SOURCE :- BBC NEWS

ஆப்பிள் நிறுவனம், ஐபோன்களுக்கு வரி, வர்த்தகப் போர், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்

பட மூலாதாரம், Getty Images

இந்தியாவில் ஐபோன்களை உற்பத்தி செய்ய ஆப்பிள் நிறுவனம் விரும்பினால் அதை அவ்வாறே செய்து கொள்ளலாம். ஆனால் அந்த நிறுவனத்தின் போன் உள்ளிட்ட எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை அமெரிக்காவில், சுங்க வரி இல்லாமல் விற்பனை செய்ய இயலாது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

வெள்ளிக்கிழமை அதிபர் மாளிகையில் சில நிர்வாக உத்தரவுகளில் கையெழுத்திட்டப் பிறகு இதனை அறிவித்தார்.

ஐரோப்பிய ஒன்றியத்துடனான அமெரிக்காவின் வர்த்தக ஒப்பந்தம் ஆரம்பமாவதற்கு முன்பாக, வெளிநாடுகளில் உற்பத்தி செய்யப்பட்டு அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் ஐபோன்களுக்கு 25% வரி விதிக்க இருப்பதாக அவர் அறிவித்தார்.

சீனாவில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கு டொனால்ட் டிரம்ப் வரியை அதிகரித்த நிலையில், இந்தியாவை உற்பத்தி மையமாக மேம்படுத்த ஆப்பிள் நிறுவனம் முடிவு செய்தது. ஆனால் டிரம்பிடம் இருந்து அடுத்தடுத்து வெளியான இந்த இரண்டு அறிக்கைகள் ஆப்பிள் நிறுவனத்திற்கு கவலை அளிக்கும் வகையில் அமைந்துள்ளது.

இந்த அறிவிப்பு இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். ஏன் என்றால் ஆப்பிளின் மொத்த ஐபோன் உற்பத்தியில் 15% உற்பத்தியை இந்தியாவில் மேற்கொள்கிறது. தற்போது இந்த உற்பத்தித் திறனை 25% ஆக அதிகரிக்க ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டிருந்தது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

இதனால் ஆப்பிளுக்கு என்ன ஆபத்து?

டிரம்பின் இந்த அறிவிப்பு வெளியாவதற்கு சில வாரங்களுக்கு முன்பு தான், அமெரிக்காவில் விற்பனை செய்யப்படும் பெரும்பான்மையான ஐபோன்கள் இந்தியாவில் இருந்து உருவாக்கப்படும் என்று ஆப்பிள் நிறுவனம் அறிவித்திருந்தது.

இதனைத் தொடர்ந்து, இந்தியாவில் 1.49 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான உற்பத்தி மையத்தை அமைப்பதற்கான விருப்பத்தை வெளிப்படுத்தியது, ஆப்பிள் பொருட்களை ஒப்பந்த முறையில் உற்பத்தி செய்து தரும் ஃபாக்ஸ்கான்.

இந்தியாவில் செயல்பட்டு வரும் ஃபாக்ஸானின் யுஸான் டெக்னாலஜீஸ் ப்ரைவேட் லிமிட்டட் நிறுவனத்தில் இந்த முதலீட்டை செலுத்த இருப்பதாக லண்டன் பங்கு சந்தையில் ஃபாக்ஸ்கான் நிறுவனம் தெரிவித்திருந்தது.

சென்னையில் இதன் உற்பத்தி தொழிற்சாலையை அமைக்க முடிவெடுக்கப்பட்டிருக்கிறது. காஞ்சிபுரத்தில் ரூ. 13,180 கோடி மதிப்பில் இந்த தொழிற்சாலையை நிறுவ கடந்த அக்டோபர் மாதம், தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியது.

ஆப்பிள் நிறுவனம், ஐபோன்களுக்கு வரி, வர்த்தகப் போர், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்

பட மூலாதாரம், Getty Images

டிரம்ப் விடுத்த எச்சரிக்கை என்ன?

ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டிம் குக்கிடம் நீண்ட நாட்களுக்கு முன்பாகவே, அமெரிக்காவில் விற்பனை செய்யப்படும் ஐபோன்களை அமெரிக்காவில் தான் உற்பத்தி செய்ய வேண்டும். இந்தியாவிலோ வேறெந்த நாட்டிலோ உற்பத்தி செய்யக் கூடாது என்று டொனால்ட் டிரம்ப் கூறியிருந்தார்.

இது தொடர்பாக சமூக வலைதளத்தில் குறிப்பிட்டிருந்த டொனால்ட் டிரம்ப், “அமெரிக்காவில் விற்பனை செய்யப்படும் ஐபோன்கள் அமெரிக்காவிலேயே உற்பத்தி செய்யப்பட வேண்டும் என நான் டிம் குக்கிடம் கூறியிருந்தேன். ஆனால் அவர் இந்தியாவில் ஆலை அமைக்க உள்ளார். எனக்கு அதில் ஒன்றும் பிரச்னை இல்லை என்று கூறிவிட்டேன். ஆனால் அமெரிக்காவில் வரி ஏதுமின்றி ஐபோன்களை விற்பனை செய்ய இயலாது,” என்று எழுதியிருந்தார்.

டிரம்பின் இந்த எச்சரிக்கைக்குப் பிறகு, ஆப்பிள் நிறுவனத்தால் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் ஐபோன்களை அமெரிக்காவில் விற்பனை செய்ய இயலுமா? மேலும் இந்த நடவடிக்கையால் ஆப்பிள் நிறுவனம் மற்றும் இந்தியாவுக்கு ஏற்படும் இழப்பு எத்தகையது?

ஐபோன்களை அமெரிக்காவிலேயே உற்பத்தி செய்யும் போது அங்கே வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும். ஆனால் அதன் மூலமாக ஆப்பிள் நிறுவனத்தால் லாபம் ஈட்ட இயலுமா?

இந்த கேள்விகளுக்கு பதில் தெரிந்து கொள்ள நாம் க்ளோபல் டிரேட் ரிசர்ச் இனிசியேடிவ் (ஜி.டி.ஆர்.ஐ) அமைப்பின் நிறுவர் அஜய் ஶ்ரீவஸ்தாவிடம் பேசினோம்.

ஆப்பிள் நிறுவனம், ஐபோன்களுக்கு வரி, வர்த்தகப் போர், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்

பட மூலாதாரம், Getty Images

இந்தியாவில் ஐபோன்களை உற்பத்தி செய்வது எவ்வளவு மலிவானது?

பிபிசியிடம் பேசிய அவர், “ஒரு ஆப்பிள் போனின் விலை 1000 டாலர்கள் என்று வைத்துக் கொள்வோம். அதனை உற்பத்தி (அசெம்பிள்) செய்து தரும் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் ஒரு போனுக்கு 30 டாலர்கள் மட்டுமே கிடைக்கின்றன. ஐபோன்களின் முக்கியமான உற்பத்தி மையமாக இவ்விரு நாடுகள் இருக்கும் போதிலும், ஐபோன்களின் சில்லறை விலையில் 3 சதவீதத்தை மட்டுமே இவ்விரு நாடுகளும் பெறுகின்றன,” என்றார்.

இதுமட்டுமின்றி, இந்தியாவில் ஐபோன்கள் மிகவும் குறைந்த விலையில் உற்பத்தி செய்யப்படுகின்றன. ஏன் என்றால் இங்கே உற்பத்தித் துறையில் ஈடுபட்டிருக்கும் ஊழியர்களின் சம்பளம் மிகவும் குறைவு என்று அவர் கூறுகிறார்.

ஐபோன்களின் உதிரி பாகங்களை ஒன்றிணைத்து உற்பத்தி மேற்கொள்ளும் ஊழியர்களுக்கு இங்கே சராசரியாக மாதத்திற்கு ரூ. 17 ஆயிரம் முதல் 20 ஆயிரம் மட்டுமே சம்பளமாக வழங்கப்படுகிறது. அதாவது அமெரிக்க டாலர்களில் அதன் மதிப்பு 230 டாலர்கள் மட்டுமே.

