SOURCE :- BBC NEWS


ஆர்க்டிக், ரஷ்யா, சீனா, இந்தியா, ஐரோப்பா

2023 ஆம் ஆண்டு நார்வேவின் வடமுனையில் உள்ள சிறிய நகரத்திற்கு மேக்னஸ் மேலண்ட் மேயரான போது மூன்று சீனப் பிரதிநிதிகள் அவரை வந்து சந்தித்தனர். “சீனா வல்லரசு ஆக வேண்டும் என்பதால் தான் வந்தனர்” என்கிறார் அவர்.

ஆர்க்டிக்கைப் பற்றி யோசிக்கும் சீனா உங்கள் நினைவுக்கு வராது, ஆனால் ஆர்க்டிக்கில் தான் ஒரு முக்கிய சக்தியாவதில் சீனா உறுதியுடன் உள்ளது. இங்கு ரியஸ் எஸ்டேட் முதலீடு செய்து கட்டுமானத் திட்டங்களின் ஈடுபட்டு நிரந்தரமான பிராந்திய இருப்பை நிறுவ சீனா போட்டியிடுகிறது.

சீனா தன்னை “ஆர்க்டிக்கிற்கு நெருக்கமான நாடு” என விவரித்துக் கொள்கிறது. ஆனால் அதன் வட தொலைவு பிராந்தியத்தின் தலைநகரான ஹர்பினும் இத்தாலியில் உள்ள வெனீஸும் ஒரே அட்சரேகையில் உள்ளன.

உலகின் மிகவும் போட்டிக்குரிய இடமாக ஆர்க்டிக் வேகமாக மாறி வருகிறது. ரஷ்யா, ஐரோப்பா, இந்தியா மற்றும் அமெரிக்காவிடமிருந்து கடுமையான போட்டியை சந்திக்கிறது சீனா. ஆர்க்டிக்கிற்கான பந்தயம் தொடங்கியுள்ளது

சீனாவின் போலார் பட்டுப் பாதை

வேறு எந்த இடத்தையும்விட ஆர்க்டிக் நான்கு மடங்கு வேகமாக வெப்பமடைந்து வருவதாக காலநிலை விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இது சுற்றுச்சூழல் அமைப்புகள், வனவிலங்குகள் மற்றும் உள்ளூர் மக்களைப் பாதிக்கிறது. பூமியின் 4 சதவிகித நிலப்பரப்பில் பரவியுள்ள ஆர்க்டிக் பிராந்தியம் மிகவும் பெரியது

இந்த சுற்றுச்சூழல் மாற்றங்களின் பின்னணியில் ஆர்க்டிக்கில் புதிய வாய்ப்புகளை உருவாவதை உலக நாடுகள் பார்க்கின்றன.

ஆர்க்டிக்கில் உருகும் பனி அதன் முக்கியமான கனிமங்கள், எண்ணெய் மற்றும் வாயு உள்ளிட்ட இப்பிராந்தியத்தின் இயற்கை வளங்களை அணுகுவதை எளிதாக்குகிறது. இதுவரை பயன்படுத்தப்படாத 30 சதவிகித இயற்கை வாயுக்கள் ஆர்க்டிக்கில் காணப்படுகின்றன.

இது புதிய கடல்சார் வர்த்தகப் பாதைகளுக்கான சாத்தியங்களை உருவாக்கி ஆசியா மற்றும் ஐரோப்பாவுக்கான பயண நேரத்தை பரவலாகக் குறைக்கிறது. ஏற்றுமதி வர்த்தகத்தில் நேரம் தான் பணம். ஆர்க்டிக்கில் கப்பல் போக்குவரத்துக்கு சீனா “போலார் பட்டுப் பாதை (Polar Silk Road)” என்கிற திட்டத்தை வடிவமைத்து வருகிறது.

ரஷ்யாவை நோக்கி தள்ளப்படும் சீனா


ஆர்க்டிக், ரஷ்யா, சீனா, இந்தியா, ஐரோப்பா

நான் சென்றபோது கிர்கெனெஸ் துறைமுகம் ஆள் அரவமற்று இருந்தது.

ஆர்க்டிக் வட்டத்திற்கு உள்ளே, நார்வேவின் பிரதான நிலப்பிரப்பின் வடமுனையில் அமைந்துள்ள இந்த முன்னாள் சுரங்க நகரம் பனி சூழ்ந்த மலைகள் மற்றும் நீர்நிலைகள் சூழ அமைந்துள்ளது.

மூடப்பட்ட கடைகள், உடைந்த ஜன்னல்கள் கொண்ட கைவிடப்பட்ட கிடங்குகள் இங்கு உள்ளன. இந்த நகரம் மறக்கப்பட்ட, கைவிடப்பட்ட உணர்வைத் தெரிகிறது.

இப்படிப்பட்ட ஒரு நகரம், ஆசியாவிலிருந்து அதிக அளவிலான சரக்கு கப்பல்களை கையாளும் முதல் ஐரோப்பிய துறைமுகம் ஆகிறது என்றால் போலார் பனி எவ்வளவு வேகமாக உருகுகிறது என்பதை நீங்கள் கற்பனை செய்து கொள்ளலாம்.

இந்த நகரத்தின் துறைமுக இயக்குநர் டெர்ஜே ஜோர்கென்சன் ஒரு புதிய சர்வதேச துறைமுகத்தை கட்ட திட்டமிட்டுள்ளனர். இந்த இடத்தை வட ஐரோப்பாவின் சிங்கப்பூராக மாற்றுவதைப் பற்றி பேசும்போது அவரின் கண்கள் பிரகாசிக்கின்றன.

“நாங்கள் இங்கு வட அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசியா ஆகிய முன்று கண்டங்களும் சந்திக்கும் டிரான்ஸ்-ஷிப்மண்ட் துறைமுகம் ஒன்றை தான் கிர்கெனெஸில் கட்ட முயற்சிக்கிறோம். நாங்கள் வருகின்ற சரக்குகளை வேறு கப்பல்களுக்கு மாற்றுகிறோம் (மேலும் ஏற்றுமதி செய்வதற்கு). நாங்கள் எந்த பிரிட்டன் நிறுவனத்திற்கோ, சீன நிறுவனத்திற்கோ விற்க வேண்டியதில்லை. நார்வேவின் புதிய சட்டங்கள், அந்நாட்டின் பாதுகாப்பு நலன்களைப் பாதிக்கிறது என்றால் சொத்து அல்லது வணிகங்களை மாற்றுவதை தடை செய்கின்றன” என்றார்.

இந்தச் சட்டங்களின் கீழ் எத்தகைய கட்டுமானங்கள் வருகின்றன என்பது தொடர்பான அரசின் வழிகாட்டுதல்களுக்கு காத்திருப்பதாக அவர் தெரிவித்தார்.

சீனாவின் நோக்கங்கள் பற்றி மேயர் மேலண்ட் தெளிவாகவே உள்ளார். “எங்களுக்கு சீனா உடன் உறவு வேண்டும். ஆனால் நாங்கள் சீனாவைச் சார்ந்திருக்க விரும்பவில்லை” என்று கூறினார்.

மேலும் அவர், “எதேச்சதிகார மற்றும் சர்வாதிகார அரசுகளை எவ்வளவு சார்ந்திருக்க வேண்டும் என்பதை ஐரோப்பா தனக்குத் தானே கேட்டுக் கொள்ள வேண்டும்” என்றார்.

ஆர்க்டிக்கில் இடத்தை பிடித்துவிடலாம் என்கிற சீனாவின் அணுகுமுறை ஐரோப்பாவில் நிராகரிக்கப்பட்டு வருகிறது. நார்வே மற்றும் சுவீடனில் துறைமுகங்கள் மற்றும் கிரீன்லாந்தில் விமானநிலையம் போன்றவற்றை வாங்க சீனா சமீபத்தில் எடுத்த முயற்சிகள் தடுக்கப்பட்டது இதற்கு ஒரு உதாரணம்.

இது, போலாரில் இடம்பெறத் துடிக்கும், வளர்ந்து வரும் பெரிய வல்லரசான சீனாவை ஆர்க்டிக் பிராந்தியத்தின் மிகப்பெரிய சக்தியான ரஷ்யாவை நோக்கி தள்ளுகிறது.

சீனா- ரஷ்யா: எச்சரிக்கை கலந்த இருநாட்டு உறவுகள்

ஆர்க்டிக், ரஷ்யா, சீனா, இந்தியா, ஐரோப்பா

ஆர்க்டிக் எல்லையில் பாதியை ரஷ்யா கட்டுப்படுத்துகிறது. இங்கு சீனாவின் முதலீடுகளை ரஷ்யா குவித்து வருகிறது.

இரு நாடுகளும் ஆர்க்டிக்கில் ராணுவ ரீதியாகவும் ஒத்துழைத்து செயல்படுகின்றன. கடந்த அக்டோபர் மாதம் ரஷ்ய படைகளுடனான கூட்டு ரோந்து பணிகளின்போது சீன கடலோரக் காவல்படை முதல் முறையாக ஆர்க்டிக் பகுதிக்குள் நுழைந்தது. இம்மாதத்தின் தொடக்கத்தில் இரு நாடுகளும் கூட்டு ராணுவப் பயிற்சிகளை மேற்கொண்டன. ஜூலை மாதம் இரு நாடுகளில் இருந்து நீண்ட தூர போர் விமானங்கள் அமெரிக்காவின் அலாஸ்கா அருகே ஆர்க்டிக் பெருங்கடலில் ரோந்து சென்றன.

இது ஆர்க்டிக்கில் பயிற்சிகளை அதிகரித்துள்ள நேட்டோவைப் பார்த்து ரஷ்யாவும் சீனாவும் ‘எங்களாலும் இதைச் செய்ய முடியும்’ என்று சொல்வதைப் போல அமைந்துள்ளது.

ரஷ்யாவைத் தவிர ஆர்க்டிக் எல்லை நாடுகள் அனைத்தும் நேட்டோவில் உறுப்பினராக உள்ளனர். பின்லாந்து மற்றும் சுவீடன் ஆகிய நாடுகள் யுக்ரேன் ஊடுருவலுக்குப் பிறகு தான் இணைந்தன.

ஃப்ரிட்ஜோஃப் நான்சன் நிறுவனத்தைச் சேர்ந்த ஆய்வாளரான ஆண்ட்ரியாஸ் ஆஸ்தேகன், ஆர்க்டிக்கை ரஷ்ய-சீன ஒத்துழைப்பிற்கான எளிய இலக்கு என விவரிக்கிறார்.

மேலும் அவர், “ரஷ்யாவிற்கு ஆர்க்டிக்கில் உள்ள திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு வளங்கள், எண்ணெய் வளங்கள் அல்லது வடக்கு கடல் பாதையை ஒரு கப்பல் போக்குவரத்து தடமாக மாற்ற விரும்புபவர்களின் முதலீடு தேவைப்படுகிறது. சீனா தான் அந்த சந்தை. இரு நாடுகளும் தங்களின் அரசியல், பொருளாதார மற்றும் ராணுவ ஒத்துழைப்ப விரிவாக்குவதற்கான வழிகளை ஆராய்ந்து வருகின்றன” என்றார்.

ஆனால் ரஷ்யாவுடன் மிகவும் நெருக்கமாக சீனா விரும்பவில்லை. மேற்கத்திய நாடுகளின் பொருளாதார தடைகளைத் தவிர்த்து ஆர்க்டிக்கிற்கு உள்ளேயும் வெளியும் மேற்கத்திய நாடுகளுடன் வணிகம் செய்ய விரும்புகிறது சீனா.

ரஷ்யாவுக்கும் இதில் சில தடைகள் உள்ளன.

ரஷ்யா-சீனா உறவை மிகைமதிப்பிடாமல் தவிர்க்க வேண்டும் என்கிறார் ஆஸ்தேகன். “ரஷ்யா அதன் ஆர்க்டிக் பகுதியில் மிக ஆழமாக சீனாவை அனுமதிப்பதில் கவனத்துடன் இருக்கிறது” என்றார் அவர்.

இங்குள்ள அதன் இயற்கை வளங்களை மிகுதியாக நம்பி இருக்கிறது ரஷ்யா. இங்கு அமெரிக்கா உள்ளிட்ட பிற ஆர்க்டிக் முதலீட்டாளர்களை ரஷ்யா குறிவைப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரஷ்யாவிற்கு ஆர்க்டிக் ஏன் முக்கியமாகிறது?

ஆர்க்டிக், ரஷ்யா, சீனா, இந்தியா, ஐரோப்பா

ரஷ்யா அதன் முக்கியமான ஆயுதங்களை சேமித்து வைக்க ஆர்க்டிக்கைச் சார்ந்திருக்கிறது. அதிலும் குறிப்பாக கோலா தீபகற்பத்தில் தான் அதன் அணுஆயுதங்களும் வடக்கு கடற்படையின் தலைமையிடமும் தளமும் அமைந்துள்ளன.

நார்வேவில் கிர்கெனெஸ் நகர மக்கள் எப்போதும் ரஷ்யாவின் நிழலிலே வாழ்கின்றனர். ரஷ்ய எல்லை 10 நிமிடம் பயணிக்கும் தூரத்தில் தான் இருக்கிறது. கோலா தீபகற்கமும் அவர்களுக்கு நெருக்கத்தில் அமைந்துள்ளது.

பனிப்போர் காலங்களில், சோவியத் ஒன்றியம் மற்றும் மேற்குலக உளவாளிகளின் கூடாரமாக அறியப்பட்டது இந்த நகரம்.

ரஷ்யா ஆர்க்டிக்கை போர் பயிற்சி வழங்கவும் யுக்ரேனைத் தாக்க போர் விமானங்களை ஏவவும் பயன்படுத்துவதாக நார்வே நம்புகிறது.

ரஷ்யாவுடன் நேரடிப் போரில் ஈடுபடவில்லையென்றாலும் அந்நாட்டுடன் 200 கிலோமீட்டர் எல்லையைப் பகிரும் நார்வே தாக்குதலுக்கு உள்ளாவதாக உணர்கிறது.

“இதை நாங்கள் உள்ளூரில் பார்க்கிறோம்” என்கிறார் கோல் ஜோர்ன் க்வில்லர். பஸ்விக் நதி ரஷ்யா மற்றும் நார்வேயை பிரிக்கிறது. இதற்கு முன் நார்வேயின் அடர் மஞ்சள் சோதனைச் சாவடியும் ரஷ்யாவின் சிவப்பு மற்றும் பச்சை சோதனைச் சாவடிகளும் அமைந்துள்ளன.

“யுக்ரேன் உடனான யுத்தம் தொடங்கியதில் இருந்து ஜிபிஎஸ் சிக்னல்களை முடக்குவது போன்ற சம்பவங்கள் அதிகமாக நிகழ்கின்றன. இதனால் வணிக விமானங்கள் தங்களின் நேவிகேசன் அமைப்புகளை மாற்ற வேண்டியதாயிற்று. நார்வேவிற்கு உளவாளிகள் அனுப்பப்படுவது தொடங்கி சிக்னல் உளவுவரை எல்லையோரத்தில் அனைத்து விதமான உளவு சம்பவங்களும் அதிகரித்துள்ளன” என்கிறார் கோல் க்வில்லர்

நார்வேயும் அதன் நேட்டோ கூட்டாளிகளும் ஆர்க்டிக்கில் ரஷ்ய உளவு நீர்முழ்கிகள் மற்றும் இதர கப்பல்களின் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வருகின்றன.

ஆர்க்டிக், ரஷ்யா, சீனா, இந்தியா, ஐரோப்பா

அந்நாட்டின் பனிப்போர் கால கூட்டு ராணுவ மையத்திற்குச் செல்ல நமக்கு அனுமதி கிடைத்தபிறகு நார்வே இந்த அச்சுறுத்தலை எவ்வாறு கண்காணிக்கிறது என்பதை நம்மால் பார்க்க முடிகிறது. ஆர்க்டிக் வட்டத்தில் உள்ள போடோவில் உள்ள ஒரு மலைக்கு உள்ளே ஆழமான இடத்தில் இது அமைந்துள்ளது.

இங்கு பல சுரங்கப் பாதைகள் மற்றும் கண்காணிப்பு அறைகள் இருப்பதைப் பார்க்க முடிகிறது. இங்கு தான் ஆர்க்டிக் கடல் அருகே வருகிற சந்தேகத்திற்குரிய கப்பல்களைக் குறிவைத்து தரை, வான் மற்றும் கடலில் இருந்து நிகழ் நேர உளவுத் தகவல்களை நார்வே சேகரிக்கிறது. இவை அனைத்தும் நிகழ் நேரத்தில் நேட்டோ கூட்டாளிகளுடன் பகிரப்படுகிறது.

ஐரோப்பாவில் நுழையும் எந்த ரஷ்யக் கப்பலும் முதலில் நார்வே எல்லையைத் தாண்டி தான் வரவேண்டியுள்ளது.

இந்த தலைமையிடத்தில் இருந்து தான் மேற்கு உலகிற்கு எதிரான ரஷ்ய போர்முறையின் ஒரு அங்கமான கடலுக்கு அடியில் உள்ள முக்கியமான கட்டமைப்புகளில் இருந்து உளவு மற்றும் சதிக்கான அறிகுறிகள் கண்காணிக்கப்படுகின்றன.

இதன் இலக்குகள், கடலுக்குள் அடியில் உள்ள கண்டங்களை இணைத்து தினமும் பல ட்ரில்லியன் டாலர்கள் மதிப்பிலான பொருளாதார பரிவர்த்தனைகளை அனுமதிக்கும் தொடர்பு கேபிள்கள் மற்றும் எண்ணெய் மற்றும் வாயு குழாய்களை உள்ளடக்கும்.

யுக்ரேன் யுத்தத்தைத் தொடர்ந்து ரஷ்யா மீது பொருளாதார தடைகள் விதிக்கப்பட்ட நிலையில் பிரிட்டன் உட்பட ஐரோப்பாவிற்கு இயற்கை எரிவாயுவை விநியோகம் செய்யும் முக்கிய நாடாக நார்வே உள்ளது.

ஆர்க்டிக், ரஷ்யா, சீனா, இந்தியா, ஐரோப்பா

ஆர்க்டிக்கில் உள்ள அதன் ராணுவ திறன்களை ரஷ்யா நவீனப்படுத்தி வருகிறது. அங்கு முக்கியமான உளவு மற்றும் அணு ஆயுத நீர்முழ்கிகளை ரஷ்யா வைத்துள்ளது. அவை கண்டறியப்படவில்லை என்றால் ஐரோப்பா முழுவதும் உள்ள தலைநகரங்களை குறிவைப்பதோடு மட்டுமல்லாது அமெரிக்காவையும் அச்சுறுத்தக்கூடும்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஐரோப்பா அதன் பாதுகாப்பிற்கு அதிகம் செலவிட வேண்டும் எனக் கூறுகிறார். ஆனால் ஆர்க்டிக்கிற்குள் “பல தரப்பு நலன்கள் உள்ளன” என்கிறார் நார்வேவின் கூட்டு தலைமையிடத்தின் துணை அட்மிரலான ரூன் ஆண்டர்சன்.

“இது அமெரிக்காவின் உள்நாட்டு பாதுகாப்பு பற்றியது. ரஷ்யாவின் அணு ஆயுத குவிப்பு, ரஷ்யா அங்கு நிறுவி வரும் கட்டமைப்புகள் ஐரோப்பாவைக் குறிவைத்தது மட்டுமல்ல, அவை அமெரிக்காவையும் தான் குறிவைக்கின்றன” என்றார் அவர்.

ஆர்க்டிக்கில் மோதலைத் தொடங்க எந்த தரப்பும் எண்ணவில்லை என நம்புகிறார் துணை அட்மிரல் ரூன் ஆண்டர்சன். ஆனால் யுக்ரேன் போல மற்ற இடங்களில் தற்றங்கள் அதிகரித்து வருகிற நிலையில் ஆர்க்டிக்கிலும் அது பரவ சாத்தியங்கள் உள்ளன என்கிறார்.

ரஷ்யாவுடன் எப்போதும் தொடர்பை வைத்துக் கொள்ள துணை அட்மிரலின் குழு ஒவ்வொரு புதன்கிழமை மதியமும் ரஷ்ய வடக்கு படையை அழைத்துப் பேசுகிறது.

ஸ்வால்பார்ட் நிலை என்ன?

ஆர்க்டிக், ரஷ்யா, சீனா, இந்தியா, ஐரோப்பா

நீங்கள் கிர்கெனெஸை விட்டு வட துருவம் நோக்கி சென்றால் பாதி தூரத்தில் நீங்கள் ஸ்வால்பார்ட் என்கிற நார்வேவின் தீவுக்கூட்டத்தைப் பார்க்கலாம். இது பனிப் பாறைகளின் இருப்பிடம், இங்கு மனிதர்களை விடவும் பனிக்கரடிகள் தான் அதிகமாக உள்ளன.

ஆர்க்டிக் வளங்களுக்கான உலக நாடுகளின் போட்டியில் மத்தியில் ஸ்வால்பார்ட் அமைந்துள்ளது. இந்த தீவுக்கூட்டம் நார்வேவுக்குச் சொந்தமானது தான் என்றாலும் அனைத்து நாடுகளைச் சேர்ந்தவர்களும் இங்கு விசா இல்லாமல் வேலை செய்ய அனுமதிக்கும் ஒரு ஒப்பந்தம் மூலம் அது நிர்வகிக்கப்படுகிறது. இங்கு பணியில் உள்ளவர்கள் பெரும்பாலும் சுரங்கம், சுற்றுலா மற்றும் அறிவியல் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இது இணக்கமானதாக தோன்றலாம், ஆனால் யுக்ரேனுடனான யுத்தத்திற்குப் பிறகு இங்குள்ள சில சமூகங்கள் தங்களின் தேசிய உணர்வுகளை வெளிப்படுத்துவதை கவனிக்கமுடிகிறது.

இது இங்குள்ள ரஷ்ய குடியேற்றத்தில் இரண்டாம் உலகப் போரின் முடிவை நினைவு கூர்வதற்கான ராணுவப் பேரணி, ரஷ்ய கட்டமைப்புகள் மீது சோவியத் கொடிகளைப் பறக்கவிடுவது போன்றவற்றை உள்ளடக்கும். சீனா இங்குள்ள தனது ஸ்வால்பார்ட் ஆய்வு நிலையத்தை ராணுவ உளவு என்கிற இரட்டை நோக்கங்களுக்காகவும் பயன்படுத்துகிறது என்கிற சந்தேகம் வலுத்துள்ளதும் இதில் அடங்கும்.

பிபிசி தமிழ், வாட்ஸ்ஆப்

இதில் உண்மை என்னவென்று தெரியாத நிலையிலும் இங்குள்ள வெவ்வேறு நாடுகளின் ஆய்வு நிலையங்கள் மூலம் உளவு சேகரிப்பு நடக்கவில்லை என்று நினைப்பது வெகுளித்தனமானது என்கிறார் இப்பகுதியின் மேயர் டெர்ஜே அவுனேவிக்.

மேலும் அவர், “இங்கு நிச்சயம் உளவு சேகரிப்பு உள்ளது. இந்த உலகம் ஆர்க்டிக் அச்சத்தில் அகப்பட்டுள்ளது என நினைக்கிறேன்” என்றார்.

நான் ஸ்வால்பார்ட் வந்த அன்று, நார்வேயின் தேசிய தினம். தெருக்கள் முழுவதும் நார்வேயின் தேசிய உடையை அணிந்த குழந்தைகளுடன் பெற்றோர்கள் கலந்து கொண்ட பேரணியால் நிரம்பி வழிந்தது.

லாங்இயர்பைன் தான் உலகத்தின் வட எல்லையில் அமைந்துள்ள நகரம். ஆர்க்டிக் கடல் மீது பிரகாசமான சூரிய அஸ்தமனம் நிகழ்கிறது, சுற்றிலும் பனி போர்த்திய மலைகள் அமைந்துள்ளன.

எந்தப் பக்கம் பார்த்தாலும் கடைகளின் ஜன்னல்கள், தள்ளுவண்டிகள் மற்றும் பெண்களின் சிகை அலங்காரம் என அனைத்திலும் நார்வேயின் நீலம், வெள்ளை மற்றும் சிவப்பு கொடிகளைப் பார்க்க முடிகிறது. ஆனால் இந்தக் கொண்டாட்டங்களுக்கு மத்தியிலும் மற்றுமொரு பேசப்படாத உணர்வு இருப்பதாக தோன்றியது. அது ‘ஸ்வால்பார்ட் எங்களுக்குச் சொந்தமானது’ என்கிற நினைவூட்டல் தான்.

ஆர்க்டிக்கில் அதிகரித்துள்ள தேசங்களுக்கு இடையே போட்டியுணர்வுக்கு எதிர்விளைவுகள் இல்லாமல் இல்லை.

பூர்வகுடி மக்களின் உணர்வுகள் என்ன?

ஆர்க்டிக், ரஷ்யா, சீனா, இந்தியா, ஐரோப்பா

இந்தப் பகுதியில் உள்ள பூர்வகுடி சமூகங்களில் பாதிக்கும் மேலானோர் ரஷ்ய ஆர்க்டிக் பகுதியில் வசிக்கின்றனர். இவர்கள் இந்தப் பகுதியை வீடு என அழைக்கும் மக்களின் உரிமைகளை அங்கீகரிக்க அதிகாரத்தில் இருப்பவர்கள் தவறிவிட்டனர் என்றே உணர்கின்றனர்.

இன்குயிட் பூர்வகுடி சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கிரீன்லாந்தைச் சேர்ந்த இளம் செயற்பாட்டாளரான மியூகி தோரானா, “டொனால்ட் டிரம்ப் தனது முதல் பதவிக் காலத்தில் தங்கள் நாட்டை வாங்கப்போவதாக அறிவித்தபோது நகைப்புடன் கடந்து விட்டோம். ஆனால் இம்முறை அது வித்தியாசமாக உள்ளது” என்கிறார்.

மேலும் அவர், “தற்போதைய உலகளாவிய சூழலில், அதிகாரப் போட்டி மற்றும் வளங்களுக்கான போட்டியால் இது மேலும் தீவிரமாகியுள்ளது,” என்றார்.

இவரும் பூர்வகுடி சமூகங்களைச் சேர்ந்த மற்றவர்களும் ஐரோப்பிய நாடுகள் “காலநிலை நெருக்கடியை” சாக்காகப் பயன்படுத்தி பூர்வகுடி நிலங்களை ஊடுருவி அபகரிப்பதாக குற்றம்சாட்டுகின்றனர்.

“ஆர்க்டிக் என்பது எங்களுக்கு ஒரு தலைப்போ, விருப்பமோ, ஆய்வோ அல்ல. இது எங்களின் வாழ்கை, நிஜமான போராட்டங்கள், உணர்வுகள் மற்றும் மிகவும் நியாயமற்ற அநீதிகள். அரசாங்களும் அரசியல்வாதிகளும் மக்களுக்காக வேலை செய்ய வேண்டும். ஆனால் நான் அதைப் பார்த்தே இல்லை. அவை பெரும்பாலும் அலங்கார வார்த்தைகளாகவே உள்ளன” என்றார் மியூகி தோரானா.

இங்கு சமீபத்தில் தான் ஆர்க்டிக் எல்லையில் அமைந்துள்ள எட்டு நாடுகள் – கனடா, ரஷ்யா, அமெரிக்கா, பின்லாந்து, சுவீடன், நார்வே, டென்மார்க் மற்றும் ஐஸ்லாந்து மற்றும் 6 ஆர்க்டிக் பூரவகுடி சமூகங்களின் பிரதிநிதிகள் மற்றும் சீனா மற்றும் பிரிட்டன் உள்ளிட்ட அப்சர்வர் நாடுகள் தங்களின் வேறுபாடுகளை ஒதுக்கி வைத்து உலகின் இந்த அற்புதமாக பகுதியைப் பாதுகாத்து, நிர்வகிக்க இணைந்து பணியாற்றுவார்கள்.

ஆனால் இது அதிகார அரசியலின் காலம். நாடுகள் தொடர்ந்து தங்களின் சொந்த நலன்களுக்காகவே செயல்படுகின்றன.

பல போட்டி நாடுகள் தற்போது ஆர்க்டிக்கில் உள்ள நிலையில் தப்புக் கணக்கு மற்றும் தவறாக பொருள் கொள்வதற்கான ஆபத்துகள் அதிகம் உள்ளன.

– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU