SOURCE :- BBC NEWS

பட மூலாதாரம், Getty Images
ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து உருவான பதற்றமான சூழலில் இந்தியா சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்துள்ளது.
மறுபுறம், நீரை மடைமாற்றும் எந்தவொரு முயற்சியையும் ஒரு ‘போர்ச் செயல்’ ஆக கருதுவோம் என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே 65 ஆண்டுகளுக்கு முன்பு இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன் பிறகு இரு நாடுகளுக்கும் இடையே 1965, 1971 மற்றும் 1999 என முறையே மூன்று முக்கியமான போர்கள் நிகழ்ந்துள்ளபோதும் இந்த ஒப்பந்தம் எந்த பாதிப்பையும் சந்திக்கவில்லை.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட பிறகு எடுக்கப்பட்ட கடுமையான நடவடிக்கைகளில் இது மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.
பாகிஸ்தான் எல்லை கடந்த தீவிரவாதத்திற்கான தனது ஆதரவை முழுமையாக கைவிடும் வரை தனது நடவடிக்கைகள் அமலில் இருக்கும் என இந்தியா தெரிவித்துள்ளது.
இந்தியாவின் குற்றச்சாட்டை மறுத்துள்ள பாகிஸ்தான் பஹல்காம் தாக்குதல் தொடர்பாக ஆதாரம் கோரியுள்ளது.
தற்போது சிந்து மற்றும் இதர நதிகளின் நீர் கிடைக்காமல் போவதைத் தவிர்க்க பல நடவடிக்கைகளை பாகிஸ்தான் பரிசீலித்து வருகிறது. அத்தகைய சூழலில், இந்த நடவடிக்கைகளைத் தவிர்க்க பாகிஸ்தானுக்கு என்ன வாய்ப்புகள் உள்ளன?

உலக வங்கியில் முறையிடும் வாய்ப்பு

சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைக்கும் இந்தியாவின் முடிவுக்கு எதிராக உலக வங்கியை அணுகப்போவதாக பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் பிபிசிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
இந்தியா தன்னிச்சையாக ஒப்பந்தத்தில் இருந்து விலக முடியாது எனக் கூறுகிறார் கவாஜா ஆசிப். மேலும் அவர், “உலக வங்கியின் மத்தியஸ்தத்தில்தான் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானதால் அவர்களை அணுகுவோம். இந்த ஒப்பந்தம் 1960-இல் கையெழுத்தாகி நீண்ட காலம் வெற்றிகரமாக இருந்து வருகிறது” என்றார்.
கடந்த வாரம் பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷரிப் பேசுகையில், “சர்வதேச சட்டங்களின் கீழ் இந்தியா சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்த முடியாது. ஒப்பந்தத்தின்படி அவ்வாறு செய்வது சட்டவிரோதம் ஆகும்” என்றார்.
பாகிஸ்தான் ஏற்கனவே தண்ணீர் நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. ஒப்பந்தத்தை ரத்து செய்வது அதன் பிரச்னைகளை அதிகரிக்கக்கூடும்.
பாகிஸ்தான் உள்ள நீர்மின் திட்டங்கள் மற்றும் வேளாண்மைக்கு இந்த ஒப்பந்தம் மிகவும் முக்கியமானது. பாகிஸ்தானின் 80 சதவிகித பாசன நீர் இந்த நதிகளில் இருந்துதான் கிடைக்கின்றன.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு

பட மூலாதாரம், ANI
இந்தியாவின் முடிவை எதிர்த்து சர்வதேச அரங்கில் முறையிட தயாராவதாக பாகிஸ்தான் சட்டத்துறை அமைச்சர் அகீல் பாலிக் திங்கள்கிழமையன்று ராய்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்துள்ளார்.
இந்த ஒப்பந்தத்தை மத்தியஸ்தம் செய்த உலக வங்கியிடம் முறையிடுவது உள்ளிட்ட வெவ்வேறு சட்ட வழிகளை ஆராய்ந்து வருவதாக அகீல் மாலிக் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் மற்றும் நிரந்தர நடுவர் நீதிமன்றம் ஆகியவற்றில் எழுப்ப பாகிஸ்தான் பரிசீலிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 1969 வியன்னா மாநாட்டின் சட்டங்களை இந்தியா மீறியுள்ளதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டலாம் என்கிறார் அவர்.
“பாகிஸ்தான் எந்த வழக்கை கையில் எடுக்கும் என்பது விரைவில் முடிவெடுக்கப்படும். இந்த விவகாரம் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் எழுப்பப்படும். சட்ட உத்திகள் தொடர்பான கலந்துரையாடல்கள் கிட்டத்தட்ட முடிந்துவிட்டன” என்றார் மாலிக்.
எனினும், இந்தியா தரப்பிலிருந்து இது தொடர்பான எந்த அதிகாரப்பூர்வ பதிலும் தற்போது வரை வரவில்லை.
ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபைக்கு செல்லும் வாய்ப்பு

பட மூலாதாரம், Getty Images
இந்த விவகாரத்தை சர்வதேச மன்றங்களில் ராஜ்ஜீய ரீதியாக எழுப்புவது பாகிஸ்தான் முன் உள்ள நான்காவது வாய்ப்பு என்கிறார் அகீல் மாலிக்.
“இந்த விவகாரத்தை ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் எழுப்ப பாகிஸ்தான் பரிசீலித்து வருகிறது. எங்களிடம் அனைத்து வாய்ப்புகளும் உள்ளன. இந்த விவகாரத்தை சரியான அனைத்து மன்றங்களிலும் எழுப்ப முயற்சித்து வருகிறோம்” என்றார் அவர்.
இந்தியா தன்னிச்சையாக இந்த ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்துள்ளதாக குற்றம்சாட்டும் மாலிக் ஒப்பந்தத்தில் அதற்கு எந்த ஷரத்தும் இல்லை என்கிறார்.
மாற்று என்ன?

பட மூலாதாரம், Reuters
இரண்டு நாடுகளும் பதற்றத்தை தணிக்க வேண்டும் என சர்வதேச சமூகம் அழைப்பு விடுத்துள்ளது. பதற்றங்களைத் தணிக்க இந்தியா மற்றும் பாகிஸ்தான் உடன் தனக்குள்ள ராஜ்ஜீய உறவுகளைப் பயன்படுத்த இரான் முன்வந்துள்ளது
புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து இரண்டு நாடுகளுக்கும் இடையே பதற்றத்தைத் தணிக்க முக்கியப் பங்காற்றிய சௌதி அரேபியா பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இந்திய மற்றும் பாகிஸ்தானிடம் பேசியுள்ளது.
பிராந்திய பதற்றங்கள் தொடர்பாக பல்வேறு நாடுகளுடன் பேசுவதை பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சகம் அதிகரித்துள்ளது. கடந்த சில தினங்களில், பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் இஷக் தர் எகிப்து, பஹ்ரைன், கத்தார், குவைத், இரான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட பல்வேறு மத்திய கிழக்கு மற்றும் வளைகுடா நாடுகளின் பிரதிநிதிகளுடன் பேசியுள்ளார்.
சீன வெளியுறவுத் துறை அமைச்சருடனும் தர் பேசியுள்ளார். சீன அரசின் ஊடகமான குளோபல் டைம்ஸ்படி, பஹல்காம் தாக்குதல் பற்றிய நியாயமான விசாரணைக்கு உதவ முன்வந்ததாக சீன வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். மேலும் அவர் இரு நாடுகளும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வை அடைய வேண்டும் எனக் கூறியுள்ளார்.
ராய்டர்ஸ் செய்தி முகமையின்படி, பதற்றத்தை தணிக்க இந்தியா மற்றும் பாகிஸ்தான் தலைவர்களுடன் விரைவில்
அமெரிக்க வெளியுறவுத் துறை செயலாளரும், இந்தியா பாகிஸ்தானிடம் பேசியுள்ளார்.
சிந்து நதிநீர் ஒப்பந்தத்தின் ஷரத்துகள் என்ன?

பட மூலாதாரம், Getty Images
நதிநீர் பகிர்வு தொடர்பான பேச்சுவார்த்தைகள் இரண்டு நாடுகளுக்கும் இடையே ஒன்பது ஆண்டுகள் நடைபெற்று செப்டம்பர் 1960-இல் முன்னாள் பாகிஸ்தான் அதிபர் ஆயுப் கான் மற்றும் இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு இடையே சிந்து நதிநீர் ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த ஒப்பந்தத்தின் கீழ், சிந்து நதிப் படுகையின் கிழக்குப் பகுதியின் சட்லெஜ், ராவி, பியாஸ் ஆகிய மூன்று நதிகள் இந்தியாவுக்கும், மேற்கு நதிகளான சிந்து, ஜீலம், செனாப் ஆகிய மூன்றின் 80% பாகிஸ்தானுக்கும் என ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.
இரண்டு நாடுகளுக்கும் இடையே ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை மற்றும் இடத்தை ஆய்வு செய்வது தொடர்பான ஷரத்துகளும் இந்த ஒப்பந்தத்தில் உள்ளன.
இந்த ஒப்பந்தத்தின்படி, சிந்து ஆணையமும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆணையத்தின கீழ் இரண்டு நாடுகளின் ஆணையர்களும் சந்திப்பார்கள் என முன்மொழியப்பட்டுள்ளது.
ஒரு நாடு செயல்படுத்தும் திட்டங்கள் மீது மற்ற நாட்டிற்கு ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் திட்டத்தை செயல்படுத்தும் நாடு பதிலளிக்க வேண்டும். இதற்கு இரண்டு தரப்புக்கும் இடையே கூட்டங்கள் நடத்தப்படும் எனவும் ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டங்களின் எந்த தீர்வும் எட்டப்படவில்லை என்றால் இரண்டு நாடுகளின் அரசுகளும் இணைந்து அதனை தீர்க்க வேண்டும்.
எந்த சர்ச்சைக்குரிய பிரச்னைகளிலும் ஒரு நடுநிலையான வல்லுநரின் உதவியை கோருவதற்கும் அல்லது நடுவர் நீதிமன்றத்தை நாடுவதற்குமான ஷரத்துகளும் உள்ளன.
– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
SOURCE : THE HINDU