SOURCE :- BBC NEWS

சிஎஸ்கே அணி

பட மூலாதாரம், Getty Images

2024, மே 18 ஆம் தேதி பெங்களூருவில் ஐபிஎல் தொடரில் நடந்தது மீண்டும் நேற்று பெங்களூருவில் நடந்த ஐபிஎல் டி20 லீக் ஆட்டத்திலும் நடந்து “தேஜாவு” நினைவு ஏற்பட்டது.

2024, மே 18 ஆம் தேதியும் ஆர்சிபி, சிஎஸ்கே அணியும் மோதின, கடைசி ஓவரை யாஷ் தயால் வீசி சிஎஸ்கே அணியை ப்ளே ஆஃப் செல்லவிடாமல் தடுத்தார்.

அதேபோன்று நேற்றும் ஆர்சிபி, சிஎஸ்கே அணிகளுக்கு இடையே லீக் ஆட்டம் நடந்தது, கடைசி ஓவரை யாஷ் தயால் வீசி, 15 ரன்களை சிஎஸ்கே பேட்டர்கள் அடிக்கவிடாமல் டிபெண்ட் செய்து 2 ரன்களில் ஆர்சிபி அணியை வெற்றி பெற வைத்தார்.

கடந்த ஆண்டும் யாஷ் தாயால் வீசிய கடைசி ஓவரில் தோனி ஆட்டமிழந்தார், இந்த முறையும் தோனி ஆட்டமிழந்தார்.

பெங்களுருவில் நேற்று நடந்த 52வது லீக் ஆட்டத்தில் சிஎஸ்கே அணியை 2 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது ஆர்சிபி அணி.

முதலில் பேட் செய்த ஆர்சிபி 5 விக்கெட் இழப்புக்கு 213 ரன்கள் சேர்த்தது. 214 ரன்கள் இலக்கை துரத்திய சிஎஸ்கே அணி 5 விக்கெட் இழப்புக்கு 211 ரன்கள் சேர்த்து 2 ரன்களில் தோல்வி அடைந்தது.

கடைசி நேரத்தில் களமிறங்கிய 14 பந்துகளில் அரைசதம் விளாசிய ஆர்சிபி வீரர் ரோமாரியோ ஷெப்பர்ட் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

ஐபிஎல் 2025

பட மூலாதாரம், Getty Images

முதலிடத்தில் ஆர்சிபி

இந்த வெற்றியின் மூலம் ஆர்சிபி அணி 11 போட்டிகளில் 8 போட்டிகளில் வெற்றி பெற்று, 16 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு நகர்ந்தது, நிகர ரன்ரேட்டைப் பொருத்தவரை 0.482 மட்டுமே இருக்கிறது.

இது மும்பை இந்தியன்ஸ், குஜராத் அணியைவிட குறைவாகும். இன்னும் 2 வெற்றிகள் கிடைத்தால் ஆர்சிபி அணியை ப்ளே ஆஃப் சுற்றில் டாப்-2 இடங்களில் அமரவைக்கும்.

இந்த தோல்வியால் தொடர்ந்து 12வது முறையாக 180 ரன்களுக்கு மேல் அடித்த இலக்கை சேஸ் செய்யமுடியாமல் சிஎஸ்கே தோல்வி அடைந்துள்ளது.

ஆர்சிபி அணிக்கு பேட்டிங்கிலும்,பந்துவீச்சிலும் வெற்றி தேடித்தந்தது கடைசி 2 ஓவர்கள்தான். பேட்டிங்கில் ரோமாரியோ ஷெப்பேர்ட் கடைசி 2 ஓவர்களில் அடித்த ரன்களும், பந்துவீச்சில் சூயாஷ் ஷர்மா, தயால் வீசிய 2 ஓவர்களும் திருப்புமுனை.

CSK Vs RCB: ஆர்சிபி 'த்ரில்' வெற்றி - இந்த ஒரு அலட்சியத்தால் தோற்றதா சென்னை?

பட மூலாதாரம், Getty Images

கடைசி 2 ஓவர்கள்

ஆர்சிபி அணி 18-வது ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் சேர்திருந்தது, அடுத்த இரு ஓவர்களிலும் சேர்த்து 184 ரன்களை சேர்க்கும் என கணிக்கப்பட்டது. ஆனால் கலீல் அகமது வீசிய 19-வது ஓவரில் ரோமாரியோ ஷெப்பார்ட் 4 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள் என 33 ரன்களையும், பதிராணா வீசிய கடைசி ஓவரில் 2 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள் என 21 ரன்கள் விளாசி இரு ஓவர்களில் 54 ரன்கள் சேர்த்து 14 பந்துகளில் அரைசதத்தை நிறைவு செய்து 213 ரன்கள் சேர்க்க உதவினார்.

