SOURCE :- BBC NEWS

மோதலின் தாக்கம்

பட மூலாதாரம், Shaad Midhat/BBC

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

ஏப்ரல் 22 நீண்ட காலத்திற்கு மறக்கமுடியாத நாளாக மாறிவிட்டது. இந்த ஆண்டு அந்த நாளில், ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது நடைபெற்ற கொடூரத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுக்க இந்திய ராணுவம் திட்டமிட்டு, மே 6-7 இரவு பாகிஸ்தான் நிர்வாக காஷ்மீர் மற்றும் பாகிஸ்தானில் உள்ள பல இடங்கள் மீது தாக்குதல் நடத்தியது.

இந்தியாவின் தாக்குதல்களுக்கு எதிர்வினையாக பாகிஸ்தான் இந்தியாவின் பல பகுதிகளைத் தாக்கத் தொடங்கியது. இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல் பல நாட்கள் தொடர்ந்தது. பின்னர் சண்டை நிறுத்தம் அறிவிக்கப்பட்டது.

இந்த பதற்றமான காலகட்டத்தில், பிபிசி செய்தியாளர்கள் பல்வேறு முக்கியப் பகுதிகளுக்குச் சென்று, நேரடியாக மோதல் மற்றும் மோதலின் தாக்கம் குறித்த உண்மை நிலவரத்தை உலகிற்கு எடுத்துச் சொன்னார்கள். உயிர் அச்சம் நிலவிய சூழலிலும், நம்பகமான கள நிலவரத்தை வழங்கினார்கள்.

இந்த பதற்றமான மோதலின் போது பிபிசி செய்தியாளர்கள் எவ்வாறு பணியாற்றினார்கள், அவர்களின் தனிப்பட்ட அனுபவங்கள் என்ன? தெரிந்துக் கொள்வோம். வெடிச்சத்தங்களுக்கு மத்தியிலும் அச்சமில்லாமல் அளித்த கள நிலவரத்தை உள்ளது உள்ளபடி சொன்ன செய்தியாளர்களின் வார்த்தைகளில் அவர்களது அனுபவங்கள்…

திவ்யா ஆர்யா

திவ்யா ஆர்யா

பிபிசி நிருபர் திவ்யா ஆர்யா, ஜம்முவில் இருந்து கள நிலவரத்தை உடனுக்குடன் அனுப்பிக் கொண்டிருந்தார். அவருடன் வீடியோ பத்திரிகையாளர் ஷாத் மிதாத்தும் இணைந்தார்.

‘உண்மையில், நான் தைரியசாலி, ஆனால் அதற்கு அர்த்தம் எனக்கு பயமே இல்லை என்பதல்ல. பயம் இருந்தது, அது என் இதயத்தின் ஏதோ ஒரு மூலையில் ஒளிந்து கொண்டிருந்தது’.

ஆபத்திலிருந்து விலகி இருப்பதுதான் மனித இயல்பு. ஆனால் ஒரு பத்திரிகையாளர், ஆபத்து இருக்கும் இடத்தை நோக்கி செல்வது தான் அவரது தொழில் தர்மம். ஆனால் பயம் எல்லாவற்றையும் விட மிகப் பெரியது.

“தான்யாவின் கண்களில் கண்ணீர் தளும்புகிறது. தனது வீட்டில் இடிந்து விழுந்துக் கிடக்கும் பூஜையறையைப் பார்க்கும்போது, சிமென்ட், சாம்பல், மண் ஆகியவற்றிலிருந்து தன்னுடைய இஷ்ட தெய்வத்தை எடுத்துக்கொண்டு அதை நெஞ்சோடு நெஞ்சாக அணைத்துக் கொள்ளும்போது அவள் முகத்தில் ஏற்பட்ட மாற்றம், வேதனை… வார்த்தைகளால் விவரிக்க முடியாதது. அவளுடைய இந்த அந்தரங்க தருணத்தை கேமராவில் படம்பிடிக்க பயமாக இருந்தது”.

“தான்யாவின் வலியை என்னுடைய கேள்விகள் மூலம் வாசகர்களுடன் பகிர்ந்து கொண்டேன். அந்த வலி, சர்வதேசங்களையும் சென்றடைந்தது. போருக்கு நம் கொடுக்கும் விலை, பணமும் பொருளும் மட்டுமல்ல, வலி, வேதனை துக்கம்… அந்தக் கதையை உலகிடம் எடுத்துச் சொன்னேன்”.

“தாக்குதலில் கொல்லப்பட்ட ஜாகிர் உசேனின் அத்தையின் வார்த்தைகளை கேட்டபோது நான் உள்ளுக்குள் நடுங்கினாலும், வெளியே தைரியமாகத்தான் இருந்தேன். வெடிப்பு மிகவும் சக்தி வாய்ந்ததாக இருந்ததால், மருமகனின் இடுப்புக்குக் கீழே உள்ள பகுதி பிரிந்து விழுந்ததாகக் கூறினார். அதை என்னால் நம்பவே முடியவில்லை, துக்கத்தின் உச்சகட்டத்தில் மனம்போன போக்கில் பிதற்றுகிறாரா என்றும் தோன்றியது. ஆனால், உண்மையைச் சொல்வதுதானே என்னுடைய வேலை? எங்கே சென்றால், யாரிடம் கேட்டு உண்மையை அறியலாம் என்று சிந்தித்து செயலாற்றினேன்”.

ஆம்புலன்ஸ் வாகனங்களிடம் சென்று உண்மை நிலைமையை அறிவோம், பலரிடம் விசாரித்து, கிடைத்தத் தகவல் சரியானதா என்று உறுதிப்படுத்துவோம். இத்தனைக்கும் பிறகு, பார்வையாளர்களும் வாசகர்களும் இதை அறிந்து கொள்வது முக்கியமா என்பதை முடிவு செய்ய வேண்டும். அதாவது, நான் கொடுக்கப்போகும் இந்தத் தகவல், பயம், விரக்தி மற்றும் கோபத்தை அதிகரிக்குமா??? இந்தக் கேள்விகள் என்னை எப்போதும் சூழ்ந்துக் கொண்டிருக்கும்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

கண்களில் இருந்து கண்ணீர் வழிந்துக் கொண்டே இருக்க, மரியா கான் நிறுத்தாமல் பேசிக் கொண்டிருக்கிறாள். குண்டுவெடிப்பில் கொல்லப்பட்ட தனது சகோதரியின் இரட்டைக் குழந்தைகளைப் பற்றி தான் அவள் என்னிடம் சொல்லிக் கொண்டிருந்தாள். கண்ணீரும் பேச்சும் திடீரென்று நிற்க, “வேறு ஏதாவது?” என்று கேட்கிறாள். என்ன சொல்வது?

“இந்த சமயத்தில் என் இதயத்தின் மூலையில் பதுங்கியிருக்கும் அச்சம் வந்து தொண்டையை அடைகிறது. தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, நான் தளர்வான குரலில் அவரிடம் கேட்டேன்: ‘உன்னுடைய சகோதரி, மைத்துனர் மற்றும் குழந்தைகளின் புகைப்படம் வேண்டும்'”

‘எங்களின் துணிச்சலுக்கு காரணம் அணிந்திருந்த பாதுகாப்பு ஜாக்கெட்டா? இதற்கு பதில் சொல்வது கடினம் ஆனால், பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் வாழ்க்கையை என்னிடம் பகிரும்போது, அவர்களின் சுக்குநூறான வாழ்க்கையை ஒன்றிணைக்கும்போது அவர்களின் நம்பிக்கையிலிருந்து நமக்கு பலம் கிடைக்கிறது. மீண்டும் ஒருமுறை, என் பயத்தைத் தள்ளிவிட்டு அடுத்த இடத்திற்கு புறப்பட்டுவிட்டேன்’.

ஷாத் மிதாத்/பிபிசி புகைப்படம்

பட மூலாதாரம், Shaad Midhat/BBC

வீடியோ பத்திரிகையாளர் ஷாத் மிதாத்

பிபிசி நிருபர் திவ்யா ஆர்யாவுடன் ஜம்முவிலிருந்து செய்தி சேகரித்துக் கொண்டிருந்தார் வீடியோ பத்திரிகையாளர் ஷாத் மிதாத்.

‘மே 7 ஆம் தேதி பின்னிரவில் ஜம்முவை சென்றடைந்தோம். மறுநாள் ரஜௌரி வழியாக ஸ்ரீநகருக்குப் புறப்பட்டோம். ரஜௌரியை அடைந்தபோது மாலை நேரமாகிவிட்டது. அதற்குபின் மேலும் செல்ல எங்களுக்கு அனுமதி கிடைக்கவில்லை. அங்கே ஒரு ஹோட்டலில் தங்கினோம்’.

அன்று இரவு பிபிசி தொலைக்காட்சியின் நேரலையில், ஜம்மு மற்றும் பிற இடங்களில் டிரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்கள் நடப்பதாக செய்திகள் வரத் தொடங்கின. அதே நேரத்தில், எல்லைப்பகுதியில் ஷெல் தாக்குதல் நடைபெற்றுக் கொண்டிருந்தது.

எங்களது சக பணியாளர்களில் சிலர் எல்லையை ஒட்டிய பூஞ்ச் என்ற ஊரில் இருந்தனர். அவர்களிடம் பேசினோம். ஷெல் தாக்குதல் தீவிரமாகிவிட்டதாக தெரியவந்தது. சிறிது நேரத்தில், நாங்கள் தங்கியிருந்த ஹோட்டலில் இருந்தவர்கள் கீழே ஓடினார்கள், எங்கள் அறையின் விளக்குகளை அணைத்துவிட்டு ஹோட்டல் லாபிக்குள் நாங்களும் ஓடினோம்.

துப்பாக்கியால் சுடப்படும் சத்தங்கள் கேட்டன. வெளியே டிரோன்கள் பறப்பதையும் பார்க்க முடிந்தது. ரஜௌரி நகரம் முழுவதும் மின்தடை அமலில் இருந்தது. அந்த இரவு எப்படி இருக்கும், என்னவெல்லாம் நடக்கும் என்ற யோசனை பதற்றத்தை அதிகரித்தது.

அலுவலகத்திலிருந்து அழைப்புகள் வரத் தொடங்கின. நண்பர்களும் செய்திகளை அனுப்பிக் கொண்டிருந்தனர். மனைவிக்கு போன் செய்து நாங்கள் பாதுகாப்பாக இருப்பதைத் தெரியப்படுத்தினேன். எங்களுக்காக பிரார்தனை செய்யுங்கள் என்று சொல்லிக் கொண்டிருந்தேன். சொல்லிக் கொண்டிருக்கும்போதே, என் மனைவியில் குரல் மாறியது, அவர் உணர்ச்சிவெள்ளத்தில் தத்தளித்ததை என்னால் உணர முடிந்தது.

நாங்கள் தங்கியிருந்த ஹோட்டலில் எங்களுடன் 20 பத்திரிகையாளர்கள் இருந்தனர். அனைவரும் தங்கள் வேலையைச் செய்து கொண்டே, தங்கள் குடும்பத்தில் உள்ளவர்களுடன் தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தனர்.

இரவு முழுவதும் தூங்கமுடியாமல் விழித்திருந்தோம். எங்கள் போனை அவ்வப்போது பார்த்துக் கொண்டிருந்தோம்.

