SOURCE :- INDIAN EXPRESS
Dec 23, 2024 14:03 IST
மருத்துவ கழிவுகளை கையாளுவதில் கேரள அரசு தோல்வி
மருத்துவ கழிவுகளை கையாளுவதில் கேரள அரசு தோல்வியடைந்துள்ளது என அம்மாநில உயர் நீதிமன்றம் கடும் விமர்சனம். தமிழ்நாட்டில் கேரள மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்ட விவகாரதில் அம்மாநில அரசு விரிவான அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளது.
Dec 23, 2024 13:12 IST
ஸ்டாலின் உடன் விஜய பிரபாகரன் சந்திப்பு
மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் முதலாமாண்டு நினைவு தின கூட்டத்தில் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து மகன் விஜய பிரபாகரன் அழைப்பு விடுத்தார்.
தேமுதிக துணைப் பொதுச் செயலாளர் எல்.கே.சுதீஷ், விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் ஆகியோர் அழைப்பு விடுத்துள்ளனர்.
நினைவு தினத்தன்று ஒரு கி.மீ தூர நினைவு தின பேரணி நடத்துவதற்கும் திட்டமிட்டுள்ளோம். காவல்துறையிடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர் செல்வம் உள்பட அனைத்துக் கட்சி தலைவர்களையும் நேரில் அழைக்க உள்ளோம் என அண்ணா அறிவாலயத்தில் எல்.கே.சுதீஷ் பேட்டி அளித்தார்.
Dec 23, 2024 13:02 IST
மருத்துவக் கல்லூரிகள் – சிறப்புக் கலந்தாய்வை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு
மருத்துவக் கல்லூரிகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப வரும் 30ம் தேதிக்குள் சிறப்புக் கலந்தாய்வை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பல இடங்கள் காலியாக இருப்பதால் நிதிப் பற்றாக்குறையை சந்திப்பதாக தனியார் கல்லூரிகள் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
எனினும், ஏற்கனவே விண்ணப்பித்து காத்திருப்பு பட்டியலில் உள்ள மாணவர்களுக்கு மட்டுமே சிறப்புக் கலந்தாய்வில் வாய்ப்பு அளிக்க வேண்டும் எனவும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டது.
Dec 23, 2024 13:00 IST
அரசு ஊழியரின் சொத்துகள், கடன்கள் தனிப்பட்ட விபரங்கள் அல்ல: உயர் நீதிமன்றம்
அரசு ஊழியரின் சொத்துகள், கடன்கள் குறித்த விபரங்கள் தனிப்பட்ட விபரங்கள் அல்ல – சென்னை உயர் நீதிமன்றம் திட்டவட்டம்
கிருஷ்ணகிரி மாவட்ட நீர்வளத்துறை உதவிப் பொறியாளர் காளிப்பிரியனின் சொத்து விபரங்களை, RTI சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதற்கு எதிரான வழக்கில், 2 மாதங்களில் இதனைப் பரிசீலித்து முடித்துவைக்க மாநில தகவல் ஆணையத்திற்கு நீதிபதி கார்த்திகேயன் உத்தரவிட்டார்.
அரசு ஊழியர்களின் பணியை பாதிக்கச் செய்யும் தகவல்கள்தான் பாதுகாக்கப்பட்டவை. சொத்துகள், கடன் விபரங்களை பொதுமக்களின் பரிசீலனையில் இருந்து பாதுகாக்க முடியாது என நீதிபதி தெரிவித்தார்.
Dec 23, 2024 12:36 IST
தண்டவாளத்தில் திடீர் விரிசல்
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே தண்டவாளத்தில் திடீர் விரிசல் ஏற்பட்டது. ஓங்கூர் அருகே ரயில் சென்று கொண்டிருந்த போது, தண்டவாளத்தில் இருந்து அதிக சத்தம் வந்ததால் லோகோ பைலட் ரயிலை நிறுத்தி உள்ளார்.
சென்னை எழும்பூரில் இருந்து புதுச்சேரி நோக்கி சென்று கொண்டிருந்த ரயில் பாதி வழியில் நிறுத்தம். தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசலை சரிசெய்யும் பணி தீவிரம், ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ரயில்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
Dec 23, 2024 11:34 IST
கல்வி மாநிலப் பட்டியலுக்கு வர வேண்டும் – அன்பில் மகேஸ்
”இந்திய ஒன்றியத்திற்கு முன்மாதிரியாக கல்வியில் வளர்ச்சி அடைந்துள்ள தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய நிலுவைத் தொகையை தராமல் ஒன்றிய அரசு வஞ்சித்துக் கொண்டிருக்கிறது. பல்வேறு வகைகளிலும் கல்வியில் சாதனை புரியும் நமது மாணவச் செல்வங்களையும், ஆசிரியப் பெருமக்களையும் ஒன்றிய அரசு ஏமாற்றி வருகின்றது. கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும். எங்கள் பிள்ளைகளையும் ஆசிரியப் பெருமக்களையும் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். எங்கள் மாணவர்களுக்கு என்ன மாதிரியான அறிவுசார் பயிற்சிகள் வழங்க வேண்டும் என்பதை நாங்கள் முடிவு எடுத்துக் கொள்கிறோம்” என்று அமிச்சர் அன்பில் மகேஸ் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Dec 23, 2024 11:33 IST
பின்பக்க கண்ணாடி உடைந்த அரசுப் பேருந்து – போக்குவரத்துக் கழகம் விளக்கம்
பின்னால் வந்த தனியார் பேருந்து மோதியதில் கண்ணாடி உடைந்ததாகவும் அதை மாற்ற பணிமனைக்கு கொண்டு செல்லும்போது புகைப்பட எடுக்கப்பட்டுள்ளதாகவும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் விளக்கம் அளித்துள்ளது.
