SOURCE :- BBC NEWS

மோதிக்கும் எர்டோகனுக்கும் இடையிலான ஒப்பீடுகள் என்ன?

பட மூலாதாரம், Getty Images

  • எழுதியவர், ரஜ்னீஷ் குமார்
  • பதவி, பிபிசி செய்தியாளர்
  • 17 மே 2025, 07:41 GMT

    புதுப்பிக்கப்பட்டது 13 நிமிடங்களுக்கு முன்னர்

துருக்கி அதிபர் ரெசெப் தயிப் எர்டோகனுக்கு இந்த வாரம் சிறப்பானதாக இருந்தது.

துருக்கியில் ஆயுதமேந்திய பிரிவினைவாத இயக்கத்திற்கு தலைமை தாங்கிய குர்திஸ்தான் தொழிலாளர் கட்சி (PKK) தானே கலைத்துக் கொண்டது. எர்டோகனுக்கு நெருக்கமாக இருந்த சிரியா மீதான பொருளாதாரத் தடைகளை டிரம்ப் நீக்கினார்.

யுக்ரேனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தை துருக்கியில் நடந்துள்ளது. புதிய போப் விரைவில் துருக்கிக்கு விஜயம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளார். துருக்கி ஆதரவு பெற்ற லிபிய பிரதமர் அதிகாரத்தின் மீதான தனது பிடியை வலுப்படுத்தியுள்ளார். இந்தியாவுக்கு எதிராக உதவிய எர்டோகனுக்கு பாகிஸ்தான் நன்றி தெரிவித்துள்ளது.

மறுபுறம், கடந்த இரண்டு வாரங்கள் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதிக்கு மிகவும் சவாலானவையாக இருந்தன. ஏப்ரல் 22 ஆம் தேதி பஹல்காமில் நடந்த தாக்குதலுக்குப் பிறகு, மே 6 மற்றும் 7-ஆம் தேதிகளுக்கு இடைப்பட்ட நள்ளிரவில் இந்தியா பாகிஸ்தானில் ராணுவ நடவடிக்கையைத் தொடங்கியது, அதன் பின்னர் இரு நாடுகளுக்கும் இடையே தாக்குதல்கள் மற்றும் எதிர் தாக்குதல்கள் நடந்தன. போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட போது, அதற்கான பெருமையை அமெரிக்கா எடுத்துக் கொண்டது. அமெரிக்கா இந்தியாவை வழிநடத்துகிறது என்ற செய்தி பரவியது.

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதலில் துருக்கி நேரடியாக பாகிஸ்தானுடன் நின்றது. இந்தியாவில் சமூக வலைதளங்களில் துருக்கி குறித்து காரசாரமான விவாதம் நடந்து வருகிறது. துருக்கி தொடர்பாக இந்தியாவில் சில முடிவுகள் எடுக்கப்பட்டாலும், எர்டோகன் அதனால் பாதிக்கப்படவில்லை.

வியாழக்கிழமை, எர்டோகன், “நாங்கள் பாகிஸ்தான் மக்களுடன் நிற்கிறோம். நான் சகோதரர் ஷாபாஸ் ஷெரீப்பை அழைத்து நாம் இதில் ஒன்றாக இருக்கிறோம் என்று சொன்னேன். எதிர்காலத்திலும் பாகிஸ்தானுக்கு ஆதரவாக நாங்கள் தொடர்ந்து நிற்போம்” என்றார்.

டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தின் மேற்கு ஆசிய ஆய்வுகள் மையத்தின் பேராசிரியர் அஸ்வினி மகாபத்ரா கூறுகையில், பல காரணங்களால் எர்டோகனின் தன்னம்பிக்கை அதிகரித்துள்ளது என்கிறார்.