நீண்ட இரவு, ஒருவழியாக விடிந்தது. மறுநாள் காலை ஜம்மு வந்துவிட்டோம். முதல் நாள் இரவில் தாக்கப்பட்ட ஜம்மு நகரின் பேரழிவுக் காட்சிகளை மறுநாள் காலையில் நாங்கள் பார்த்து அதிர்ந்து போனோம்.

இந்த மோதலைப் பற்றி செய்தி சேகரிக்கச் சென்ற அனுபவம் எனக்கு ஒரு விலைமதிப்பில்லா பாடத்தைக் கற்றுக் கொடுத்தது… “போர் எங்கு நடந்தாலும், அது உயிரிழப்பை மட்டுமே ஏற்படுத்தும்” என்பதை கண்கூடாகப் பார்த்தேன்.

பிபிசி நிருபர் மாஜித் ஜஹாங்கிர், கேமராமேன் இம்ரான் அலியுடன் இணைந்து ஜம்மு-காஷ்மீரின் எல்லைப் பகுதிகளில் செய்தி சேகரித்துக் கொண்டிருந்தார்

மாஜித் ஜஹாங்கிர்

பிபிசி நிருபர் மாஜித் ஜஹாங்கிர், கேமராமேன் இம்ரான் அலியுடன் இணைந்து ஜம்மு-காஷ்மீரின் எல்லைப் பகுதிகளில் செய்தி சேகரித்துக் கொண்டிருந்தார்.

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதலின் போது, ஜம்மு-காஷ்மீரின் எல்லைப் பகுதிகள் மற்றும் சுற்றுவட்டார நகரங்கள் மற்றும் சிறு நகரங்களில் இருந்து செய்திகளை அனுப்புவது சுலபமான காரியமல்ல. சவால் நிறைந்த அனுபவமாக இருந்தது.

பாதுகாப்புக் காரணங்களால் சில இடங்களுக்கு செல்ல முடியாத நிலை என்றால், மணிக்கணக்கில் பயணம் செய்த பிறகும், பல இடங்களுக்கு செல்ல முடியாத நிலையும் ஏற்பட்டது.

உரி அல்லது குப்வாராவின் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்றால், நாங்கள் திரும்பி வரும்போது பெரும்பாலும் மாலை நேரமாகிவிடும். எந்த நேரத்திலும் ஷெல் தாக்குதல்கள் நிகழலாம் என்ற அச்சம் அனைவரின் மனதிலும் இருந்தது.

எனக்கும் உள்ளூர பயம் இருந்தது, வீட்டுக்கு செல்லும்வரை என் குடும்ப உறுப்பினர்களும் கவலையுடனே இருந்தார்கள், அவ்வப்போது என்னை அழைத்து நான் பாதுகாப்பாக இருக்கிறேனா என்பதை உறுதி செய்துக் கொள்வார்கள்.

‘தவறான தகவல்களிலிருந்து’ நம்மை விலக்கி வைத்துக்கொண்டு, நமது வாசகர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் சரியான செய்திகளை வழங்குவது என்பதே மிகப்பெரிய சவாலாக இருந்தது.

எந்தவொரு செய்தி கிடைத்தாலும், அதன் உண்மையை அறியவும், அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவும் பலரை தொடர்பு கொள்வது எளிதல்ல என்றாலும், அதையும் செய்ய வேண்டியிருந்தது.

காலையில் நிலைமை எப்படி இருக்கும், எதுபோன்ற ஆபத்தான சூழ்நிலைக்கு செல்ல வேண்டியிருக்கும் என்று தெரியாது. அடுத்து என்ன என்று தெரியாமல், பல விஷயங்கள் மனதில் ஓட இரவில் தாமதமாகவே தூங்கச் செல்வேன்.

ஜுகல் புரோஹித்

ஜுகல் புரோஹித்

பதான்கோட்டிலிருந்து பிபிசி நிருபர் ஜுகல் புரோஹித், வீடியோ பத்திரிகையாளர் அந்தரிக்ஷ் ஜெயினுடன் செய்தி வெளியிட்டுக் கொண்டிருந்தார்.

நாங்கள் இருந்த நிலைமையை சொல்ல வார்த்தைகளே இல்லை. உதாரணமாகச் சொன்னால், ஒரு கதவு சத்தமாக மூடினால் அல்லது ஏதாவது பொருள் விழுந்தால், கண்கள் உடனடியாக வானத்தை நோக்கித் திரும்பும். எங்காவது ஒரு டிரோனில் இருந்து தாக்குதல் அல்லது துப்பாக்கிச் சூடு நடந்ததா என்று தோன்றும்.

இந்த மோதல் சமயத்தில் நானும், சக ஊழியர் அந்தரிக்ஷ் ஜெயின் மற்றும் வாகன ஓட்டுநர் பவன் ஜா என மூவரும் ஒன்றாகவே இருந்தோம். இந்தியா- பாகிஸ்தான் சர்வதேச எல்லைக்கு அருகிலுள்ள பதான்கோட் நகரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு சென்று நிலைமையை மக்களுக்கு எடுத்துச் சொன்னோம்.

இங்கு நடந்த தாக்குதல்களால் சாதாரண குடிமக்களின் வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

நான் எல்லைப் பகுதியில் இருப்பது தெரிந்ததும், என் குடும்ப உறுப்பினர்கள் பலரிடமிருந்து அழைப்புகள் வரத் தொடங்கின. அவர்கள் அனைவரும் என்னைப் பற்றி கவலைப்பட்டனர்.

ஒரு இரவு நேரத்தில், ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு செல்வதற்கு வாகனத்தின் ஹெட்லைட்களை அணைத்துவிட்டுச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அப்போது, டிரோன்கள் எங்கள் தலைக்கு மேலே பறந்து கொண்டிருந்தன. அவை சுட்டு வீழ்த்தப்பட்டன, அந்த வெடிப்பு ஓசை எங்களை அதிரவைத்தது.

உடனடியாக காரை நிறுத்திவிட்டு அருகிலுள்ள ஒரு கட்டடத்திற்குள் தஞ்சம் புகுந்தோம், அங்கு யாரும் இல்லை. மின் தடை காரணமாக, அனைத்து வீடுகளிலும் விளக்குகள் அணைக்கப்பட்டிருந்தன. சிறிது நேரத்திற்குப் பிறகு, காவல்துறையினர், சிவில் பாதுகாப்புப் படையினர் மற்றும் சக பத்திரிகையாளர்களைப் பார்த்தபோதுதான், நிம்மதி பெருமூச்சு வந்தது.

என்னுடைய அனுபவத்தை கூறி முடிப்பதற்கு முன், சில வார்த்தைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இந்த வார்த்தைகளைச் சொல்வது நான் அல்ல… பதான்கோட்டில் வசிக்கும் ஓய்வு பெற்ற அதிகாரி, அவருடைய எண்ணம், என்னுடைய வார்த்தைகளாக….

“பஹல்காமில் நடைபெற்றதை யாராலும் ஒருபோதும் மறக்க முடியாது. அதற்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். ஆனால் கடந்த சில நாட்களாக, இரண்டு இந்தியாக்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஒன்று, தங்கள் வீடுகளில் அமர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே நடந்ததை சமூக ஊடகங்கள் மற்றும் தொலைக்காட்சியில் விளையாட்டாக, ஒரு சம்பவத்தைப் போல பார்த்துக் கொண்டிருந்தது.

மற்றொன்று, எங்களைப் போலவே, இரு நாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடக்கும், அமைதி நிலவும், வாழ்க்கை மீண்டும் சரியான பாதையில் திரும்பும் என்ற நம்பிக்கையுடன் பதான்கோட் போன்ற பகுதிகளில் அமர்ந்திருந்த இந்தியா”.

