SOURCE :- BBC NEWS

புளூட்டோவில் உள்ள இதய வடிவிலான படம்

பட மூலாதாரம், NASA/Johns Hopkins

டொனால்ட் டிரம்புக்கும் ஈலோன் மஸ்கிற்கும் இடையிலான மோதலின் எதிரொலி, நாசாவின் பட்ஜெட் மற்றும் அதன் எதிர்காலம் குறித்த பல கேள்விகளையும் எழுப்பியிருக்கிறது.

டிரம்பின் “பிக், பியூட்டிஃபுல்” மசோதா தொடர்பாக, அவருக்கும் ஈலோன் மஸ்க்கிற்கும் இடையிலான கருத்து வேறுபாடு மோதலாக மாறியுள்ளது.

நாசா தனது புதிய பட்ஜெட் திட்டத்தை நாடாளுமன்றத்துக்கு அனுப்பியுள்ளது. இதில் அறிவியல் திட்டங்களுக்கான நிதி கிட்டத்தட்ட பாதியாகக் குறைக்கப்பட்டுள்ளது.

தற்போது மேம்படுத்தப்பட்டுவரும் திட்டங்கள் அல்லது ஏற்கனவே விண்வெளியில் இருக்கும் அறிவியல் பயணங்கள் என கிட்டத்தட்ட நாற்பது திட்டங்கள் நிறுத்தப்பட உள்ளன.

ஈலோன் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் உடனான அரசு ஒப்பந்தங்களை திரும்பப் பெறப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.

சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு பணியாளர்கள் மற்றும் பொருட்களை வழங்குவதற்கு ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஃபால்கன் 9 ராக்கெட்களை நாசா நம்பியுள்ளது. ஸ்பேஸ் எக்ஸின் ஸ்டார்ஷிப் ராக்கெட்டைப் பயன்படுத்தி சந்திரனுக்கும் செவ்வாய் கிரகத்திற்கும் விண்வெளி வீரர்களை அனுப்ப நாசா திட்டமிட்டுள்ளது.

ஓபன் யுனிவர்சிட்டியின் விண்வெளி விஞ்ஞானி முனைவர் சிமியோன் பார்பர், தற்போதைய நிச்சயமற்ற தன்மையின் தாக்கம் மனித விண்வெளித் திட்டத்தில் “எதிர்மறையான தாக்கத்தை” ஏற்படுத்தி வருவதாகக் கூறினார்.

“கடந்த வாரத்தில் நாம் பார்த்த வியக்கத்தக்க வார்த்தை பரிமாற்றங்கள், திடீர் முடிவுகள் மற்றும் யூ-டர்ன்கள், நமது லட்சியங்களைக் கட்டியெழுப்பும் அடித்தளத்தையே குறைமதிப்பிற்கு உட்படுத்துகின்றன.

விண்வெளி அறிவியல் மற்றும் ஆய்வு போன்றவை, நீண்ட கால திட்டமிடல், அரசாங்கம், நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பைச் சார்ந்துள்ளது” என்று அவர் கூறுகிறார்.

பூமியின் சுற்றுச்சூழலை கண்காணிக்கும்பல திட்டங்கள் மூடப்படக்கூடும்

பட மூலாதாரம், NASA

அமெரிக்க அதிபருக்கும் ஈலோன் மஸ்க்குக்கும் இடையிலான முரண்பாடுகளைத் தவிர, நாசாவின் பட்ஜெட்டை குறைக்குமாறு வெள்ளை மாளிகையில் இருந்து வரும் அழுத்தமும் கவலைகளை அதிகரித்துள்ளன.

செவ்வாய் கிரகத்திற்கு விண்வெளி வீரர்களை அனுப்பும் 100 மில்லியன் டாலர் திட்டத்தைத் தவிர, நாசாவின் அனைத்து திட்டங்கள் மற்றும் துறைகளுக்கான செலவினங்கள் குறைக்கப்பட்டுள்ளன.

விண்வெளி ஆய்வை ஊக்குவிக்கும் பசடேனாவை தளமாகக் கொண்ட பிளானட்டரி சொசைட்டியின் விண்வெளிக் கொள்கைத் தலைவர் கேசி ட்ரேயரின் கூற்றுப்படி, இந்த பட்ஜெட் குறைப்புகள் “அமெரிக்க விண்வெளித் திட்டம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய நெருக்கடியை” குறிப்பதாக கருதுகிறார்.

மொத்த பட்ஜெட்டை சுமார் 25% குறைக்க விரும்புவதாக நாசா தெரிவித்துள்ளது. இதனால் சந்திரனுக்கும் செவ்வாய்க்கும் பயணிக்கும் முக்கிய திட்டங்களில் அதிக கவனம் செலுத்த முடியும் என கூறியுள்ளது.

இந்த முன்மொழிவுகளை நாடாளுமன்றம் அங்கீகரித்தால், அது நாசாவின் கவனத்தை அடிப்படையிலேயே மாற்றிவிடும் என்று கிரான்ஃபீல்ட் பல்கலைக்கழகத்தின் விண்வெளி ஆய்வாளர் முனைவர் ஆடம் பேக்கர், பிபிசியிடம் தெரிவித்தார்.

“அதிபர் டொனால்ட் டிரம்ப் நாசாவை இரண்டு விஷயங்களுக்காக மீண்டும் உருவாக்குகிறார். அது, சீனர்களுக்கு முன்பாக சந்திரனில் விண்வெளி வீரர்களை தரையிறக்குவது மற்றும் செவ்வாய் கிரகத்தில் விண்வெளி வீரர்கள் அமெரிக்கக் கொடியை நடுவது. இந்த இரண்டைத்தவிர வேறு அனைத்துமே இரண்டாம் பட்சம்தான்.” என்கிறார் அவர்.

ஈலோன் மஸ்க், டொனால்ட் டிரம்ப், உலக செய்திகள், அமெரிக்க செய்திகள்

பட மூலாதாரம், Getty Images

1960கள் மற்றும் 70களில் நிலவில் அப்போலோ தரையிறங்கிய பிறகு, சந்திர கிரக பயணத்தில் சோவியத் யூனியனை வீழ்த்துவதே நோக்கமாக இருந்தது. அதற்குப் பிறகு, தற்போதுதான், வெள்ளை மாளிகையின் பட்ஜெட் நாசாவிற்கு தெளிவான இலக்கை அளித்துள்ளது என்று இந்த திட்டங்களை ஆதரிப்பவர்கள் கூறுகின்றனர்.

அப்போதிருந்து, நாசா விண்வெளி நிறுவனம் கவனம் செலுத்தப்படாத அமைப்பாக மாறிவிட்டது எனவும் வழக்கமாக அதன் விண்வெளி பயணங்களில் பட்ஜெட்டை விட அதிகமாக செலவு செய்து வரி செலுத்துவோரின் பணத்தை வீணடித்து வருவதாகவும் நாசாவின் விமர்சகர்கள் கூறுகின்றனர் .

இதற்கு மிகவும் மோசமான உதாரணங்களில் ஒன்று என, அமெரிக்க விண்வெளி வீரர்களை சந்திரனுக்குத் திருப்பி அனுப்பும் திட்டங்களுக்கான நாசாவின் புதிய ராக்கெட், விண்வெளி ஏவுதள அமைப்பு (SLS) பற்றி குறிப்பிடும் விமர்சகர்கள் இதன் வளர்ச்சி தாமதமாகி வருவதை சுட்டிக் காட்டுகின்றனர்.

செலவுகள் கட்டுக்கடங்காமல் அதிகரித்துள்ளதால், ஒவ்வொரு ஏவுதலுக்கும் 4.1 பில்லியன் டாலர்கள் செலவாகிறது.

இதற்கு நேர்மாறாக, SpaceX இன் சமமான ராக்கெட் அமைப்பான ஸ்டார்ஷிப், மீண்டும் பயன்படுத்தக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டு, ஒரு ஏவுதலுக்கு சுமார் $100 மில்லியன் மட்டுமே செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதேபோல், ஜெஃப் பெசோஸின் ப்ளூ ஆரிஜின் விண்வெளி நிறுவனத்தின் முன்மொழியப்பட்ட நியூ க்ளென் ராக்கெட்டும் செலவும் குறைவுதான்.

SLSக்கு பதிலாக ஸ்டார்ஷிப் மற்றும் நியூ க்ளென் ஆகியவற்றை பயன்படுத்தப்படலாம் என்றும், வெள்ளை மாளிகை SLS திட்டத்தை படிப்படியாக கைவிட்டுவிடும் என்றும் நம்பப்படுகிறது. இருப்பினும், ஸ்டார்ஷிப்பின் கடந்த மூன்று ஏவுதல்கள் தோல்வியடைந்தன என்பதையும், ப்ளூ ஆரிஜின் அண்மையில்தான் அதன் சந்திர பயணத்துக்கான ராக்கெட்டை பரிசோதிக்கத் தொடங்கியுள்ளது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

“கொதிக்கும் வாணலியில் இருந்து தப்பித்து, நாசா நெருப்பில் குதித்துக்கொண்டிருக்கிறதோ என்று அச்சம் தோன்றுகிறது,” என்கிறார் பார்பர்.

ஈலோன் மஸ்க், டொனால்ட் டிரம்ப், உலக செய்திகள், அமெரிக்க செய்திகள்

“SLS-க்கு மாற்றாக இந்த மாற்றுகளை உருவாக்குவதற்கு ஈலோன் மஸ்க் மற்றும் ஜெஃப் பெசோஸ் நிதியளிக்கின்றனர். இந்த முயற்சியில் அவர்களின் ஆர்வம் குறைந்துவிட்டாலோ, ஸ்பேஸ்எக்ஸ் அல்லது ப்ளூ ஆரிஜின் தங்கள் அமைப்புகளை உருவாக்க அதிக பணம் தேவை என்று கூறிவிட்டாலோ, அதற்கான நிதியை நாடாளுமன்றம் கொடுக்க வேண்டியிருக்கும்” என்று பார்பர் கூறுகிறார்.

பிற கிரகங்களை ஆராய்வதற்கும், விண்வெளியில் இருந்து பூமியின் காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை கண்காணிப்பதற்குமான 40 திட்டங்களை கைவிடுவது என்பது மிகவும் கவலைக்குரியது என்று பார்பர் கூறுகிறார். கைவிடப்படும் திட்டங்களில் பல, சர்வதேச கூட்டாளர்களுடன் இணைந்து செயல்படுபவை என்பது குறிப்பிடத்தக்கது.

“இவ்வளவு காலம் எடுத்து கட்டியெழுப்பப்பட்ட ஒன்றை, மீண்டும் கட்டியெழுப்புவதற்கான திட்டம் எதுவுமே இல்லாமல், ஒரு சிதைந்த பந்தால் இவ்வளவு சுலபமாக இடித்துத் தள்ள முடியும் என்பது மிகவும் வருத்தமளிக்கிறது” என்று கவலை தெரிவிக்கிறார் பார்பர்.

ஏற்கனவே விண்வெளியில் செயல்படுத்தப்பட்டு வரும் டஜன் கணக்கான கிரக பயணங்களும் கைவிடப்படும் திட்டங்களில் அடங்கும். இவற்றுக்காக ஏற்கனவே மேம்பாடு மற்றும் ஏவுதல் செலவுகள் செய்யப்பட்டுள்ள நிலையில், அவற்றை இயக்குவதற்காக ஒப்பீட்டளவில் சிறிய அளவிலான தொகைதான் முன்மொழியப்பட்டுள்ளது.

பூமியின் சுற்றுச்சூழலை கண்காணிக்கும்பல திட்டங்கள் மூடப்படக்கூடும்

பட மூலாதாரம், NASA

ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்துடனான இரண்டு கூட்டுத் திட்டங்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளன. நாசாவின் பெர்செவரன்ஸ் ரோவர் சேகரித்த செவ்வாய் கிரகப் பாறைகளை பூமிக்குக் கொண்டுவருவதற்கான லட்சியத் திட்டம் மற்றும் கடந்த கால வாழ்க்கையின் எச்சங்களை தேடுவதற்காக ஐரோப்பாவின் ரோசாலிண்ட் பிராங்க்ளின் ரோவரை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பும் முக்கியமான திட்டம் ஆகியவையே இந்த இரண்டு திட்டங்கள் ஆகும்.

பிரிட்டன் விண்வெளி நிறுவனமான சர்ரே சேட்டிலைட் டெக்னாலஜி லிமிடெட்டின் தலைவரும், விண்வெளியின் எதிர்காலம் குறித்த ராயல் சொசைட்டி ஆய்வு அறிக்கையின் இணை ஆசிரியருமான பேராசிரியர் சர் மார்ட்டின் ஸ்வீட்டிங்கின் கருத்துப்படி , தற்போதைய நிலைமை “வரவேற்கத்தக்கதல்ல” என்றாலும், ஐரோப்பா தனது சொந்த விண்வெளி ஆய்வுத் திட்டத்திற்கு அதிக பொறுப்பை ஏற்றுக்கொள்வதால் அதன் ஆதிக்கம் அதிகரிக்கக்கூடும் என்று கூறுகிறார்.

”ஒருவேளை, விண்வெளித் துறையில் நாம் நாசாவிற்கே அதிக முக்கியத்துவம் கொடுத்து நம்பியிருந்துவிட்டோமோ என தோன்றுகிறது,” என்று அவர் பிபிசி செய்தியிடம் கூறினார்.

“ஐரோப்பா தனது விண்வெளி நடவடிக்கைகளில் சிறந்த சமநிலையைப் பெற விரும்புவதைப் பற்றி சிந்திக்க இதுவொரு வாய்ப்பாகவும் இருக்கலாம்.”

ஆனால், உடனடியாக ஐரோப்பாவிற்கு மேலும் பல பாதகங்கள் ஏற்படலாம். செவ்வாய் கிரக மாதிரிகள் மற்றும் ரோவரை மீட்டெடுக்கும் திட்டம் தவிர, சர்வதேச விண்வெளி நிலையத்தை நிறுத்தும் நிலை வந்தால், அதற்கான அணுகலும் குறைய வாய்ப்பு உள்ளது.

மேலும் பட்ஜெட்டை குறைப்பதால், அதன் லூனார் கேட்வே திட்டத்திற்கு நாசாவின் விரிவான பங்களிப்புகளும் முடிந்து போகும். லூனார் கேட்வே திட்டம் என்பது, சந்திரனைச் சுற்றி சுற்றுப்பாதையில் செல்ல திட்டமிடப்பட்டுள்ள ஒரு பன்னாட்டு விண்வெளி நிலையமாகும்.

நாசாவின் மூன் ராக்கெட் (SLS) படிப்படியாக அகற்றப்பட்டு, தனியார் துறையால் உருவாக்கப்பட்ட மாற்றுகளால் மாற்றப்பட உள்ளது

பட மூலாதாரம், NASA

ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட அதன் திட்டத்தில், “விண்வெளியில் தன்னாட்சியுடன் செயல்படும் திறனை உருவாக்கவும், உலகெங்கிலும் உள்ள விண்வெளி நிறுவனங்களுடன் நம்பகமான, வலுவான மற்றும் விரும்பத்தக்க கூட்டாளியாகத் தொடரவும் முயற்சிக்கும்” என்று தெரிவித்துள்ளது. இது, நாசாவுடன் இணைந்தோ அல்லது இணையாமலோ அவ்வாறு செய்யும் என்ற உட்குறிப்பையும் அடக்கியுள்ளது.

முனைவர் பேக்கரின் கூற்றுப்படி, தற்போதைய மற்றும் முன்மொழியப்பட்ட ஏராளமான பூமி கண்காணிப்பு திட்டங்களுக்கு பட்ஜெட் குறைக்கப்படும்.

நாசாவுடன் கூட்டு சேர்ந்துள்ள ஸ்பேஸ்எக்ஸ்

பட மூலாதாரம், Getty Images

நாசாவின் பட்ஜெட் முன்மொழிவுகளை நாடாளுமன்றம் இன்னும் அங்கீகரிக்கவில்லை. பட்ஜெட் குறைப்புக்கு எதிராக வாக்களிக்கத் தயாராக இருப்பதாக, பல குடியரசுக் கட்சியினர் தனிப்பட்ட முறையில் கூறியதாக பிளானெடரி சங்கத்தின் கேசி ட்ரேயர் பிபிசி செய்தியிடம் தெரிவித்தார்.

ஆனால் அரசியல் மோதலால் பட்ஜெட் குறித்து ஒரு முடிவிற்கு வர முடியாமல் போகும் நிலை ஏற்படலாம் என டிரேயர் கவலைப்படுகிறார்.

வெள்ளை மாளிகையின் குறைக்கப்பட்ட பட்ஜெட் தற்காலிக திட்டமாக அமல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் பின்னர் அதை எளிதில் மாற்றியமைக்க முடியாது. ஏனெனில், விண்வெளிப் பயணங்கள் நிறுத்தப்பட்டால் அவற்றை மீண்டும் தொடங்குவது கடினம் அல்லது அசாத்தியம் என்றே சொல்லலாம்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : BBC