ஐபிஎல் தொடரில் அதிவேகமாக அரைசதம் அடித்ததில் 2வது இடத்தை ரோமாரியோ ஷெப்பார்ட் பிடித்தார். முதலிடத்தில் ஜெய்ஸ்வால் 13 பந்துகளில் அரைசதம் அடித்த நிலையில் ஷெப்பர்ட் 14 பந்துகளில் அரைசதம் அடித்தார். இதற்கு முன் ஆர்சிபி அணிக்காக அதிவேக அரைசதமாக கெயில் 17 பந்துகளில் அடித்திருந்தார், அதை ஷெப்பர்ட் முறியடித்து விட்டார்.

அதேபோல ஆர்சிபி பந்துவீச்சிலும் சூயாஷ் ஷர்மா வீசிய 18வது ஓவரும், யாஷ் தயால் வீசிய 20வது ஓவரும் ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தின. கடைசி 3 ஓவர்களில் சிஎஸ்கே வெற்றிக்க 35 ரன்கள் தேவைப்பட்டது.

களத்தில் தோனி, ஜடேஜா இருந்தனர், இரு பெரிய ஃபினிஷர்கள் களத்தில் இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தோனி களமிறங்கியதும் சுழற்பந்துவீச்சாளர் சூயாஷ் ஷர்மாவை பந்துவீச அழைத்தனர். இளம் சுழற்பந்துவீச்சாளர் சூயாஷ் சர்மா தனது ஓவரில் ஒரு பவுண்டரிகூட அடிக்கவிடாமல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து சிஎஸ்கே அணியை நெருக்கடியில் தள்ளினர்.

புவனேஷ்வர் வீசிய 19வது ஓவரில் தோனி ஒரு சிக்ஸர், ஜடேஜா ஒரு பவுண்டரி என 14 ரன்கள் சேர்த்தனர்.

CSK Vs RCB: ஆர்சிபி 'த்ரில்' வெற்றி - இந்த ஒரு அலட்சியத்தால் தோற்றதா சென்னை?

பட மூலாதாரம், Getty Images

கடைசி ஓவர்

கடைசி ஓவரில் சிஎஸ்கே வெற்றிக்கு 15 ரன்கள் தேவைப்பட்டது, யாஷ் தயால் பந்துவீசினார். யாஷ் தயால் முதல் இரு பந்துகளை யார்கராக வீசவே தோனி, ஜடேஜா தலா ஒரு ரன் சேர்த்தனர்.

3வது பந்தில் தோனியை கால்காப்பில் வாங்க வைத்து தயால் ஆட்டமிழக்கச் செய்யவே ரசிகர்களின் சத்தத்தால் அரங்கமே அதிர்ந்தது.

இம்பாக்ட் வீரராக வந்த ஷிவம் துபே 4வது பந்தில் சிக்ஸர் விளாசவே ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது, 4வது பந்து ஃபுல்டாஸாக வந்ததால் நோபாலாகவும் மாறியது. இதனால் துபே ப்ரீஹி்ட்டில் மற்றொரு சிக்ஸர் விளாசி ஆட்டத்தை முடித்துவிடுவார் என்று நினைத்த நேரத்தில் ப்ரீஹிட்டில் துபே ஒரு ரன் அடித்தார்.

அதன்பின் கடைசி 2 பந்துகளில் சிஎஸ்கே வெற்றிக்கு 5 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் தயால் யார்கராக பந்துவீசவே துபே ஒரு ரன்னும், கடைசிபந்திலும் தயால் யார்கர் விளாச ஜடேஜா ஒரு ரன்னும் எடுக்கவே, ஆர்சிபி அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

CSK Vs RCB: ஆர்சிபி 'த்ரில்' வெற்றி - இந்த ஒரு அலட்சியத்தால் தோற்றதா சென்னை?

பட மூலாதாரம், Getty Images

கோலிக்கு ஆரஞ்சு தொப்பி

விராட் கோலி நேற்று 33 பந்துகளில் 63 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். முதல் விக்கெட்டுக்கு ஜேக்கப் பெத்தலுடன் சேர்ந்து 97 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து வலுவான அடித்தளம் அமைத்தார்.

கோலி சேர்த்த 63 ரன்களில் 5 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகள் என 187 ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடினார். இதன் மூலம் ஐபிஎல் தொடரில் 505 ரன்கள் சேர்த்து சாய் சுதர்ஸனை முந்தி கோலி ஆரஞ்சு தொப்பியைக் கைப்பற்றினார்.

இந்த சீசனில் கோலி 7வது முறையாக 50க்கும் மேற்பட்ட ரன்களை அவர் விளாசியுள்ளார். இந்த 7 ஆட்டங்களிலும் ஆர்சிபி அணி வென்றுள்ளது.

அது மட்டுமல்லாமல் ஐபிஎல் தொடரில் 8-வது முறையாக கோலி 500க்கும் மேற்பட்ட ரன்களை குவித்துள்ளார். மேலும் சிஎஸ்கே அணிக்கு எதிராக கோலி 1,146 ரன்கள் சேர்த்து, அந்த அணிக்கு எதிராக அதிகபட்ச ரன்கள் சேர்த்த பேட்டர் என்ற பெருமையைப் பெற்றார்.

கோலி நேற்று முக்கியமான கட்டத்தில் பவுண்டரி அருகே கேட்சை கோட்டை விட்டு பவுண்டரியும் செல்லவிட்டது ஆட்டத்தில் நெருக்கடியை ஏற்படுத்தியது, ஒருவேளை ஆர்சிபி தோல்வி அடைந்திருந்தால், அதற்கான ஒட்டுமொத்த பழியும் கோலி மீது விழுந்திருக்கும்.

கோலி மட்டும் அந்தக் கேட்சை பிடித்திருந்தால் ஜடேஜா ஆட்டமிழந்திருப்பார், ஆர்சிபி வென்றிருக்கும் என்ற ஊகம் கிளம்பி இருக்கும். கோலி கேட்ச் விட்டு, பவுண்டரி சென்றதைப் பார்த்த கேப்டன் பட்டிதார் தலையில் கை வைத்தார்.

ஐபிஎல் 2025

பட மூலாதாரம், Getty Images

3 பேட்டர்கள் அரைசதம்

முதலில் பேட் செய்த ஆர்சிபி அணியில் படிக்கல்(17), பட்டிதார்(11) ஜிதேஷ்(7) என சொற்பமாக ஆட்டமிழந்தனர். இங்கிலாந்து வீரர் ஜேக்கப் பெத்தல் 28 பந்துகளில் தனது 2வது ஆட்டத்திலேயே அரைசதம் அடித்தார், 21 வயது 192 நாட்களில் ஐபிஎல் தொடரில் முதல் அரைசதத்தை விளாசியுள்ளார். இவருக்கு முன்பாக குறைந்தவயதில் சாம் கரன்(20வயது), குர்பாஸ்(21வயது 129நாட்கள்) அரைசதம் அடித்திருந்தனர்.

ஆர்சிபி பேட்டர்கள் 3 பேர் கோலி(62), பெத்தல்(55), ஷெப்பர்ட்(53) அரைசதம் அடித்தனர்.

ஐபிஎல் 2025

பட மூலாதாரம், Getty Images

ஆட்டத்தை மாற்றிய ஷெப்பர்ட்

ஆர்சிபி அணிக்கு கோலி, பெத்தல் நல்ல அடித்தளம் அமைத்துக்கொடுத்தபின் நடுவரிசை வீரர்கள் விரைவாக விக்கெட்டுகளை இழக்கவே ஸ்கோர் மந்தமானது. 11ஓவர்கள் முதல் 18வது ஓவர்கள்வரை 4 விக்கெட்டுகளை இழந்து 45 ரன்களை மட்டுமே ஆர்சிபி சேர்த்தது. 157 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை ஆர்சிபி இழந்திருந்தது.

கடைசி 14 பந்துகள் மீதமிருக்கும் நிலையில் ஷெப்பர்ட் களமிறங்கினார். கடைசி 2 ஓவர்களில் ஷெப்பர்ட் 54 ரன்கள் விளாசினார். கலீல் அகமது வீசிய 19-வது ஓவரில் 4 சிக்ஸர்கள், 2பவுண்டரிகள் என 33 ரன்களையும், பதிராணா வீசிய கடைசி ஓவரில் 2சிக்ஸர், 2 பவுண்டரி என அருமையான ஃபினிஷிங் செய்தார்.

பிபிசி தமிழ் வாட்ஸ் ஆப் சேனல்

சிஎஸ்கே அணிக்கு கிடைத்த அடுத்த முத்து

சிஎஸ்கே அணிக்கு ஏற்கெனவே நடுவரிசையில் பிளாஸ்டர் பேட்டர் பிரெவிஸ் கிடைத்துள்ள நிலையில் அடுத்ததாக அருமையான தொடக்க ஆட்டக்காரர் ஆயுஷ் மாத்ரே கிடைத்துள்ளார்.