அந்தப் பகுதி முற்றிலும் போர்க்களமாக மாறியிருந்தது

பட மூலாதாரம், Debalin Roy/BBC

டெப்லின் ராய்

வீடியோ பத்திரிகையாளர் டபிலன் ராய், பிபிசி நிருபர் ராகவேந்திர ராவுடன் பூஞ்சிலிருந்து செய்தி சேகரித்துக் கொண்டிருந்தார்.

இப்போது பூஞ்சில் இருக்கிறேன். இங்கு கடுமையான ஷெல் தாக்குதல் நடந்தது. மே 8 ஆம் தேதி இரவு, ஷெல் தாக்குதலில் இருந்து தப்பிப்பதற்காக ஒரு தற்காலிக தங்குமிடத்தில் நாங்கள் தங்கினோம்.

சைரன்களின் சத்தத்திற்கும் தொடர்ச்சியான வெடிச்சத்தங்களுக்கும் மத்தியில், எங்கள் ஒவ்வொருவரிடமும் ஒரு கதை இருந்தது. அதை நாங்கள் மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும், எனவே தொடர்ந்து எங்கள் வேலையைச் செய்துக் கொண்டிருந்தோம்.

அந்தப் பகுதி முற்றிலும் போர்க்களமாக மாறியிருந்தது. நாங்கள் இருந்த எல்லையையும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளையும் ஷெல்கள் தாக்கிக் கொண்டிருந்தன. சில குண்டுவெடிப்புகளுக்கு முன்பு இரண்டு முதல் மூன்று வினாடிகள் வரை விசில் சத்தமும் கேட்டது.

ஒவ்வொரு முறை வெடிப்பு ஏற்படும் போதும், நாங்கள் யாரும் எதுவும் பேசாமல் ஒருவர் மற்றவரைப் பார்த்துக் கொண்டோம். ஆனால் வார்த்தைகளை விட கண்கள் அதிகமாகப் பேசின.

இந்த வெடிப்புச் சூழலுக்கு நடுவில், நான் எனக்கு நெருக்கமான சிலரிடமும் தொலைபேசியில் பேசினேன்.

இரவு நேரத்தில் ஷெல் தாக்குதலும் அதிகரித்தது. இரண்டு மணியளவில் வெடிப்புச் சத்தம் எங்களுக்கு அருகில் நெருங்கி வரத் தொடங்கியது. அறையில் அமைதி நிலவியது. ஒரு பெரிய வெடிப்பு நிகழும் என்ற பயம் இருந்தது. அதேபோல மிகப் பெரிய வெடிப்புச் சத்தம் கேட்டது, கூரையில் கனமான பொருள் வந்து விழுந்தது.

அழுகை ஓலங்களும் அலறல் சத்தங்களும் தொலைவில் கேட்டன. நாங்கள் இருந்த இடத்திற்கு அருகிலுள்ள ஒரு வீட்டிற்கு ஏதோ நடந்திருப்பதை புரிந்துகொண்டோம், ஆனால் சேதத்தின் அளவை மதிப்பிட முடியவில்லை.

உள்ளுக்குள்ளே உறைந்துபோய் கட்டடத்துக்குள் இருந்த நாங்கள், காலை ஏழு மணிக்கு வெளியே வந்தோம். வாசலில் சில நிமிடங்கள் நின்றேன். அந்த காலைவேளையில் மயானஅமைதி நிலவுவதை நான் உணர்ந்தேன்.

தொலைதூர மலைப்பகுதிகளிலிருந்து புகை வந்துக் கொண்டிருந்தது. ராணுவ வாகனங்கள் வேகமாக நகர்ந்து கொண்டிருந்தன. ஒரு ஆம்புலன்ஸ் வேகமாக கடந்து சென்றது. நான் கீழே பார்த்தேன். அங்கே ஒரு ஷெல் குண்டு கிடந்தது.

– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU