SOURCE :- BBC NEWS

பட மூலாதாரம், Getty Images
லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியின் டாப் ஆர்டர் பேட்டர் 3 பேர் பவர்ப்ளே ஓவருக்குள் ஆட்டமிழக்கச் செய்து லக்னெளவின் தோல்வியை உறுதி செய்தார் பஞ்சாப் கிங்ஸ் வேகப்பந்துவீச்சாளர் அர்ஷ்தீப் சிங்.
தரம்சாலாவில் நேற்று நடந்த ஐபிஎல் லீக் ஆட்டத்தில் லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியை 37 ரன்களில் தோற்கடித்தது பஞ்சாப் கிங்ஸ். 5 விக்கெட் இழப்புக்கு 236 ரன்கள் சேர்த்தது பஞ்சாப் அணி. 237 ரன்கள் இலக்கை துரத்திய லக்னெள அணி 7 விக்கெட் இழப்புக்கு 199 ரன்கள் சேர்த்து 37 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
ப்ளே ஆஃப் வாய்ப்பு பிரகாசம்
இந்த வெற்றியின் மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணி 11 போட்டிகளில் 7 வெற்றிகளுடன் 15 புள்ளிகள் பெற்று 2வது இடத்துக்கு நகர்ந்து ப்ளே ஆஃப் சுற்றை தக்கவைத்துள்ளது.
இருப்பினும் இன்னும் 2 வெற்றிகள் அந்த அணிக்கு ப்ளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்யும். பஞ்சாப் அணி புள்ளிகள் அடிப்படையில் 2வது இடத்தில் இருந்தாலும், அதன் நிகர ரன்ரேட் 0.376 என்று மும்பை(1.274), குஜராத் (0.867) அணிகளைவிடவும் குறைவாக இருக்கிறது.
அடுத்துவரும் போட்டிகளில் ரன்ரேட்டை உயர்த்தும் அளவுக்கு பெரிய வெற்றிகளைப் பெற வேண்டியது அவசியமாகும்.
அதேசமயம், லக்னெள அணி 11 போட்டிகளில் 5 வெற்றிகளுடன் 10 புள்ளிகள் பெற்று 7வது இடத்தில் இருக்கிறது நிகர ரன்ரேட்டும் மைனஸ் 0.456 ஆகக் குறைந்துவிட்டது.
அடுத்துவரும் 3 போட்டிகளிலும் கட்டாயமாக பெரிய வெற்றிகளைப் பெற்று நிகர ரன்ரேட்ட உயர்த்தினால் ப்ளே ஆஃப் சுற்று நிலவரம் தெரியவரும். 16 புள்ளிகள் என்பது கூட இப்போதுள்ள நிலைமையில் சாத்தியமில்லாததாகத் தெரிகிறது.
ஆதலால், லக்னெள அணி 16 புள்ளிகளுடன், நல்ல ரன்ரேட் பெற்றால் வாய்ப்பு கிடைக்கலாம் அல்லது கிடைக்காமலும் போகலாம்

பட மூலாதாரம், Getty Images
பஞ்சாப் அணியின் ‘மற்றொரு சேவாக்’
பஞ்சாப் அணியின் முன்னாள் கேப்டன் வீரேந்திர சேவாக் இருந்தபோது தொடக்க ஆட்டம் மிக வலிமையாக இருந்தது. அதே காலகட்டத்தை தற்போது பிரப்சிம்ரன் இருக்கும்போது பஞ்சாப் அணி பெற்றுள்ளது.
பிரப்சிம்ரன் இதுவரை சர்வதேச போட்டிகளில் எதிலும் விளையாடாத அன்கேப்டு வீரர், இருப்பினும் ஐபிஎல் தொடரில் சர்வதேச பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சை வெளுத்து வாங்குகிறார்.
இந்த ஆட்டத்தில் 30 பந்துகளில் அரைசதம் அடித்த பிரப்சிம்ரன் சிங், 48 பந்துகளில் 91 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார், ஆட்டநாயகன் விருதையும் வென்றார். இதில் 7 சிக்ஸர்கள், 6 பவுண்ரிகள். 30 பந்துகளில் அரைசதம் அடித்த பிரப்சிம்ரன், அடுத்த 18 பந்துகளில் 41 ரன்களைச் சேர்த்து 9 ரன்களில் சதத்தை தவறவிட்டார்.
முதல் தரப்போட்டிகளிலும், லிஸ்ட் ஏ போட்டிகளிலும் 50 ஆட்டங்களுக்கும் குறைவாகவே பிரப்சிம்ரன் பங்கேற்றுள்ளார். இருப்பினும் பிரப்சிம்ரன் ஆட்டத்தின் மீது நம்பிக்கை வைத்து 2019ம் ஆண்டு ஏலத்திலேயே ரூ.4.80 கோடிக்கு பஞ்சாப் அணி வாங்கியது.
2019ம் ஆண்டே பஞ்சாப் அணியால் வாங்கப்பட்ட பிரப்சிம்ரனுக்கு சரியான வாய்ப்புகள் வழங்கப்படவில்லை, 2023 சீசனில் இருந்துதான் பஞ்சாப் அணி பிரப்சிம்ரனை அனைத்துப் போட்டிகளிலும் பயன்படுத்தத் தொடங்கியது.
கடந்த 3 சீசன்களிலும் சேர்த்து பிரப்சிம்ரன் சிங் 1,100 ரன்களுக்கு மேல் குவித்துள்ளார். இதன் மூலம் அன்கேப்டு வீரர் ஒருவர் ஐபிஎல் டி20 போட்டியில் 1,100 ரன்களுக்கு மேல் சேர்த்த முதல் பேட்டர் என்ற பெருமையை பிரப்சிம்ரன் சிங் பெற்றார்.
நடப்பு சீசனிலும் 11 போட்டிகளில் ஆடிய பிரப்சிம்ரன் சிங் இதுவரை 4 அரைசதம் உள்பட 437 ரன்கள் குவித்துள்ளார். இன்னும் 3 போட்டிகளும், ப்ளே ஆஃப் சுற்றுகளும் உள்ளதால் இவரின் ரன் கணக்கு இன்னும் அதிகரிக்கும்.

பட மூலாதாரம், Getty Images
பஞ்சாப் அணியில் தொடக்க ஆட்டக்காரர் பிரயன்ஸ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங் ஆட்டம் அந்த அணிக்கு மிகப்பெரிய தூணாக அமைந்துள்ளது.
தொடக்க ஆட்டக்காரர்கள் வலுவான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தாலே அடுத்து களமிறங்கும் வீரர்கள் மீது அழுத்தம் இருக்காமல், நிதானமாக நினைத்த ஷாட்களை ஆடி ஸ்கோரை உயர்த்த முடியும்.
அந்தப் பணியை பிரப்சிம்ரன் சிங் செய்துள்ளார்.ஒரு காலத்தில் பஞ்சாப் அணிக்கு சேவாக் அளித்த அதிரடியான தொடக்கத்தை தற்போது பிரப்சிம்ரன் அளித்து வருகிறார்.
பஞ்சாப் அணி மட்டும் நேற்றைய ஆட்டத்தில் 18 பவுண்டரி, 16 சிக்ஸர்களை விளாசி 200 ரன்களுக்கு மேல் 11 வது முறையாகக் குவித்தது. இந்த சாதனையை மும்பை அணிக்கு அடுத்தார்போல் பஞ்சாப் அணி செய்துள்ளது.
பிரப்சிம்ரன் சிங் ஆட்டம் தொடங்கியதிலிருந்தே அதிரடியாக பேட் செய்தார். பிரப்சிரம்ரன் 22 ரன்களில் இருந்தபோது ஆட்டமிழந்திருக்க வேண்டும், ஆனால் நிகோலஸ் பூரன் கேட்சை தவறவிட்டார். தனக்குக் கிடைத்த வாய்ப்பை வலுவாகப் பயன்படுத்திய பிரப்சிம்ரன் 91 ரன்களைக் குவித்து பெரிய ஸ்கோருக்கு அடித்தளமிட்டார்.
ஸ்ரேயாஸ் அய்யர்(45), இங்கிலிஸ்(30) இருவரும் நடுப்பகுதயில் ஸ்கோரை உயர்த்த உதவினர். கேப்டனுக்குரிய பொறுப்புடன் ஆடிவரும் ஸ்ரேயாஸ் அய்யர் தன்னுடைய இடத்தில் இங்கிலிஸை களமிறக்கி ஆடவைத்து பின்வரிசையில் களமிறங்கினார்.
கடைசி நேரத்தில் சஷாங் சிங் கேமியோ ஆடி 15 பந்துகளில் 33 ரன்கள் சேர்த்தார்.

பட மூலாதாரம், Getty Images
அர்ஷ்தீப் எனும் பிரம்மாஸ்திரம்
பஞ்சாப் அணிக்கு பந்துவீச்சில் கிடைத்திருக்கும் பிரம்மாஸ்திரம் அர்ஷ்தீப் சிங். 2019ம் ஆண்டிலிருந்து பஞ்சாப் அணியில் அர்ஷ்தீப் சிங் நீடித்து வருகிறார். இதுவரை பஞ்சாப் அணிக்காக மட்டும் 92 விக்கெட்டுகளை அர்ஷ்தீப் வீழ்த்தியுள்ளார்.
இந்த சீசனிலும் இதுவரை 16 விக்கெட்டுகளை அர்ஷ்தீப் வீழ்த்தியுள்ளார். புதிய பந்தில் இடதுகை, வலது கைபேட்டர்களுக்கு ஏற்றவாறு பந்தை ஸ்விங் செய்து வீசுவதில் சிறப்பானவர் அர்ஷ்தீப் சிங்.
இந்த ஆட்டத்தில் பவர்ப்ளே ஓவர்கள் முடிவதற்குள் லக்னெள அணிக்கு தூண்களாக இருக்கும் டாப்ஆர்டர் பேட்டர்கள் எய்டன் மார்க்ரம்(13), மார்ஷ்(0), நிகோலஸ் பூரன்(6) ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தி லக்னெள அணியின் தோல்வியை ஏறக்குறைய உறுதி செய்தார். 38 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து லக்னெள அணி தடுமாறியது.
இதைப் பயன்படுத்தி தொடர்ந்து பஞ்சாப் அணி நெருக்கடியளிக்க, கேப்டன் ரிஷப் பண்ட்(18), மில்லர்(11) என ஓமர்சாய் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தவுடன் லக்னெள தோல்வி உறுதியானது.
237 ரன்களை சேஸ் செய்யும் போராட்டத்தில் லக்னெள அணி 5 விக்கெட் இழப்புக்கு 75 ரன்கள் என்று போராடியது. அப்துல் சமது(45), ஆயுஷ் பதோனி(74) ஆகியோர் இறுதிவரை தங்களால் முடிந்த பங்களிப்பை அளித்து 41 பந்துகளில் 81 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.

பட மூலாதாரம், Getty Images
லக்னெளவின் கவலைகள்
காயத்திலிருந்து மீண்டுவந்த மயங்க் யாதவை அணியில் சேர்த்தது லக்னெள அணி. கடந்த சீசனில் இருந்து பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய மயங்க் யாதவ் பந்துவீச்சை பிரப்சிம்ரன் வெளுத்துவிட்டார்.
4 ஓவர்கள் வீசிய மயங்க் 60 ரன்களை வாரி வழங்கினார். ஆவேஷ் கான் 19வது ஓவரில் மட்டும் 26 ரன்களை விட்டுக்கொடுத்தார் , இதில் 3 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் சென்றது.
பஞ்சாப் அணியில் ஆகாஷ் சிங் மட்டுமே ஓவருக்கு 7 ரன்ரேட்டில் பந்துவீசினார், மற்ற பந்துவீச்சாளர்கள் ஓவருக்கு 14 ரன்ரேட்டில் பந்துவீசினர்.
பேட்டர்களில் நிகோலஸ் பூரன் முதல் 6 போட்டிகளில் லக்னெளவின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருந்து அதிரடியாக பேட் செய்தார். முதல் 6 போட்டிகளில் 4 அரைசதங்களையும், ஒரு 44 ரன்கள், 12 ரன்கள் என 349 ரன்கள் சேர்த்து 69 சராசரி வைத்திருந்தார். நிகோலன் பூரனின் அதிரடி ஆட்டம் எதிரணிகளுக்கு பெரிய சவாலாக இருந்தது.

பட மூலாதாரம், Getty Images
ஆனால் கடந்த 5 போட்டிகளில் நிகோலஸ் பூரன் அதிபட்சமாக 27 ரன்களைக் கடக்கவில்லை, 5 போட்டிகளில் 61 ரன்கள் மட்டுமே சேர்த்து 12.2 ரன்கள் சராசரி வைத்துள்ளார். அதேபோல மிட்ஷெல் மார்ஷ் 2வது பகுதியிலும் பெரிதாக சோபிக்காதது அந்த அணிக்கு பெரிய பின்னடைவு.
இதைவிட முக்கியமானது அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் இந்த சீசனில் இதுவரை ஒரு அரைசதம் மட்டுமே அடித்துள்ளார்.
இந்த சீசனில் 11-வது போட்டியில் 9வது முறையாக 25 ரன்களுக்கும் குறைவாக ரிஷப் பண்ட்நேற்று சேர்த்தார்.
ஐபிஎல் ஏலத்தில் அதிகமான தொகைக்கு ரிஷப் பண்ட் வாங்கப்பட்ட அழுத்தம் காரணமாக, அணியை வழிநடத்துவதிலும், ரன்களைச் சேர்ப்பதிலும் கடும் நெருக்கடியை எதிர்கொள்கிறார்.

பட மூலாதாரம், Getty Images
கடின உழைப்புக்கு பலன்
வெற்றிக்குப்பின் பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயாஸ் கூறுகையில் ” வீரர்கள் ஒவ்வொருவரும் சரியான நேரத்தில் விஸ்வரூமெடுக்கிறார்கள், அருமையாக பங்களிப்பு செய்கிறார்கள். பிரப்சிம்ரன், அர்ஷ்தீப் ஆட்டம் அருமையாக இருந்தது. களத்தில் இறங்கும்போது வெல்லவேண்டும் என்ற எண்ணத்தோடு வருகிறோம். அதில் புள்ளிவிவரங்களைப் பற்றி நாங்கள் யோசிப்பதில்லை, எந்த ஸ்கோர் எடுத்தாலும் அதை டிபெண்ட் செய்ய வேண்டும். கடின உழைப்புக்கு பலன் கிடைத்து வருகிறது. ஒவ்வொரு வீரரும் சிறப்பான பங்களிப்பு செய்கிறார்கள். விழிப்புணர்வோடு இருக்கவேண்டும். புள்ளிவிவரங்களைப் பற்றி கவலைப்படதீர்கள், வெற்றி மட்டுமே முக்கியம் என்று வீரர்களிடம் தெரிவித்துள்ளோம்” எனத் தெரிவித்தார்.

பட மூலாதாரம், Getty Images
இன்றைய ஆட்டம்
சன்ரைசர்ஸ் vs டெல்லி கேபிடல்ஸ்
இடம்: ஹைதராபாத்
நேரம்: இரவு 7.30
மும்பையின் அடுத்த ஆட்டம்
மும்பை இந்தியன்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ்
நாள் – மே 6
இடம் – மும்பை
நேரம்- இரவு 7.30 மணி
சிஎஸ்கேயின் அடுத்த ஆட்டம்
கொல்கத்தா vs சிஎஸ்கே
நாள் – மே 7
இடம் – கொல்கத்தா
நேரம்- இரவு 7.30 மணி
ஆர்சிபியின் அடுத்த ஆட்டம்
ஆர்சிபி vs லக்னெள
நாள் – மே 9
இடம் – லக்னெள
நேரம்- இரவு 7.30 மணி
ஆரஞ்சு தொப்பி யாருக்கு
விராட் கோலி(ஆர்சிபி) 505 ரன்கள்(11 போட்டிகள்)
சாய் சுதர்ஸன்(குஜராத் டைட்டன்ஸ்)-504 ரன்கள்(10 போட்டிகள்)
சூர்யகுமார் யாதவ்(மும்பை இந்தியன்ஸ்) 475 (11 போட்டிகள்)
பர்ப்பிள் தொப்பி
பிரசித் கிருஷ்ணா (குஜராத்) 19 விக்கெட்டுகள்(10 போட்டிகள்)
ஜோஷ் ஹேசல்வுட் (ஆர்சிபி) 18 விக்கெட்டுகள்(10 போட்டிகள்)
அர்ஷ்தீப் சிங்(பஞ்சாப்) 16 விக்கெட்டுகள்(11போட்டிகள்)
– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
SOURCE : THE HINDU