Dec 23, 2024 10:55 IST
மழை நிலவரம்
சேலம், நாமக்கல், தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் பிற்பகல் 1 மணி வரை லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
Dec 23, 2024 10:53 IST
20-ஆம் ஆண்டு சுனாமி நினைவு தினம்
நாகை சுனாமி பேரலையின் 20 ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி கீச்சாங்குப்பம் கிராமம் சென்ற உணவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், அங்குள்ள சுனாமி நினைவு ஸ்தூபியில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். சாமாந்தாபேட்டையில் உள்ள அரசு குழந்தைகள் காப்பகத்திற்கு சென்று பெற்றோரை இழந்த குழந்தைகளை சந்தித்து பேசினார்.
Dec 23, 2024 10:50 IST
அரசு கண்காட்சி; காவி நிறத்தில் திருவள்ளுவர் ஓவியம்!
சென்னை கோட்டூர்புரத்தில் அரசு கண்காட்சியில் காவி நிறத்தில் திருவள்ளுவர் ஓவியம் இடம்பெற்றுள்ளது. திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாஓவியக் கண்காட்சியில் மாணவர் வரைந்த திருவள்ளுவர் ஓவியம் காவி நிறத்தில் இடம் பெற்று இருந்தது பேசுப் பொருளான நிலையில் அகற்றப்பட்டது.
Dec 23, 2024 10:23 IST
வேதனையில் முடிந்த திரைப்பட சண்டை!
உத்தரபிரதேசத்தில் புஷ்பா 2 படம் பார்ப்பதற்கு காதலன் மறுப்பு தெரிவித்ததால் தற்கொலை முயற்சியில் காதலி ஈடுபட்டுள்ளார். வாக்குவாதத்தின் போது திடீரென ஹோட்டலின் 3 ஆவது மாடியில் இருந்து காதலி குதித்துள்ளார். காதலனை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். காதலி மருத்துவமனையில் கவலைக்கிடமாக உள்ளார்.
Dec 23, 2024 10:19 IST
பின்பக்க கண்ணாடி உடைந்த நிலையில் இயக்கப்படும் அரசுப் பேருந்து!
திருவண்ணாமலையில் போளூர் பகுதியில் மகளிர் இலவச பேருந்தில் பின்பக்க கண்ணாடி உடைந்த நிலையில் இயக்கப்படுவதாக மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
Dec 23, 2024 09:47 IST
மஞ்சப்பை தானியங்கி இயந்திரம்
சேலம் உழவர் சந்தையில் அமைக்கப்பட்டுள்ள தானியங்கி மஞ்சப்பை விற்பனை இயந்திரத்தின் சேவையை அமைச்சர் எ.வ.வேலு தொடங்கி வைத்தார்.
Dec 23, 2024 09:45 IST
“வீடு மீது விமானம் மோதி 10 பேர் பலி”
பிரேசிலில் 10 பேருடன் பயணித்த சிறிய ரக விமானம், வீடு மீது மோதிய விபத்தில் விமானம் தீப்பிடித்து எரிந்ததில் ஒருவர் கூட உயிர் பிழைக்கவில்லை.
Dec 23, 2024 09:18 IST
மீண்டும் தமிழகம் திரும்பும் காற்றழுத்த தாழ்வு பகுதி
ஆந்திராவை நோக்கி சென்ற காற்றழுத்த தாழ்வு பகுதி மீண்டும் தமிழ்நாட்டை நோக்கு திரும்பும் வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Dec 23, 2024 09:13 IST
அல்லு அர்ஜுன் வீடு மீது தாக்குதல் – 8 பேர் கைது
ஹைதராபாத்தில் நடிகர் அல்லு அர்ஜூன் வீடு மீது கற்களை வீசி உஸ்மானிய பல்கலைக்கழக மாணவ அமைப்பினர் தாக்குதல் நடத்தியதாக கூறி 8 பேரை போலீசார் கைது செய்தனர்.
Dec 23, 2024 09:10 IST
கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் மோடி
டெல்லியில் இன்று நடைபெறும் கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார். கத்தோலிக்க திருச்சபையின் தலைமையகத்தில் கிறிஸ்துமஸ் நிகழ்ச்சி நடைபெறுகிறது. கர்தினால்கள், ஆயர்கள் உள்ளிட்ட முக்கிய தலைவர்களுடன் பிரதமர் இன்று கலந்துரையாடுகிறார்.
Dec 23, 2024 08:45 IST
சன்னி லியோன், ஜானி சின்ஸ் பெயரில் மோசடி!
சத்தீஸ்கரில் சன்னி லியோன் பெயரில் ஆனலைன் கணக்கு தொடங்கி அரசின் திட்டங்களைப் பெற்று மேசடி நடந்துள்ளது. சத்தீஸ்கர் மாநில பாஜக அரசு சார்பில் திருமணமான பெண்களுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் ரூ.1000 தொகையை பெறுவதற்கான அரசின் விண்ணப்பத்தில் சன்னி லியோன் – ஜானி சின்ஸ் தம்பதி என குறிப்பிட்டு தொகையை பெற்று வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
Dec 23, 2024 08:19 IST
புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி,, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய துறைமுகங்களில் புயல் எச்சரிகை கூண்டு ஏற்றப்பட்டது.
Dec 23, 2024 07:56 IST
புதிய சுங்கச்சாவடி வசூலுக்கு தனியார் பேருந்து உரிமையாளர்கள் எதிர்ப்பு!
விழுப்புரம் – நாகை தேசிய நெடுஞ்சாலையில் சிதம்பரம் அருகே கொத்தட்டை பகுதியில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடி மையத்திற்கு தனியார் பேருந்து உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு. கடலூரில் இருந்து சிதம்பரத்துக்கு இன்று தனியார் பேருந்துகள் இயக்கப்படவில்லை. இந்த சுங்கச்சாவடி வழியாக செல்லும் தனியார் பேருந்துகளுக்கு 50 முறை சென்று வர ரூ. 14,090 கட்டணம். நெடுஞ்சாலைப் பணிகள் இன்னும் நிறைவு பெறாத நிலையில், கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் தனியார் பேருந்து உரிமையாளர் அதிருப்தி.
Dec 23, 2024 07:50 IST
யாரையும் மனதில் வைத்து சொல்லவில்லை – திருமாவளவன்
தத்துவம் இல்லாத தலைவர்களால் ரசிகர்களை மட்டும்தான் உருவாக்க முடியும். போராளிகளை உருவாக்க முடியாது. யாரையும் மனதில் வைத்து சொல்லவில்லை.கோட்பாடு இல்லாத தனிநபர்கள் அவர்களை பின்பற்றக்கூடியவர்களை போராளியாக வளர்த்தெடுக்க முடியாது என விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
Dec 23, 2024 07:43 IST
திருவண்ணாமலை கார்த்திகை தீப நிறைவு நாள்
திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவின் நிறைவு நாள் இன்று. தீபமலை உச்சியில் 11வது நாளாக பிரகாசமாகக் காட்சியளிக்கும் ஈசன் மகாதீபம்.
Dec 23, 2024 07:41 IST
பேருந்து ஓட்டுநர்களுக்கு எச்சரிக்கை
“அரசுப் பேருந்துகளை இயக்கும்போது ஓட்டுநர்கள் செல்போன் பயன்படுத்தினால் 15 நாட்கள் சஸ்பெண்ட்” என போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.
Dec 23, 2024 07:40 IST
மெரினாவில் களைக்கட்டிய உணவுத் திருவிழா
சென்னை மெரினா கடற்கரையில் விடுமுறை நாளான நேற்று உணவு திருவிழாவில் நேற்று ஒரே நாளில் சுமார் 40 லட்ச ரூபாய்க்கு உணவுகள் விற்பனை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
Dec 23, 2024 07:38 IST
இந்திய மகளிர் அணி அபார வெற்றி
வெஸ்ட் இண்டீசுக்கு முதல் ஒருநாள் போட்டியில் ஸ்மிருதி மந்தனா அதிரடி ஆட்டம், இந்திய மகளிர் அணி 211 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி அடைந்துள்ளது.
Dec 23, 2024 07:35 IST
நெல்லை மருத்துவக் கழிவு விவகாரம்
நெல்லையில் இருந்து மருத்துவ கழிவுகளை ஏற்றிக் கொண்டு 18 லாரிகள் கேரளா சென்றன, எஞ்சிய கழிவுகளும் இன்று நண்பகலுக்குள் அகற்றப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
Dec 23, 2024 07:33 IST
தமிழகத்தில் மீண்டும் மழை
தமிழ்நாட்டில் அடுத்த 6 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மைய தகவல் தெரிவித்துள்ளது. செங்கல்பட்டு உள்ளிட்ட 3 மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது.
Dec 23, 2024 07:31 IST
தமிழக அலங்கார ஊர்தி நிராகரிப்பு என்பது வதந்தி!
2025 ஆம் ஆண்டு குடியரசு தின விழா அணிவகுப்பில் தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்தி நிராகரிப்பு என்று பரப்பப்படுவது வதந்தி என தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.
அணிவகுப்பு வாகனங்கள் சுழற்சி முறையில் தான் பங்கேற்க முடியும். 2024 அணிவகுப்பில் தமிழ்நாடு அலங்கார ஊர்தி பங்கேற்றது. இனி 2026 ஆம் ஆண்டு அணிவகுப்பில் பங்கேற்க இயலும்.
SOURCE : TAMIL INDIAN EXPRESS