SOURCE :- BBC NEWS

பட மூலாதாரம், Getty Images
11 மே 2025
இந்தியாவில் நடைபெற்ற பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதற்றம் உச்சகட்டத்தை அடைந்தன.
சனிக்கிழமையன்று இரு நாடுகளுக்கும் இடையில் சண்டை நிறுத்த புரிந்துணர்வு ஏற்பட்டது. ஆனால் சில மணி நேரங்களிலேயே, சண்டை நிறுத்தத்தை மீறியதாக பாகிஸ்தான் மீது இந்தியா குற்றஞ்சாட்டியுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையிலான சண்டை நிறுத்தம், சண்டை நிறுத்த மீறல்கள் குறித்து வெளிநாட்டு ஊடகங்கள் என்ன சொல்கின்றன?
அமெரிக்க ஊடகங்கள் என்ன சொல்கின்றன?

பட மூலாதாரம், Getty Images
“நான்கு நாட்கள் ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களுக்குப் பிறகு, இந்தியாவும் பாகிஸ்தானும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்டுள்ளன” என்று நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டது.
“ஆனால் சில மணி நேரங்களுக்குப் பிறகு எல்லையில் தாக்குதல் தொடர்ந்ததாக தகவல்கள் வந்தன. அமெரிக்க அதிபர் டிரம்ப் சமூக ஊடகங்களில் இந்தியாவும் பாகிஸ்தானும் சண்டை நிறுத்தத்தை ஒப்புகொண்டதாக கூறி, இது அமெரிக்காவின் மத்தியஸ்தால் நடந்தது என கூறினார்.
இந்தியாவும் பாகிஸ்தானும் சண்டை நிறுத்தத்தை உறுதிப்படுத்தினர். ஆனால் பாகிஸ்தான் மட்டுமே அமெரிக்காவின் பங்கை ஒப்புக்கொண்டது” என்று நியூயார்க் டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது.
மேலும், ”இந்தியா பாகிஸ்தான் இடையிலான பதற்றம் அதிகரித்த போதிலும், அதில் முதல் தலையிடத் தயங்கிய டிரம்ப் அரசு, தெற்காசியாவில் அணு ஆயுதம் பிரயோகிக்கப்படலாமோ என்ற அச்சங்கள் ஏற்பட்டதால் மத்தியஸ்தில் ஈடுபட்டது.
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதல் அமெரிக்காவின் பிரச்னை அல்ல என்று அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் தெரிவித்திருந்தார். இப்படி அவர் கருத்து வெளியிட்ட 24 மணி நேரத்திற்குள், அமெரிக்கா தெற்காசிய நாடுகளுக்கு இடையிலான பிரச்னையில் தலையிட்டது.
பாகிஸ்தான் மற்றும் இந்திய விமானப்படைகள் கடுமையாக மோதிக் கொள்வதற்கான சான்றுகளும், பாகிஸ்தான் 300 முதல் 400 டிரோன்களை இந்திய எல்லைக்குள் அனுப்பியதற்கான சான்றுகளும் ஜே.டி. வான்ஸ் மற்றும் மார்கோ ரூபியோவையும் மத்தியஸ்தம் செய்ய தூண்டின.
வெள்ளிக்கிழமை பிற்பகுதியில், பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தை ஒட்டியுள்ள ராவல்பிண்டியில் உள்ள நூர் கான் விமானத் தளத்தில் தாக்குதல் நடைபெற்றது நிலைமையின் தீவிரத்தை உணர்த்துவதாக இருந்தது. அதுமட்டுமல்ல, பாகிஸ்தானின் அணு ஆயுதக் கிடங்கை மேற்பார்வையிட்டு பாதுகாக்கும் தலைமையகமும் ராவல்பிண்டியின் அருகில் உள்ளது.” என எழுதியுள்ளது நியூயார்க் டைம்ஸ்.
“இரு நாடுகளுக்கும் இடையே நடந்து வரும் மோதல்களைத் தடுக்கும் முயற்சியே இந்த சண்டை நிறுத்தம். பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் நிர்வாக காஷ்மீர் மீது இந்தியா வான்வழித் தாக்குதல்களை நடத்தியதை அடுத்து புதன்கிழமையன்று மோதல்கள் தொடங்கின” என்று வாஷிங்டன் போஸ்ட் எழுதியுள்ளது.
“ஏப்ரல் 22 அன்று பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி தாக்குதல் என இந்தியா கூறியது. அடுத்த மூன்று நாட்களுக்கு இரு நாடுகளும் பரஸ்பரம் தாக்கிக் கொண்டன” என்று வாஷிங்டன் போஸ்ட் தெரிவித்துள்ளது.

பிரிட்டன் ஊடகங்களின் கருத்து என்ன?
“2016 – 2019 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்குமான மோதல்கள் காஷ்மீர் உள்ளிட்ட எல்லைப் பகுதிகளுக்குள் மட்டுமே இருந்தன” என்று பைனான்சியல் டைம்ஸ் எழுதியுள்ளது.
“ஆனால் இந்த முறை இரு நாடுகளுக்கும் இடையே மோதல் மிகவும் கடுமையானதாக இருந்தது. இரு நாடுகளும் பரஸ்பரம் டிரோன்களை ஏவியும், விமானத் தளங்களை குறிவைத்தும் சண்டையிட்டன” என்கிறது பைனான்சியல் டைம்ஸ்.
“இந்தியாவும் பாகிஸ்தானும் போரை நெருங்கிய சூழல் ஏற்பட்டது” என்று டெலிகிராஃப் நாளிதழ் எழுதியது.
“1971-ஆம் ஆண்டு போரின் போதுதான் இரு அண்டை நாடுகளுக்கும் இடையே இதுபோன்ற தாக்குதல்கள் நடைபெற்றது. அந்தப் போர் சுதந்திர வங்கதேசம் உருவானதோடு முடிவுக்கு வந்தது” என டெலிகிராஃப் குறிப்பிட்டுள்ளது.
“இன்றைய நிலைமைக்கும் 1971க்கும் உள்ள முக்கிய வேறுபாடு என்னவென்றால், அப்போது இரு தரப்பினரிடமும் அணு ஆயுதங்கள் இல்லை. ஆனால் இன்று அவர்களிடம் அது உள்ளது” என்று டெலிகிராஃப் தனது செய்திகளில் குறிப்பிட்டுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
அரபு ஊடகங்களில் என்ன எழுதப்பட்டுள்ளது?
“இந்தியாவும் பாகிஸ்தானும் போர் நிறுத்தத்தை மீறியதாக பரஸ்பரம் குற்றம் சாட்டிக் கொண்டுள்ளன. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இரு நாடுகளுக்கும் இடையே சண்டை நிறுத்தம் ஏற்பட்டதாக கூறிய சில மணி நேரங்களுக்குப் பிறகு இந்தக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன” என்று அரபு நியூஸ்.காம் எழுதியது.
“நான்கு நாட்கள் ஆளில்லா விமானம், ஏவுகணை மற்றும் ஜெட் போர் விமானத் தாக்குதல்களுக்குப் பிறகு, சனிக்கிழமையன்று இரு நாடுகளும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டன. இரு நாடுகளுக்குமான மோதலில் குறைந்தது 60 பேர் கொல்லப்பட்டனர். எல்லையில் இருந்த மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய நிலைமை ஏற்பட்டது. இருந்தாலும், சண்டை நிறுத்தத்தை அறிவித்தது டொனால்ட் டிரம்ப் என்பதுதான் ஆச்சரியமாக இருந்தது” என அரபு நியூஸ்.காம் குறிப்பிட்டுள்ளது.
“துபையில் வசிக்கும் நிதி நிபுணரான சித்தார்த் குப்தா, இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான சண்டைநிறுத்தம் தனது மனச்சுமையைக் குறைத்துள்ளதாகக் கூறுகிறார். பதற்றம் அதிகரிக்கும் என்ற அச்சம் இனி இருக்காது என்று சித்தார்த் நம்பிக்கை தெரிவித்தார்” என்று கலீஜ் டைம்ஸ் எழுதியது.
மேலும், “பாகிஸ்தான் நிர்வாகத்தில் உள்ள காஷ்மீரில் வசிக்கும் மன்சூர் கான், தானும் தனது குடும்பத்தினரும் இனி ஷெல் தாக்குதலின் சத்தங்களைக் கேட்க வேண்டியதில்லை என்று கூறுகிறார்” என கலீஜ் டைம்ஸ் செய்தி கூறுகிறது.
SaudiGazette.com தனது செய்தியில், “இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான ராணுவ மோதலைத் தணிக்க, செளதி அரேபியா தனது ராஜ்ஜீய முயற்சிகளை மேற்கொண்டது” என்று குறிப்பிட்டுள்ளது.
“செளதி வெளியுறவு அமைச்சர் பைசல் பின் ஃபர்ஹான், இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் பாகிஸ்தான் துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான இஷாக் தார் ஆகியோருடன் சனிக்கிழமையன்று தொலைபேசியில் ஆலோசனை கலந்தார்” என்று SaudiGazette.com தனது செய்தியில் தெரிவித்துள்ளது.

பட மூலாதாரம், Getty Images
வங்கதேசம் ஊடகத்தில் வந்த செய்தி
வங்கதேசத்தின் ஆங்கில செய்தித்தாள் தி டெய்லி ஸ்டார் வெளியிட்ட செய்தியில், “கடந்த மூன்று தசாப்தங்களில் இந்தியா பாகிஸ்தான் இடையே நடைபெற்ற மிகக் கடுமையான சண்டை இது. பெரிய அளவிலான போராக வெடிக்கும் அபாயம் இருந்தது” என்று குறிப்பிட்டுள்ளது.
“இந்த சண்டையினால், அணு ஆயுதத் தாக்குதலின் அபாயம் அதிகரித்தது. ஏனெனில் அணு ஆயுதங்கள் தொடர்பான உயர்மட்டக் குழுவின் கூட்டம் நடைபெறவிருப்பதாக பாகிஸ்தான் ராணுவம் கூறியிருந்தது” என தி டெய்லி ஸ்டார் தெரிவித்திருந்தது.
“சண்டை நிறுத்த புரிதல் மேற்கொள்ளப்பட்டதற்காக இந்தியா மற்றும் பாகிஸ்தான் பிரதமர்களுக்கு இடைக்கால அரசின் வங்கதேச தலைமை ஆலோசகர் பேராசிரியர் முகமது யூனுஸ் பாராட்டுகளைத் தெரிவித்தார்” என்று டெய்லி ஸ்டார் வெளியிட்ட மற்றொரு செய்தியில் கூறப்பட்டுள்ளது.
“இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் மத்தியஸ்தராக செயல்பட்டதற்காக டொனால்ட் டிரம்பிற்கு முகமது யூனுஸ் நன்றி தெரிவித்தார்” என்றும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேபாளில் வந்த செய்தி
“தெற்காசிய மையத்தின் அட்லாண்டிக் கவுன்சிலின் உறுப்பினர் ஷுஜா நவாஸ், எதிர்வரும் நாட்களில், சிந்து நதிநீர் ஒப்பந்தம் தொடர்பாக முக்கிய விவாதங்கள் நடைபெறும் என்று கூறுகிறார். அப்போது, இரு நாட்டு அரசாங்கங்களும், இந்த சண்டையில் தாங்கள் சாதித்தவை குறித்து பெருமைப்பட வாய்ப்பு கிடைக்கும்” என்று காத்மாண்டு போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.
-இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
SOURCE : BBC