“எர்டோகன் சிரியா மற்றும் லிபியாவில் அவர் விரும்பும் அரசாங்கத்தை உருவாக்கினார். ஆர்மீனியாவுக்கு எதிராக அஜர்பைஜானின் கையை ஓங்க வைத்தார். சிரிய அரசையும் டிரம்ப் அங்கீகரித்தார். இத்தகைய சூழ்நிலையில், மேற்கு ஆசியாவைப் போலவே, தெற்காசியாவிலும் அவர் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று எர்டோகன் நினைக்கிறார். எர்டோகன் பாகிஸ்தானை ஆதரிக்கும் விதம், இந்தியாவுடனான பதற்றத்தை மேலும் அதிகரிக்கும்” என்று பேராசிரியர் மஹாபத்ரா கூறுகிறார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

ஆனால் தெற்காசியா மேற்கு ஆசியாவைப் போன்றது அல்ல என்பதை எர்டோகன் புரிந்து கொள்ள வேண்டும் என்கிறார் பேராசிரியர் மஹாபத்ரா.

“எர்டோகன் தெற்காசியாவில் இஸ்லாத்தின் பெயரால் பாகிஸ்தானில் தன்னை பொருத்தமானவராக ஆக்கிக் கொள்ளலாம், ஆனால் அவர் வேறு எங்கும் வெற்றி பெற மாட்டார். துருக்கி விவகாரத்தில் இந்தியா ராஜ தந்திர ரீதியில் இன்னும் தீவிரமாக செயல்பட வேண்டும். ஆர்மீனியா மற்றும் கிரீஸுடன் உறவுகளை வலுப்படுத்துவது, சைப்ரஸுக்கு உதவிகளை அதிகரிப்பது, கலாசார ரீதியாகவும் போட்டியிடுவது போன்றவற்றை செய்ய வேண்டும்” என்கிறார்.

“துருக்கி ஒருபோதும் இந்தியாவுடன் இருந்ததில்லை, ஆனால் இப்போது எர்டோகன் இஸ்லாத்தின் பெயரில் இந்தியாவுக்கு எதிரான பிரசாரத்தை முன்னெடுத்து வருகிறார்” என்று மஹாபத்ரா சுட்டிக்காட்டுகிறார்.

மோதி – எர்டோகன் ஒப்பீடு

மோதிக்கும் எர்டோகனுக்கும் இடையிலான ஒப்பீடுகள் என்ன?

பட மூலாதாரம், Getty Images

இந்திய பிரதமர் நரேந்திர மோதியையும், துருக்கி அதிபர் எர்டோகனையும் அடிக்கடி ஒப்பிட்டு பேசுவது வழக்கம். இருவரின் அரசியலையும் ஆளுமையையும் பகுப்பாய்வு செய்ததில் பல ஒற்றுமைகள் காணப்படுகின்றன.

எர்டோகன் இஸ்தான்புல்லின் மேயர் பதவியிலிருந்து 1994 -ல் பிரதமர் மற்றும் அதிபர் பதவிக்கு உயர்ந்தார். நரேந்திர மோதி 2001-ல் குஜராத்தின் முதலமைச்சராகவும், 2014 -ல் இந்தியப் பிரதமராகவும் ஆனார்.

2020 ஆகஸ்ட் மாதத்தில் அயோத்தியில் ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டிய போது, நரேந்திர மோதி, பல நூற்றாண்டுகளின் காத்திருப்பு முடிந்துவிட்டது என்று கூறியிருந்தார்.

ஜூலை 2020 -ல், துருக்கி அதிபர் ரெசெப் தயிப் எர்டோகன் இஸ்தான்புல்லில் உள்ள ஹாகியா சோபியா அருங்காட்சியகத்தை மசூதியாக மாற்றிய போது, “இது எங்கள் இளைஞர்களின் பெரிய கனவு, அது இப்போது நிறைவேறியுள்ளது” என்று அவர் கூறினார்.

நரேந்திர மோதியின் அடையாளம் ஒரு இந்து தேசியவாதி மற்றும் எர்டோகனின் அடையாளம் ஒரு இஸ்லாமிய தலைவர். இரு தலைவர்களும் நாகரிகங்களின் போரில் வலுவான போட்டியாளர்களாகத் தோன்றுகிறார்கள்.

இருவரும் மதச் சார்பற்ற நாட்டை வழிநடத்துகிறார்கள், ஆனால் இருவரும் தேசத்திலும் அரசிலும் மதம் ஒரு முக்கிய இடத்தைப் பெற விரும்புகிறார்கள்.

எர்டோகன் துருக்கியின் பெயரை துருக்கியே என்று மாற்றியுள்ளார், பாஜக தலைவர்களும் இந்தியாவின் பெயரை பாரத் என்று மாற்ற விரும்புகிறார்கள். ஹேகியா சோபியா அருங்காட்சியகம் முதலில் ஒரு கிறித்துவ தேவாலயமாக இருந்தது. இது ஆறாம் நூற்றாண்டில் பைசன்டைன் பேரரசர் ஜஸ்டினியனால் கட்டப்பட்டது. ஒட்டோமான் பேரரசின் எழுச்சியுடன், இது 1453 இல் ஒரு மசூதியாக மாற்றப்பட்டது.

ஒட்டோமான் பேரரசு முடிவுக்குப் பிறகு, முஸ்தபா கமல் பாஷா ஆட்சிக்கு வந்தார். அவர் இந்த மசூதியை 1934 -ல் ஒரு அருங்காட்சியகமாக மாற்ற முடிவு செய்தார். இதன் மூலம் மதச் சார்பற்ற துருக்கியில் ஒரு செய்தியை அனுப்ப முஸ்தபா கமால் பாஷா நினைத்தார். ஆனால் மீண்டும் எர்டோகன் அதை மசூதியாக மாற்றியுள்ளார். எர்டோகன் தனது ஆட்சியின் 17 வது ஆண்டில் இந்த இலக்கை அடைந்தார்.

நரேந்திர மோதி 1990 களில் ராம ஜென்மபூமி இயக்கத்தில் ஈடுபட்டார். இதையடுத்து அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டு, உச்ச நீதிமன்ற தீர்ப்புப்படி அங்கு ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது.

மோதி மற்றும் எர்டோகனின் பின்னணி

மோதிக்கும் எர்டோகனுக்கும் இடையிலான ஒப்பீடுகள் என்ன?

பட மூலாதாரம், Getty Images

காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான சசி தரூர் இப்போது மோதி அரசாங்கத்தின் கொள்கைகளை ஆதரிக்கலாம், ஆனால் ஜூன் 7, 2018 அன்று, நரேந்திர மோதிக்கும் எர்டோகனுக்கும் இடையிலான ஒற்றுமைகள் குறித்து ப்ராஜெக்ட் சிண்டிகேட்டில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார்.

சசி தரூர் இந்த கட்டுரையில், “மோதி மற்றும் எர்டோகன் இருவரும் சிறிய நகரங்களின் ஏழ்மையான பின்னணியில் இருந்து வந்தவர்கள். எர்டோகன் துருக்கியின் ரைஸ் நகரில் எலுமிச்சை சர்பத்துடன் கேக்குகள் விற்பனை செய்து வந்தார். மறுபுறம், வத் நகரில் உள்ள ரயில் நிலையத்தில் தேநீர் கடை நடத்தி வரும் தனது தந்தை மற்றும் சகோதரருக்கு மோதி உதவினார். இருவரும் சுயமாக உருவானவர்கள், ஆற்றல் மிக்கவர்கள் மற்றும் உடல் ரீதியாக திடகாத்திரமானவர்கள். எர்டோகன் அரசியல் தலைவராவதற்கு முன்பு ஒரு தொழில்முறை கால்பந்து வீரராக இருந்தார், மறுபுறம் மோதி தனது 56 அங்குல மார்பைப் பற்றி பெருமிதம் கொள்கிறார்” என்று எழுதியிருந்தார்.

மேலும், “எர்டோகனின் நீதி மற்றும் மேம்பாட்டுக் கட்சி (ஏ.கே.பி) மற்றும் நரேந்திர மோதியின் பாரதிய ஜனதா கட்சி (பாஜக) இரண்டும் மத உணர்வுகளை ஊக்குவிக்கின்றன. அவர்கள் தேசியவாதத்தை மதத்துடன் இணைக்கிறார்கள், இரு கட்சிகளும் மதச் சார்பற்ற சித்தாந்தத்தை விட தங்கள் பண்டைய அமைப்பு சிறந்தது என்று வாதிடுகின்றனர்.” என்றும் குறிப்பிட்டிருந்தார் சசி தரூர்.

