SOURCE :- BBC NEWS

பட மூலாதாரம், Getty Images
9 நிமிடங்களுக்கு முன்னர்
ஜம்மு காஷ்மீரில் நடந்த பஹல்காம் தாக்குதல் தொடர்பாக நேற்று, (ஏப்ரல் 27) சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ, பாகிஸ்தான் துணை பிரதமர், அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சரான இஷாக் தார் ஆகியோருக்கு இடையே தொலைபேசி மூலம் பேச்சுவார்த்தை நடந்தது.
இந்தப் பேச்சு வார்த்தைக்குப் பிறகு, தாக்குதல் தொடர்பான ‘நியாயமான விசாரணைக்கு’ பாகிஸ்தான் கோரிக்கை விடுத்திருப்பதை சீனா ஆதரித்துள்ளது.
இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே நிலவும் இந்தப் பதற்றமான சூழலை சீனா தொடர்ச்சியாகக் கண்காணித்து வருவதாக சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எனினும் பல்வேறு விவகாரங்களில் சீனா மற்றும் பாகிஸ்தான் நாடுகளின் ஒத்துழைப்பு தொடர்கிறது . இதற்கான வரலாற்றுக் காரணங்கள் குறித்து காணலாம்.

கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி அன்று, ஜம்மு காஷ்மீரின் பகல்காமில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர்.
இதன்பிறகு, பாகிஸ்தானுக்கு எதிராக சிந்து நதிநீர் உடன்படிக்கையை இடை நிறுத்தம் செய்தது, அட்டாரி எல்லையை மூடியது என்று இந்தியா தனது தரப்பு நடவடிக்கைகளை எடுத்தது.
மறுபுறம், சிம்லா ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுவது தொடர்பான முடிவு உள்பட இந்தியாவுக்கு எதிரான பல முடிவுகளை பாகிஸ்தான் எடுத்தது.

பட மூலாதாரம், Getty Images
பேச்சுவார்த்தையில் என்ன நடந்தது?
தொலைபேசி அழைப்பின் போது, பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் இஷாக் டார் சீன வெளியுறவு அமைச்சரிடம் தற்போதைய நிலைமை குறித்து கூறினார் என்று குளோபல் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
“தீவிரவாதத்தை எதிர்ப்பதில் பாகிஸ்தான் எப்போதுமே உறுதியாக இருக்கின்றது. பதற்றத்தை அதிகரிக்கும் எந்த செயல்பாடுகளையும் எதிர்க்கின்றது”, என்று இஷாக் தார் கூறினார்.
“பாகிஸ்தான் இந்த விஷயத்தை முதிர்ச்சியுடன் கையாள உறுதிபூண்டுள்ளது, மேலும் சீனா மற்றும் சர்வதேச சமூகத்துடன் தொடர்ந்து பேசவும் தயாராக இருக்கிறது”, என்று அவர் கூறினார்.
இந்தத் தொலைபேசி உரையாடல் தொடர்பான தகவல்களை பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சகம் அதன் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
“பாகிஸ்தான்-சீனா நட்பு மற்றும் இரு நாடுகளுக்கு இடையேயான மூலோபாய கூட்டணியை வெளியுறவுத்துறை அமைச்சரும் உறுதிப்படுத்தினார். இந்தப் பிராந்தியத்திலும் அதற்கு அப்பாலும் பாதுகாப்பு, வளர்ச்சி ஆகியவற்றை எல்லா தரப்பிலும் மேம்படுத்தப்பட்ட பேச்சுவார்த்தையையும், ஒத்துழைப்பையும் பராமரிக்க அவர்கள் ஒப்புக் கொண்டனர்,” என்று பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் பதிவிட்டுள்ளது.
தற்போதைய சூழ்நிலையை சீனா நெருக்கமாகக் கண்காணித்து வருகிறது என்று சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ கூறினார்.
“பயங்கரவாதத்தை எதிர்ப்பது எல்லா நாடுகளின் பொறுப்பும்தான். தீவிரவாதத்துக்கு எதிரான, பாகிஸ்தானின் நடவடிக்கைகளை சீனா தொடர்ந்து ஆதரித்து வருகிறது,” என்றார் அவர்.
“பாகிஸ்தானின் வலுவான நட்பு நாடு மற்றும் கொள்கை அடிப்படையிலான கூட்டாளி என்ற முறையில் பாகிஸ்தானின் பாதுகாப்பு தொடர்பான கவலைகளை சீனா முழுவதுமாகப் புரிந்து கொள்கிறது. அதோடு பாதுகாப்பு தொடர்பாக அது மேற்கொள்ளும் முயற்சிகளை ஆதரிக்கிறது,” என்று வாங் யீ குறிப்பிட்டார்.
“பஹல்காம் தீவிரவாத தாக்குதல் தொடர்பாக பாரபட்சமற்ற விசாரணை உடனடியாகத் தொடங்குவதை சீனா ஆதரிப்பதாக”, வாங் யீ தெரிவித்தார்.
இரு தரப்பும் நிதானத்தை கடைபிடித்து பதற்றத்தைத் குறைக்க முயற்சிகளை மேற்கொள்ளும் என்று சீனா நம்புவதாக அவர் குறிப்பிட்டார்.
“இந்த மோதலானது, இந்தியா மற்றும் பாகிஸ்தானின் அடிப்படை நலன்களுக்கோ அல்லது இந்தப் பகுதியின் அமைதி, ஸ்திரத்தன்மைக்கோ துளியும் பயன்படாது,” என்று சீன வெளியுறவுத்துறை அமைச்சர் கூறினார்.

பட மூலாதாரம், Getty Images
பாகிஸ்தான் பிரதமர் கூறியதென்ன?
பஹல்காம் தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தான் மீது இந்தியா “தவறான குற்றச்சாட்டுகளை” சுமத்தியுள்ளது என்று பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் வெள்ளிக்கிழமை அன்று தெரிவித்தார்.
“கிழக்கு பகுதியில் உள்ள நமது அண்டை நாடான இந்தியா, எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல், விசாரணையும் செய்யாமல் பாகிஸ்தானைப் பற்றி அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளது. நியாயமான, வெளிப்படையான மற்றும் நம்பகமான விசாரணைக்கு ஒத்துழைக்க ஒரு பொறுப்பான நாடு என்ற முறையில் பாகிஸ்தான் தயாராக இருக்கிறது”, என்று அவர் கூறினார்.
“அமைதிதான் நம் ஆசை. ஆனால் அதை நமது பலவீனமாக கருதக்கூடாது,” என்றார் பிரதமர் ஷாபாஸ் ஷரிஃப்.
என்ன விலை கொடுத்தாவது அதன் இறையாண்மையை பாகிஸ்தான் காப்பாற்றும். எல்லைகளைப் பாதுகாக்க பாகிஸ்தான் ராணுவம் தயாராக உள்ளது, அதைப் பற்றி எந்த தவறான புரிதலும் இருக்கக்கூடாது என்று அவர் தெரிவித்தார்.
இந்த தாக்குதலைப் பற்றி சீனா கூறியது என்ன?
பஹல்காம் தாக்குதலுக்கு அடுத்த நாள் அதாவது கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி அன்று, இந்தத் தாக்குதலைக் கண்டித்து சீனா அறிக்கை வெளியிட்டது.
“அனைத்து வகையான தீவிரவாதத்தையும் சீனா உறுதியாக எதிர்க்கின்றது. இந்த தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு எங்கள் இரங்கலையும், கொல்லப்பட்டவர்களின் குடும்பங்கள் மற்றும் காயம்பட்டவர்களுக்கு எங்கள் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்”, என்று சீன வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கூ ஜியாகின் தெரிவித்தார்.
இதற்கிடையே இந்தியாவுக்கான சீனத் தூதர் சூ ஃபெய்ஹாங், பஹல்காம் தாக்குதல் தொடர்பாக தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
“பஹல்காம் பகுதியில் நடந்த தாக்குதலால் நான் அதிர்ச்சி அடைந்திருக்கிறேன். அதனை கண்டிக்கிறேன்”, என்று எக்ஸ் தளத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“இறந்தவர்களுக்கும், அவர்கள் குடும்பத்தினருக்கும், காயமடைந்தவர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள். அனைத்து வகையான பயங்கரவாதத்தையும் நான் எதிர்க்கிறேன்”.

பட மூலாதாரம், Getty Images
பாகிஸ்தான் – சீனா இடையிலான உறவு
தற்சமயம் பாகிஸ்தானும், சீனாவும் மிகச் சிறந்த நட்பு நாடுகளாக இருக்கின்றன. பொருளாதார ரீதியாகவோ அல்லது பாதுகாப்புத் துறையிலோ, சீனா பாகிஸ்தானுக்கு உதவியுள்ளது.
இந்த இரண்டு நாடுகளின் நட்பு சர்வதேச அளவிலும் கவனம் பெற்றுள்ளது. ஆனால் இந்த இரண்டு நாடுகளின் நட்பு முன்னர் இவ்வளவு ஆழமாக இருந்ததில்லை.
சுதந்திரத்திற்குப் பிறகு, சீனா பாகிஸ்தானை விட இந்தியாவுடன் நட்புறவில் இருக்க அதிக முக்கியத்துவம் கொடுத்தது. 1956 ஆம் ஆண்டு சௌ என்-லாயி, சீனா பிரதமராக பதவி ஏற்ற பிறகு சீனாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையில் புதிய உறவு மலரத் தொடங்கியது.
இதனிடையில் சீனாவைப் பற்றி பாகிஸ்தான் கவலை கொண்டிருந்த காலம் ஒன்றும் இருந்தது.
1958 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் நடந்த ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பிறகு ராணுவ ஆட்சியின் முதல் தலைவராக பொறுப்பேற்ற ஃபீல்டு மார்ஷல் அயூப் கான் சீனாவின் விரிவாக்கக் கொள்கை குறித்து கவலை கொண்டிருந்தார்.
இதைப் பற்றிப் பேசுவதற்காக 1959 ஆம் ஆண்டு அப்போதைய இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேருவிடம் ஒரு முன்மொழிவுடன் வந்தார்.
1959 ஆம் ஆண்டு ஏப்ரல் 24 ஆம் தேதி, ‘கூட்டு பாதுகாப்பு ஒப்பந்தம்’ ஒன்றை இந்தியாவிடம் அயூப் கான் முன்மொழிந்தார். ஆனால் நேரு அந்த ஒப்பந்தத்தை நிராகரித்தார்.
1961 ஆம் ஆண்டு, ஐநா சபையின் கூட்டத்தில் பாகிஸ்தான் கலந்து கொண்டபோது, சீனாவை ஆதரித்து ஒரு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அப்போதைய பாகிஸ்தான் நீர்வளத்துறை மற்றும் தொழில்துறையின் அமைச்சரான ஸுல்ஃபிகர் அலி பூட்டோ, அதில் கலந்து கொண்ட பாகிஸ்தான் தூதுக்குழுவின் தலைவராக இருந்தார்.
அவர் சீன மக்கள் குடியரசுக்கு ஆதரவாக அப்போது வாக்களித்தார். இதன்பிறகு அமெரிக்கா பாகிஸ்தானுக்கு கடுமையான எச்சரிக்கையளித்தது. அன்றிலிருந்து சீனாவின் ஆதரவாளராக பாகிஸ்தான் இருந்து வருகிறது.
1962 ஆம் ஆண்டு எல்லைப் பிரச்னை தொடர்பாக சீனா இந்தியாவுடன் போர் தொடுத்தபோது, பாகிஸ்தான்-சீனா நட்புக்கான முக்கிய காரணம் இந்தியாவுடனான பொதுவான பகைமையாக மாறியது.
பல ஆண்டுகளாக, இந்தப் பகைமை அவர்களின் நட்புக்கான முக்கிய காரணமாகக் கருதப்பட்டது, அல்லது குறைந்தபட்சம் இந்த வகையான குற்றச்சாட்டு தொடர்ந்து வருகிறது.
ஆனால் இப்போது சீனா, பாகிஸ்தான் இடையேயான நட்புக்கான காரணம், இந்தியாவுடன் விரோதம் பாராட்டுவதை விடவும் அதிகம் இருக்கிறது. இந்த விரோத மனப்பான்மை இப்போதும் முக்கியத்துவம் வாய்ந்தது என்றாலும், இப்போது பாகிஸ்தானிலும், ஆஃப்கானிஸ்தானிலும் சீனா தொடர்புடைய பல முக்கிய விஷயங்கள் உள்ளன.

பட மூலாதாரம், Getty Images
சர்வதேச அளவில் பாகிஸ்தானும், சீனாவும் ஒருவருக்கொருவர் பாதுகாப்புக் கவசமாக இருக்கிறார்கள்.
தீவிரவாத பிரச்னையில் பாகிஸ்தான் மீதான நடவடிக்கையாக இருந்தாலும் சரி, சீனா FATF கருப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்ட போதும் சரி, சீனா இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தானை பயமில்லாமல் தொடர்ந்து ஆதரித்து வருகிறது என்று 2021 ஆம் ஆண்டு பிபிசியுடனான ஒரு உரையாடலில் சர்வதேச விவகாரங்களில் நிபுணரான பேராசிரியர் ஹர்ஷ் பண்ட் கூறினார்.
காஷ்மீர் விஷயத்தை இந்திய பாகிஸ்தான் இடையேயான பிரச்னையாகக் சீனா கருதினாலும், CPEC விஷயத்தில் பாகிஸ்தானை ஆதரிப்பதன் மூலம், எல்லைப் பிரச்னையில் சீனாவின் நிலைப்பாடு என்ன என்பதை அது தெளிவுபடுத்தியுள்ளது.
CPEC அல்லது ‘சீனா பாகிஸ்தான் பொருளாதாரப் பாதை’ என்பது, சீனா தனது லட்சியமாக உருவாக்கி வரும் பெல்ட் அண்ட் ரோட் முன்னெடுப்பின் ஒரு பகுதி ஆகும்.
இதன் அடிப்படையில் பல உட்கட்டமைப்புத் திட்டங்கள் பாகிஸ்தானில் நடைபெற்று வருகின்றன. அதற்காக சீனா 62 பில்லியன் டாலரை முதலீடு செய்துள்ளது.
பெல்ட் அண்ட் ரோடு முன்னெடுப்பின் எல்லா திட்டங்களிலும் CPECஐ மிக முக்கியமான திட்டமாக சீனா கருதி வருகிறது. அதன் வெற்றி சீனாவுக்கு மிகவும் முக்கியமான ஒன்றாகும்.
இதுதவிர, பாகிஸ்தானின் சிதைந்து வரும் பொருளாதாரத்தை, கடன் கொடுத்து சரி செய்ய, சீனா முயற்சிப்பதாகவும் கூறப்படுகிறது.
ஆனால் அதே நேரத்தில், சீனா வீகர் முஸ்லீம்களை நடத்தும் விதம் பற்றி பாகிஸ்தான் குரலெழுப்புவதில்லை. இந்த விஷயத்தில் உலகத்தில் யார் என்ன சொன்னாலும், பாகிஸ்தானின் பாதுகாப்பு சீனாவுக்கு இருக்கிறது.
இதனால்தான் SCO (ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு) உருவாக்கப்பட்டபோது இந்தியாவை சேர்த்துக் கொள்ளலாம் என்று ரஷ்யா சொன்னதும், சீனா பாகிஸ்தானின் பெயரை முன்வைத்தது.
சீன ஆயுதங்களை அதிகம் இறக்குமதி செய்யும் பாகிஸ்தான்
சீனா, பாகிஸ்தான் இடையே ராணுவ ஒத்துழைப்பு என்பது பல அம்சங்களை உள்ளடக்கியது. பாகிஸ்தான் ராணுவத்துக்கு சீனா பயிற்சி கொடுக்கின்றது. கூட்டு ராணுவப் பயிற்சிகளைத் தவிர, கிளர்ச்சி எதிர்ப்புப் பயிற்சிகளும் இரு நாடுகளுக்கும் ஒரே நேரத்தில் நடத்தப்படுகின்றன.
அது மட்டுமல்ல, அனு ஆயுதங்கள், போர்க்கப்பல்கள், போர்விமானங்கள் மற்றும் ஏவுகணைகளையும் உருவாக்க பாகிஸ்தானுக்கு சீனா உதவுகின்றது.
2018 ஆம் ஆண்டு, அக்டோபர் 18 ஆம் தேதி அன்று, பாகிஸ்தானின் செய்தித்தாளான தி எக்ஸ்பிரஸ் ட்ரிப்யூன் செய்தி ஒன்றை வெளியிட்டது. அதில் சீனாவின் ஆயுதங்களை அதிகம் இறக்குமதி செய்யும் நாடு பாகிஸ்தான் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
அமெரிக்காவை தளமாகக் கொண்ட RAND கார்ப்பரேஷன் வலைத்தளத்தின்படி, 2000 முதல் 2014 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் சீனாவின் ஆயுத விற்பனையில் பாகிஸ்தானின் பங்கு 42 சதவீதமாக இருந்தது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
SOURCE : THE HINDU