SOURCE :- BBC NEWS

இந்தியா, பாகிஸ்தான், இரான்

பட மூலாதாரம், Reuters

இரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராரக்சி திங்கள்கிழமையன்று பாகிஸ்தானுக்கு வருகை தந்தார். இந்த வாரத்தில் அவர் இந்தியாவுக்கும் பயணம் செய்ய உள்ளார்.

அரக்சி இந்தியாவுக்கு வருவது முன்கூட்டியே திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் தற்போது அவர் இந்தியா வருவதற்கு முன்பு பாகிஸ்தான் சென்றுவிட்டார்.

பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே அதிகரித்த பதற்றத்தைக் கருத்தில் கொண்டு, அரக்சி ஏற்கனவே இரு நாடுகளுக்கும் இடையில் மத்தியஸ்தம் செய்ய முன்மொழிந்துள்ளார்.

இந்தியாவையும் பாகிஸ்தானையும் தனது ‘சகோதர அண்டை நாடுகள்’ என்று அரக்சி விவரித்திருந்தார்.

அப்பாஸ் அரக்சி திங்கட்கிழமை பாகிஸ்தான் பயணத்திற்குப் பிறகு இரானுக்குத் திரும்புகிறார், அங்கிருந்து அவர் மீண்டும் இந்தியாவுக்கு வர உள்ளார்.

இந்தியா, பாகிஸ்தான், இரான்

பட மூலாதாரம், REX/Shutterstock

ஏன் பாகிஸ்தானிலிருந்து நேரடியாக இந்தியாவிற்கு வரவில்லை?

அராக்சி பாகிஸ்தானுக்கும் இந்தியாவிற்கும் ஒரே நேரத்தில் பயணம் செய்யவில்லை என்பது தான் இதன் பொருள்.

பாகிஸ்தானிலிருந்து நேரடியாக இந்தியாவிற்கு வர வேண்டாம் என்று இந்தியா அவரிடம் கேட்டிருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

இந்திய உலக விவகார கவுன்சிலின் மூத்த உறுப்பினரும் சர்வதேச விவகார நிபுணருமான ஃபஸ்ஸூர் ரஹ்மான் சித்திக் இதுகுறித்து கூறுகையில், “இரானிய வெளியுறவுத் துறை அமைச்சர் பாகிஸ்தானிலிருந்து நேரடியாக இந்தியா வர வேண்டாம் என்று இந்தியா இரானுக்கு ஒரு செய்தியை அனுப்பியிருக்க வேண்டும். அதனால்தான் அவர் முதலில் தெஹ்ரானுக்குத் திரும்பி பின்னர் இந்தியா வர முடிவு செய்திருக்கிறார்.” என்கிறார்.

பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, பாகிஸ்தான் வெளியுறவுத் அமைச்சர் இஷாக் தார், பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் மற்றும் அதிபர் ஆசிப் அலி சர்தாரி ஆகியோரை இரானிய வெளியுறவுத் துறை அமைச்சர் சந்திப்பார்.

“இந்த கடினமான நேரத்தில் இரு நாடுகளுக்கும் இடையே சிறந்த புரிந்துணர்வை உருவாக்க இரான் புது டெல்லி மற்றும் இஸ்லாமாபாத்தில் உள்ள அதன் அலுவலகங்கள் மூலம் பணியாற்றத் தயாராக உள்ளது” என்று பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு, ஏப்ரல் 25 அன்று சமூக ஊடக தளமான எக்ஸில் வெளியிட்ட ஒரு பதிவில் அராக்சி கூறியிருந்தார்.

இரான் சமநிலையை பராமரிக்க முயற்சிக்கிறதா?

இந்தியா, பாகிஸ்தான், இரான்

பட மூலாதாரம், ANI

கடந்த ஒரு வாரத்திற்குள், இரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மற்றும் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் இஷாக் தார் ஆகியோருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

இதற்கிடையில், இரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியன் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியை அழைத்து பஹல்காம் தாக்குதலுக்கு தமது கண்டனத்தை தெரிவித்ததோடு, இந்தியாவுடனான பதற்றம் குறித்து பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப்புடன் விவாதித்தார்.

அதாவது இரான் இந்தியா மற்றும் பாகிஸ்தானுடன் சமநிலையை உருவாக்க முயற்சிக்கிறது.

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்த பதற்றம் மற்றும் ராணுவ மோதல் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இரானின் நிலைமையை சிக்கலாக்கியுள்ளதாக ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

“இரான் நடுநிலையாக இருக்க வேண்டும் என்ற கட்டாயம் அந்நாட்டிற்கு உள்ளது. இரான் தற்போது இருக்கும் சூழ்நிலையில், இந்தியாவுடனோ அல்லது பாகிஸ்தானுடனோ வெளிப்படையாக நிலைப்பாட்டை எடுக்க முடியாது.

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே அதிகரித்து வரும் பதற்றம் இரானுக்கு ராஜ்ஜீய சவாலை உருவாக்கும்” என்று ஃபஸ்ஸுர் ரஹ்மான் கூறுகிறார்.

இரான் பாகிஸ்தானின் அண்டை நாடாக உள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையே நீண்ட எல்லை உள்ளது. இரான் இந்தியாவுடன் வரலாற்று மற்றும் பாரம்பரிய நட்புறவையும் கொண்டுள்ளது.

இந்தியாவுக்கும் இரானுக்கும் இடையே வலுவாக உள்ள உறவுகள்

இந்தியா, பாகிஸ்தான், இரான்

பட மூலாதாரம், ANI

வரலாற்று, உத்தி சார்ந்த மற்றும் பொருளாதார காரணங்களால் இந்தியா–இரான் இடையிலான வர்த்தக உறவுகள் நீண்ட காலமாக வலுவாக இருந்து வருகின்றன.

2022-23 ஆம் ஆண்டில், இந்தியாவிற்கும் இரானுக்கும் இடையே சுமார் 2.5 பில்லியன் டாலர் வர்த்தகம் நடைபெற்றது.

இந்தியா இரானுக்கு 1.9 பில்லியன் டாலர் மதிப்புள்ள பொருட்களை ஏற்றுமதி செய்தது, இரான் இந்தியாவிற்கு 600 மில்லியன் டாலர் மதிப்புள்ள பொருட்களை ஏற்றுமதி செய்தது.

இரானின் முதல் ஐந்து வர்த்தக கூட்டாளிகளில் இந்தியாவும் ஒன்றாக உள்ளது. இந்தியா ஒவ்வொரு ஆண்டும் இரானுக்கு சுமார் ஒரு பில்லியன் டாலர் மதிப்புள்ள அரிசியை அனுப்புகிறது.

இரான் மீதான அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகள் காரணமாக இந்தியாவிற்கான இரானின் எண்ணெய் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது.

2019 ஆம் ஆண்டுக்கு முன்பு, இந்தியா தனது எண்ணெய் தேவைகளில் பத்து சதவீதத்தை இரானிய எண்ணெய் மூலம் பூர்த்தி செய்து வந்தது.

இது மட்டுமின்றி, இரானின் சபாஹர் துறைமுகத்தில் இந்தியா சுமார் 500 மில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்துள்ளது. சபாஹர் துறைமுகத்தை பயன்படுத்தி, ஆப்கானிஸ்தான் மற்றும் மத்திய ஆசியாவின் சந்தைகளை இந்தியா அணுக விரும்புகிறது. இதற்கு முன்பு, இந்த நாடுகளுக்கு பாகிஸ்தான் வழியாக ஏற்றுமதி செய்ய வேண்டிய நிலை இந்தியாவுக்கு இருந்தது.

பதற்றம் அதிகரித்தால், இரானின் உத்திகள் பாதிக்கப்படலாம்.

இந்தியா, பாகிஸ்தான், இரான்

பட மூலாதாரம், Getty Images

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதற்றம் மேலும் அதிகரித்தால், அது இரானின் மூலோபாய நலன்களைப் பாதிக்கலாம்.

இதனால் தான் இரான் இரு நாடுகளுக்கும் இடையில் மத்தியஸ்தராக செயல்பட முயற்சிக்கிறது என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

சர்வதேச விவகாரங்களில் நிபுணர் மற்றும் ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தின் அரசியல் அறிவியல் துறையில் பேராசிரியர் ரேஷ்மி காசி இதுகுறித்து கூறுகையில்,

“இரானின் விரிவான நலன்கள் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுடனும் இணைக்கப்பட்டுள்ளன.

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதற்றம் மேலும் அதிகரித்தால், இரானின் நலன்கள் பாதிக்கப்படும்.

அதனால்தான் பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு, இரு நாடுகளுக்கும் இடையில் மத்தியஸ்தராகப் பணியாற்றத் தயாராக இருப்பதாகவும், இதற்காக இஸ்லாமாபாத் மற்றும் புது தில்லியில் உள்ள அதன் அலுவலகங்களைப் பயன்படுத்தலாம் என்றும் இரான் கூறியுள்ளது” என்கிறார்.

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் பதற்றம் அதிகரித்தால், அது தெற்காசியாவின் பாதுகாப்பு சூழலைப் பாதிக்கும், நிலைமை சிக்கலானதாக மாறும்.

இரானுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ஒரு நீண்ட எல்லை உள்ளது. பல இடங்களிலிருந்து அணுகக்கூடியதாகவும் இந்த எல்லை உள்ளது.

“பாகிஸ்தான் இரானுடன் தனது எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது. இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர் மூண்டால், இரான் தன்னை இந்தப் போரிலிருந்து பாதுகாத்துக் கொள்வது மிகவும் கடினமாக இருக்கும்.

சீனா பாகிஸ்தானில் அதிக அளவில் முதலீடு செய்துள்ளது. இதற்கிடையில் சீனாவிற்கும் இரானுக்கும் இடையிலான உறவுகளும் வலுவடைந்து வருகின்றன.

போர் ஏற்பட்டால், இந்தியாவிலிருந்து பிரிந்து செல்ல அல்லது முற்றிலும் நடுநிலையாக இருக்க அல்லது பாகிஸ்தானில் சேர இரான் மீது சீனா அழுத்தத்தை அதிகரிக்கக்கூடும்” என்று ஃபஸூர் ரஹ்மான் சித்திக் கூறுகிறார்.

– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

SOURCE : THE HINDU