரில் 43 ரன்கள் சேர்த்திருந்த அபினவ் மனோகர் ஹிட் விக்கெட்டில் வெளியேறினார். கம்மின்ஸ் ஒரு ரன்னில் போல்டானார். போல்ட் வீசிய யார்க்கரை தட்டிவிட ஸ்டெம்புக்கு அருகே மனோகர் சென்றபோது பேட் ஸ்டெம்பில் பட்டதால் ஹிட்விக்கெட்டில் ஆட்டமிழந்தார். இது ஐபிஎல் டி20 போட்டியில் மிகவும் அரிதான ஹிட் விக்கெட்டாகும்.
சன்ரைசர்ஸ் அணியில் கிளாசன்(71), மனோகர்(43) இருவரின் ரன்களை தவிர்த்துப் பார்த்தால் மற்ற பேட்டர்கள் யாரும் 10 ரன்கள்கூட எடுக்கவில்லை என்பதுதான் நிதர்சனம். கிளாசன் மட்டும் அணியின் சூழலை உணர்ந்து ஆடவில்லை என்றால், சன்ரைசர்ஸ் அணி 100 ரன்களில் சுருண்டிருக்கும்.
ஆட்டமிழக்காமல் வெளியேறிய இஷான் கிஷன்

பட மூலாதாரம், Getty Images
இந்த ஆட்டத்தில் தீபக் சஹர் பந்துவீச்சில் இஷான் கிஷன் ஆட்டமிழந்துதான் வேடிக்கையாகவும், வியப்பாகவும் இருந்தது. தீபக் சஹர் வீசிய 3வது ஓவரில் முதல் பந்தை இஷான் கிஷன் எதிர்கொண்டார். பந்து லேசாக ஸ்விங் ஆகி இஷான் கிஷனின் இடதுபுறமாகச் சென்றது.
இஷான் கிஷனும் லெக்சைடில் சென்ற பந்தை அடிக்க முயன்றார், ஆனால் முடியவில்லை. பந்து விக்கெட் கீப்பர் ரெக்கில்டனிடம் சென்றது. மும்பை அணியில் எந்த வீரரும் நடுவரிடம் இஷான் கிஷன் அவுட் செய்யப்பட்டதாக முறையிடவில்லை. இஷான் கிஷனின் இடதுபுறம் சென்ற பந்து பேட்டில் படாமல் சென்றதால் நடுவரும் வைடு வழங்குவதற்காக கைகை அகலமாக விரித்தார்.
ஆனால், திடீரென இஷான் கிஷன் அவுட் ஆகிவிட்டதாக நினைத்து பெவிலியன் செல்லத் தொடங்கினார். மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியா, வேகமாக ஓடி வந்து இஷன் கிஷானின் ஹெல்மெட்டை பிடித்து, “நடுவரின் முடிவைப் பார்த்துவிட்டு பெவிலியன் செல்லுங்கள்” என்றார். ஆனால், இஷான் கிஷன் அதைக் கேட்காமல் சிரித்துக் கொண்டே பெவிலியன் நோக்கி நடந்தார்.
இதைக் கவனித்த நடுவர் வைடுக்காக கையை விரித்திருந்தவர், திடீரென அவுட் வழங்க கையை உயர்த்தினார். தீபக் சஹரும் நடுவரைப் பார்த்து அவுட் கேட்கலாமா, வேண்டாமா என்ற சந்தேகத்தில் அவுட் கேட்கவே நடுவரும் அவுட் வழங்கினார். நடுவரே அவுட் வழங்காமல் இருந்த நிலையில், மும்பை வீரர்கள் யாரும் நடுவரிடம் அவுட் கேட்காத நிலையில், விக்கெட் கீப்பர் ரெக்கில்டன் நடுவரிடம் முறையிடாத நிலையில் இஷான் கிஷன் ஏன் வெளியேறினார் என்பது குழப்பமாக இருந்தது.
அதன் பிறகு இஷன் கிஷன் ஆக்ஸன் குறித்து ரீப்ளே செய்து பார்த்தபோது, இஷான் பேட்டில் பந்து படவில்லை என்பது அல்ட்ரா எட்ஜில் தெரிந்தது.
முன்கூட்டியே திட்டமிடல் அல்ல

பட மூலாதாரம், Getty Images
வெற்றிக்குப் பிறகு மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பேசுகையில், “வெற்றி பெற்றது மகிழ்ச்சியாக இருக்கிறது. கிடைக்கின்ற தருணத்தைச் சரியான வழியில் வீரர்கள் கொண்டு சென்றனர். எங்கள் அணியில் ஒவ்வொரு வீரருக்கும் சரியான ஆட்டம் அமைந்துவிட்டால், நாம்தான் அனைத்து அணிகளையும் ஆதிக்கம் செய்வோம் என நினைத்தேன்” என்று தெரிவித்தார்.
மேலும், “தீபக் சஹர், போல்ட் இருவரும் வெற்றிக்கான அடித்தளத்தை அமைத்தனர். ரோஹித், ஸ்கை இருவரும் ஃபினிஷிங் செய்தனர். அற்புதமான வெற்றி. கேப்டன்சியை பொருத்தவரை சூழலுக்கு ஏற்ப நான் பதில் அளிக்க வேண்டும், செயல்பட வேண்டும். முன்கூட்டியே திட்டமிட்டுவருவது சரியல்ல.
இதுபோன்ற சூழலில் பவர்ப்ளேவில் சிறப்பாகப் பந்துவீசிய தீபக் சஹருக்கு தொடர்ந்து ஓவர்கள் ஏன் வழங்கக்கூடாது என்பது அந்த நேரத்தில் உதிக்கும் சிந்தனை. அனைத்துப் பிரிவுகளிலும் சிறப்பாகச் செயல்பட்டுள்ளோம், மன நிறைவாக இருக்கிறது” எனவும் தெரிவித்தார் ஹர்திக் பாண்டியா.

அடுத்து வரவுள்ள முக்கிய ஆட்டங்கள்
இன்றைய ஆட்டம்
- ஆர்சிபி vs ராஜஸ்தான் ராயல்ஸ்
- இடம்: பெங்களூரு
- நேரம்: இரவு 7.30
சிஎஸ்கேவின் அடுத்த ஆட்டம்
- சென்னை சூப்பர் கிங்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதர்பாத்
- நாள் – ஏப்ரல் 25
- இடம் – சென்னை
- நேரம்- இரவு 7.30
மும்பையின் அடுத்த ஆட்டம்
- மும்பை இந்தியன்ஸ் vs லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ்
- நாள் – ஏப்ரல் 27
- இடம் – மும்பை
- நேரம்- மாலை 3.30 மணி
ஆர்சிபியின் அடுத்த ஆட்டம்
- ஆர்சிபி vs டெல்லி கேபிடல்ஸ்
- நாள் – ஏப்ரல் 27
- இடம் – டெல்லி
- நேரம்- இரவு 7.30 மணி
ஆரஞ்சு தொப்பி யாருக்கு?
- சாய் சுதர்ஸன்(குஜராத் டைட்டன்ஸ்)-417 ரன்கள் (8 போட்டிகள்)
- நிகோலஸ் பூரன்(லக்னெள)-377 ரன்கள் (9 போட்டிகள்)
- சூர்யகுமார் யாதவ்(மும்பை) 373 ரன்கள் (9 போட்டிகள்)
பர்பிள் தொப்பி யாருக்கு?
- பிரசித் கிருஷ்ணா (குஜராத்) 16 விக்கெட்டுகள் (7 போட்டிகள்)
- குல்தீப் யாதவ்(டெல்லி) 12 விக்கெட்டுகள் (6 போட்டிகள்)
- நூர் அகமது(சிஎஸ்கே)12 விக்கெட்டுகள் (6 போட்டிகள்)
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
SOURCE : THE HINDU