ஆயுஷ் மாத்ரே, 25 பந்துகளில் அரைசதத்தையும், 48 பந்துகளில் 94 ரன்கள்(5 சிக்ஸர், 9பவுண்டரி) சேர்த்து ஆட்டமிழந்தார்.

சிஎஸ்கே அணி சீசன் தொடக்கத்திலேயே ஆயுஷ் மாத்ரேவை களமிறக்கி இருக்க வேண்டும்.

CSK Vs RCB: ஆர்சிபி 'த்ரில்' வெற்றி - இந்த ஒரு அலட்சியத்தால் தோற்றதா சென்னை?

பட மூலாதாரம், Getty Images

ஐபிஎல் தொடரில் இளம்வயதில் அரைசதம் அடித்த 3வது பேட்டராக ஆயுஷ் மாத்ரே(17வயது291 நாட்கள்) இடம் பெற்றார். இதற்கு முன்பாக வைபவ் ரகுவன்ஷி(14வயது 32நாட்கள்), ரியான் பராக்(17வயது 175 நாட்கள்) ஆகியோர் இளம் வயதில் அரைசதம் அடித்திருந்தனர்.

சிஎஸ்கே அணி அடுத்த சீசனில் கெய்க்வாட்டுடன் இணைந்து களமிறங்க அதிரடியான பேட்டரான ஆயுஷ் மாத்ரேவை கண்டுபிடித்துள்ளது. புவனேஷ்வர் வீசிய ஓவரில் 5 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் என 26 ரன்களை மாத்ரே விளாசினார்.

ஜடேஜாவுடன் சேர்ந்து ஆயுஷ் மாத்ரே அமைத்த 114 ரன்கள் பார்ட்னர்ஷிப் ஆட்டத்தின் போக்கை மாற்றியது. ரவீந்திர ஜடேஜாவும் 29 பந்துகளில் அரைசதம் அடித்து ஐபிஎல் தொடரில் தனது அதிகபட்ச ஸ்கோரான 77 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

29 பந்துகளில் அரைசதம் அடித்த ஜடேஜா, அடுத்த 16 பந்துகளில் 27 ரன்கள் மட்டுமே சேர்த்து ரன்சேர்ப்பில் மந்தத்தை ஏற்படுத்தினார். ஜடேஜா கடைசி வரை ஒரே சீராக அடித்து ஆடியிருந்தால் நிச்சயமாக ஸ்கோரில் மாற்றம் ஏற்பட்டிருக்கும். ஜடேஜாவுக்கு நேற்றைய ஆட்டத்தில் 3 கேட்சுகளை ஆர்சிபி வீரர்கள் கோட்டைவிட்டும் அதை பயன்படுத்தவில்லை.

சிஎஸ்கே அணியில் ஆயுஷ் மாத்ரே, ஜடேஜா இருவரைத் தவிர மற்ற பேட்டர்கள் பெரிதாக ரன்களையும் சேர்க்கவில்லை. ரஷீத்(14), சாம்கரன்(5), பிரெவிஸ்(0), தோனி(12) என சொற்ப ரன்களில் வீழ்ந்தனர்.

CSK Vs RCB: ஆர்சிபி 'த்ரில்' வெற்றி - இந்த ஒரு அலட்சியத்தால் தோற்றதா சென்னை?

பட மூலாதாரம், Getty Images

பிரெவிஸ் அவுட்

லுங்கி இங்கிடி வீசிய 17வது ஓவரில் மாத்ரே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்ததும், அடுத்து டெவால்ட் பிரெவிஸ் களமிறங்கினார்.

முதல் பந்தை இங்கிடி ஃபுல்டாஸாக விசவே, அதை தடுக்கும் முயற்சியில் பிரெவிஸ் கால்காப்பில் வாங்கினார். லுங்கி இங்கிடி அவுட் கேட்டு முறையிடவே களநடுவரும் அவுட் வழங்கினார். இதைப் பார்த்த பிரெவிஸ், மிகவும் ரிலாக்ஸாக நடந்து வந்து, ஜடேஜாவிடம் பேசிவிட்டுவந்து, டிஆர்எஸுக்கு அப்பீல் செய்தார்.

