SOURCE :- BBC NEWS

காலநிலை மாற்றம், வேகமாக மூழ்கும் நகரங்கள், சென்னை, இந்தியா

சிங்கப்பூரின் நான்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் (என்.டி.யூ) மேற்கொண்ட ஆய்வில், உலகம் முழுவதிலும் கவலைப்படத்தக்க வகையில் வேகமாக மூழ்கி வரும் கடலோர நகரங்கள் குறித்த ஆய்வு ஒன்று வெளியாகியுள்ளது.

ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் உள்ள சுமார் 48 நகரங்கள் எந்தளவுக்கு மூழ்கி வருகின்றன என்பது குறித்து ஆய்வுக்குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். காலநிலை மாற்றத்தால் உந்தப்பட்ட கடல் மட்ட உயர்வால் நிலப்பகுதிகள் மூழ்கும் அபாயம் கொண்ட நகரங்கள் இவை.

ஆய்வுகள் மற்றும் ஐ.நாவின் மக்கள்தொகை தரவுகள் வாயிலாக இந்த பகுதிகளில் கிட்டத்தட்ட 16 கோடி மக்கள் வாழ்வதாக பிபிசி மதிப்பிட்டுள்ளது.

இந்தியாவிலிருந்து சென்னை உட்பட 5 நகரங்கள் இந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளன. அந்த ஐந்து நகரங்களில் நிலைமை என்ன?

சென்னை, தமிழ்நாடு

2014-ஆம் ஆண்டிலிருந்து 2020-ஆம் ஆண்டு வரை ஆண்டுக்கு சராசரியாக 0.01 செ.மீ-3.7 செ.மீ என்ற அளவில் சென்னையின் சில பகுதிகள் மூழ்கியுள்ளதாக என்.டி.யூ. ஆய்வு தெரிவிக்கிறது.

இந்த பகுதிகளில் 14 லட்சம் பேர் வசிப்பதாக பிபிசி மதிப்பிட்டுள்ளது.

சென்னையில் வேகமாக மூழ்கும் பகுதியாக தரமணி இருப்பதாக என்.டி.யூ கண்டறிந்துள்ளது. அந்த பகுதி ஆண்டுக்கு சராசரியாக 3.7 செ.மீ அளவுக்கு மூழ்குவதாக அந்த ஆய்வு கூறுகிறது. இது 2024 ஆம் ஆண்டில் கடல் மட்டத்தில் ஏற்பட்ட 0.59 செ.மீ உயர்வுடன் ஒப்பிடப்படுகிறது என, நாசாவால் வழிநடத்தப்பட்ட ஆய்வு கூறுகிறது.

விவசாயம், தொழில் மற்றும் வீட்டுப் பயன்பாடுகளுக்கு அதிகளவில் நிலத்தடி நீர் உறிஞ்சப்படும் பகுதிகள் வேகமாக மூழ்கிவருவதாக சென்னையில் உள்ள நிபுணர்கள் கூறுகின்றனர்.

இதைத் தடுக்க நிலத்தடி நீர் மேலாண்மை, நீர்நிலைகளை வரைபடமாக்குதல் (map aquifers), சுற்றுச்சூழல் தாக்க அறிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறதா என்பதை உறுதி செய்வதற்காக கட்டுமானங்களை கண்காணித்தல் போன்ற பல்வேறு திட்டங்களை அரசு உருவாக்கியுள்ளது.

ஆமதாபாத், குஜராத்

காலநிலை மாற்றம், வேகமாக மூழ்கும் நகரங்கள், சென்னை, இந்தியா

பட மூலாதாரம், Getty Images

நான்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் ஆய்வின்படி, ஆமதாபாத்தின் சில பகுதிகள் 2014ம் ஆண்டு முதல் 2020ம் ஆண்டு வரை ஆண்டுதோறும் சராசரியாக 0.01 செ.மீ-5.1 செ.மீ என்ற அளவில் மூழ்கியுள்ளது.

இந்த மூழ்கும் பகுதிகளில் 51 லட்சம் பேர் வசிப்பதாக பிபிசி மதிப்பிட்டுள்ளது.

ஆமதாபாத்தின் பிப்லஜ் பகுதி வேகமாக மூழ்கும் பகுதிகளுள் ஒன்றாக என்.டி.யூ கண்டறிந்துள்ளது, இங்கு ஆடை நிறுவனங்கள் அதிகம் காணப்படுகின்றன. இப்பகுதி ஆண்டுக்கு சராசரியாக 4.2 செ.மீ அளவில் மூழ்குகிறது. இது 2024 ஆம் ஆண்டில் கடல் மட்டத்தில் ஏற்பட்ட 0.59 செ.மீ உயர்வுடன் ஒப்பிடப்படுகிறது என, நாசாவால் வழிநடத்தப்பட்ட ஆய்வு கூறுகிறது.

அளவுக்கு அதிகமாக நிலத்தடி நீரை பயன்படுத்துவது, கடல் மட்டம் உயர்வு மற்றும் அதீத மழைப்பொழிவு ஆகியவை இதற்கான காரணங்களாக உள்ளன. இந்நகரம் இன்னும் மோசமான வெள்ளத்தால் வருங்காலத்தில் பாதிக்கப்படும் என்றும் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

இதைத் தடுக்க, ஆமதாபாத் மாநகராட்சி காலநிலை தடுப்பு செயல் திட்டத்தை வடிவமைத்துள்ளது, மழைநீரை சேமிப்பது மற்றும் நிலத்தடி நீரை மீள்நிரப்பு செய்வதிலும் கவனம் செலுத்துகிறது.

கொல்கத்தா, மேற்கு வங்கம்

காலநிலை மாற்றம், வேகமாக மூழ்கும் நகரங்கள், சென்னை, இந்தியா

பட மூலாதாரம், Getty Images

இந்த ஆய்வின்படி, 2014-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு வரை கொல்கத்தாவின் சில பகுதிகள் ஆண்டுக்கு சராசரியாக 0.01 செ.மீ-2.8 செ.மீ அளவுக்கு மூழ்கியுள்ளன.

இப்படி மூழ்கும் பகுதிகளில் 90 லட்சம் பேர் வசிப்பதாக பிபிசி கணக்கிட்டுள்ளது.

கொல்கத்தாவில் பாத்பரா (Bhatpara) எனும் பகுதி வேகமாக மூழ்கி வருவதாக இந்த ஆய்வு கண்டுபிடித்துள்ளது, இப்பகுதி ஆண்டுக்கு சராசரியாக 2.6 செ.மீ. எனும் அளவுக்கு மூழ்கியுள்ளது. இது 2024 ஆம் ஆண்டில் கடல் மட்டத்தில் ஏற்பட்ட 0.59 செ.மீ உயர்வுடன் ஒப்பிடப்படுகிறது என, நாசாவால் வழிநடத்தப்பட்ட ஆய்வு கூறுகிறது.

கட்டுப்படுத்தப்பட்ட நீர்நிலைகளில் நிலத்தடி நீரை அதிகமாக உறிஞ்சுதல், நிலத்தடி நீரை சேமித்து வைக்கும் மண் அடுக்குகளிலிருந்து நீரை உறிஞ்சுவதுதான் காரணம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

இத்தகைய பகுதிகளில் நிலநடுக்க அபாயங்கள், வெள்ளம் மற்றும் கடல்நீர் ஊடுருவல் ஆகியவை நிகழ்வதற்கான ஆபத்துகள் உள்ளதாக, நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

இதைத் தடுக்க நிலத்தடி நீர் மேலாண்மை, நீர்நிலைகளை வரைபடமாக்குதல் (map aquifers), சுற்றுச்சூழல் தாக்க அறிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறதா என்பதை உறுதி செய்வதற்காக கட்டுமானங்களை கண்காணித்தல் போன்ற பல்வேறு திட்டங்களை இந்திய அரசு உருவாக்கியுள்ளது.

மும்பை, மகாராஷ்டிரா

காலநிலை மாற்றம், வேகமாக மூழ்கும் நகரங்கள், சென்னை, இந்தியா

பட மூலாதாரம், Getty Images

என்.டி.யூ ஆய்வின்படி, மும்பையின் சில பகுதிகள் 2014-ஆம் ஆண்டு முதல் 2020-ஆம் ஆண்டு வரை ஆண்டுக்கு சராசரியாக 0.01 செ.மீ.-5.9 செ.மீ என்ற அளவில் மூழ்கியுள்ளதாக கூறுகிறது.

இந்த மூழ்கும் பகுதிகளில் சுமார் 32 லட்சம் பேர் வசிப்பதாக பிபிசி மதிப்பிட்டுள்ளது.

கிழக்கு மடுங்காவில் உள்ள கிங்ஸ் சர்க்கிள் நிலையம் மிகவும் வேகமாக மூழ்கும் பகுதியாக என்.டி.யூவின் ஆய்வில் தெரியவந்துள்ளது. அப்பகுதி சராசரியாக ஆண்டுக்கு 2.8 செ.மீ என்ற அளவில் மூழ்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது 2024 ஆம் ஆண்டில் கடல் மட்டத்தில் ஏற்பட்ட 0.59 செ.மீ உயர்வுடன் ஒப்பிடப்படுகிறது என, நாசாவால் வழிநடத்தப்பட்ட ஆய்வு கூறுகிறது.

நிலத்தடி நீரை அதிகளவில் உறிஞ்சுதல், மிக உயரமான கட்டடங்கள், மெட்ரோ வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் ஈரநிலங்களை அரசு மற்றும் தொழில் நிறுவனங்கள் மறுபயன்பாட்டுக்கு உட்படுத்துதல் ஆகியவை இதற்கு காரணங்களாக உள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றன.

இதைக் கட்டுப்படுத்த இந்திய அரசாங்கம் நிலத்தடி நீர் மேலாண்மை, நீர்நிலைகளை வரைபடமாக்குதல் மற்றும் உள்கட்டமைப்பு விதிமுறைகளை உருவாக்குதல் போன்ற திட்டங்களை உருவாக்கியுள்ளன.

சூரத், குஜராத்

காலநிலை மாற்றம், வேகமாக மூழ்கும் நகரங்கள், சென்னை, இந்தியா

பட மூலாதாரம், Getty Images

என்.டி.யூ ஆய்வின்படி, சூரத்தின் சில பகுதிகள் 2014-ஆம் ஆண்டு முதல் 2020ம் ஆண்டு வரை ஆண்டுக்கு சராசரியாக 0.01 செ.மீ-6.7 செ.மீ என்ற அளவில் மூழ்கியுள்ளதாக கூறுகிறது.

இந்த மூழ்கும் பகுதிகளில் 30 லட்சம் பேர் வசிப்பதாக பிபிசி மதிப்பிட்டுள்ளது.

சூரத்தில் கரஞ்ச் (Karanj) எனும் பகுதி வேகமாக மூழ்கிவரும் பகுதிகளுள் ஒன்றாக என்.டி.யூ ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது, இப்பகுதி ஆண்டுக்கு 6.7 செ.மீ எனும் அளவுக்கு மூழ்கிவருகிறது. இது 2024 ஆம் ஆண்டில் கடல் மட்டத்தில் ஏற்பட்ட 0.59 செ.மீ உயர்வுடன் ஒப்பிடப்படுகிறது என, நாசாவால் வழிநடத்தப்பட்ட ஆய்வு கூறுகிறது.

வேளாண்மை மற்றும் தொழில் நகரமான சூரத்தில், பாசனம், ஆடை தொழிற்சாலைகள் மற்றும் வீட்டுப் பயன்பாடுகளுக்காக அதிகளவு நிலத்தடி நீரை உறிஞ்சுவதே இதற்கு காரணமாக உள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

உகாய் அணையின் (ukai dam) செயல்பாட்டை மேம்படுத்துதல் முதல் வெள்ளத்தைக் கட்டுப்படுத்துதல், மழைப்பொழிவை முன்னறிவிப்பதற்கான மாதிரியை உருவாக்குதல், வெள்ள பாதிப்புக்கான முன்னெச்சரிக்கை அமைப்பை உருவாக்குவது ஆகிய திட்டங்களை உள்ளூர் அரசாங்கம் நிறைவு செய்துள்ளது.

ஜகார்த்தா, இந்தோனீசியா

இந்த ஆய்வில், வேகமாக மூழ்கிவரும் நகரங்களுள் ஒன்றாக இந்தோனீசியாவின் ஜகார்த்தா நகரம் கண்டறியப்பட்டுள்ளது. ஜகார்த்தாவின் சில பகுதிகள் 1970களைக் காட்டிலும் 4 மீட்டர் அளவுக்கு மூழ்கியுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. அதனால், 1,200 கி.மீ தொலைவில் உள்ள போர்னியோ எனும் மற்றொரு தீவில் உள்ள நுசந்தராவில் புதிய தலைநகரத்தைக் கட்டமைக்க இந்தோனீசியா திட்டமிட்டுள்ளது.

இது கடற்கரையிலிருந்து வெகு தொலைவில் உள்ளது மற்றும் ஆற்றுநீர், மழைநீரை சேமிக்க ஒரு பெரிய அணை மற்றும் நீர்த்தேக்கத்தை நம்பியுள்ளது. புதிய தலைநகரில் உள்ள அனைத்து வீடுகள் மற்றும் அலுவலகங்களுக்கும் தண்ணீரை சுத்திகரித்து விநியோகிப்பதே இந்த திட்டத்தின் நோக்கம், இதனால் நிலத்தடி நீரை உறிஞ்சும் தேவை நீக்கப்படுகிறது.

இருப்பினும், புதிய நகரம் பல்லுயிர் பெருக்க இடத்தில் கட்டமைக்கப்படுவதால் சுற்றுச்சூழல் தாக்கங்களுக்காக விமர்சிக்கப்படுகிறது.

டோக்கியோ எப்படி இந்த பிரச்னையை தீர்த்தது?

டோக்கியோ நகரத்தின் சில பகுதிகள் மூழ்குவதாக கண்டறியப்பட்ட போது, அந்நகரம் வேறொரு அணுகுமுறையை மேற்கொண்டது, அந்த பிரச்னையின் வேரை கண்டறிந்து தீர்க்க முடிவு செய்தது.

நிலத்தடி நீரை உறிஞ்சுவதில் கடுமையான கட்டுப்பாடுகளை டோக்கியோ நடைமுறைப்படுத்தியதையடுத்து 1970களில் அந்நகரம் மூழ்குவது குறிப்பிடத்தக்க அளவில் குறைந்தது.

தண்ணீர் விநியோக மேலாண்மை அமைப்பையும் அந்நகரம் உருவாக்கியது. நகரம் மூழ்குவதை நிறுத்துவதில் இந்த நடவடிக்கை அதிகளவில் செயலாற்றியதாக விஞ்ஞானிகள் வாதிடுகின்றனர்.

தற்போது இந்த நகரம் அதிகளவில் நிலையானதாக உள்ளதாகவும் 2014ம் ஆண்டு முதல் 2020ம் ஆண்டு வரை சில பகுதிகள் 0.01 முதல் 2.4 செ.மீ என்ற அளவில் மூழ்கியதாகவும் என்.டி.யூ ஆய்வில் தெரியவந்துள்ளது.

காலநிலை மாற்றம், வேகமாக மூழ்கும் நகரங்கள், சென்னை, இந்தியா

என்ன செய்தது டோக்கியோ?

நகருக்கு வெளியே உள்ள 2 அணைகளால் தடுக்கப்படும் ஆறுகள் மற்றும் வனங்களில் இருந்தே டோக்கியோவுக்கு அதிகளவிலான நீர் பெறப்படுகிறது.

இந்த தண்ணீர் 10 ஆலைகளில் சுத்திகரிக்கப்பட்டு, விநியோக மையத்துக்கு அனுப்பப்படுகின்றன.

இந்த மையம், தண்ணீரின் அளவு மற்றும் அழுத்தத்தை ஒழுங்குபடுத்துகிறது.

இந்த மையத்திலிருந்து வீடுகள் மற்றும் ஆலைகளுக்கு, நிலநடுக்கத்தால் சேதமடையாத பைப்புகள் வாயிலாக விநியோகிக்கப்படுகின்றன.

டோக்கியோ இதை திறம்பட செயல்படுத்தினாலும், அதை நிர்வகிப்பதில் ஆகும் அதிக செலவுகள் காரணமாக, இதை பரவலாக செயல்படுத்த முடியுமா என்பதில் சந்தேகம் நிலவுவதாக, ஜப்பானின் வாசெடா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் மிகுவெல் எஸ்டெபேன் கூறுகிறார்.

எனினும், சில ஆசிய நகரங்கள் டோக்கியோவின் அணுகுமுறையை மாதிரியாக பார்ப்பதாகவும் அவர் கூறுகிறார்.

உதாரணமாக, 1970களில் தைவானில் தைபே நகரம் நிலத்தடி நீர் உறிஞ்சுவதை குறைத்துள்ளது, இதனால் அந்நகரம் மூழ்கும் வேகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : BBC