ஆனால் அமெரிக்காவில் பின்பற்றப்படும் கடுமையான குறைந்தபட்ச ஊதிய சட்டம் காரணமாக அங்கே ஒருவருக்கு ஒரு மாதத்திற்கு 2900 டாலர்களை சம்பளமாக வழங்க வேண்டும். ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் ஒருவருக்கு அளிக்கும் சம்பளத்தைக் காட்டிலும் 13 மடங்கு அதிக சம்பளத்தை ஊழியர்களுக்கு அமெரிக்காவில் வழங்க நேரிடும்.

ஜி.டி.ஆர்.ஐயின் மதிப்பாய்வின் படி, இந்தியாவில் ஒரு ஐபோனை அசெம்பிள் செய்வதற்கு 30 டாலர்கள் செலவாகின்றது. அமெரிக்காவில் இந்த செலவு 390 அமெரிக்க டாலர்கள்.

இதுமட்டுமின்றி இந்திய அரசாங்கத்தால் அறிமுகம் செய்யப்பட்ட பி.எல்.ஐ. திட்டத்தின் (Production Linked Incentive) மூலமாகவும் ஆப்பிள் நிறுவனம் பயனடைகிறது.

இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியின் படி, இந்தியாவில் செயல்பட்டு வரும் ஆப்பிளின் மூன்று பெரிய உற்பத்தி ஆலைகளான ஃபாக்ஸ்கான், டாடா எலக்ட்ரானிக்ஸ் மற்றும் பெகட்ரான் (தற்போது இது ஒரு டாடா நிறுவனம்), இந்த திட்டத்தின் கீழ் மூன்று ஆண்டுகளில் ரூ. 6600 கோடியை பெற்றுள்ளன.

ஆப்பிள் நிறுவனம், ஐபோன்களுக்கு வரி, வர்த்தகப் போர், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்

பட மூலாதாரம், Getty Images

வேலை இழப்புகள் அதிகரிக்குமா?

இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் உற்பத்தி அதிகரித்த போது புதிய வேலை வாய்ப்புகளும் அதிகரித்தன. ஒரு அறிக்கையின் படி, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை 1,64,000 பேருக்கும் மேற்பட்டோர் நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஆப்பிளின் ஐபோன் உற்பத்தி ஆலைகள் மூலமாக வேலை வாய்ப்புகளைப் பெற்றுள்ளனர்.

இந்தியாவில் செயல்பட்டு வரும் உற்பத்தி ஆலைகளில், தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் ஶ்ரீபெரும்புதூர் ஆலை மிகவும் பெரியது. சென்னையில் இருந்து 50 கி.மீ தொலைவில் அமைந்துள்ள இந்த உற்பத்தி ஆலையில் 40 ஆயிரம் பேர் பணியாற்றி வருகின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் வெளியூர்களில் இருந்து வரும் பெண்கள் தான்.

ஆப்பிள் உற்பத்தி மையம் வேறிடங்களுக்கு மாற்றப்பட்டால் இங்குள்ள மக்கள் வேலைகளை இழக்க நேரிடும்.

ஆனால் இந்த குறைந்த ஊழியத்தில், அமெரிக்காவில் ஐபோன்களை அசெம்பிள் செய்வது இயலாத காரியம் என்பதால் ஆப்பிள் இத்தகைய முடிவை எடுக்காது என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.

இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் ஐபோன்களுக்கு கூடுதலாக 25% வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் நிர்வாகம் கூறியிருந்தாலும் இது ஆப்பிளுக்கு தான் நன்மையளிக்கும் என்று அஜய் கூறுகிறார்.

ஆப்பிள் நிறுவனம், ஐபோன்களுக்கு வரி, வர்த்தகப் போர், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்

பட மூலாதாரம், Getty Images

இந்தியாவுக்கு அழுத்தம் தருவதற்காக பின்பற்றப்படும் உத்தியா இது?

டிரம்பின் எச்சரிக்கை குறித்து பிபிசியிடம் சமீபத்தில் பேசிய, டெலிகாம் எக்யூப்மெண்ட் மெனுஃபேக்சரிங் அசோசியேசன் அமைப்பின் முன்னாள் தலைவரும், பேராசிரியருமான என்.கே. கோயல், “உற்பத்தியாளருக்கு சாதகமான சூழல் கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் உருவாக்கப்பட்டுள்ளது,” என்று கூறினார்.

“நெடுஞ்சாலைகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. விநியோகச் சங்கிலி மேம்படுத்தப்பட்டுள்ளது. உற்பத்தியை மேம்படுத்த கொள்கைகளில் அரசாங்கம் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இந்தியாவைக் காட்டிலும் சீனாவில் உற்பத்தி செய்வது மிகவும் மலிவானது. ஆனால் நிறுவனங்கள் பி.எல்.ஐ போன்ற திட்டங்களால் பயனடைந்தன. மேலும் இந்தியா ஒரு போட்டியாளராக உருவெடுத்தது.”

டிரம்பின் அறிவிப்பை தீவிரமாக எடுத்துக் கொள்வதற்கு முன்பு பொறுமையாக சிந்திக்க வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

“டிரம்பின் பார்வை மாறிக் கொண்டே இருப்பதால், இன்று இந்தியாவும் இதர உலக நாடுகளும் அவர் கூறும் அறிக்கையை பொறுமையாக கவனிக்க வேண்டும் என்று புரிந்து கொண்டுள்ளன. இந்த விவகாரத்தில் ஆப்பிள் என்ன முடிவெடுத்தாலும், அதனை தீவிர சிந்தனைக்குப் பிறகே மேற்கொள்ளும்,” என்று கோயல் தெரிவிக்கிறார்.

ஆப்பிள் நிறுவனம், ஐபோன்களுக்கு வரி, வர்த்தகப் போர், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்

பட மூலாதாரம், Getty Images

“லாபம் மற்றும் நஷ்டங்களை கருத்தில் கொண்டே அந்த நிறுவனம் ஒவ்வொரு முடிவையும் மதிப்பிடும். ஆப்பிளைப் பொறுத்தமட்டில், உற்பத்தி மையத்தை இந்தியாவுக்கு நகர்த்துவது என்பது வர்த்தக அடிப்படையிலானது. ஏன் என்றால் சீனாவை மட்டுமே சார்ந்திருக்க வேண்டிய அவசியமில்லை. மேலும் சீனாவில் இருந்து வெளியேறவும் அந்த நிறுவனம் விரும்பியது.

இந்தியாவில் வாய்ப்புகளும் வளங்களும் இருக்கும் போது ஆப்பிள் நிறுவனம் அதை சரியாக பயன்படுத்திக் கொண்டது. இங்கே உற்பத்தி மையங்கள் உருவாக்கப்பட்டன. மேலும் உற்பத்திக்குத் தேவையான சுற்றுச்சூழல் உருவாக்கப்பட்டது. மேலும் தொடர்ச்சியாக இங்கே உற்பத்தி அதிகரிக்கப்பட்டது. இந்த நிலையில் இங்கிருந்து வெளியேறுவது என்பது எளிதான முடிவல்ல,” என்று கோயல் கூறுகிறார்.

அஜய் ஶ்ரீவதஸ்தாவும் கோயலின் கருத்துகளை ஆமோதிக்கிறார். இந்தியாவில் உருவாக்கப்படும் ஆப்பிள் போன்கள் குறித்து டிரம்ப் வெளியிட்ட அறிக்கையானது மிகவும் யோசித்து மேற்கொள்ளப்பட்ட உத்தியாக இருக்கலாம் என்று அவர் கூறுகிறார்.

இந்த விவகாரத்தின் மூலம் இந்தியா – அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்ததில் அழுத்தம் தர அவர்கள் முயற்சிக்கலாம். இந்தியாவில் இருந்து மேலும சில சலுகைகளைப் பெறுவதை அவர்கள் நோக்கமாக கொண்டிருக்கலாம்.

– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU