SOURCE :- BBC NEWS

இலங்கை பேருந்து விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 21 ஆக அதிகரிப்பு

  • எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத்
  • பதவி, பிபிசி தமிழுக்காக
  • 11 மே 2025

இலங்கை நுவரெலியா – இறம்பொடை பகுதியில் பேருந்தொன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 21ஆக அதிகரித்துள்ளது.

இந்த விபத்து இன்று (மே 11) அதிகாலை இடம்பெற்றதாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.

கதிர்காமத்திலிருந்து நுவரெலியா ஊடாக குருநாகல் நோக்கி பயணித்த அரச பேருந்து ஒன்றே இவ்வாறு பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

நுவரெலியா ஊடாக குருநாகல் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த பேருந்து, இறம்பொடை பகுதியில் இன்று அதிகாலை 4.30 அளவில் கட்டுப்பாட்டை இழந்து சுமார் 100 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது என போலீஸார் தெரிவித்தனர்.

விபத்து இடம்பெற்ற தருணத்தில் நான்கு பேர் உயிரிழந்திருந்ததுடன், 35 பேர் வரை காயமடைந்திருந்தனர்.

இந்த நிலையில், இன்று மதியம் 12 மணியளவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 21ஆக அதிகரித்திருந்தது.

இலங்கை பேருந்து விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 21 ஆக அதிகரிப்பு

பட மூலாதாரம், KRISHANTHAN

விபத்து இடம்பெற்ற தருணத்தில் பிரதேசவாசிகள், காயமடைந்தவர்களை மருத்துவமனைகளுக்கு அழைத்து செல்ல உதவி வழங்கியிருந்தனர்.

உயிரிழந்தோரின் சடலங்கள் கொத்மலை பிரதேச மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன.

விபத்து இடம்பெறும் தருணத்தில் பேருந்தில் 50திற்கும் அதிகமானோர் இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்து இடம்பெறும் தருணத்தில் பேருந்தில் பயணித்த பயணியொருவர் ஊடகங்களுக்கு தனது அனுபவங்களை வெளிப்படுத்தியிருந்தார்.

”பேருந்து சற்று வேகமாக வந்தது. திடீரென பிரேக் அடிப்பட்டதை உணர்ந்தேன். பேருந்து இடது பக்கம் நோக்கில் வழுக்கி சென்றது. அதன்பின்னர் பள்ளத்தில் வீழ்ந்ததை உணர்ந்தேன். நான் வெளியில் வர ஒரு நிமிடம் அளவில் சென்றது. என்னால் அந்த சந்தர்ப்பத்தில் காப்பாற்ற முடிந்தவர்களை நான் காப்பாற்றினேன். நான் ராணுவத்தில் வேலை செய்கின்றேன்.” என விபத்தை எதிர்கொண்ட ஒருவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.

இலங்கையில் 100 அடி பள்ளத்தில் வீழ்ந்த பேருந்து; 21 பேர் பலி

இந்த விபத்து தொடர்பான விசாரணைகளை போலீஸார் ஆரம்பித்துள்ளனர்.

இந்த விபத்து தொடர்பில் போக்குவரத்து பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேகர மற்றும் சபாநாயகர் ஜனத் விக்ரமரத்ன ஆகியோர் ஆராய்வதற்காக சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர்.

விபத்து தொடர்பில் போக்குவரத்து பிரதி அமைச்சர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டார்.

” விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. சாரதிக்கு ஏற்பட்ட தூக்க கலக்கமா அல்லது வீதியின் பிரச்னையா என்பது இதுவரை கண்டறியப்படவில்லை. எம்மால் முடிந்தளவு ஏற்பாடுகளை செய்துள்ளோம். மருத்துவமனைகளுக்கு கதைத்துள்ளோம். நுவரெலியா மருத்துவமனையில் 14 பேர் இருக்கின்றார்கள். அந்த 14 பேரின் நிலை கவலைக்கிடமாக இல்லை. கொத்மலை மருத்துவமனைக்கு 13 சடலங்கள் கொண்டு செல்லப்பட்டன. தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன’ என போக்குவரத்து பிரதி அமைச்சர் தெரிவிக்கின்றார்.

ஜனாதிபதியின் அறிவிப்பு

இலங்கையில் 100 அடி பள்ளத்தில் வீழ்ந்த பேருந்து; 21 பேர் பலி

பட மூலாதாரம், KRISHANTHAN

இந்த விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா 10 லட்ச ரூபா வரை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி, இறந்தவரின் உறவினர்களுக்கு இந்தப் பணத்தை உடனடியாக வழங்க ஜனாதிபதி நிதியம் திட்டமிட்டுள்ளது.

மேலும், இலங்கை போக்குவரத்து சபை மற்றும் காப்புறுதி நிதியம் மூலம் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதேவேளை, இறம்பொடை விபத்து குறித்து அறிய கிடைத்தவுடன் தான் அதிர்ச்சியடைந்ததாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

நாட்டில் தினமும் அதிகரித்து வரும் வீதி விபத்துகள் குறித்து அரசாங்கம் அதிக கவனம் செலுத்தியுள்ளது. இதுபோன்ற விபத்துகளைத் தடுப்பதற்கான நிரந்தர திட்டத்தை வகுப்பதற்கு அரசாங்கம் தற்போது மும்முரமாக செயல்பட்டு வருவதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

தற்போதுள்ள சட்டங்களை செயல்படுத்துவதன் மூலமும், சாரதிகளின் மனப்பான்மையை மேம்படுத்துவதன் மூலமும் இவ்வாறான விபத்துகளை கணிசமாகக் குறைக்க முடியும் என்று தாங்கள் நம்புவதாகவும், இதற்காக ‘கிளீன் ஶ்ரீலங்கா’ திட்டத்தின் கீழ் ஏற்கனவே ஒரு திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

இன்று காலை நடந்த இந்த கொடூரமான வீதி விபத்தில் உயிரிழந்த அனைவரின் குடும்பத்தினருக்கும் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாக தெரிவித்த ஜனாதிபதி , காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க சகல தொடர்புடைய மருத்துவமனைகளையும் தயார்படுத்தவும், இது தொடர்பாக தேவையான அனைத்து எதிர்கால நடவடிக்கைகளையும் எடுக்கவும் பாதுகாப்புப் படையினருக்கும் சுகாதாரத் துறைகளுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : BBC