SOURCE :- BBC NEWS

13 நிமிடங்களுக்கு முன்னர்
ஹைதராபாத் நகரில் உலக புகழ்பெற்ற சார்மினார் அருகே உள்ள குல்சார் ஹவுஸ் கட்டடத்தில் இன்று தீவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 17 பேர் உயிரிழந்ததாக தெலங்கானா தீயணைப்புத்துறை டிஜிபி நாகி ரெட்டி அறிவித்தார்.
மின் கசிவு ஏற்பட்டதே விபத்துக்கு காரணம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
சார்மினார் அருகே உள்ள குல்சார் ஹவுஸ் சந்திப்பில் உள்ள தரைத்தளம் மற்றும் இரு மாடிகள் கொண்ட கட்டிடத்தில் ஞாயிற்றுக்கிழமை (2025 மே 18) காலை 6:16 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டதாக தெலங்கானா தீ பேரிடர் மீட்பு அவசரநிலை மற்றும் சிவில் பாதுகாப்புத் துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், ani
தரை தளத்தில் ஏற்பட்ட தீ, பின்னர் மேல் தளங்களுக்கும் பரவியதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்து நடைபெற்ற கட்டடத்தின் முதல் தளத்தில் 17 பேர் சிக்கியிருந்ததாகவும், அவர்களை மீட்ட தீயணைப்பு வீரர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
“8 பேர் குழந்தைகள்”
உயிரிழந்தவர்களில் 8 பேர் குழந்தைகள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அவர்கள் அனைவரும் 10 வயதுக்குட்பட்டவர்கள் என்று தீயணைப்புத்துறை டிஜிபி நாகி ரெட்டி ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
“கட்டடம் பழமையானது. கட்டடத்திற்குள் நுழைய மிகவும் குறுகிய பாதை மட்டுமே உள்ளது. உள்ளே 2 கடைகள் இருந்துள்ளன. அவை அனைத்தும் எரிந்து நாசமாகிவிட்டன. ஒரு குடியிருப்பு வளாகமும் உள்ளது. இதன் விளைவாக, முதல் மற்றும் இரண்டாவது தளங்களுக்குச் செல்லும் பாதை போதுமானதாக இல்லை. உள்ளே நுழைய சரியான வழி இல்லை,” என்று டிஜி கூறினார்.
விபத்துக்கு மின் கசிவு தான் காரணம் என்று அவர் கூறினார்.

சிறந்த மருத்துவ சேவையை வழங்குங்கள்: முதல்வர்
ஹைதராபாத்தின் மிர் சவுக் பகுதியில் ஏற்பட்ட மிகப்பெரிய தீ விபத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதாக முதல்வர் ரேவந்த் ரெட்டி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
நிவாரணப் பணிகளைத் தீவிரப்படுத்தவும், காயமடைந்தவர்களுக்கு சிறந்த மருத்துவ சிகிச்சை அளிக்கவும் அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.
சம்பவ இடத்தைப் பார்வையிட்ட காங்கிரஸ் எம்.பி. அனில் குமார் யாதவ், “துரதிர்ஷ்டவசமாக, குல்சார் ஹவுஸ் அருகே தீ விபத்து ஏற்பட்டது. அந்த நேரத்தில் அங்கு 17 பேர் இருந்தனர். அவர்களில் பலர் உயிரிழந்தனர். முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரிடம் பேசி வருகிறார். அவர்களுக்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் அரசாங்கம் செய்து வருகிறது” என்று அவர் கூறியதாக பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
பிரதமர் இரங்கல்
ஹைதராபாத்தில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த அதிர்ச்சியை தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கலைத் தெரிவித்துக் கொண்ட பிரதமர், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்குவதாகவும் அறிவித்தார். காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 நிதி உதவி அறிவிக்கப்பட்டுள்ளது.
(இந்தக் கட்டுரை தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது)
– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
SOURCE : THE HINDU