SOURCE :- BBC NEWS
பட மூலாதாரம், Getty Images
உலகின் முன்னணி கால்பந்து நட்சத்திரங்களில் ஒருவரான லியோனல் மெஸ்ஸி ‘தி கோட் டூர்’ (The GOAT Tour) என்ற பெயரில் 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். டிசம்பர் 15 வரையிலான இந்த சுற்றுப்பயணத்தில் கொல்கத்தா, ஹைதராபாத், மும்பை மற்றும் டெல்லி ஆகிய 4 நகரங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்கிறார்.
கொல்கத்தா வந்திறங்கிய மெஸ்ஸியை விமான நிலையத்திலேயே ஏராளமான ரசிகர்கள் திரண்டு உற்சாகமாக வரவேற்றனர். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, கிரிக்கெட் ஜாம்பவான் கங்குலி உள்ளிட்டோரை சந்திக்கும் மெஸ்ஸி, மாலை ஹைதராபாத் செல்கிறார். நாளை மும்பை செல்லும் அவர், 15-ஆம் தேதி டெல்லியில் இந்திய பிரதமர் மோதியை சந்திக்கிறார்.
இந்த சுற்றுப்பயணத்தின் முதல் கட்டமாக கொல்கத்தாவில் தன்னுடைய 70 அடி சிலையை காணொளி முறையில் அவர் திறந்துவைத்தார். அவர் ஃபிஃபா உலகக் கோப்பையை கையில் ஏந்தியிருப்பது போல் அந்தச் சிலை வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
பட மூலாதாரம், Getty Images
கால்பந்து அரங்கில் பல்வேறு கோப்பைகள் வென்றிருந்தாலும், சாதனைகள் படைத்திருந்தாலும், விருதுகள் வாங்கியிருந்தாலும் 2022-ஆம் ஆண்டு வரை உலகக் கோப்பை மட்டும் மெஸ்ஸிக்கு எட்டாக்கனியாக இருந்தது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் கத்தாரில் நடந்த 2022 உலகக் கோப்பையை மெஸ்ஸியின் அர்ஜென்டினா அணி வென்றது. அந்தக் கோப்பையோடு அவர் நிற்பது போலத்தான் அந்தச் சிலை வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
அர்ஜென்டினா அணிக்காக மெஸ்ஸி மொத்தம் 115 சர்வதேச கோல்கள் அடித்திருக்கிறார். அதில் 13 கோல்கள் ஃபிஃபா உலகக் கோப்பையில் அடிக்கப்பட்டவை. அவரது உலகக்கோப்பை கோல்களில் முக்கியமான சில கோல்கள் பதிவான தருணத்தை பார்க்கலாம்.
vs இரான், 2014 உலகக்கோப்பை
பட மூலாதாரம், Getty Images
2014 உலகக் கோப்பை குரூப் சுற்றில் அர்ஜென்டினாவின் இரண்டாவது போட்டி இது. இரண்டு அணிகளுமே தொடர்ந்து கோலடிக்க முயற்சி செய்தாலும் யாராலும் கோலடிக்க முடியாத நிலை நீடித்தது. இரண்டாவது பாதியின் ‘ஸ்டாப்பேஜ் டைமில்’ யாரும் எதிர்பாராத வகையில் ஒரு கோலடித்தார் மெஸ்ஸி.
வலது விங்கில் பந்தை ‘டிரிபிள்’ செய்து உள்ளே ‘கட் இன்’ செய்தார். பாக்சுக்கு சற்று வெளியே இருந்த அவருக்கு முன்னே பாக்சுக்கு உள்ளேயும் அதைச் சுற்றியும் கோல்கீப்பர் உள்பட 10 இரான் வீரர்கள் இருந்தனர். பாக்சுக்கு வெளியில் இருந்தபடியே புயல் வேகத்தில் கோலை நோக்கி மெஸ்ஸி ஓங்கி உதைக்க, அந்தப் பந்து கோல் கம்பத்தின் மேல் மூலையில் விழுந்து கோலானது.
இந்த கோல் மூலம் அர்ஜென்டினா அந்தப் போட்டியை 1-0 என வென்றது. இது உலகக் கோப்பைகளில் மெஸ்ஸி அடித்த மிகச் சிறந்த கோல்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது.
vs நைஜீரியா, 2014 உலகக் கோப்பை
பட மூலாதாரம், Getty Images
குரூப் சுற்றில் தங்களின் கடைசிப் போட்டியில் நைஜீரியாவை சந்தித்தது அர்ஜென்டினா. இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி, அந்தப் பிரிவில் முதலிடம் பிடிக்கும் நிலை இருந்தது.
ஆட்டத்தின் மூன்றாவது நிமிடத்திலேயே ஒரு கோலடித்து அர்ஜென்டினாவுக்கு முன்னிலை ஏற்படுத்திக் கொடுத்தார் மெஸ்ஸி. ஆனால், அடுத்த நிமிடத்திலேயே நைஜீரியா பதில் கோல் திருப்பியது. இந்நிலையில், முதல் பாதியின் ‘ஸ்டாப்பேஜ் டைமில்’ ஒரு சிறப்பான ஃப்ரீ கிக் கோல் அடித்தார் மெஸ்ஸி.
பாக்ஸுக்கு வெளியே இருந்து அவர் அடித்த பந்து கோல் கம்பத்தின் மேல் மூலையில் விழுந்து கோலானது. அதற்கு சில நிமிடம் முன்பு அவர் அடித்த ஒரு ஃப்ரீ கிக்கை நைஜீரிய கோல்கீப்பர் தடுத்திருந்த நிலையில், இந்த ஷாட் தடுக்க முடியாத வகையில் இருந்தது.
நல்ல தூரத்தில் இருந்து மெஸ்ஸி அடித்த அந்த ஃப்ரீ கிக் அவரது மறக்க முடியாத கோல்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது.
மெஸ்ஸியின் இரண்டு கோல்கள் காரணமாக அர்ஜென்டினா 3-2 என வென்று, அந்தப் பிரிவிலும் முதலிடம் பிடித்தது.
vs நைஜீரியா, 2018 உலகக் கோப்பை
பட மூலாதாரம், Getty Images
மிகவும் இக்கட்டான நிலையில் நைஜீரியாவுக்கு எதிரான ஆட்டத்தில் அர்ஜென்டினா வீரர்கள் கால் பதித்தனர்.
குரூப் சுற்றின் முதல் போட்டியில் ஐஸ்லாந்துடன் டிரா செய்த அந்த அணி, குரோஷியாவுக்கு எதிரான அடுத்த போட்டியில் 0-3 என படுதோல்வி அடைந்தது. அந்தப் பிரிவில் குரோஷியா முதலிடத்தையும் உறுதி செய்திருந்தது. நைஜீரியாவுக்கு எதிரான கடைசி குரூப் சுற்றுப் போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே நாக் அவுட் சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற இக்கட்டான நிலையில் இருந்தது அர்ஜென்டினா. நைஜீரியாவோ டிரா செய்தாலே போதும் என்ற சூழ்நிலையில் இருந்தது.
இந்த கடினமான சூழ்நிலையில் அர்ஜென்டினாவுக்கு 14வது நிமிடத்திலேயே முன்னிலை ஏற்படுத்திக் கொடுத்தார் மெஸ்ஸி. தங்களுடைய பாதியில் இருந்து பனேகா கொடுத்த லாங் பாஸை, வலது விங்கில் இருந்த மெஸ்ஸி முதல் டச்சிலேயே மிகச் சிறப்பாகக் கட்டுப்படுத்தினார்.
முன்னோக்கி ஓடிக்கொண்டே, அந்தப் பந்தை சிறப்பாகக் கட்டுப்படுத்தி பாக்சுக்குள் நுழைந்த அவர், டிஃபண்டரின் சவாலையும் மீறி தனது வலது காலால் பந்தை கோலாக்கினார். மெஸ்ஸி பிரதானமாக இடது காலைப் பயன்படுத்துபவர் என்றாலும், வலது காலில் அடித்த அந்த ஷாட்டிலும் கூட துல்லியமும், பலமும் இருக்கவே செய்தது.
அந்தப் போட்டியில் அர்ஜென்டினா 2-1 என வெற்றி பெற்று தங்கள் பிரிவில் இரண்டாம் இடம் பிடித்து, அடுத்த சுற்றுக்கும் முன்னேறியது.
vs மெக்ஸிகோ, 2022 உலகக் கோப்பை
பட மூலாதாரம், Getty Images
2022 உலகக் கோப்பை குரூப் சுற்றில் தங்கள் இரண்டாவது போட்டியில் மெக்ஸிகோவை எதிர்கொண்டது அர்ஜென்டினா. இந்தப் போட்டியிலும் அந்த அணி கடும் நெருக்கடிக்கு மத்தியில் தான் களமிறங்கியது. ஏனெனில், முந்தைய போட்டியில் சௌதி அரேபியாவுக்கு எதிராக எதிர்பாராத விதமாக அந்த அணி தோற்றிருந்தது.
இந்தப் போட்டியுமே அர்ஜென்டினாவுக்கு எதிர்பார்த்ததுபோல் செல்லவில்லை. முதல் ஒரு மணி நேரம் எவ்வளவு முயற்சி செய்தும் அர்ஜென்டினா வீரர்களால் கோலடிக்க முடியவில்லை. சொல்லப்போனால் முதல் பாதியில் மெக்ஸிகோவுக்கே சில நல்ல வாய்ப்புகள் கிடைத்திருந்தன.
இந்நிலையில் 64வது நிமிடத்தில் கோலடித்து அர்ஜென்டினா அணியின் நம்பிக்கைக்கு உயிரூட்டினார் மெஸ்ஸி. டி மரியா வலது விங்கில் இருந்து கொடுத்த பாஸைப் பெற்ற அவர், பாக்ஸுக்கு வெளியே இருந்தே அடித்தார். தரையோடு அடிக்கப்பட்டிருந்த அந்தப் பந்தில் வேகம் இருந்தது. அதேபோல், அது கோல் போஸ்ட்டின் ஓரத்தை நோக்கி அடிக்கப்பட்டிருந்தது. மெக்ஸிகோ கோல்கீப்பரால் அதைத் தடுக்க முடியவில்லை.
அந்த கோல் கொடுத்த உத்வேகத்தில் ஆடிய அர்ஜென்டினா, மேலும் ஒரு கோலடித்து 2-0 என போட்டியையும் வென்றது.
vs பிரான்ஸ், 2022 உலகக் கோப்பை இறுதிப் போட்டி
பட மூலாதாரம், Getty Images
வாழ்க்கையின் மிகப் பெரிய போட்டியில் ஆடிய மெஸ்ஸி, மிகமுக்கியமான நேரத்தில் கோலடித்தார்.
பிரான்ஸுடன் அர்ஜென்டினா ஆடிய அந்த இறுதிப் போட்டியில், 90 நிமிடங்கள் முடிவில் 2-2 என்று சமநிலை நிலவியதால், ஆட்டம் கூடுதல் நேரத்துக்கு (எக்ஸ்டிரா டைம்) சென்றது. அதில், 108வது நிமிடத்தில் கோலடித்து அர்ஜென்டினாவுக்கு முன்னிலை ஏற்படுத்திக் கொடுத்தார் மெஸ்ஸி.
லௌடாரோ மார்டினஸ் அடித்த பந்தை பிரான்ஸ் கோல்கீப்பர் லோரிஸ் தடுத்தார். ஆனால், அந்தப் பந்து மெஸ்ஸியை நோக்கிச் செல்ல, ஒரே டச்சில் அதை கோலாக்கினார் மெஸ்ஸி.
அதன்பிறகு பிரான்ஸ் இன்னொரு கோலடித்ததால், ஆட்டம் டை பிரேக்கர் வரை சென்றது. அதில் வென்று அர்ஜென்டினா கோப்பை வென்றது.
இந்த போட்டியின் முதல் பாதியில் பெனால்டி மூலமும் மெஸ்ஸி ஒரு கோல் அடித்திருந்தார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
SOURCE : THE HINDU