மோதிக்கும் எர்டோகனுக்கும் இடையிலான ஒப்பீடுகள் என்ன?

பட மூலாதாரம், Getty Images

“எர்டோகன் மற்றும் மோதி இருவரும் கடந்த காலத்தைப் பற்றி பேசுகிறார்கள். எர்டோகன் ஒட்டோமான் பேரரசைப் பாராட்டி, நீங்கள் அதிபரை மட்டும் தேர்ந்தெடுக்கவில்லை, நாட்டின் எதிர்காலத்தையும் தீர்மானிக்கிறீர்கள் என்று தனது வாக்காளர்களிடம் கூறுகிறார். மறுபுறம், மோதி பண்டைய இந்தியாவைப் பற்றி பேசுகிறார், அதை புதுப்பித்து அதன் பழைய பெருமையை மீண்டும் பெற விரும்புகிறார்” என்றும் சசி தரூர் தனது கட்டுரையில் எழுதியுள்ளார்.

எர்டோகன் குறித்து ஒரு புத்தகத்தை எழுதிய துருக்கிய ஆய்வாளர் சோனர் கோகாப்டேயின் கருத்தை சஷி தரூர் மேற்கோள் காட்டியுள்ளார், அதில் அவர், “துருக்கியின் பாதி பேர் எர்டோகனை வெறுக்கிறார்கள், அவரால் எதையும் சரியாக செய்ய முடியாது என்று நினைக்கிறார்கள். ஆனால் துருக்கியில் பாதி பேர் அவரை நேசிக்கிறார்கள், எர்டோகனால் எந்த தவறும் செய்ய முடியாது என்று நினைக்கிறார்கள்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் மோதிக்கும் இது பொருந்தும் என்று சசி தரூர் கருதுகிறார்.

சசி தரூர் , “துருக்கிக்கும் இந்தியாவுக்கும் இடையே நிறைய வித்தியாசம் உள்ளது. துருக்கியின் மக்கள் தொகை 81 மில்லியன், இது இந்திய மாநிலமான உத்தரப் பிரதேசத்தின் மக்கள்தொகையில் பாதிக்கும் குறைவாகும். துருக்கியில் 98 சதவீத முஸ்லிம்களும், இந்தியாவில் 80 சதவீத இந்துக்களும் உள்ளனர். துருக்கி ஏறக்குறைய ஒரு வளர்ந்த நாடு, அதே நேரத்தில் இந்தியா அதை அடைய நீண்ட தூரம் செல்ல வேண்டும். துருக்கி, இந்தியாவைப் போல, ஒருபோதும் ஒரு காலனி நாடாக இருக்கவில்லை, மதத்தின் அடிப்படையில் பிரிவினையும் இல்லை.”

இந்தியாவைப் பொருத்தவரை, பிரிவினைக்குப் பிறகு பாகிஸ்தான் உருவானது, அதே பாகிஸ்தானுடன் எர்டோகன் தற்போது நிற்கிறார்.

‘எல்லாவற்றிற்கும் முன் நான் ஒரு முஸ்லிம்’

மோதிக்கும் எர்டோகனுக்கும் இடையிலான ஒப்பீடுகள் என்ன?

பட மூலாதாரம், Getty Images

நியூயார்க் டைம்ஸின் முன்னாள் சர்வதேச விவகாரங்கள் குறித்த ஆசிரியரான பஷாரத் பீர், காஷ்மீரைச் சேர்ந்தவர்.

துருக்கியில் எர்டோகன் மற்றும் இந்தியாவில் நரேந்திர மோதியின் அரசியலை ஒப்பிட்டு 2017-ம் ஆண்டில் ‘எ க்வெஸ்டின் ஆஃப் ஆர்டர்: இந்தியா, துருக்கி மற்றும் தி ரிட்டர்ன் ஆஃப் தி ஸ்ட்ராங்மேன்’ என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தை எழுதினார்.

துருக்கியும் இந்தியாவும் பன்முக கலாசார ஜனநாயகங்களாக இருந்தன என்றும், வலதுசாரி மத தேசியவாதிகளான எர்டோகன் மற்றும் மோதி அங்கு எவ்வாறு வெற்றி பெற்றனர் என்றும் பீர் தனது புத்தகத்தில் விளக்கியுள்ளார்.

தனது புத்தகம் குறித்து வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், “துருக்கி மற்றும் இந்தியா இரண்டும் பேரரசுகளின் வீழ்ச்சிக்குப் பிறகு தேசிய அரசுகளாக உருவெடுத்தன. இரு நாடுகளும் இன ரீதியாக வேறுபட்ட சமூகங்களைக் கொண்டுள்ளன. இரு நாடுகளின் உயர்மட்டத் தலைவர்களும் மேற்கின் நவீனத்தை நோக்கிச் சென்று, சமூக சீர்திருத்தங்களை பெரிய அளவில் செயல்படுத்தினர். முஸ்தபா கமால் பாஷா துருக்கியை பிரான்சின் மதச் சார்பின்மையை நோக்கி அழைத்துச் செல்ல முயன்றார்.

மறுபுறம், இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு ஒரு வித்தியாசமான மதச் சார்பின்மையை ஊக்குவித்தார், இது மதத்திற்கு எதிரானது அல்ல, ஆனால் மத விஷயங்களில் அரசு சம அளவில் தூரத்தை பராமரிக்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்த முயன்றது. துருக்கியில் முஸ்தபா கமால் பாஷாவின் யோசனையும், இந்தியாவில் நேருவின் யோசனையும் பல தசாப்தங்களாக ஆதிக்கம் செலுத்தின. ஆனால் இரு நாடுகளிலும் பாஷா மற்றும் நேருவின் மதத் கண்ணோட்டங்களை எதிர்த்த குழுக்கள் இருந்தன. துருக்கியில் இஸ்லாமியவாதிகளும், இந்தியாவில் இந்து தேசியவாதிகளும் எதிர்த்து நின்றனர்.” என்று கூறியிருந்தார்.

பஷரத் பீர் தனது புத்தகத்தில், “எர்டோகனின் இஸ்லாமிய தேசியவாதம் மற்றும் மோதியின் இந்து தேசியவாதம் ஆகியவை தங்கள் நம்பிக்கையுடன் தொடர்பில்லாதவர்களுக்கு மிகக் குறைந்த இடமே கொண்டுள்ளன. இருவரின் அரசியலிலும் கருத்து வேறுபாட்டுக்கு இடமில்லை” என்றார்.

2014 ஆம் ஆண்டில் பிரதமரான பிறகு, நரேந்திர மோதி மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பாவில் உள்ள பல நாடுகளுக்கு விஜயம் செய்தார், ஆனால் துருக்கிக்கு ஒருபோதும் சென்றதில்லை. மோதி 2019 இல் துருக்கி செல்ல திட்டமிட்டிருந்தார். ஆனால் காஷ்மீர் குறித்த எர்டோகனின் அறிக்கை காரணமாக அந்த பயணம் ஒத்திவைக்கப்பட்டது.

இந்தியாவுக்கு எர்டோகனின் கடைசி இருதரப்பு பயணம் 2017-ஆம் ஆண்டு ஏப்ரல் 30-ஆம் தேதி நடந்தது. இந்த பயணத்தின் போதும் காஷ்மீர் குறித்து அவர் கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது.

எர்டோகன் தனது இந்திய வருகைக்கு முன்பு, காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே மத்தியஸ்தம் அவசியம் என்று வாதிட்டார்.

2003 ஆம் ஆண்டில் முதல் முறையாக துருக்கியின் பிரதமரான பிறகு, எர்டோகன் நியூயார்க் டைம்ஸுக்கு அளித்த பேட்டியில், “எல்லாவற்றிற்கும் முன்பு நான் ஒரு முஸ்லிம். ஒரு முஸ்லிமாக நான் எனது மதத்தைப் பின்பற்றுகிறேன். அல்லாஹ்விடம் எனக்கு ஒரு பொறுப்பு இருக்கிறது. அவரால்தான் நான் இருக்கிறேன். அந்த பொறுப்பை நிறைவேற்ற முயற்சிக்கிறேன்” என்றார்.

– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU