SOURCE :- BBC NEWS

புதுக்கோட்டை: தீக்கிரையாக்கப்பட்ட வீடு, உடைக்கப்பட்ட பேருந்து - இரு சமூக இளைஞர்கள் மோதலில் நடந்தது என்ன?

புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு பகுதியில் இரு சமுதயாத்தைச் சேர்ந்த இளைஞர்கள் முன்விரோதம் காரணமாக மோதிக் கொண்டதில் வீடு தீயிட்டு எரிக்கப்பட்டதோடு, காவல்துறை ரோந்து ஜீப் மற்றும் அரசுப் பேருந்து கண்ணாடி உடைக்கப்பட்டன. 22 பேர் காயத்துடன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் இந்த மோதல் தொடர்பாக இரு சமுதாயத்தைச் சேர்ந்த 14 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள நிலையில் 300க்கும் மேற்பட்ட போலீசார் வடகாடு பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டத் திருவிழா நேற்று (மே 5) மாலை தொடங்கி இரவு முடிவடைந்தது.

தேரோட்டத் திருவிழா முடிந்து இரு சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் கோவிலில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் முன்விரோதம் காரணமாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அந்த வாக்குவாதம் பின்னர் வாக்குவாத மோதலாக மாறி ஒரு தரப்பைச் சேர்ந்த இளைஞர்களை மற்றொரு தரப்பினர் தாக்கியுள்ளனர்.

புதுக்கோட்டை: தீக்கிரையாக்கப்பட்ட வீடு, உடைக்கப்பட்ட பேருந்து - இரு சமூக இளைஞர்கள் மோதலில் நடந்தது என்ன?

இதில் இரு தரப்பைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் இந்தத் தகவல் பரவியதால் மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள ஒரு வீடு மற்றும் இரு சக்கர வாகனம் தீயிட்டுக் கொளுத்தப்பட்டதால் மேலும் பதற்றம் ஏற்பட்டது.

இரு தரப்பைச் சேர்ந்தவர்களும் கற்களை வீசிக் கொண்டு, கம்பு அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட நிலையில் அந்தப் பகுதிக்கு போலீசார் சென்று தடியடி நடத்தி மோதலை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

மேலும் காயமடைந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ்கள் மூலம் வடகாடு அரசு மருத்துவமனை மற்றும் ஆலங்குடி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

புதுக்கோட்டை: தீக்கிரையாக்கப்பட்ட வீடு, உடைக்கப்பட்ட பேருந்து - இரு சமூக இளைஞர்கள் மோதலில் நடந்தது என்ன?

இந்த மோதலில் முத்துகிருஷ்ணன் என்ற காவலர் உள்பட இரு தரப்பையும் சேர்ந்த 17 பேர் காயமடைந்துள்ளனர். மேலும் ஒரு அரசுப் பேருந்து, காவல்துறை ஜீப் ஆகியவற்றின் கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டன.

உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா மோதலில் ஈடுபட்டவர்களை விரட்டி அடித்ததோடு, அப்பகுதியில் கூடியிருந்தவர்கள் அங்கிருந்து விரட்டியடித்தனர்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப்

வடகாடு கிராமம் முழுமையாக காவல்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில் அங்கு மேலும் கலவரம் ஏற்படாமல் இருக்க புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா தலைமையில் 300க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் திருச்சி சரக டிஐஜி வருண் குமார், சட்டத்துறை அமைச்சர் ரகுபதி ஆகியோர் சம்பந்தப்பட்ட பகுதியை நள்ளிரவில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இந்நிலையில் இந்த மோதல் சம்பவம் தொடர்பாக 14 பேர் வடகாடு போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவில் திருவிழாவுக்கும் இரு தரப்பு மோதலுக்கும் சம்பந்தம் இல்லை

புதுக்கோட்டை: தீக்கிரையாக்கப்பட்ட வீடு, உடைக்கப்பட்ட பேருந்து - இரு சமூக இளைஞர்கள் மோதலில் நடந்தது என்ன?

இரு தரப்பினரிடையே மோதல் எப்படி ஏற்பட்டது என்பது குறித்து வடகாடு ஊரைச் சேர்ந்த மாரியம்மன் கோவில் திருவிழா நிர்வாகக் குழுவைச் சேர்ந்த ஒருவரான சண்முகம் பிபிசி தமிழிடம் பேசுவையில், “வடகாடு பகுதியில் ஒரு ஏக்கர் பரப்பளவில் புறம்போக்கு நிலம் ஒன்று உள்ளது. இதில் தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் அய்யனார் கோவில் கட்டியுள்ளனர்.

ஆனால் அதே பகுதியில் சாதி இந்து சமுதாயத்தைச் சேர்ந்த இளைஞர்கள் வாலிபால் விளையாடுவதை வழக்கமாகக் கொண்டிருந்ததால் அந்த இடம் எந்த சமுதாய மக்களுக்குச் சொந்தமானது என்பது தொடர்பில் கடந்த சில ஆண்டுகளாக பிரச்னை ஏற்பட்டு வந்தது. இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் சார்பில் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தி தற்போது அந்த இடம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கும் நடைபெற்று வருகிறது,” என்று கூறினார்.

இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு அந்த அய்யனார் கோவிலில் பொங்கல் வைப்பதற்கு தலித் மக்கள் சென்றபோது அவர்களுக்கும் சாதி இந்து சமுதாயத்தைச் சேர்ந்த மக்களுக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டு பஸ் மறியல் உள்ளிட்டவை நடைபெற்று இரு தரப்பைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

புதுக்கோட்டை: தீக்கிரையாக்கப்பட்ட வீடு, உடைக்கப்பட்ட பேருந்து - இரு சமூக இளைஞர்கள் மோதலில் நடந்தது என்ன?

இரு சமுதாய மக்களுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்த நிலையில் நேற்றிரவு இரு தரப்பும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதாகவும் இதற்கும் வடகாடு மாரியம்மன் கோவில் திருவிழாவுக்கும் எந்தத் தொடர்புமும் இல்லை என்றார் சண்முகம்.

“மாரியம்மன் கோவில் அனைத்து சமுதாயத்திற்கும் பாத்தியப்பட்டது. அனைத்து சமுதாய மக்களும் திருவிழா கொண்டாடுவது வழக்கம். எனவே திருவிழாவுக்கும் இரு தரப்பினருக்கும் ஏற்பட்ட மோதலுக்கு எந்தச் சம்பந்தமும் இல்லை” என்றார் அவர்.

தொடர்ந்து பேசியவர், “நேற்று திங்கட்கிழமை இரவு தேரோட்டம் முடிந்த பிறகு கோவிலில் இருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் இரு சமுதாயத்தைச் சேர்ந்த, மது போதையில் இருந்த இளைஞர்கள் இடையே ஏற்பட்ட பிரச்னை மோதலாக மாறியது. பின்னர் அவர்கள் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர்,” என்று நடந்ததை விவரித்தார்.

இதில் “மக்கள் குடியிருப்புப் பகுதியில் உள்ள யாரும் வசிக்காத வீடு ஒன்று தீயிட்டு எரிக்கப்பட்டது. அரசுப் பேருந்து, காவல்துறை ரோந்து வாகனக் கண்ணாடி உள்ளிட்டவற்றைச் சேதப்படுத்தியதுடன், இரண்டு இருசக்கர வாகனங்களையும் தீயிட்டு எரித்துள்ளனர். இதனால் பெரும் பதற்றம் ஏற்பட்டது.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தியதில் இந்தச் சம்பவம் தொடர்பாக 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 13 பேர் சாதி இந்து சமூத்தைச் சேர்ந்தவர்கள், ஒருவர் தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவர். மேலும் 22 பேர் காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாரியம்மன் கோவிலில் இன்று மஞ்சள் தண்ணீர் ஊற்றும் விழா எந்தப் பிரச்னையும் இன்றி சமூகமாக நடைபெற்று வருகிறது” என்றார் சண்முகம்.

காவல்துறை விளக்கம்

புதுக்கோட்டை: தீக்கிரையாக்கப்பட்ட வீடு, உடைக்கப்பட்ட பேருந்து - இரு சமூக இளைஞர்கள் மோதலில் நடந்தது என்ன?

இதுகுறித்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி உட்கோட்டம், வடகாடு காவல் சரகத்திற்கு உட்பட்ட வடகாடு இந்தியன் பெட்ரோல் பங்க் அருகே மே 5ஆம் தேதியன்று சாதி இந்து சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் தலித் சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் இடையே வாய்த் தகராறு ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து, இருசக்கர வாகனத்தில் தலித் இளைஞர்களைப் பின்தொடர்ந்த சாதி இந்து இளைஞர்கள், அவர்களுடன் வாக்குவாதம் செய்து, ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர்,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், “இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் ஒரு கூரை வீடு எரிக்கப்பட்டது, அரசுப் பேருந்தின் கண்ணாடி உடைக்கப்பட்டதும் தெரிய வந்தது. மேற்படி சம்பவமானது மது போதையில் இருதரப்பு இளைஞர்களிடையே ஏற்பட்ட மோதல் என விசாரணையில் தெரிய வந்தது.

இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபர்கள் காவலில் எடுக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. எனவே சமூக ஊடகங்களில் இரு சமூகத்தினர் இடையே கோவில் திருவிழாவில் ஏற்பட்ட பிரச்னையால் தலித் சமூகத்தினர் குடியிருக்கும் பகுதியில் வீடுகளுக்குத் தீ வைக்கப்பட்டதாகவும், 5 பேர் அரிவாளால் வெட்டப்பட்டதாகவும், காவல்துறையினர் 4 பேர் காயம் அடைந்ததாகவும், காவல் ஆய்வாளருக்குத் தலையில் வெட்டுக்காயம் ஏற்பட்டதாகவும் பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம்” என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

மேலும் இவ்வாறு வதந்திகளை பரப்புபவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை சார்பில் கூறப்பட்டுள்ளது.

– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

SOURCE : THE HINDU