SOURCE :- BBC NEWS

ரச்சகொண்டா, தெலங்கானா

தெலுங்கு நிலப்பரப்பை ஆண்ட ரச்சகொண்டா மன்னர்கள் தனித்துவமான நீர்ப்பாசன முறையைப் பயன்படுத்தியவர்கள், தங்களின் ஆட்சிக் காலத்தின் பெரும்பகுதியை போரில் செலவிட்டவர்கள். அவர்களது கோட்டையின் எச்சங்கள் தற்போதும் உள்ளன.

தெலங்கானாவில் ஹைதராபாத் மற்றும் சைபராபாத் பகுதிகள் பற்றி உங்களுக்குத் தெரியும். இந்த இரண்டு பகுதிகளின் பெயரில் காவல் ஆணையரகங்கள் உள்ளன.

இவை தவிர, ஹைதராபாத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக மற்றுமொரு காவல் ஆணையரகமும் உள்ளது. அதுதான் ரச்சகொண்டா .

இதற்கு ரச்சகொண்டா என்ற பெயர் ஏன் வந்தது? அதன் வரலாறு என்ன?

ரச்சகொண்டா மன்னர்கள் யார்?

கி.பி. 1518-ஆம் ஆண்டில் தெலுங்கு மண்ணில் குதுப் ஷாஹி பேரரசு நிறுவப்பட்டது. அதற்கு முன்பே கி.பி. 1323-இல் காகதியா ராஜ்ஜியம் வீழ்ச்சியடைந்ததற்கான வரலாற்றுச் சான்றுகள் உள்ளன.

அப்படியானால், கி.பி. 1323-1518-க்கு இடையில் இந்தப் பகுதியை ஆட்சி செய்தவர்கள் யார்? என்று கேள்வி எழுப்பினால், ரேச்சர்லா பத்மநாயக்குலர்கள் என்பது தான் பதிலாக இருக்கும்.

அவர்கள் ஹைதராபாத்துக்கு மிக அருகில் உள்ள ரச்சகொண்டாவை மையமாகக் கொண்டு ஆட்சி செய்தனர்.

ரச்சகொண்டா மன்னர்களின் ஆட்சி பாமினி சுல்தான்களின் காலத்திலும் தொடர்ந்தது. இருப்பினும், ரேச்சர்லா பத்மநாயக்கர்களின் ஆட்சியே நீடித்தது. அவர்களின் ஆட்சி 150 ஆண்டுகள் நீடித்ததற்கான வரலாற்றுச் சான்றுகள் உள்ளன.

கண்ணுக்குத் தெரியாத ‘கோட்டை’ அடையாளங்கள்

ரச்சகொண்டா, தெலங்கானா

ரச்சகொண்டா, ஹைதராபாத்தில் இருந்து சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இந்தப் பெயரின் அடிப்படையிலேயே ரச்சகொண்டா காவல் ஆணையரகம் உருவாக்கப்பட்டது.

ரச்சகொண்டா மலைகள் யாதாத்ரி புவனகிரி மாவட்டத்தின் நாராயணபூர் மண்டலத்திற்கும், ரங்காரெட்டி மாவட்டத்தின் இப்ராஹிம்பட்டினம் மற்றும் மஞ்சளா மண்டலங்களுக்கும் இடையே காணப்படுகின்றன.

பசுமையான சூழல் மற்றும் சுற்றியுள்ள உயரமான மலைகளுக்கு மத்தியில், ரச்சகொண்டா கோட்டையின் தடயங்களைக் காணலாம். இப்போது அங்கு முழுமையான கோட்டை இல்லை.

அந்தக் கோட்டையின் சிதைந்த சுவர்கள், அங்கு ஒரு காலத்தில் ஒரு கோட்டை இருந்ததற்கான சான்றாக உள்ளன.

மல்லம்பள்ளி சோமசேகர சர்மா என்பவர், ‘தெலுங்கு விக்ஞான் சர்வாஸ்வமு’ என்ற நூலின் மூன்றாவது தொகுதியில், ரச்சகொண்டாவுக்கு ராஜசலம் மற்றும் ராஜகிரி ஆகிய பெயர்களும் உண்டு என்று எழுதியுள்ளார்.

ரச்சகொண்டா, தெலங்கானா

கோட்டையை உருவாக்கிய பெயர் தெரியாத அரசர்

தெலுங்கானா வரலாற்றாசிரியர் தியவனபள்ளி சத்யநாராயணா, ரச்சகொண்டாவில் ஆட்சி சிங்கமநாயக்குடுவுடன் தொடங்கியது என்று பிபிசியிடம் கூறினார்.

சிங்கமநாயக்குடுவுக்குப் பிறகு, அவரது மகன் அனபோத்த நாயக்கர் கி.பி. 1361இல் ஆட்சிப் பொறுப்பை ஏற்றபோது, ரச்சகொண்டாவில் ஒரு முழு அளவிலான ராஜ்ஜியம் நிறுவப்பட்டதாக வரலாறு கூறுகிறது.

சிங்கமநாயக்குடுவின் மகனான அனபோத நாயக்கர் கி.பி. 1361 முதல் 1384 வரை ஆட்சி செய்தார்.

“சிங்கமநாயக்குடுவின் ஆட்சிக் காலத்தில், அமனகல்லு தலைநகராக இருந்தது. பின்னர், அது ரச்சகொண்டாவுக்கு மாற்றப்பட்டு கோட்டை கட்டப்பட்டிருக்கலாம்,” என்று தெலுங்கு தகவல் களஞ்சியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இருப்பினும், சிங்கமநாயக்குடுவின் ஆட்சிக்கு முன்பே இந்தக் கோட்டை இருந்திருக்கலாம் என்றும், ஒரு பெயர் தெரியாத தலைவர் அதை ஒரு அசைக்க முடியாத கோட்டையாக மாற்றியிருக்கலாம் என்றும் மல்லம்பள்ளி சோமசேகர சர்மா எழுதினார்.

தெலுங்கானாவில் கிருஷ்ணா மற்றும் கோதாவரி நதிகளுக்கு இடைப்பட்ட பகுதியில் ரச்சகொண்டா ராஜ்ஜியம் அமைந்திருந்ததாக, அந்தக் கால கல்வெட்டுகள் மூலம் தெரியவந்துள்ளதாக தியவனப்பள்ளி சத்யநாராயணா பிபிசியிடம் தெரிவித்தார்.

ரச்சகொண்டா, தெலங்கானா

காகத்தியர்கள் வீழ்ச்சியடைந்த பிறகு ஓருகல்லு ராஜ்ஜியத்தை ஆண்ட முசனுரி ஆட்சியாளர்களிடம் சிங்கமநாயக்கர் நேர்மறையான அணுகுமுறையுடன் இருந்தார் என்று வரலாறு கூறுகிறது.

அடபா சத்யநாராயணா மற்றும் தியவனப்பள்ளி சத்யநாராயணா ஆகியோர் எழுதிய ‘தெலுங்கானா வரலாறு – கலாசாரம் – இயக்கங்கள் (வரலாற்றுக்கு முந்தைய சகாப்தத்திலிருந்து மாநில உருவாக்கம் வரை)’ என்ற நூலில், சிங்கநாயக்குடு கி.பி. 1357-இல் சுதந்திரத்தை அறிவித்தார் என்று எழுதியுள்ளனர்.

“சிங்கநாயக்குடு சுதந்திரத்தை அறிவித்த பிறகு, ஜல்லிப்பள்ளி போரில் கொல்லப்பட்டார். அதன்பிறகு, கி.பி. 1368இல், முசனுரி வம்சத்தைச் சேர்ந்த காப்பய நாயக்குடு ஓருகல்லுவில் உள்ள பீமாவரத்தில் சிங்கமநாயக்கரின் மகன்களான அனபோத்தா மற்றும் மாத நாயக்குடு ஆகியோரால் கொல்லப்பட்டபோது, ரேச்சர்லா பத்மநாயக்கர்களின் ஆட்சி தொடங்கியது,”

இதே கருத்தை மல்லம்பள்ளி சோமசேகர சர்மாவும் தெலுங்கு விக்ஞான சர்வாஸ்வத்தில் குறிப்பிட்டுள்ளார். “ரச்சகொண்டா மன்னர்கள் ஓருகல்லு ராஜ்ஜியத்தை ஆண்டு வந்த காப்பய நாயக்கரை தோற்கடித்து, முழு தெலுங்கானாவையும் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர்.”

ரச்சகொண்டா, தெலங்கானா

ரச்சகொண்டா பகுதியில் உள்ள மலைகள்

அப்பகுதியில் முதன்மையானது கராச்சி மலை. இதுதான் முக்கிய கோட்டை அல்லது மன்னரின் அரண்மனை அமைந்திருந்த இடம். மற்றொன்று குதிரை மலை .

இது குதிரைகளைக் கட்டி வைப்பதற்கும் வீரர்களைத் தங்க வைப்பதற்கும் பயன்படுத்தப்பட்டது என்று வரலாறு கூறுகிறது.

இப்போது, இந்த மலையில் உள்ள கோட்டை போன்ற அமைப்பு முற்றிலும் இடிந்துவிட்டது. அந்தப் பக்கமாகச் செல்லும் வழியில் உள்ள வாயிலும் இடிந்துவிட்டது.

சுவரின் ஒருபுறத்தில், கற்களில் செதுக்கப்பட்ட இரண்டு சிறுத்தை உருவங்கள் போலத் தோன்றும் சிற்பங்கள் உள்ளன. மற்றொரு புறத்தில், ஹனுமனின் ஒரு உருவம் உள்ளது.

கராச்சி மலைக்குச் செல்லும் படிகள் சரியான நிலையில் இல்லை. ரச்சகொண்டா மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட இந்த முழுப் பாதையும் சிதைந்த நிலையில் காணப்படுகிறது.

கோட்டையை அடைய ஏழு வாயில்கள் இருந்தன. தற்போது கோட்டையோ அதன் எச்சங்களோ எங்கும் காணப்படவில்லை.

இந்த ஏழு வாயில் அமைப்பு காகத்தியர் காலம் முதலே இருந்து வருகிறது என்று தியவனபள்ளி சத்யநாராயணா கூறினார். “அதே கட்டிடக்கலை பாணி ரச்சகொண்டா பகுதியிலும் காணப்படுகிறது. இருப்பினும், ரச்சகொண்டா மன்னர்களின் கோட்டைச் சுவர்கள் அவ்வளவு பலமாக இல்லை,” என்று அவர் கூறினார்.

மூன்று மதில்களாகப் பிரிக்கப்பட்ட கோட்டைச் சுவர்களின் தடயங்கள் இன்றும் காணப்படுகின்றன.

போர்களால் நிலைத்த ஆட்சி

ரச்சகொண்டா, தெலங்கானா

ரச்சகொண்டா மன்னர்களின் ஆட்சி பெரும்பாலும் போர்களால் அறியப்படுவதாக தியானபள்ளி சத்தியநாராயணா கூறினார்.

“அவர்கள் பாமினி சுல்தான்களுடன் நட்பு கொண்டு, கடலோர ஆந்திராவை ஆண்டு வந்த ரெட்டி மன்னர்களை அடக்கினர். கலிங்கத்தின் கஜபதி மன்னர்களுடன் நட்பு கொண்டு பாமினி சுல்தான்களைத் தோற்கடித்தனர். பின்னர், விஜயநகர (கர்நாடகா ஆந்திரா) மன்னர்களுடன் நட்பு கொள்ளும் போது, பாமினி சுல்தான்களால் தோற்கடிக்கப்பட்டு தங்கள் ராச்சியத்தை இழந்தனர்,” என்று அவர் விளக்கினார்.

கி.பி. 1435 மற்றும் 1460-க்கு இடையிலும், மீண்டும் கி.பி. 1475 மற்றும் 1503-க்கு இடையிலும் பாமினி சுல்தான்களின் ஆட்சியின் மையமாக ரச்சகொண்டா இருந்தது என்று வரலாறு கூறுகிறது.

கோல்கொண்டாவின் குதுப் ஷாஹி ஆட்சி தொடங்கிய பிறகு, கி.பி. 1536 முதல் ரச்சகொண்டா சிறிது காலம் ஒரு முக்கிய மையமாக செயல்பட்டது என்று தியவனப்பள்ளி சத்யநாராயணா கூறுகிறார்.

போர்களின் காரணமாக அதிக காலம் கடந்துவிட்டதால், பெரிய கட்டமைப்புகளை உருவாக்க அவர்களுக்குப் போதுமான நேரம் கிடைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

மறைக்கப்பட்ட பொக்கிஷங்களுக்கு அழிவு

தற்போது, ரச்சகொண்டாவில் உள்ள கராச்சி மலைக்குக் கீழே ஒரு மண்டபமும், மலை உச்சியில் மற்றொரு சிறிய மண்டபமும் உள்ளன.

கோட்டை எப்போது அழிக்கப்பட்டது என்பதற்கான தெளிவான வரலாற்றுச் சான்றுகள் இல்லாவிட்டாலும், அதன் தடயங்கள் இன்று அங்கு எங்கும் காணப்படவில்லை.

“கோட்டைக்குள் புதையல்கள் இருப்பதாகக் கூறி மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சிகளால் கோட்டையின் பெரும் பகுதி சேதமடைந்துள்ளது,” என்று ரச்சகொண்டாவைச் சேர்ந்த ராஜு நாயக் பிபிசியிடம் தெரிவித்தார்.

அரசாங்கம் ரச்சகொண்டா கோட்டைப் பகுதியை ரச்சகொண்டா நகர்ப்புறப் பூங்காவாக அறிவித்து, வனத்துறையின் மேற்பார்வையில் சுற்றுலாப் பயணிகளை அனுமதிக்கிறது.

ஹைதராபாத்தைச் சேர்ந்த அனுராதா பிபிசியிடம் பேசுகையில், ஹைதராபாத் அருகே உள்ள ரச்சகொண்டா பகுதிகள் திரைப்பட படப்பிடிப்புகளுக்கும் பயன்படுத்தப்படலாம் என்றும், இந்தப் பகுதி மேலும் மேம்படுத்தப்பட வேண்டும் என்றும் கூறினார்.

“பார்வையாளர்கள் நடந்து செல்ல படிக்கட்டுகள் மற்றும் பிற வசதிகள் செய்யப்பட்டால் நல்லது,” என்று அவர் குறிப்பிட்டார்.

யாதாத்ரி புவனகிரி மாவட்டத்தின் வன அலுவலர் பத்மஜா ராணி அவர்கள் இதுகுறித்து பேசுகையில், ரச்சகொண்டாவில் நிர்வாக ரீதியாக தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.

“இங்கு சிதிலமடைந்த பகுதிகளில் ஏற்கனவே சில மேம்பாட்டுப் பணிகளை நாங்கள் செய்துள்ளோம். பராமரிப்பைக் கவனித்துக் கொள்ள ஒருவரை நியமித்து, மேற்பார்வையிட்டு வருகிறோம். எதிர்காலத்தில், தொல்லியல் மற்றும் பிற அரசுத் துறைகளின் ஒத்துழைப்புடன் இந்தப் பகுதியை மேம்படுத்த வாய்ப்பு உள்ளது,” என்று பத்மஜா ராணி கூறினார்.

‘ஈர்ப்பு விசை நீர்ப்பாசனம்’

ரச்சகொண்டா, தெலங்கானா

‘தெலுங்கானா வரலாறு, கலாசாரம், மற்றும் இயக்கங்கள்’ என்ற புத்தகம், ரச்சகொண்டா மன்னர்கள் காகத்தியர்களின் பாரம்பரியத்தை மரபாகப் பெற்றதாகக் கூறலாம் என்று குறிப்பிடுகிறது.

“அனபோத்த சமுத்திரம் மற்றும் ராய சமுத்திரம் உட்பட குளங்கள், பள்ளங்கள் மற்றும் கிணறுகள் தோண்டப்பட்டன என்று கல்வெட்டுகளில் எழுதப்பட்டுள்ளது,” என்று அது கூறுகிறது.

ரச்சகொண்டா மன்னர்களின் காலத்தில் ‘புவி ஈர்ப்பு விசைத் தொழில்நுட்பத்தைப்’ (gravitational technology) பயன்படுத்தி தண்ணீர் கால்வாய்களில் கொண்டு செல்லப்பட்டதற்கான தடயங்கள் உள்ளன. இந்த கால்வாய்கள் இன்றும் காணப்படுகின்றன.

தயவனப்பள்ளி சத்யநாராயணா அவர்கள், ஒரு குளத்திலிருந்து மற்றொரு குளத்திற்குத் தண்ணீர் பாய்ச்சப்பட்டது என்று கூறினார்.

“இந்த வகையான அமைப்பை நாங்கள் சிந்து சமவெளி நாகரிகத்தில் பார்த்தோம். அதேபோன்று, மத்தியப் பிரதேசத்தின் போஜபாலன் என்ற மன்னர் தனது ‘சரஸ்வதி காந்தபாரணம்’என்ற புத்தகத்தில் அதைப் பற்றி எழுதியுள்ளார். அதன்பிறகு, ரச்சகொண்டா மன்னர்களின் காலத்திலிருந்த கால்வாய்கள் கண்டுபிடிக்கப்பட்டன,” என்று அவர் கூறினார்.

ஹோலி பாணியிலான வசந்த விழாக்கள்

ரச்சகொண்டா மன்னர்கள் காலத்தில் சிறப்பு வசந்த விழாக்கள் நடத்தப்பட்டதற்கான தடயங்கள் உள்ளன. இந்த விழாக்கள் மிகுந்த ஆடம்பரத்துடனும் ஆரவாரத்துடனும் கொண்டாடப்பட்டன, மன்னர்கள் கலைஞர்கள் மற்றும் மக்களுடன் ஒரு திருவிழாவைப் போலக் கொண்டாடினர் என்று தயவனப்பள்ளி சத்யநாராயணா கூறுகிறார்.

“இந்த விழாக்களை இன்றைய ஹோலிப் பண்டிகையுடன் ஒப்பிடலாம். அவர்கள் வாசனைப் பொருட்கள், மஞ்சள் மற்றும் வண்ணங்களைத் தெளிப்பார்கள்.” என்று அவர் கூறினார். அந்தக் காலத்தில் கவிஞர்கள் மற்றும் கலைஞர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

ரச்சகொண்டா மன்னர்களின் அரசவையில் ‘பாமெரா போத்தனா’

ரச்சகொண்டா மன்னர்களின் ஆட்சியின் போது இலக்கியத்திற்கு அதிக முன்னுரிமை அளிக்கப்பட்டது என்பது தெளிவாகிறது.

‘இயற்கை கவிஞர்’ என்று அழைக்கப்படும் பாமெரா போத்தனா , மூன்றாம் சிங்கமநாயக்கரின் அரசவையில் வசித்து வந்தார். அவர் பாகவதத்தைத் தெலுங்கில் மொழிபெயர்த்தார். அவர் ‘போகினி தண்டகம்’ என்ற கவிதையையும் ‘வீரபத்ர விஜயம்’ என்ற கவிதையையும் எழுதினார்.

சிங்கபூபாலர் ‘ரத்ன பாஞ்சாலிகா’ என்ற நாடகத்தை இயற்றியுள்ளார் என்றும் வரலாற்றுச் சான்றுகள் தெரிவிக்கின்றன.

பேரக்குழந்தைகளுக்கு அவர்களின் தாத்தா, பாட்டியின் பெயர்கள் சூட்டப்படுகின்றன

ரச்சகொண்டாவை ஆண்ட வாரிசுகளின் பெயர்கள் சற்று விசித்திரமானவை. இது பேரனுக்கு தாத்தாவின் பெயரைச் சூட்டுவது போல உள்ளது.

சிங்கமநாயக்கருக்குப் பிறகு, அனபோத்த நாயக்குடு 1361 முதல் 1384 வரை ஆட்சி செய்தார். அதற்குப் பிறகு, வரலாற்றின் படி பின்வருமாறு ஆட்சி நடந்தது:

  • இரண்டாம் சிங்கமநாயக்குடு – 1384 முதல் 1399 வரை
  • இரண்டாம் அனபோத்த நாயக்கர் – 1399 முதல் 1421 வரை
  • ராவ் மாதவா- 1421 முதல் 1430 வரை
  • மூன்றாம் சிங்கமநாயக்கர் – 1430 முதல் 1475 வரை

கி.பி. 1425 முதல் 1435 க்கு இடையில், பாமினி சுல்தான்கள் குல்பர்காவிலிருந்து ஆட்சி செய்தனர். பாமினிகள் ரேச்சர்லா பத்மநாயக்கர்களை தோற்கடித்ததற்கான வரலாற்றுச் சான்றுகள் உள்ளன.

ரச்சகொண்டா, தெலங்கானா

“பாமினி சுல்தான்கள் ரச்சகொண்டாவை ஒரு கப்பம் கட்டும் மாநிலமாக மாற்றி, பத்து முதல் பதினைந்து ஆண்டுகள் வரை ஆட்சி செய்தனர். கலிங்க ராஜ்ஜியத்தின் கபிலேஷ்வர கஜபதியின் உதவியுடன் ரேச்சர்லா பத்மநாயக்கர்கள் பாமினிகளைத் தோற்கடித்தனர்,” என்று தியவனப்பள்ளி சத்யநாராயணா கூறுகிறார்.

பின்னர் குதுப் ஷாஹிகள் 1498-ஆம் ஆண்டு வாக்கில் தெலுங்கானா பகுதிக்கு வந்து, 1512-இல் கோல்கொண்டா கோட்டையை அடைந்தனர். அவர்கள் 1535 ஆம் ஆண்டு வாக்கில் ரச்சகொண்டாவைக் கைப்பற்றியதாக வரலாறு கூறுகிறது.

“ரச்சகொண்டாவில் பத்மநாயக்கர்களின் ஆட்சி அறுபது ஆண்டுகளுக்கு முன்பே, அதாவது 1475 இல், முடிவடைந்தது என்று சொல்ல வேண்டும். அதன்பிறகு, பாமினிகளின் ஆட்சி தொடர்ந்தது. குதுப் ஷாஹிகள் அவர்களிடமிருந்து ஆட்சியைக் கைப்பற்றினர்” என்று தியவனப்பள்ளி சத்யநாராயணா பிபிசியிடம் தெரிவித்தார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU