SOURCE :- BBC NEWS

பட மூலாதாரம், Getty Images
ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கெய் லாவ்ரோவ் கடந்த வாரம் கூறுகையில், மேற்கு நாடுகள் இந்தியாவையும் சீனாவையும் எதிரெதிராக நிறுத்துவதன் மூலம் பதற்றத்தை அதிகப்படுத்த முயற்சிப்பதாக தெரிவித்தார்.
லாவ்ரோவ் கூறுகையில், “ஆசிய-பசிபிக் பிராந்தியத்தை இந்தோ-பசிபிக் என மேற்கு நாடுகள் அழைக்க ஆரம்பித்திருக்கின்றன. சீனாவுக்கு எதிரான கொள்கையை மேற்கு நாடுகள் ஊக்குவிப்பது தெளிவாக தெரிகிறது. எங்களின் சிறந்த நட்பு நாடான இந்தியா மற்றும் அதன் அண்டை நாடான சீனாவுக்கு இடையேயான மோதலை அதிகப்படுத்தவே இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. மேற்கு நாடுகள் இந்த பிராந்தியத்தில் தங்கள் ஆதிக்கத்தை செலுத்த விரும்புகின்றன. மேற்கு நாடுகளின் இந்த கொள்கையை ‘பிரித்தாளும் கொள்கை’ என புதின் விவரித்துள்ளார்” என தெரிவித்துள்ளார்.
ரஷ்ய வெளியுறவு அமைச்சர் இந்தியா-சீனா உறவில் மேற்கு நாடுகளின் பங்கு குறித்து விமர்சிப்பது இது முதன்முறை அல்ல.
2020-ஆம் ஆண்டு டிசம்பர் மாத தொடக்கத்தில் பேசிய லாவ்ரோவ், “ஒற்றை துருவ உலகத்தை மீண்டும் கொண்டு வருவதற்கு மேற்கு நாடுகள் விரும்புகின்றன. ஆனால், ரஷ்யாவும் சீனாவும் அதற்கு அடிபணியாது. ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் மேற்கு நாடுகளின் குவாட் போன்ற அமைப்பு காரணமாக, இந்தியா தற்போது சீனாவுக்கு எதிரான கொள்கையின் கைப்பாவையாக உள்ளது,” என தெரிவித்தார்.
குவாட் கூட்டமைப்பில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் உள்ளன. இதை சீனாவுக்கு எதிரான அமைப்பாக ரஷ்யா கருதுகிறது. சீனாவும் அதே கருத்தைக் கொண்டுள்ளது.
இந்த மாதம், இந்தியாவும் பாகிஸ்தானும் பரஸ்பரம் தாக்குதலில் ஈடுபட்டபோது, குவாட் கூட்டமைப்பில் உள்ள நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவளிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் அவ்வாறு நடக்கவில்லை. குவாட் ஒரு பாதுகாப்பு கூட்டணி அல்ல என்பது இதற்கான வாதமாக முன்வைக்கப்பட்டது.
இந்திய முன்னாள் ராஜ்ஜிய அதிகாரி ராஜின் தோக்ரா கூறுகையில், “லாவ்ரோவ் இந்தியாவை எச்சரிப்பதாக இதை விளக்கலாம், ஆனால் ஆசிய – பசிபிக் பிராந்தியத்தை இந்தோ – பசிபிக் என கூறுவது அவ்வளவு பெரிய விவகாரம் அல்ல” என தெரிவித்தார்.
சீனா தொடர்ந்து அருணாச்சல பிரதேசத்தில் உள்ள பகுதிகளின் பெயர்களை தினந்தோறும் மாற்றி வருவதாக ராஜீவ் தோக்ரா விமர்சித்தார்.
ஆசியா பசிபிக் vs இந்தோ பசிபிக்

பட மூலாதாரம், Getty Images
ராஜீவ் தோக்ரா கூறுகையில், “2022-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் யுக்ரேனுடனான போர் தொடங்கிய பிறகு மேற்கு நாடுகள் மீது ரஷ்யா மிகவும் ஆக்ரோஷமான மனநிலையுடன் உள்ளது. அப்படியான சூழலில், மேற்கு நாடுகளுடன் மற்ற நாடுகளுடைய உறவு எப்படி இருக்கிறது என்பதையும் இந்த கண்ணோட்டத்தில் பார்க்கும்,” என்கிறார்.
டெல்லியை தளமாகக் கொண்டு செயல்படும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் உள்ள ரஷ்ய மற்றும் மத்திய ஆசிய ஆய்வுகளுக்கான இணை பேராசிரியர் முனைவர் ராஜன் குமார் கூறுகையில், “ஒருபுறம் லாவ்ரோவ் இந்தியாவை எச்சரிக்கிறார், மற்றொருபுறம் தங்கள் நாட்டை இந்தியா சார்ந்திருப்பது முடிவுக்கு வரலாம் என ரஷ்யா அஞ்சுகிறது. ராணுவ தளவாடங்களுக்காக ரஷ்யாவை இந்தியா சார்ந்திருப்பது குறைந்துள்ளது. ராணுவ தளவாடங்களை பொருத்தவரை இந்தியா மேற்கு நாடுகளை நோக்கி நகர்ந்து வருகிறது. வரும் நாட்களில் இந்த போக்கு இன்னும் அதிகரிக்கும்” என தெரிவித்தார்.
2009-ஆம் ஆண்டு முதல் 2013-ஆம் ஆண்டுக்கு இடையே இந்தியா தனது 76% ஆயுதங்களை ரஷ்யாவிலிருந்து இறக்குமதி செய்தது. 2019-ஆம் ஆண்டு முதல் 2023-ஆம் ஆண்டுக்கு இடையே இந்த விகிதம் 36 சதவிகிதமாக குறைந்தது.
யுக்ரேனுடனான போர் நடைபெறும் காலத்தில் ரஷ்யாவுடனான இந்தியாவின் வர்த்தகம் அதிகரித்தது. ஆனால், இந்தியாவின் எரிசக்தி இறக்குமதி காரணமாகத்தான் வர்த்தகம் அதிகரித்தது. கடந்தாண்டு இரு நாடுகளுக்கும் இடையே 66 பில்லியன் டாலர்கள் அளவுக்கு வர்த்தகம் நடைபெற்றது, இதில் ரஷ்ய எண்ணெய் இறக்குமதி 40 சதவிகிதமாகவும் ரஷ்ய ஆயுதங்கள் இறக்குமதி 36 சதவிகிதமாகவும் உள்ளது.

பட மூலாதாரம், Getty Images
ராஜன் குமார் கூறுகையில், “சீனாவை கட்டுப்படுத்த வேண்டும் என்றால், அதற்கு இந்தியா ஒரு முக்கியமான நாடு என மேற்கு நாடுகள் கருதுகின்றன. மற்றொரு புறம் எல்லையில் சீனாவின் ஆக்ரோஷத்துக்கு எதிர்வினையாற்றுவதற்கு மேற்கு நாடுகளின் உதவி அவசியம் என இந்தியா கருதுகிறது. அப்படியான சூழலில் தான், மேற்கு நாடுகள் இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையே பதற்றத்தை உருவாக்க முயற்சிப்பதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சர் நம்புகிறார்” என்றார்.
முனைவர் ராஜன் குமார் கூறுகையில், “இந்தியா ரஷ்யாவை சார்ந்திருக்க முடியாது. சீனாவை எதிர்கொள்ள வேண்டும் என நினைத்தால், ரஷ்யா அதற்கு உதவியாக இருக்கும் என கருத முடியாது. 1962-ஆம் ஆண்டு போரில் சோவியத் ஒன்றிய இந்தியாவுக்கு உதவவில்லை. இப்போது, ரஷ்யாவே சீனாவின் கூட்டாளியாக மாறியுள்ளது. சீனாவை ரஷ்யா அதிகம் சார்ந்துள்ளது. அப்படியான சூழலில், ரஷ்யாவின் விருப்பத்துக்காக மேற்கு நாடுகளுடனான உறவுகளை இந்தியா மட்டுப்படுத்துவதற்கு சாத்தியமில்லை” என தெரிவித்தார்.
முனைவர் ராஜன் குமார் கூறுகையில், “ரஷ்யா சோவியத் ஒன்றியமாக இருந்த போதே, இந்தோ பசிபிக்கை ஆசியா – பசிபிக் என்று அழைத்திருக்கிறது. அப்போது, அமெரிக்கா இந்தோ-பசிபிக் என அழைத்தது.” என்றார்.
சீனா vs ரஷ்யா
‘சீனா’ஸ் இந்தியா வார்’ (China’s India War) எனும் தன் புத்தகத்தில் சுவீடனை சேர்ந்த ஆசிரியர் பெர்டில் லின்ட்னெர், “1950களில் சோவியத் ஒன்றியத்துக்கும் சீனாவுக்கும் இடையேயான போட்டி தொடங்கியது. 1960ம் ஆண்டில் ருமேனியாவின் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டில், அப்போதைய சோவியத் தலைவர் நிகிடா குருஷேவ் மற்றும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் கட்சியின் தலைமைக்குழு பொலிட்பீரோ) உறுப்பினர் பெங் சென்-னுக்கும் இடையே விவாதம் எழுந்தது.
“குருஷேவ் மாவோவை தேசியவாதி, சாகசக்காரர், மடைமாற்றுபவர் (கம்யூனிச கட்சியின் கொள்கைகளிலிருந்து மடைமாறுபவர்) என வர்ணித்தார். மற்றொரு புறம், குருஷேவை ஆணாதிக்கவாதி, எதேச்சாதிகாரி மற்றும் சர்வாதிகாரி என்று பெங் விமர்சித்தார். குருஷேவ் மார்க்சியம் மற்றும் லெனினியத்துக்கு வஞ்சகம் விளைவித்ததாக தெரிவித்தார். அதற்கு பதிலாக, சீனாவிலிருந்து சோவியத் ஒன்றியத்தின் 1400 நிபுணர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களை நினைவுகூர்ந்தார். குருஷேவ் சீனாவில் சோவியத் ஒன்றியத்தின் 200க்கும் மேற்பட்ட திட்டங்களை ரத்து செய்தார்.”
பெர்டில் லின்ட்னெர் எழுதுகையில், “சீனா – இந்தியாவின் போரின் ஆரம்பத்தில் சோவியத் ஒன்றியத்தின் நிலைப்பாடு எச்சரிக்கை உணர்வுடன் இருந்தது. குருஷேவ் இந்தியா மீது அனுதாபம் கொண்டாலும், சீனாவின் அதிருப்தியை சோவியத் ஒன்றியம் விரும்பவில்லை. மற்றொருபுறம், இந்தியாவின் அப்போதைய பாதுகாப்பு அமைச்சர் வெங்கலில் கிருஷ்ண மேனன், சோவியத் ஒன்றியத்துக்கு சார்பாக நடந்துகொள்வது குறித்து யோசித்தார். ஆனால், 1962-ஆம் ஆண்டு போருக்கு தயாராக இருக்கவில்லை என்ற காரணத்துக்காக அவர் பதவி விலக நேர்ந்தது.” என எழுதியுள்ளார்.
1962 இந்தியா-சீனா போரின் மத்தியில் வி.கே. மேனன் தனது பதவியை ராஜினாமா செய்தார். நேரு தற்காலிகமாக பாதுகாப்பு அமைச்சகத்தை தன் வசம் வைத்துக்கொண்டார். போருக்கு முன்பாக இந்தியாவுக்கு ஆயுதங்களை வழங்கிய சோவியத் ஒன்றியம், போர் நடைபெறும் சமயத்தில் குழப்பத்தில் ஆழ்ந்தது.
பத்திரிகையாளரும் இந்தியா-சீன விவகாரங்களில் நிபுணருமான மோகன் ராம் எழுதுகையில், “ராணுவ நடவடிக்கையை நிறுத்துமாறு சீனாவை கேட்டுக் கொண்ட சோவியத் ஒன்றியம், மத்தியஸ்தம் செய்வதாகவும் தெரிவித்தது. இந்தியாவும் அதற்கு தயாராக இருந்தது. நெருக்கடி காலகட்டத்தில் அமெரிக்கா மற்றும் பிரிட்டன் தரப்பிடம் இந்தியா செல்லாதவாறு தன்னால் முடிந்தததை சோவியத் ஒன்றியம் முயற்சி செய்தது. இந்தியா கடைபிடித்து வந்த அணிசேரா கொள்கைக்கு மாறாக சீன தாக்குதலின் போது முதலாளித்துவ நாடுகளின் உதவியை நாட வேண்டியிருந்தது,” என குறிப்பிட்டுள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
‘பாலிட்டிக்ஸ் ஆஃப் சீனா-இந்தியா கன்ஃப்ரன்ட்டேஷன்’ (Politics of China-India Confrontation) எனும் தன் புத்தகத்தில், வி.கே.மேனன் பதவி விலகலால் அன்றைய சோவியத் ஒன்றியம் கவலை கொண்டதாக மோகன் ராம் குறிப்பிட்டுள்ளார்.
மோகன் ராம் எழுதுகையில், “சீனாவின் தாக்குதலால் இந்திய தலைவர்களில் தனக்கு நம்பகமான நண்பர்களுள் ஒருவரான கிருஷ்ண மேனனை இழந்ததால் சோவியத் ஒன்றியம் கவலை அடைந்தது.” என எழுதியுள்ளார்.
மேலும், “1959-ஆம் ஆண்டில் நடைபெற்ற இந்தியா-சீனா எல்லை மோதலிலும் நிகிடா குருஷேவ் நடுநிலையுடன் இருந்தார், சீனா இதனால் மிகுந்த கோபம் அடைந்தது. 1962-ஆம் ஆண்டில் போர் தொடங்கியபோது, சோவியத் ஒன்றியத்தின் தலைவர்களுடன் சீனா பேசியது. இந்திய முதலாளித்துவ வர்க்கத்தினர் ஏகாதிபத்தியத்தை பின்பற்றுகின்றனர் என சீனா கூறியது, எனவே அதை சோவியத் ஒன்றியத்தின் தலைவர்கள் கண்டிக்க வேண்டியிருந்தது. ஆனால், சோவியத் ஒன்றியம் அதை செய்ய மறுத்தது. டிசம்பர் 12-ஆம் தேதி போர் முடிவுற்ற போது, குருஷேவ் இந்தியாவை ஆதரித்து, ‘சீனாவுடன் இந்தியா போரை விரும்பியதாக கூறப்படுவதை நாங்கள் நிராகரிக்கிறோம்,’ என தெரிவித்தார்” என்று குறிப்பிட்டுள்ளார்.
“சீனாவின் நடவடிக்கைகள் அமெரிக்காவிடமிருந்து உதவி பெறும் நிலைக்கு இந்தியாவை தள்ளியது. மறுபுறம் சோவியத் ஒன்றியத்தை சீனாவுக்கு எதிரான முகாமில் நிறுத்தியது. இது, மூன்றாம் உலக நாடுகளின் தலைவராக சீனா உருவானதற்கு முக்கியமான நிகழ்வாக கருதப்படுகிறது” என பெர்டின் லின்ட்னெர் குறிப்பிடுகிறார்.

முனைவர் ராஜன் குமார் கூறுகையில், “சோவியத் ஒன்றியம் – சீனா இடையே போட்டி நிலவிய போது, சோவியத் ஒன்றியம் இந்தியாவுக்கு உதவவில்லை. இப்போது, சீனாவை ரஷ்யா சார்ந்திருக்கும் நிலையில், உதவியை எதிர்பார்ப்பது வீண். நேரு (1962ம் ஆண்டில்) சோவியத் தலைவர் நிகிடா குருஷேவிடம் உதவி கோரியதாகவும் அதை அவர் மறுத்துவிட்டதாகவும் வகைப்படுத்தப்பட்ட ஆவணங்கள் உள்ளன,” என தெரிவித்தார்.
“அப்படியான சூழலில், மேற்கு நாடுகளுடன் இந்தியா நெருக்கமாவது குறித்து ரஷ்யா எப்படி குறை கூற முடியும்? போட்டி இருந்தாலும் சோவியத் ஒன்றியமும் சீனாவும் கொள்கை ரீதியாக நெருங்கிய நாடுகள். நிகிடா குருஷேவ் மாவோவை அதிருப்திக்குள்ளாக்க விரும்பவில்லை. அந்த சூழலில், அணிசேரா கொள்கை மூலமாக இந்தியா அடைந்த பலன் என்ன என்பது குறித்து கேள்விகள் எழத் தொடங்கின.”
பெர்டில் லின்ட்னெர் தன்னுடைய புத்தகத்தில், “தேவை எழுந்தபோது நேரு மேற்கு நாடுகளின் உதவியை கோரினார். ஆனால் அதனால் பலன் கிடைக்கவில்லை. அப்படிப்பட்ட சூழலில் இந்தியாவின் அணி சேரா கொள்கையின் பிம்பம் கம்யூனிச முகாமிலும் மூன்றாம் உலக நாடுகளிலும் பாதிக்கப்பட்டது” என ரோட்ரிக் மேக்ஃபார்குஹாரை மேற்கோளிட்டு எழுதியுள்ளார்.
யுக்ரேன் விவகாரத்தைப் பொருத்தவரையில் இந்தியா முற்றிலும் தங்கள் பக்கம் இருக்க வேண்டும் என ரஷ்யா விரும்புகிறது, அதேசமயம், ரஷ்யாவுக்கு எதிராக நிற்க வேண்டும் என மேற்கு நாடுகள் விரும்புகின்றன. ஆனால், இந்தியா தாங்கள் இறையாண்மையை மீறுவதற்கு எதிராக இருப்பதாகவும் அதேசமயத்தில் ரஷ்யாவுடன் இருப்பதாகவும் காட்ட முயற்சிக்கிறது.

பட மூலாதாரம், Getty Images
பாகிஸ்தான் தொடர்பான ரஷ்யாவின் தற்போதைய நிலைப்பாடும் இப்படித்தான் பார்க்கப்படுகிறது.
ரஷ்ய நிழலில் இருந்து இந்தியாவால் வெளியே வர முடியவில்லை என அமெரிக்கா தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. அதேசமயம், மேற்கு நாடுகளுக்காக சீனாவுக்கு எதிரான கைப்பாவையாக இந்தியா மாறி வருவதாக ரஷ்யா தொடர்ந்து குற்றம் சாட்டுகிறது.
இந்தியாவின் முக்கியத்துவம் வளர்ந்து வருவதையும் அதேசமயம் சர்வதேச அரசியலில் நிலவும் குழப்பத்தையும் இது காட்டுகிறது.
2022-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், அமெரிக்காவின் அப்போதைய தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகர் தலிப் சிங், இந்தியாவுக்கு வருகை தந்த போது, சீனா எல்லையில் அத்துமீறினால் ரஷ்யா அதன் உதவிக்கு வராது என எச்சரித்தார்.
இந்த மாதம், பாகிஸ்தானில் இந்தியா ராணுவ நடவடிக்கையை எடுத்தபோது, அதற்கு பாகிஸ்தான் பதில் நடவடிக்கையை எடுத்தது. அப்போது, மேற்கு நாடுகளோ அல்லது ரஷ்யாவோ இந்தியாவுக்கு ஆதரவாக நிற்கவில்லை, அதேசமயம், சீனா பாகிஸ்தானுடன் வெளிப்படையாக ஆதரவாக இருந்தது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
SOURCE : THE HINDU