ஆனால், நடுவரோ டிஆர்ஸ் முடிவுக்கு அப்பீல் செய்ய வேண்டுமென்றால், ஆட்டமிழந்ததாக அறிவிக்கப்பட்ட 10 வினாடிகளுக்குள் டிஆர்எஸ் எடுக்க வேண்டும், ஆனால், 25 வினாடிகளுக்கு பின் டிஆர்எஸ் எடுக்க விதிகளில் இல்லை எனத் தெரிவித்தனர். இதனால் விரக்தியுடன் பிரெவிஸ் வெளியேறினார். ஒருவேளை பிரெவிஸ் ஆட்டமிழக்கமல் இருந்தால், சிஎஸ்கே வெற்றி பெற்றிருக்கவும் வாய்ப்பு இருந்தது. பிரெவிஸின் கடைசி நேர அவுட், சிஎஸ்கே அணியின் தோல்விக்கு ஒருவிதத்தில் காரணமாகும்.

CSK Vs RCB: ஆர்சிபி 'த்ரில்' வெற்றி - இந்த ஒரு அலட்சியத்தால் தோற்றதா சென்னை?

பட மூலாதாரம், Getty Images

‘தோல்விக்கு நானே பொறுப்பு’

தோல்விக்குப்பின் சிஎஸ்கே கேப்டன் தோனி அளித்த பேட்டியில் ” நான் களத்தில் இருந்தபோது, 2 அல்லது அதற்கு மேற்பட்ட ஷாட்களை பெரிய ஷாட்களாக மாற்றியிருந்தால் அழுத்தத்தைக் குறைத்திருக்கலாம் என உணர்கிறேன். ஆதலால், தோல்விக்கு நானே பொறுப்பேற்கிறேன். டெத் ஓவர்களில் ஷெப்பர்ட் அருமையாக பேட் செய்தார், நாங்கள் எப்படி பந்துவீசினாலும் அடித்தார். அதிகமான யார்கர்களை வீச இன்னும் பயிற்சி எடுக்க வேண்டும். யார்கர்களை வீசமுடியாவிட்டால் அது ஃபுல்டாஸாகி பேட்டர்களுக்கு வாய்ப்பாகிவிடும். பதிராணா பந்துவீச்சில் வேகம் இருக்கிறது, பவுன்ஸர் வீசுகிறார், யார்கர் இல்லை. பெரும்பாலான பேட்டர்கள் பேடில் ஸ்கூப் ஷாட் அடித்து பழகவில்லை, தற்போதுதான் பயிற்சி எடுக்கிறார்கள். பெரும்பாலும் ரிஸ்கான ஷாட் என்பதால் அதற்கு பேட்டர்கள் செல்வதில்லை. பேட்டிங்கில் நாங்கள் இன்னும் பின்தங்கியிருந்தோம். ஆனால், இன்று பேட்டிங் பிரிவு சிறப்பாக செயல்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

இன்றைய ஆட்டம்

கொல்கத்தா vs ராஜஸ்தான்

இடம்: கொல்கத்தா

நேரம்: மாலை 3.30

பஞ்சாப் vs லக்னெள

இடம்: தரம்சலா

நேரம்: இரவு 7.30

மும்பையின் அடுத்த ஆட்டம்

மும்பை இந்தியன்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ்

நாள் – மே 6

இடம் – மும்பை

நேரம்- இரவு 7.30 மணி

சிஎஸ்கேயின் அடுத்த ஆட்டம்

கொல்கத்தா vs சிஎஸ்கே

நாள் – மே 7

இடம் – கொல்கத்தா

நேரம்- இரவு 7.30 மணி

ஆர்சிபியின் அடுத்த ஆட்டம்

ஆர்சிபி vs லக்னெள

நாள் – மே 9

இடம் – லக்னெள

நேரம்- இரவு 7.30 மணி

ஆரஞ்சு தொப்பி யாருக்கு?

விராட் கோலி(ஆர்சிபி) 505 ரன்கள்(11 போட்டிகள்)

சாய் சுதர்ஸன்(குஜராத் டைட்டன்ஸ்)-504 ரன்கள்(10 போட்டிகள்)

சூர்யகுமார் யாதவ்(மும்பை இந்தியன்ஸ்) 475 (11 போட்டிகள்)

பர்ப்பிள் தொப்பி யாருக்கு?

பிரசித் கிருஷ்ணா (குஜராத்) 19 விக்கெட்டுகள்(10 போட்டிகள்)

ஜோஷ் ஹேசல்வுட் (ஆர்சிபி) 18 விக்கெட்டுகள்(10 போட்டிகள்)

நூர் அகமது (சிஎஸ்கே) 16 விக்கெட்டுகள்(11 போட்டிகள்)

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

SOURCE : THE HINDU