SOURCE :- BBC NEWS

பட மூலாதாரம், Reuters
கனடாவின் வான்கூவர் நகரில் சனிக்கிழமை அன்று கூட்டத்தில் ஒரு கார் மோதிய தாக்குதலில் 11 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
பிலிப்பைன்ஸ் கலாசாரத்தைக் கொண்டாடும் வருடாந்திர லாபு லாபு திருவிழாவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் பலர் காயமடைந்துள்ளனர்.
இத்தாக்குதலில் ஈடுபட்ட சந்தேக நபராக 30 வயதான கை-ஜி-ஆடம் லோ எனக் கண்டறியப்பட்டுள்ளார். தற்போது காவலில் இருக்கும் இவர் கொலைக் குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்டுள்ளார்.
என்ன நடந்தது?
இந்தத் தாக்குதலில் உள்ளூர் நேரப்படி சரியாக இரவு 08:14 மணிக்கு நிகழ்ந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 27 ஆம் தேதி கொண்டாடப்படும் லாபு லாபு தினத்தன்று இந்தச் சம்பவம் அரங்கேறியுள்ளது.
இந்தத் திருவிழா கொண்டாட்டங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்தத் தாக்குதலில் ஒரு வண்டி ஈடுபட்டுள்ளதாக திருவிழாவிற்குச் சென்றவர்கள் கூறுகின்றனர்.
காயப்பட்ட பாதசாரிகள் அனைவரும் உணவு வாகனங்கள் நிறுத்தப்பட்ட இடத்திற்கு அருகில் இருந்ததாக சம்பவ இடத்தில் இருந்தவர்கள் ஏபி செய்தி முகமையிடம் கூறியுள்ளனர்.
வாகனத்தின் ஓட்டுநரை பொதுமக்கள் பிடித்த நிலையில் காவல்துறையினர் அழைத்துச் சென்றனர்.
லாபு லாபு திருவிழா என்றால் என்ன?
வான்கூவரில் நடைபெறும் லாபு லாபு திருவிழா, பிலிப்பைன்ஸ் மற்றும் உலகம் முழுவதும் நடைபெறும் இது போன்ற திருவிழாக்கள் ஒவ்வொரு ஆண்டும் லாபு – லாபுவின் நினைவைப் போற்றும் விதமாக நடத்தப்படுகின்றன. இவர் 1500களில் பிலிப்பைன்ஸில் இருந்த ஸ்பெயின் காலனியாதிக்கத்தை எதிர்த்த இவர், தேசிய ஹீரோவாக பார்க்கப்படுகிறார்.
லாபு லாபு, பிலிப்பைன்ஸில் உள்ள தீவான மேக்டனின் பூர்வகுடி தலைவராக இருந்துள்ளார்.
1521ஆம் ஆண்டில் நடைபெற்ற மேக்டன் யுத்தத்தில் இவரும் இவருடைய படை வீரர்களும் ஃபெர்டினன்ட் மகெல்லன் தலைமையிலான கூட்டுப் படைகளை வீழ்த்தி ஸ்பெயின் ஆக்கிரமிப்பை 40 ஆண்டுகளுக்குத் தள்ளிப் போட்டனர்.
நவீன கால பிலிப்பைன்ஸில் இவர் ஒரு ஹிரோவாகக் கருதப்படுகிறார். நாடு முழுவதும் இவரின் புகழைப் போற்றும் நினைவிடங்கள் மிகவும் இயல்பாகத் தென்படுகின்றன.
தேசிய காவல் சேவை உட்பட பல பிலிப்பைன்ஸ் அரசு அமைப்புகள் அவர்களுடைய முத்திரையில் இவரின் புகைப்படத்தைப் பயன்படுத்துகின்றன.
2023ஆம் ஆண்டில் லாபு லாபு தினத்தை பிரிட்டிஷ் கொலம்பியா அரசு அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்தது. இந்த மாகாணத்தில் பெரிய புலம்பெயர்ந்த குழுவாக பிலிப்பைன்ஸ் நாட்டினர் உள்ளனர்.

பட மூலாதாரம், Reuters
பாதிக்கப்பட்டவர்கள் யார்?
இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் அடையாளம் பற்றி தற்போது வரை குறைவான தகவல்களே தெரியவந்துள்ளன.
சனிக்கிழமை அன்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய வான்கூவர் பொறுப்பு காவல்துறை தலைவர் ஸ்டீவ் ராய், பாதிக்கப்பட்டவர்களில் ஆண்கள், பெண்கள் மற்றும் இளைஞர்கள் உள்ளனர். இவர்களில் 5 முதல் 65 வயதைச் சேர்ந்தவர்கள் உள்ளனர் எனத் தெரிவித்திருக்கிறார்.
இந்தத் தாக்குதல் வான்கூவர் நகரில் நெருக்கமாக வாழ்ந்துவரும் ஃபிலிப்பினோ சமூக மக்களை கடுமையாகப் பாதித்திருக்கிறது.
“கடந்த இரவு மிகவும் கடினமானதாக இருந்துள்ளது. இதை ஃபிலிப்பினோ சமூகம் மிக நீண்ட காலத்திற்கு உணரும்” என ஃபிலிப்பினோ பிசி அமைப்பின் தலைவரான ஆர்ஜே அக்யுனோ தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், “நிறைய கேள்விகள் சுழன்று கொண்டிருக்கின்றன என்பதை நாங்கள் அறிவோம். எங்களிடம் அனைத்து பதில்களும் இல்லை. ஆனால் நாங்கள் வருந்துகிறோம் என்பதை அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறோம்.” என்றார்.
சந்தேகப்படும் நபர் யார்?
சந்தேகத்திற்குள்ளான நபர் 30 வயதான கை-ஜி-ஆடம் லோ எனக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அவர் மீது எட்டு எண்ணிக்கையிலான இரண்டாம் நிலை கொலை குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
“குற்றச்சாட்டுகள் தற்போது மதிப்பிடப்பட்டு வருகின்றன. மேலும் சில குற்றச்சாட்டுகள் சேர்க்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.” எனக் காவல்துறை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.
இந்தத் தாக்குதலுக்கான நோக்கம் என்று எதையும் விசாரணை அதிகாரிகள் தற்போது வரை உறுதி செய்யாத நிலையில், இந்த வழக்கில் கிடைத்துள்ள ஆதாரங்கள் இது பயங்கரவாத செயல் என நம்ப வைக்கும்படியாக இல்லை என ராய் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், “குற்றம்சாட்டப்பட்டுள்ள நபர் காவல்துறையினருடனும் மருத்துவத் துறை வல்லுனர்களுடனும் மன நலம் சார்ந்து தொடர்பு கொண்ட பின்னணி உள்ளது” எனவும் தெரிவித்துள்ளார்.
வான்கூவர் நகரின் மேயர் கென் சிம், “மன நலம்தான் இங்கு அடிப்படை காரணமாக தெரிகிறது.” எனக் கூறியுள்ளார்.
கைது செய்யப்பட்டவருடன் காவல்துறைக்கு என்ன மாதிரியான விசாரணை நடத்தியுள்ளது, அவற்றில் என்ன கிடைத்துள்ளது அல்லது இவை எப்போது நடந்தது என்பது பற்றி எந்த மேலதிக தகவல்களும் வழங்கப்படவில்லை.
– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
SOURCE : THE HINDU