SOURCE :- BBC NEWS

இந்திய எல்லையில் தாக்குதல்: நள்ளிரவில் நடந்தது என்ன? ஜம்மு-காஷ்மீரின் நிலவரம்

பட மூலாதாரம், ANI

2 நிமிடங்களுக்கு முன்னர்

இந்தியாவின் ஜம்மு, பதான்கோட், உதம்பூர் ஆகிய பகுதிகளில் நேற்றிரவு (மே 8) பாகிஸ்தான் தாக்குதல் மேற்கொண்டதாக இந்திய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆனால், பாகிஸ்தான் இதை மறுத்துள்ளது.

நேற்றிரவு இந்திய பாதுகாப்பு அமைச்சகம், “ஜம்மு, பதான்கோட், உதம்பூரில் உள்ள ராணுவ தளங்கள் மீது பாகிஸ்தான் டிரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியது. இந்தத் தாக்குதல்கள் முறியடிக்கப்பட்டுள்ளன,” என்று இந்திய பாதுகாப்பு அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

மே 8ஆம் தேதியான நேற்றிரவு, ஜம்மு நகரத்தில் வெடிகுண்டு சத்தங்கள் கேட்டத்தைத் தொடர்ந்து, நகரம் முழுவதும் மின்வெட்டு அமல்படுத்தப்பட்டது. ஜம்மு விமான நிலையத்திலும் வெடிப்பு ஏற்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜம்முவில் பாதுகாப்பு அமைப்பு செயல்படுத்தப்பட்டதாகவும், நகரம் முழுவதும் சைரன்கள் ஒலிக்கப்பட்டதாகவும் இந்திய ராணுவம் பிபிசியிடம் தெரிவித்தது.

இந்திய எல்லையில் தாக்குதல்: நள்ளிரவில் நடந்தது என்ன? ஜம்மு-காஷ்மீரின் நிலவரம்

ஜம்முவில் உள்ள பிபிசி செய்தியாளர் கூறியது என்ன?

ஜம்மு காஷ்மீரின் ராஜௌரியில் இருக்கும் பிபிசி செய்தியாளர் திவ்யா ஆர்யா, அங்கு முழுமையான மின் தடை அமலில் இருப்பதாகக் கூறினார்.

அப்பகுதியில் இருந்து செய்திகளை வழங்கி வரும் பிபிசி செய்தியாளர் திவ்யா ஆர்யா, “பூஞ்ச் நகரத்தில் மின் தடை அமலில் உள்ளது. தற்போது விமான தாக்குதலின் சைரன்களை கேட்டதாகவும், குண்டுவெடிப்புச் சத்தங்களைக் கேட்டதாகவும் மக்கள் கூறுகின்றனர். அதோடு, அவர்கள் பாதுகாப்புப் படையினரால் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் அங்குள்ள எங்கள் குழுவினர் தெரிவித்தனர்,” என்று கூறினார்.

மேலும், ஜம்மு நகரிலும் பல வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாகக் கூறிய அவர், இரவு 08:45 மணியளவில் ஒரே நேரத்தில் பல வெடிப்புகள் ஏற்பட்டதாக அங்குள்ள உள்ளூர்வாசிகள் குறிப்பிட்டதாகவும் தெரிவித்தார்.

“ஜம்மு நகரின் தெற்கு நோக்கிச் சென்றால், அங்குதான் எல்லாம் தொடங்கியது” என்கிறார் திவ்யா ஆர்யா. அங்கு வசிக்கும் மக்களிடம் இருந்து வெடிப்புகள் குறித்த தகவல்கள் கிடைத்தன.

“ஜம்மு நகரில் சுமார் 10 வெடிப்புகள் கேட்டதாக ஜம்மு நகரின் ஒரு குடியிருப்பாளர் என்னிடம் தெரிவித்தார். அதன் பிறகு நகரத்தில் அனைத்து மின்சாரமும் துண்டிக்கப்பட்டது. வழக்கமான தொலைபேசி இணைப்புகளிலும் தடங்கல் ஏற்பட்டுள்ளது. வாட்ஸ்ஆப் அழைப்புகள் மட்டுமே வேலை செய்கின்றன.”

இந்திய எல்லையில் தாக்குதல்: நள்ளிரவில் நடந்தது என்ன? ஜம்மு-காஷ்மீரின் நிலவரம்

பட மூலாதாரம், ANI

நேற்றிரவு முதல் நிலைமை மிகவும் பதற்றமாக உள்ளதாகவும் மக்கள் வீடுகளை விட்டு வெளியே செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டு இருப்பதாகவும் திவ்யா ஆர்யா கூறினார்.

“ஜம்முவில் இருந்து ஒன்றரை மணிநேரப் பயணத்தில் இருக்கும் கத்துவாவில் வாழும் மக்களிடமும் நான் பேசினேன். அங்கு குறைந்தது இரண்டு வெடிச்சத்தங்கள் கேட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.”

இதற்கிடையே, ராஜஸ்தானின் பார்மர், ஜெய்சல்மர், பஞ்சாபின் குர்தாபூர் ஆகிய பகுதிகளிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

இந்தியாவின் அரசு ஊடகமான டிடி நியூஸ், பாதுகாப்பு வட்டாரங்களை மேற்கோள் காட்டி ஜம்முவில் அமைந்திருக்கும் சத்வாரி, சம்பா, ஆர்எஸ் புரா உள்ளிட்ட பகுதிகளில் பாகிஸ்தான் 8 ஏவுகணைகளை ஏவியதாகத் தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது. அதோடு, ஏவப்பட்ட அனைத்து ஏவுகணைகளையும் இந்திய வான் பாதுகாப்புப் பிரிவுகள் இடைமறித்ததாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்து இருப்பதாகவும் டிடி நியூஸ் தெரிவித்துள்ளது.

இந்திய எல்லையில் தாக்குதல்: நள்ளிரவில் நடந்தது என்ன? ஜம்மு-காஷ்மீரின் நிலவரம்

பட மூலாதாரம், Getty Images

மூடப்பட்ட சிவில் விமான நிலையங்கள்

பஞ்சாப், ஜம்மு, காஷ்மீர், லடாக், குஜராத், ராஜஸ்தான் மற்றும் இமாச்சல பிரதேசத்தில் உள்ள 24 விமான நிலையங்கள் சிவில் சேவைகளுக்காக மூடப்பட்டுள்ளன.

நாடு முழுவதும் உள்ள அனைத்து விமான நிறுவனங்கள் மற்றும் விமான நிலையங்களுக்கு பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகரிக்க சிவில் விமானப் பாதுகாப்புப் பணியகம் உத்தரவிட்டுள்ளது.

அறிவுறுத்தல்களின்படி, அனைத்து விமான நிலையங்களிலும் அனைத்துப் பயணிகளுக்கும் இரண்டாம் நிலை சோதனைகள் (SLPC) மேற்கொள்ளப்படும். மேலும், விமான நிலையங்களில் ஏர் மார்ஷல்கள் நிறுத்தப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிவில் விமானப் பாதுகாப்புப் பணியகத்தை மேற்கோள் காட்டியுள்ள ஏர் இந்தியா தனது எக்ஸ் பக்கத்தில், உள்நாட்டுப் பயணிகள் இப்போது விமான நிலையத்திற்கு மூன்று மணிநேரத்திற்கு முன்பே வந்து சேர வேண்டும் எனவும், செக்-இன் கதவுகள் 75 நிமிடங்களுக்கு முன்பே மூடப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

SOURCE : BBC