SOURCE :- BBC NEWS

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
200 பாம்புக்கடி வாங்கியவரின் உடலில் இருந்து அபூர்வ ‘விஷமுறிவு மருந்து’ கண்டுபிடிப்பு
49 நிமிடங்களுக்கு முன்னர்
இந்த முன்னாள் லாரி மெக்கானிக், 200 பாம்புக்கடி வாங்கியவர் என்றால் உங்களால் நம்ப முடியுமா? அதுமட்டுமல்ல, இவரது உடலில் பாம்புக் கடிக்கான அபூர்வ மருந்தையும் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இந்தியாவில் ஆண்டுதோறும் 30 முதல் 40 லட்சம் பேர் பாம்பு கடிக்கு உள்ளாவதாகவும், இதில் சுமார் 50,000 பேர் உயிரிழப்பதாகவும் இந்திய அரசின் கடந்த ஆண்டு தரவு கூறுகிறது. இது உலகளவில் பதிவாகும் பாம்புக்கடி மரணங்களில் பாதி என இந்திய அரசு கூறுகிறது.
தற்போது பாம்புக்கடிக்கு வழங்கப்படும் சிகிச்சைகளில், எந்த வகை விஷப் பாம்பு கடித்ததோ, அதற்கு ஏற்ற வகையில் தான் மருந்துகள் வழங்கப்படுகின்றன.
ஆனால், டிம் ஃபிரீடி, எந்த வகையான விஷப் பாம்பு கடித்தாலும் வேலை செய்யக்கூடிய வகையில் ஒரு பொதுவான எதிர்ப்பு மருந்தை உருவாக்க கடந்த 18 ஆண்டுகளாக முயற்சி செய்து வருகிறார்.
உலகின் மிக ஆபத்தான மாம்பா, கோப்ரா, தைபான், கிரெய்ட் போன்ற பல வகை பாம்புகளின் விஷத்தை 700க்கும் மேற்பட்ட ஊசிகளில் தனது உடம்பில் செலுத்தியுள்ள டிம், 200 முறைக்கு மேல் பாம்பு கடிகளையும் எதிர்கொண்டுள்ளார்.
சரி, இந்த அபூர்வ மருந்து எப்படி கண்டுபிடிக்கப்பட்டது என்று பார்ப்பதற்கு முன் பாம்புக்கடிக்கான மருந்து தற்போது எப்படி தயாரிக்கப்படுகிறது என்று பார்ப்போம்.
குதிரைகள் போன்ற விலங்குகளுக்கு சிறிய அளவில் பாம்பு விஷத்தை செலுத்தும் போது அதன் உடல் அந்த விஷத்தை எதிர்த்து ஆண்டிபாடிகளை உருவாக்கும். பின்னர் அவை விஷ முறிவு மருந்தாக பயன்படுத்தப்படும்.
ஆனால் விஷமும், விஷத்துக்கான முறிவு மருந்தும் ஒரே வகையில் பொருந்த வேண்டும். ஒரே இனத்தைச் சேர்ந்த பாம்புகளில் கூட பரவலான வகைகள் உண்டு. இந்தியாவில் பாம்புகளிலிருந்து தயாரிக்கப்படும் விஷ முறிவு மருந்து, இலங்கையில் அதே இனத்தில் உள்ள பாம்பு கடித்தால் அதற்கு எதிராக குறைவான செயல்திறன் கொண்டதாக இருக்கும்.
இந்த சூழலில்தான், பல வகையான நச்சுக் கூறுகளுக்கு எதிராக செயல்படும் நோய் எதிர்ப்பு மருந்து வகைகளை ஆய்வாளர்கள் தேடத் தொடங்கினர்.
பயோடெக் நிறுவனமான சென்டிவாக்ஸின் தலைமை நிர்வாகி, ஜேக்கப் கிளான்வில், டிம் ஃபிரீடி குறித்து அறிந்து கொண்டார். அவரை வரவழைத்து ரத்த மாதிரியை ஜேக்கப் சேகரித்தார்.
இந்த ஆராய்ச்சி, கொடிய விஷ பாம்புகளின் இரண்டு குடும்பங்களில் ஒன்றான எலாபிட்களை மையமாகக் கொண்டது. பூமியில் மிகக் கொடிய பாம்புகளாக உலக சுகாதார அமைப்பால் அடையாளம் காணப்பட்ட 19 எலாபிட் இன பாம்புகளை ஆராய்ச்சியாளர்கள் தேர்ந்தெடுத்தனர். இந்த எலாபிட்டுகள் தமது விஷயத்தில் நரம்புத் திசுக்களை தாக்கவல்ல neurotoxins-ஐ வெளியிடும்.
இந்த பாம்பிடம் கடி வாங்கினால், அந்த நபருக்கு உடல் செயலிழக்கத் தொடங்கும். மூச்சுவிட முடியாத அளவு தசைகள் சுருங்கும்போது மரணம் ஏற்படும்.
இத்தகைய பாம்பின் விஷத்தை எடுத்து, ஆராய்ச்சியாளர்கள் ஃப்ரைடின் ரத்தத்தை பரிசோதித்து, அவரது உடலில் இந்த விஷத்தை முறிக்க உதவும் எதிர்ப்பு சக்தியை கண்டறிய முயற்சித்தனர்.
அந்த ஆய்வில் இரண்டு வகையான நியூரோடாக்சின்களை எதிர்த்துப் போராடக்கூடிய இரண்டு சிறப்பு ஆன்டிபாடிகளை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
இதன்பின்பு இன்னொரு வகை நியூரோடாக்சினை எதிர்க்கும் மருந்துடன் இந்த ஆன்டி பாடிகளை கலந்து ஒரு விஷ எதிர்ப்பு காக்டெயில் மருந்தை உருவாக்கினர்.
எலிகள் மீது செய்யப்பட்ட பரிசோதனைகளில், 19 விஷ பாம்புகளில் 13 வகை பாம்புகளின் விஷத்திலிருந்து எலிகள் உயிர் பிழைக்க இந்த மருந்து உதவியது. மீதமுள்ள ஆறு வகை பாம்பு விஷங்களுக்கு எதிராக அவை குறிப்பிட்ட அளவு பாதுகாப்பைக் கொண்டிருந்தன.
பல எலாபிட் பாம்புகளுக்கு எதிராக தற்போது, குறிப்பிட்ட சிகிச்சை எதுவும் இல்லை என்று கூறும் மருத்துவர் ஜேக்கப் கிளான்வில், இந்த எதிர்ப்பு மருந்து ஒப்பிட முடியாத அளவு பாதுகாப்பை வழங்குகிறது என்கிறார்.
இந்த ஆன்டிபாடி காக்டெயிலை நன்றாக செம்மைப்படுத்தி, நான்காவதாக ஒன்றைச் சேர்த்தால் எலாபிட் வகை பாம்புகளின் விஷத்தில் இருந்து முழுமையான பாதுகாப்பை பெற முடியுமா என்பதையும் இந்தக் குழு ஆராய்ந்து வருகிறது.
இந்த ஆய்வு குறித்து கூறும் கொலம்பியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களில் ஒருவரான பேராசிரியர் பீட்டர் குவாங், டிம் பல வேறுபட்ட நச்சுகளை அடையாளம் காணும் நடைமுறையை உருவாக்கி உள்ளதாக கூறுகிறார்.
டிம் அடிப்படையில் பல்வேறு நச்சுகளை அடையாளம் காண அனுமதிக்கும் ஒரு நடைமுறையை உருவாக்கினார். இதுதான் அவர் பாம்பு விஷங்களில் இருந்து தன்னை பாதுகாக்க அனுமதித்தது. அதே பாதுகாப்பை உருவாக்க முடியும் என நாங்கள் நம்புகிறோம். அதற்காக அனைவரும் 18 ஆண்டுகள் தடுப்பு மருந்து எடுத்துக்கொள்ளவோ, பாம்புக்கடிக்கோ உள்ளாக வேண்டியதில்லை. அதற்கு பதிலாக, சிறந்த ஆன்டிபாடிகளை அடையாளம் காண வேண்டும் அல்லது டிம்மின் ரத்தத்திலிருந்து விஷ எதிர்ப்பு திறனை உருவாக்கவல்ல சிறிய மூலக்கூறுகளுடன் இணைக்கலாம்.
மற்றொரு வகையான வைப்பர் வகை பாம்புகள், நியூரோடாக்சின்களை உருவாக்குவதை விட, ரத்தத்தில் ஹீமோடாக்சின்களை உருவாக்கி, தாக்குகின்றன. பாம்பு விஷத்தில் சுமார் ஒரு டஜன் நச்சு வகைகள் உள்ளன. இதில் உடலின் செல்களை நேரடியாகக் கொல்லும் சைட்டோடாக்சின்களும் அடங்கும்.
அடுத்த 10 அல்லது 15 ஆண்டுகளில் அந்த நச்சு வகைகள் ஒவ்வொன்றுக்கும் எதிராக எதிர்ப்பு மருந்து பெறுவோம் என தான் நினைப்பதாக கூறுகிறார் பீட்டர் குவாங்.
மறுபுறம் ஃபிரைடின் ரத்த மாதிரிகளுக்குள் இதற்கான மருந்தைக் கண்டறிவதற்கான பரிசோதனை முயற்சிகள் தொடர்ந்து நடைபெறுகின்றன. ஒன்று அனைத்து வகையான பாம்புவிஷயங்களுக்கும் எதிராக ஒரு விஷ எதிர்ப்பு மருந்தை கண்டுபிடிக்க முடியுமா அல்லது எலாபிட் வகைக்கு ஒன்றும் வைப்பர் வகைக்கு ஒரு தடுப்பு மருந்தை உருவாக்க முடியுமா என ஆராய்கின்றனர்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
SOURCE : THE HINDU