SOURCE :- BBC NEWS

திருமாவளவன், விடுதலை சிறுத்தைகள், திமுக

பட மூலாதாரம், Facebook

ஓர் உயரதிகாரி மூலம் தன்னை பா.ஜ.க. பக்கம் ஈர்க்க முயற்சிகள் நடந்ததாகவும் தான் அதைத் தவிர்த்துவிட்டதாகவும் சென்னையில் நடந்த ஒரு கூட்டத்தில் பேசியிருக்கிறார் வி.சி.கவின் தலைவர் திருமாவளவன்.

கொடிக் கம்பம், விளம்பரங்கள், மேடை அமைப்பது போன்றவற்றில் தங்களுக்கு தொடர் நெருக்கடியிருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறார் திருமாவளவன்.

சென்னை கோயம்பேட்டில் நடந்த வணிகர் தின மாநாட்டு ஒன்றில் பேசிய வி.சி.கவின் தலைவர் தொல். திருமாவளவன், பா.ஜ.கவின் சார்பில் டெல்லியிலிருந்து ஓர் உயரதிகாரி தன்னை அழைத்துப் பேசியதாகவும் ஆனால், தான் அதற்கு மறுத்துவிட்டதாகவும் குறிப்பிட்டிருக்கிறார். அவர் அந்தப் பேச்சில் குறிப்பிட்ட வேறு சில விஷயங்களும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கின்றன.

“யாரோ ஒருவர் கொடுத்த துண்டுச்சீட்டு”

இந்தக் கூட்டத்தில் பேசிய திருமாவளவன், ஜாதிய சக்திகளோடும் மதவாத சக்திகளோடும் ஒருபோதும் தேர்தல் கூட்டணிகூட கிடையாது என்பதைப் பற்றிப் பேசினார். “எவ்வளவு நெருக்கடி வந்தாலும் எந்தச் சூழலிலும் எவ்வளவு பின்னடைவு வந்தாலும் ஜாதியவாத, மதவாத சக்திகளோடு தேர்தல் உறவைக்கூட வைத்துக்கொள்ள மாட்டோம். இதை அறிவிக்க ஒரு தைரியம் வேண்டும். அது வி.சி.கவுக்குத்தான் இந்திய அரசியலில் உண்டு.

யாரோ வழியில் போனவர் ஒரு சீட்டைக் கொடுத்தார். வாங்கிப் பார்த்தால், அது மாநாட்டு அழைப்பிதழ். உடனே பத்திரிகையில் செய்தி போடுகிறார்கள், ‘சித்திரை முழு நிலவு நிகழ்ச்சிக்கு திருமாவளவனுக்கு அழைப்பு’ என்று. இருவரையும் ஒன்றாக்க தி.மு.க. தலைவர் முயற்சிப்பதாக ஒரு பத்திரிகை கொட்டை எழுத்தில் செய்தி வெளியிடுகிறது.

அதற்கெல்லாம் வாய்ப்பே கிடையாது. அப்படி சமரசம் செய்து, பத்து இடங்களில் வெற்றிபெற்று என்ன செய்யப் போகிறோம்? ஒன்றுமே வேண்டாம் என இருந்தாலும் இருப்போமே தவிர, பா.ஜ.கவோடு சமரசம் செய்துகொண்டு, ஜாதியவாத சக்திகளோடு சமரசம் செய்துகொண்டு பத்து பேரை உள்ள அனுப்ப வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. அதற்கு நான் கட்சியே நடத்தத் தேவையில்லை” என்று குறிப்பிட்டார்.

அன்புமணி ராமதாஸ்

பட மூலாதாரம், ANBUMANI RAMADOSS/X

“மனம் மாறினால், என் வாழ்க்கையே வேறு”

இதற்குப் பிறகு விடுதலைச் சிறுத்தைகள் தற்போது பல இடங்களில் நெருக்கடியை எதிர்கொண்டுவருவதாகக் குறிப்பிட்டார். “தமிழ்நாட்டில் திருமாவளவனுடைய மணிவிழாவை ஒட்டி நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் கொடிக் கம்பம் ஏற்றிய பிறகுதான். நீதி மன்றத்தின் மூலம் கொடிக்கம்பங்களை அகற்றும் தீர்ப்பு தருகிறார்கள். எல்லா கொடி கம்பங்களையும் அகற்றுங்கள் என்கிறார்கள். சென்னையில் திரும்பும் திசையெல்லாம் வி.சி.கவின் விளம்பரம் இருந்தது. ஒட்டுமொத்தமாக சென்னையில் விளம்பரம் செய்யக்கூடாது என ஆணையிட்டார்கள். மாநகராட்சியே எல்லா விளம்பரங்களையும் அழித்தார்கள். நம்மை மேடை போடவிடவில்லை என வருந்தாதீர்கள். நெருக்கடி நமக்கு திருநெல்வேலி அல்வாதான்” என்றார்.

இதற்கடுத்தபடியாகத்தான், பா.ஜ.கவிலிருந்து தனக்கு அழைப்புகள் வந்ததாகக் குறிப்பிட்டார். “நான் வேறு வழியே இல்லாமல் அங்கே (தி.மு.க. கூட்டணியில்) இருக்கிறேன், தாங்கிப் பிடிக்கிறேன், முட்டுக் கொடுக்கிறேன் எனப் பேசுகிறார்கள். அந்தக் கும்பலுக்குச் சொல்லவில்லை, என் தம்பிகளுக்குச் சொல்கிறேன். எனக்கு ஆப்ஷனா இல்லை, நிறைய இருக்கு. விஜயுடனான வாய்ப்பை, எடப்பாடியுடனான் வாய்ப்பைப் பிடித்துவைக்கலாம். தில்லியில் உள்ள மிக உயர்ந்த ஓர் அதிகாரியே என்னை அழைத்துப் பேசினார். நான் கையெடுத்துக் கும்பிட்டுவிட்டேன். உங்க ஜனங்களுக்கு ஏதாவது பண்ணலாமே.. எஸ்சி மக்களுக்கு நிறைய ஸ்கீம் இருக்கு. அதையெல்லாம் செய்யச் சொல்வோம் என்றார்.

உங்க அன்புக்கு நன்றி என்று சொல்லிவிட்டு வந்தேன். இது 100 சதவீதம் நடந்தது. கொஞ்சம் மனம் மாறினால், என் வாழ்க்கையே வேறுதானே.. நான் சரி என்றிருந்தால், இப்படி அனுமதி மறுத்திருக்க முடியுமா? இந்தக் கூட்டணியை உருவாக்கியதில் திருமாவுக்கும் பங்கு உண்டு. நான் உருவாக்கிய கூட்டணியை பலவீனப்படுத்த நான் எப்படி அனுமதிப்பேன்?” என்று குறிப்பிட்டார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

“எந்த கட்சி வந்தாலும் பாஜக சேர்த்துக் கொள்ளும்”

திருமாவளவனின் மொத்தப் பேச்சிலும் சில விஷயங்கள் கவனிக்கத்தக்கதாக இருந்தன. அதாவது, கொடிக்கம்பங்கள் வைப்பதில் இருக்கும் நெருக்கடி, வி.சி.கவின் விளம்பரங்கள் அழிக்கப்படுவது, மேடை போடுவதில் உள்ள நெருக்கடி ஆகியவற்றைப் பற்றி வெளிப்படையாக அவர் குறிப்பிட்டது. இரண்டாவதாக, பா.ஜ.கவிடமிருந்து வந்த அழைப்பு.

“தமிழ்நாட்டில் வி.சி.கதான் மூலக்கல்லைப் போல இருக்கிறது. தி.மு.க. கூட்டணியிலும் அப்படித்தான். அந்த சக்தியை அங்கிருந்து உருவினால் கூட்டணியே சரிந்துவிடும் என நினைக்கிறார்கள். அதனால்தான் இதுபோன்ற முயற்சிகள் நடக்கின்றன. பா.ஜ.கவைப் பொறுத்தவரை எந்தக் கட்சி உள்ளே வந்தாலும் சேர்த்துக் கொள்வார்கள். சேர்ந்துகொள்ளும் கட்சிகள்தான் யோசிக்க வேண்டும். இதில் வேறு ஏதும் யோசிக்கத் தேவையில்லை” என்கிறார் வி.சி.கவின் பொதுச் செயலாளரான து. ரவிக்குமார்.

இது குறித்துப் பேசிய வி.சி.கவின் நிர்வாகி ஒருவர், பா.ஜ.க., வி.சி.கவிடம் நீண்டகாலமாகவே இதுபோன்ற முயற்சிகளை மேற்கொண்டுவருவதாகச் சொன்னார். “சில ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு ஆடிட்டரும் பா.ஜ.கவின் சார்பில் தொலைக்காட்சியில் பேசுபவரும் இதற்கான முயற்சியை மேற்கொண்டார்கள். அப்போதே தலைவர் உங்களோடு இணைந்து செயல்படுவது கொள்கை ரீதியாக ஒத்துவராது எனக் கூறி மறுத்துவிட்டார். இருந்தாலும் அவ்வப்போது இந்த முயற்சிகள் நடந்துகொண்டிருக்கின்றன” என்றார்.

ரவிக்குமார், விடுதலை சிறுத்தைகள் கட்சி

பட மூலாதாரம், Ravikumar/X

கூடுதல் இடங்களை எதிர்பார்க்கிறதா வி.சி.க.?

ஆனால், தேர்தல் நெருக்கத்தில் ஒரு வணிகர் சங்க மாநாட்டில் திருமாவளவன் இதுபோலப் பேசுவது, தி.மு.கவிற்கு அழுத்தம் தரத்தான் என்கிறார் மூத்த பத்திரிகையாளரான குபேந்திரன். “பா.ஜ.கவைப் பொறுத்தவரை யாரை வேண்டுமானாலும் கூட்டணிக்கு அழைப்பார்கள். அவர்களைப் பொறுத்தவரை, தேசிய அளவில் காங்கிரசைப் பலவீனப்படுத்த வேண்டும் என்பதற்காக அதன் எல்லாக் கூட்டணிக் கட்சிகளையும் அழைப்பார்கள். தி.மு.கவையும்கூட அழைப்பார்கள். இதனை இந்தத் தருணத்தில் திருமாவளவன் வெளிப்படுத்துவது சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், தங்கள் முக்கியத்துவத்தை உணர்த்துவதற்காகத்தான். கொடிக் கம்பங்கள் விவகாரம், விளம்பரங்கள் அழிக்கப்படுவது, மேடைகள் அமைப்பதற்கு அனுமதி கிடைப்பதில் உள்ள சிக்கல் ஆகியவற்றையெல்லாம் சொல்லி, இதனைச் சொல்கிறார் என்றால் வரவிருக்கும் தேர்தலில் கூடுதல் இடங்களை அவர் எதிர்பார்க்கலாம்” என்கிறார் குபேந்திரன்.

இது ஒரு நீண்ட கால முயற்சியின் தொடர்ச்சி என்கிறார் பத்திரிகையாளர் கார்த்திகேயன். “2024ஆம் ஆண்டுத் தேர்தலுக்கு முன்பிருந்தே திருமாவளவை தி.மு.க. கூட்டணியில் இருந்து பிரிக்க முயற்சிகள் நடக்கின்றன. அவர் பா.ஜ.க. கூட்டணியுடன் சேர வேண்டியதில்லை, தி.மு.க. கூட்டணியைவிட்டுப் பிரிந்தால் போதும் என்றுதான் எதிர்க்கட்சிகள் நினைக்கின்றன. அதேபோல, தி.மு.க. கூட்டணிக்குள் பா.ம.க. வந்தால் நன்றாக இருக்கும் என தி.மு.கவின் சில மூத்த தலைவர்கள் நினைக்கிறார்கள். மு.க. ஸ்டாலின் அதை விரும்பவில்லை. திருமாவளவன், இடதுசாரிகள் ஆகியோர் இந்தக் கூட்டணிக்குள் இருப்பதுதான் அகில இந்திய அளவில் ஒரு வலுவான அடையாளத்தைத் தருகிறது என அவர் கருதுகிறார். 2019 முதல் இந்தக் கூட்டணி தொடர்ந்து வெற்றிபெற்றுவரும் நிலையில், இதில் மாற்றம் ஏற்படுவதை அவர் விரும்ப மாட்டார். ஆகவேதான் பா.ஜ.க. இதுபோன்ற முயற்சிகளை மேற்கொள்ளலாம்” என்கிறார் கார்த்திகேயன்.

திமுக, விசிக

பட மூலாதாரம், MK Stalin/X

இதற்கு முன்பு, 2011ஆம் ஆண்டில்தான் கடைசியாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் பா.ம.கவும் தி.மு.க. கூட்டணியில் ஒன்றாக இடம்பெற்றிருந்தன. ஆனால், அந்தத் தேர்தலில் அந்தக் கூட்டணி தோல்வியடைந்ததைச் சுட்டிக்காட்டுகிறார் கார்த்திகேயன். “பா.ம.கவை வைத்துத்தான் வன்னியர் வாக்குகளை பெற வேண்டுமென்ற நிலையில் தி.மு.க. இல்லை. ஆகவே, இந்தக் கூட்டணி கலைவதை தி.மு.க. தலைமை விரும்பாது. ஆனால், கீழ் மட்டத்தில் இரு தரப்பினரும் சமூகவலைதளங்களில் தெரிவிக்கும் கருத்துகள் உரசலை ஏற்படுத்தலாம். ஆனால், அது கூட்டணி முறியும் அளவுக்குச் செல்லாது” என்கிறார் கார்த்திகேயன்.

ஆனால், திருமாவளவனை பா.ஜ.க. அழைத்தாக திருமாவளவன் குறிப்பிடுவதை அக்கட்சியின் மாநில பொருளாளரான எஸ்.ஆர். சேகர் மறுக்கிறார். பா.ஜ.கவின் பக்கம் அவர் வரமாட்டார் எனத் தெரியும்போது நாங்கள் ஏன் அழைக்கப்போகிறோம் என்கிறார் அவர். “அப்படி ஏதும் கிடையாது. அவர் பா.ஜ.க. பக்கம் வரமாட்டார் என்று தெரியும்போது ஏன் அழைக்கப்போகிறார்கள்? பல தரப்பினரும் கூட்டணிக்காகப் பேசுவதாகச் சொன்னவர், தற்போது பா.ஜ.கவையும் சொல்கிறார். தி.மு.கவைப் பயமுறுத்த சரியான ஆயுதம் தற்போது பா.ஜ.க. என்பதை திருமா உணர்ந்திருக்கிறார்” என்கிறார் எஸ்.ஆர். சேகர்.

-இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU