SOURCE :- BBC NEWS

பட மூலாதாரம், Getty Images
33 நிமிடங்களுக்கு முன்னர்
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்திற்கு மிக அருகேயுள்ள விமானப்படைத் தளத்தை இந்தியா குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தான் குற்றம்சாட்டியுள்ளது.
அதுமட்டுமின்றி, தனது 3 விமானப்படை தளங்கள் மீது இந்தியா ஏவுகணை தாக்குதல் நடத்தியிருப்பதாக பாகிஸ்தான் கூறுகிறது. அதற்குப் பதிலடியாக ராணுவ தாக்குதலை தொடங்கிவிட்டதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானின் கூற்றுகள் பிபிசியால் சுயாதீனமாக சரிபார்க்கப்படவில்லை. அதுகுறித்து இந்தியா இதுவரை ஏதும் தெரிவிக்கவில்லை.
பாகிஸ்தானின் ஷெல் தாக்குதலில் ஒரு அதிகாரி உயிரிழந்ததாக ஜம்மு-காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா கூறியுள்ளார்.
பாகிஸ்தான் விமானப்படை தளங்கள் மீது இந்தியா தாக்குதலா?
பாகிஸ்தானின் 3 விமானப்படைத் தளங்கள் மீது இந்தியா ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியதாக பாகிஸ்தான் குற்றம்சாட்டியுள்ளது.
தனது 3 ராணுவ விமான தளங்கள் மீது இந்தியா ஏவுகணைகளை வீசியதாக பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார். இந்தக் கூற்றுகள் குறித்து இந்தியா இன்னும் கருத்து தெரிவிக்கவில்லை.
பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் ஜெனரல் அகமது ஷெரீப் சவுத்ரி, அந்நாட்டின் அரசு தொலைக்காட்சியில் பேசும் போது, இதற்கு பாகிஸ்தான் ராணுவம் உரிய வகையில் “பதிலளிக்கும்” என்று தெரிவித்தார்.
பாகிஸ்தான் ராணுவத்தின் வான் பாதுகாப்பு அமைப்பு இந்தியாவின் பெரும்பாலான ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தியதாக அவர் கூறினார். நாட்டின் படைகள் ‘முழுமையாக தயாராக’ இருப்பதாக அவர் கூறினார்.
இந்தியா இலக்கு வைத்ததாக பாகிஸ்தான் கூறும் விமானப்படைத் தளங்களில் ஒன்று, பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்திலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் ராவல்பிண்டியில் உள்ள நூர் கான் ஆகும்.
பாகிஸ்தானின் இந்த குற்றச்சாட்டுகள் குறித்து இந்தியா இதுவரை ஏதும் கூறவில்லை.

பட மூலாதாரம், Getty Images
பதிலடி தாக்குதலை தொடங்கியிருப்பதாக பாகிஸ்தான் தகவல்
இந்தியா மீது பதிலடி நடவடிக்கையை தொடங்கியிருப்பதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது
பாகிஸ்தானின் அரசு தொலைக்காட்சி மற்றும் ராணுவத்தின் மக்கள் தொடர்புத் துறை ஆகியவை இந்தியா மீது பதில் தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவித்துள்ளன.
பாகிஸ்தான் ராணுவத்தின் மக்கள் தொடர்புத் துறையான ஐஎஸ்பிஆரின் கூற்றுப்படி, பாகிஸ்தான் இந்த பதிலடி நடவடிக்கையை ‘ஆபரேஷன் பன்யன் மார்ஸ்’ என்று பெயரிட்டுள்ளது.
பாகிஸ்தானின் இந்தக் கூற்றுகள் குறித்து இந்தியா இதுவரை எதுவும் கூறவில்லை.

பட மூலாதாரம், Getty Images
பாக். தாக்குதலில் ஜம்மு காஷ்மீர் அதிகாரி ஒருவர் பலி – உமர் அப்துல்லா
பாகிஸ்தானின் ஷெல் தாக்குதலில் ஒரு அதிகாரி உயிரிழந்ததாக ஜம்மு-காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா கூறியுள்ளார்.
அவர் தனது எக்ஸ் பக்கத்தில் “ராஜௌரியில் இருந்து சோகமான செய்தி. ஜம்மு-காஷ்மீர் நிர்வாக சேவையின் அர்ப்பணிப்புள்ள அதிகாரியை நாங்கள் இழந்துவிட்டோம். நேற்று அவர் துணை முதல்வருடன் மாவட்டத்தில் இருந்தார், எனது தலைமையில் ஆன்லைன் வாயிலாக நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டார்” என்று பதிவிட்டுள்ளார்.
ராஜௌரி மீது பாகிஸ்தான் தரப்பில் இருந்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு வருவதாக உமர் அப்துல்லா கூறினார்.
“இன்று பாகிஸ்தான் ராஜௌரி நகரத்தை குறிவைத்து ஷெல் தாக்குதல் நடத்தியது. இதன் போது, கூடுதல் மாவட்ட மேம்பாட்டு ஆணையர் ராஜ்குமார் தாபாவின் வீடு குறிவைக்கப்பட்டு, தாக்குதலில் அவர் இறந்தார்.” என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
SOURCE : THE HINDU